Published:Updated:

"விருது படங்களைப் பார்க்கக் கூப்பிட்டா, பிஸினு சொல்றதா?!" - தனஞ்செயன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"விருது படங்களைப் பார்க்கக் கூப்பிட்டா, பிஸினு சொல்றதா?!" - தனஞ்செயன்
"விருது படங்களைப் பார்க்கக் கூப்பிட்டா, பிஸினு சொல்றதா?!" - தனஞ்செயன்

தேசிய திரைப்பட விருதுக் கமிட்டியை தமிழ் சினிமா இயக்குநர்கள் நிராகரிப்பதாகக் கூறுகிறார், தயாரிப்பாளர் தனஞ்செயன்

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'காற்று வெளியிடை'க்கு இரண்டு விருதுகளும், (பின்னணிப் பாடகி - ஷாஷா திரிபாதி, இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்) சிறந்த தமிழ் மொழித் திரைப்படமாக 'டூ-லெட்' என தமிழுக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. 'நம்பர்ஸ் பிரச்னை இல்ல. ஆனா, 'என்ன தேசிய விருது'ங்கிற ஒருவிதமான அலட்சிய மனப்பான்மை தமிழ் சினிமாவுல இருக்கிறவங்களுக்கு வந்திடுச்சோனு நினைக்கத் தோணுது. சில சம்பவங்கள் மனசுக்கு கஷ்டத்தைத் தந்தது' என்கிறார், திரைப்படத் தயாரிப்பாளரும், தேசிய விருதுத் தேர்வுக் குழுவில் பிராந்திய அளவிலான கமிட்டியில் இடம் பெற்றவருமான, போஃப்தா தனஞ்செயன்

என்ன நடந்தது?

'' 'தீரன்' படம் விருதுக்காக அனுப்பப்பட்டதுனு தயாரிப்பாளர் தரப்புல சொல்றாங்க. ஆனா, கமிட்டிக்கு வந்த பட்டியல்ல அந்தப் படம் இல்லை. அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் நல்லா இருந்தது. படம் விருதுக் கமிட்டிக்குப் போயிருக்கானு செக் பண்ணிக் கரெக்டா ஃபாலோ பண்ணியிருந்தா, இந்தத் தவறு நடந்திருக்காது. ஒரு உதாரணத்துக்காக இதைச் சொல்றேன். அதேபோல 'எதார்த்தத்தை மீறாத சினிமாவுக்கு மட்டுமே விருது'ங்கிறதுல தெளிவா இருக்கு தேசிய விருது கமிட்டி. அதனால பக்கா கமர்ஷியலா எடுக்கப்பட்டிருக்கிற படங்களை அனுப்பத் தேவையில்லை. கமர்ஷியல் படங்கள் கோரியோகிராஃபி அல்லது ஸ்டண்ட் அமைப்பு உள்ளிட்ட கமர்ஷியல் ஏரியாவுல பேசப்பட்டுச்சுனா, அதைக் குறிப்பிட்டு அனுப்பணும். தமிழ் சினிமாவுல இருந்து அப்படிக் குறிப்பிடுறதில்லை. மத்த மொழிகள்ல இதைக் கரெக்டா ஃபாலோ பண்றாங்க. கமர்ஷியலா ஒரு படம் ஹிட்  ஆயிட்டா, எல்லா கேட்டகிரியிலும் கிடைக்கும்னு அனுப்புறப்போ, கமிட்டியில் இருக்கிறவங்க எரிச்சல் ஆகுறாங்க. அந்த மாதிரியான படங்களைப் பார்க்கிறப்போ அவங்க ஆர்வம் குறையிறதையும் பார்க்க முடியுது.

அடுத்ததா, சப்-டைட்டில் விவகாரம். டைட்டில் கார்டு, சாங் எல்லாத்துக்குமே சப்-டைட்டில் அவசியம். இங்கே நிறையப் பேர் இதுல கவனம் செலுத்தறது இல்லை. நான் பார்த்த ஒரு படத்துல 'மூன்று மாதங்ளுக்குப் பிறகு'னு போடறாங்க. அதுக்கு சப்-டைட்டில் இல்லை. கமிட்டியில இருந்த ரெண்டு பேர் படம் முடிஞ்சிடுச்சுனு நினைச்சு எழுந்துட்டாங்க. இப்படிப் பல சின்ன சின்ன விஷயங்களை சரியா பண்ணலாமே? என்றவர், தேசிய விருது தேர்வுக் குழுவின் செயல்பாடு குறித்தும் பேசினார். 

"சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாதுங்கிறதுல ரொம்பவே கவனமா இருக்காங்க விருது கமிட்டி. பிராந்திய மொழிப் படங்களைத் தேர்வு செய்யும்போது, சம்பந்தப்பட்ட கமிட்டியில அந்த மொழியை தாய் மொழியாக் கொண்ட ஒருத்தர் தவிர, மத்தவங்க பிற மொழிக்காரங்க. பிற மொழிக்காரர்தான் கமிட்டியோட தலைவரா இருப்பார். கமிட்டியில உள்ள அத்தனை பேரும் திருப்தியடைஞ்சா மட்டுமே, படத்துக்கு விருது கிடைக்கும். பிராந்தியக் கமிட்டி முதல் கட்டத்துக்குத் தேர்வாகியிருக்கிற படங்களை மத்தியக் கமிட்டிக்கு அனுப்புறாங்க. அங்கே இறுதிப் பட்டியல் தயாராகுது! 

தனஞ்செயன் கூறிய இன்னொரு விஷயம் கொஞ்சம் சீரியஸானதே.

''விருதுக்கான கமிட்டிக்கு வந்து படங்களைப் பார்த்துத் தேர்வு செய்ய வாங்க'னு கூப்பிட்டா, தமிழ் சினிமா மட்டுமே இந்த அழைப்பை அலட்சியப் படுத்துது. மத்த மொழி இயக்குநர்கள் ஆர்வமா வர்றாங்க. இந்த முறையே இங்கே நிறையப் பேரைக் கேட்டிருக்காங்க. பிஸியா இருக்கிறதா சொல்லியே பலபேர் வர மறுத்திருக்காங்க. கௌரவமான இந்த மாதிரி அழைப்புகளை ஏன் நிராகரிக்கணும்? ஒரு தயாரிப்பாளரா நான் அந்த இடத்துல இருக்கிறதைவிட, ஒரு இயக்குநர் இருந்தா இன்னும் பெஸ்டா இருக்குமே!. நியாயமில்லாம விருது மறுக்கப்பட்டா, அதுக்கு சண்டை போடமுடியும். இதையெல்லாம் தமிழ் சினிமாவுல இருக்கிறவங்க பண்ணனும்ங்கிறது என்னோட வேண்டுகோள்!" என்கிறார், தனஞ்செயன்.

வேண்டுகோள் நியாயமானதுதானே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு