Published:Updated:

மழையினூடே மஞ்சள் போர்வைக்குள் நிகழ்ந்த காதல்..! 'வாவ்' அலைபாயுதே #18YearsOfAlaipayuthey

மழையினூடே மஞ்சள் போர்வைக்குள் நிகழ்ந்த காதல்..! 'வாவ்' அலைபாயுதே  #18YearsOfAlaipayuthey
மழையினூடே மஞ்சள் போர்வைக்குள் நிகழ்ந்த காதல்..! 'வாவ்' அலைபாயுதே #18YearsOfAlaipayuthey

தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்றோடு, 'அலைபாயுதே' படம் வெளியாகி 18 வருடங்கள் ஆகிவிட்டது. அப்படம் குறித்த ஆழமான பார்வையோடு எழுதப்பட்ட கட்டுரை.

தமிழ்ப் புத்தாண்டில் ‘அலைபாயுதே’ திரைப்படம் தன் 18 வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறது.  ஒரு திரைப்படம் அதிகபட்சம் என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? ஒரு வாழ்வியல் மாற்றத்தை, காதல் உணர்வுகளை, மக்கள் மனங்களில் எந்த அளவு பதிவு செய்துவிட முடியும்? கண நேரப் புன்னகையில் இருந்து காலங்கள் கடந்து நிற்கும் காதலை உணர வைக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எத்தனையோ உண்டு! காதல் தோல்வியைக்கூட காவியங்களாகப் படைத்த தமிழ் சினிமா, அதே  காதல் வெற்றிபெற்றால் கடற்கரையில் காதலர்கள் கைகோர்ப்பதுவரை மட்டுமே பதிவு செய்திருந்தது. காதலுக்குப் பிறகான வாழ்வை, அதன் சுக துக்கங்களை, அன்றாட வாழ்வின் பிடியில் அளவு குறைந்துகொண்டே செல்லும் அன்பை, காதல் நிறைந்திருந்த இரு மனங்களில் கவலைகளை சற்று நிறைக்கும் சராசரி திருமண வாழ்வை, எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் உள்ளது உள்ளபடியே காட்டிய முதல் தமிழ்த் திரைப்படம், ‘அலைபாயுதே’.   

அமிர்த சஞ்சீவி என்ற மூலிகையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வயோதிகம் இல்லாமல் மனிதனை என்றும் இளைமையாகவே வாழவைக்கும் அற்புத மூலிகை என்று இதைக் குறிப்பிடுவார்கள். 'அலைபாயுதே'வும் ஒரு வகை அமிர்த சஞ்சீவிதான். காலங்கள் கடந்து எந்த வயதில் பார்த்தாலும், காலக்கருவியில் பார்வையாளனை அமரவைத்து கரகரவென கண்களில் நீர் வழிய காதலை நினைவுகளில் காட்சிப்படுத்தும் படம். கால ஓட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சியில், ரசனைகள் வெகுவாக மாறிவிட்ட இன்றைய சூழலிலும், இந்த 18 வருடங்களில் பார்க்கும் பொழுதெல்லாம், காதலில் கட்டுண்டு இதயமெங்கும் இளமையை நிறைக்கும் திரைப்படம் 'அலைபாயுதே'. மனம் மயக்கும் இசையா, மணிரத்னம் எனும் மாமேதையின் இயக்கமா அல்லது மாதவன் எனும் அழகு அரக்கனின் அறிமுகமா... எது இப்படியோர் அற்புதத்தை நிகழ்த்துகிறது என்பது எத்தனை முறை பார்த்தாலும், எவருக்கும் பிடிபடாத சர்வ ரகசியம். அமிர்த சஞ்சீவியில் இளமையை மீட்கும் சக்தி இருந்ததா என்பது தெரியாது. ஆனால், இப்படத்தில் தன் காதலால் பார்வையாளர் இதயத்தை நிறைக்கும் 'ஷக்தி' இருந்தாள். அவள் கண்களால் நிகழ்த்தும் காதல் மாயைகளும், கணவனிடம் கொண்ட ஊடல்களும்தான், தமிழ் சினிமாவின் கடைக்கோடி ரசிகனைக்கூட 'அலைபாயுதே'வைக் காண அலையெனப் பாய்ந்து வர வைத்தது.

தமிழ் சினிமாவில் வெளியான காதல் திரைப்படங்களை இரண்டே பிரிவுகளில் வகைப்படுத்திவிடலாம், ‘அலைபாயுதேவுக்கு முன் , அலைபாயுதேவுக்கு பின்’, அந்த அளவு அடுத்த தலைமுறையின் இன்ஸ்டன்ட் காதலை, அவர்களுக்குள்ளான ஊடலை, பிரிவை, காத்திருப்பை மிக கவனமாகக் காட்சிப்படுத்தியிருந்தது இத்திரைப்படம், இதில் வரும் இயல்பான காதல் காட்சிகள், பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம், திருமணத்திற்குப் பிறகு அவரவர் வீட்டிற்குச் சென்று விடுதல்... எனப் படம் வெளியான பின் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, ‘என்ன அலைபாயுதே ஸ்டைல்ல கல்யாணமா?’ என ஒட்டு மொத்த சமூகமும் ஒரே கேள்வியில் அத்தனையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தது. ஒரு திரைப்படத்தின் தலைப்பு வெறும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், ஒரு வாழ்க்கையை உணர்த்திவிடுகின்ற ஒரு குறிப்புச் சொல்லாக இன்றளவும் பயணித்து வருகிறது என்றால், அது நிச்சயம் ‘அலைபாயுதே’ மட்டும்தான்.

அதுவரை எத்தனையோ சித்திரைத் திருநாள் திரைப்படங்களை தமிழ்சினிமா தந்திருந்தது, திரையரங்குகள் முதல் காட்சிக்கு ரசிகர்களால் கொண்டாடி ஆரவாரப்பட்டிருந்தது. ஆனால், தமிழ் சினிமா சரித்திரத்திலேயே முதல் முறையாக, முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை  ரசிகைகள் கொண்டாடி, விசிலடித்து, தன் இதயங்களைப் பேப்பர் ராக்கெட்டுகளில் ஏற்றி ஒரு பேரழகனின் அறிமுகக் காட்சிக்கு விட்ட படம், இதுதான். எவ்வித பின்னணி இசையும் இல்லாமல், மிக எளிமையான கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்களில் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும், ‘அலைபாயுதே’ என மின்னி மறைந்த நொடி, என்றென்றும் புன்னகை என ரகுமான் தன் காந்தக் குரல் கொண்டு காற்றைக் கிழிக்க கந்தரக்ச் சிரிப்புடன் மாதவன் பைக்கில் பறந்துவரும் காட்சிக்கு யுவதிகளின் இதயங்கள் மிதந்தன.

கார்த்திக்காக மாதவனும், ஷக்தியாக ஷாலினியும் அடுத்த தலைமுறை காதலை மிக இயல்பாகத் தங்கள் நடிப்பால் பதிவு செய்திருப்பார்கள். கவிதை வார்த்தைகளோ, கானா பாட்டுகளோ தேவைப்படாத மிக எதார்த்தமான காதல் கார்த்திக்குடையது. நண்பனின் திருமண விழாவில் பார்த்த குறும்பும் அழகும் நிறைந்த பெண்ணை மீண்டும் மின்சார ரயிலில் சந்தித்து, அவளிடம் ‘நீ அழகா இருக்கேனு நினைக்கலை, நான் உன்ன காதலிக்கலை, ஆனா... இதெல்லாம் நடந்திருமோனு பயமாயிருக்கு’ என மூன்றே வரிகளில் தன் மொத்தக் காதலையும் சொல்வார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, காதலியை மனைவியாக்கி கட்டி முடிக்கப்படாத் ஒரு கட்டிடத்தில் தன் காதல் நிறைந்த கல்யாண வாழ்வைத் துவங்குவார், கார்த்திக். இந்த கட்டி முடிக்கப்படாத வீடு, ஒரு கவிதை போலக் காட்சிகளுக்கு கனம் சேர்த்தது. கார்த்திக், ஷக்தியின் புது வாழ்வைப் போல, முழுமையடையா அவர்கள் காதலைப் போல், வண்ணங்கள் பல சேர்க்கப் போகும் வாழ்க்கை போல், இந்த வீடும் ஒரு கதாபாத்திரமாய் இவர்கள் காதலைச் சொன்னது.

 முதல் இரவு முடிந்த மறுநாள் காலை, தான் கண் விழிப்பதற்காகவே தன் அருகிலேயே காத்திருக்கும் மனைவியிடம் 'நியூஸ் பேப்பர் வந்திருச்சா, கல்யாணம் ஆகிட்டா உலகத்தையே மறந்துடனுமா என்ன?' எனக் கேட்கும் ஒரு சராசரி ஆணாக தன் இயல்பை வெளிப்படுத்துவான், கார்த்திக். அதன் பிறகான தொடர் ஊடல்கள், கூடல்கள், மனைவி மீதான மறுபக்கப் புரிதல்கள் இல்லாமல் சிறு சிறு கோபங்கள் என வாழ்க்கை தொடர்வதும், மனதில் காதல் இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு அதை தினசரி வெளிக்காட்டத் தயங்குவதுமாய்,  ஒரு ஆண் டிஎன்ஏ-வை மாடர்ன் இளைஞன் வாயிலாக அப்பட்டமாக வெளிக்கொணர்த்திருப்பார், மணிரத்னம். சிறு சிறு சண்டைகளில்கூட, ஷக்தியிடம் கோபத்தை வெளிப்படுத்தும் கார்த்திக், மறுகணமே தவறை உணர்ந்து ஸாரி சொல்லி ஷக்தியின் நிலையைப் புரிந்துகொள்ள, படம் நெடுகிலும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருப்பான்.

இறுதிக் காட்சியில்கூட 'உன் பின்னாடி டிரெயின்ல பஸ்லனு துரத்தினேன் பார், அதுகூட காதலானு தெரியல. ஆனா, உன்னைக் காணாம தேடி தெருத் தெருவா சுத்தினேன் பாரு... அதான் காதல்னு புரிஞ்சது' என மனைவியின் முகம் பார்த்துக் கலங்குவது வரை, எந்தக் காட்சியிலும் மனைவியின் மீதான அவசரக் கோபம் வெளிப்படுமே தவிர, வெறுப்பு என்ற உணர்வை வார்த்தைகளில்கூட வெளிப்படுத்திவிடா விதத்தில் மிக இயல்பாகக் காதலன் டூ கணவன் மாற்றத்தைப் பதிவு செய்திருப்பார்கள். முதல் படமா என சந்தேகம் வரும் அளவு  ஒரு தேர்ந்த நடிப்பை வழங்கியிருந்தார், மாதவன்.

பிரதான பாத்திரங்களான கார்த்திக், ஷக்திக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இதர கதாபாத்திரங்களும் கனமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதிலும், வரதராஜன் என்ற வக்கீல் தந்தை கதாபாத்திரத்தில் பிரமிட் நடராஜனின் நடிப்பு தனி முத்திரை. கார்த்திக்கிடம், 'சிகரெட் பிடி, நீ சம்பாரிச்சுப் பிடிடா, என் சம்பாத்தியத்தில பிடிக்காத, நாலணா கொடுப்பாரு எங்கப்பா, நேரா பீமா விலாஸ் போவேன்... ஒரு தோசை, ஒரு காபி, நேரா நடையைக் கட்டுவேன், ஜோசப் காலேஜுக்கு' என இவர் ஆரம்பிக்கும் புராணம், 'அது வீடெல்லாம் ஒரேமாதிரி இருக்குங்களா, அதான் வீடு மாறி வந்துட்டோமோனு ஒரு சந்தேகம்' என ஷக்தி குடும்பத்தின் பொருளாதாரத்தைப் பட்டும் படாமல் கிண்டல் செய்வார். மகனின் கல்யாணத்தன்று வம்படியாக அவனைக் காரில் ஏற்றி, 'அப்பறம், தொரை என்ன பண்ணப் போறீங்க?' எனக் கேட்டு அதிர வைப்பது என வக்கீல் தந்தை பாத்திரத்தின் வசனங்கள், அதை அவர் வெளிப்படுத்தும் விதம் எனக் காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் சேர்த்திருப்பார்கள்.

நடுத்தர குடும்பத்தின் அம்மாவாக வரும் ஜெயசுதாவின் நடிப்பும் மிகவும் கவனிக்க படவேண்டிய ஒன்று. ஷக்தியைத் தேடி கார்த்திக் வீட்டிற்க்கு வரும்போது என்னதான் பிடிக்காதவன் என்றாலும், வந்திருப்பது வீட்டு மாப்பிள்ளை என்பதை உணர்ந்து 'எங்க வந்தீங்க நீங்க?' என மரியாதையுடன் கேட்பவர், மகளைக் காணவில்லை என்று தெரிந்தவுடன், 'என்ன பண்ண என் பொண்ண?' என ஒருமையில் கேட்கும் காட்சி சிறந்த உதாரணம். இப்படத்தில் மாதவன் நடித்து படமாக்கப்பட்ட முதல் காட்சியும் இதுதான். ஷக்தி வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில், 'ஓடிப்போனவளே, மானங்கெட்டவளே, அக்கா வாழ்க்கையை நெனச்சுப் பார்த்தியா?' என மனவலியில் வசைபாடும் இப்பாத்திரம், இறுதிக் காட்சியில் மகள் கண்விழித்தவுடன், வாஞ்சையுடன் மகளின் கன்னத்தைத் தொடாமல் தொடுவதெல்லாம் வேற லெவல் நடிப்பு. முதலில் அம்மாவைப் பார்த்த பிறகே அருகில் இருக்கும் கணவனைப் பார்ப்பார் ஷக்தி. அம்மாக்களுக்கும் மகள்களுக்கும் இடையேயான ஒரு வித ஆத்ம புரிதலை, ஆயுளுக்கும் தொடரும் அன்பை மைக்ரோ நொடிக் கவிதைகளாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதேபோல அப்பாவின் காசை அவருக்குத் தெரியாமல் கார்த்திக்கிடம் அவர் அம்மா தரும் காட்சி, ‘எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தித்தாளில் இருந்து ஆரம்பிப்பது என வசனங்கள் இன்றி காட்சிகளின் வாயிலாகவே பல கதைகள் சொல்லியிருப்பார்கள் இயக்குநர் மணிரத்னமும், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராமும்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தில் மணிரத்னம் தந்த ஒரு மணிமகுடம், 'அலைபாயுதே' படத்தின் ஆன்மாவே இசைதான்!. காதலின் துள்ளலை 'பச்சை நிறமே' பாடல் பின்னணியில் கீபோர்டு வழி கடத்தும் இசை, பிரிவின் வலியை, அது தரும் நிராகரிப்பின் வேதனையை, யாருமில்லா தனிமையின் அடர்த்தியை புல்லாங்குழல் வழியே 'எவனோ ஒருவனா'க வாசித்திருக்கும். திருமணத்திற்குப் பிறகு புது வீட்டில் நுழைந்த நொடியில் கிதார் வழி 'காதல் சடுகுடு'வாக கட்டவிழ்க்கும் பாருங்கள் ஒரு காதல்! மழையினூடே மஞ்சள் போர்வைக்குள் நிகழும் காதலை பார்வையாளன் மனதிற்குள் அப்படியே கடத்தும் இசை, ஏ.ஆர். ரஹ்மானுடையது. ஒரு இசை சரித்திரமாக தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெற்ற இப்பாடல்கள் முதலில் படத்தில் இல்லவே இல்லையாம், வெறும் பின்னணி இசை மட்டுமே போதும் என மணிரத்னம் முயற்சி செய்திருக்கிறார். பிறகு இறுதிக் கட்டத்தில்தான் பாடல்களை உருவாக்கியுள்ளனர். காலம் எத்தனை அதிசயமானது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், என்னென்ன புது கையடக்கக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இசை என்ற ஒன்று அதில் இருக்குமானால், அதில் 'அலைபாயுதே' பாடல்களும் நிச்சயம் இருக்கும்.

ஷக்தி செல்வராஜ், ரயில்வே ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தின் இரண்டாவது மகள். மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு ‘ஹவுஸ் சர்ஜன்'. விளையாட்டும், வேடிக்கையாய் கார்த்திக்கை ‘அழகா இருக்கீங்க!’ என சீண்ட, கார்த்திக்கின் குறும்பான, இளமை துள்ளும் காதலில் தன் மனதைப் பறிகொடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கார்த்திக்கின் மனைவி ஆகிறார். 'அலைபாயுதே'வின் ஜீவனே ஷக்திதான். மெல்லிய நுண் உணர்வுகளால், அடர்த்தியான காதல் கொண்டு ஒரு பரிபூரண அன்பைப் பின்னிப் பிணைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் இது. இதில், காட்சிக்குக் காட்சி நெகிழ வைக்கும் அற்புத நடிப்பை வழங்கியிருப்பார், ஷாலினி.

பெற்றோர்களின் பேச்சுவார்த்தை பிரச்னையில் முடிய, 'இனிமே வேண்டாம் கார்த்திக், உனக்கு ஒரு அசிங்கமான பொண்டாட்டி கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன்' எனத் தடாலடியாகப் பிரிவதாகட்டும், அதைத் தொடர்ந்து கார்த்திக்கைத் தவிர்க்க, ரயிலில் செல்லாமல் பேருந்தில் சென்று, 'விட்டாச்சுனா விட்ரனும் பூரணி, சும்மா தொட்டுத் தொறத்தி மறுபடியும் பேசுறதெல்லாம் பிடிக்காது' என்று பொய்யான இறுமாப்புடன் விலகுவது எனப் பிரிவின் ஆரம்பகட்ட வலியில் இருக்கும்போது வரும் பாருங்கள் ஒரு போன் காட்சி, ஆஸம்! வசனங்கள் தேவையே இருக்காமல், இருவரின் வாழ்க்கையை இணைக்கும் ஒரு பயணத்தின் முதல் புள்ளி இங்குதான் வைக்கப்படும். மறுமுனையில் தன் காதலன் குரல் கேட்டவுடன், என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறி, கண்கள் கலங்கி, ஒரு சில நொடி எதுவுமே பேசாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு, வழியத் தயாராக இருக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மளிகைக் கடைக்காரரிடம் ‘வரேன்’ என உடைந்த குரலில் சொல்லி நகர்வார். வார்த்தைகளில் விவரிக்க முடியாத அற்புத நடிப்பு இது.

படத்தின் இறுதிக் காட்சி வரை ஷக்தி தன் காதலை ‘ஐ லவ் யூ’ என்ற டெம்ப்ளேட் வார்த்தைகளால் சொல்லவே மாட்டார். கார்த்திக் முதல்முறையாக ‘ஐ லவ் யூ’ சொல்லும்போது, 'அப்டினா, என்ன மீன் பண்ற?' என்று மட்டும் கேட்பார். திருமணத்திற்குப் பிறகு கார்த்திக் போன் செய்து, 'நான் உன் புருஷன் கேட்கறேன்டி, ஐ லவ் யூ சொல்லு' எனும்போதும் அதைத் தொடர்ந்த 'சிநேகிதனே' பாடலில்கூட தன் கோரிக்கைகளை மட்டுமே கூறுவார். அப்படியாகத் தன் காதலை வெறும் வார்த்தையாகச் சொல்லாமல், ஒரு வாழ்க்கையாகத் தன் கணவனுடன் வாழத் துடிக்கும் ஷக்தி, விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி மீண்டதும், தன் கணவனைப் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை, ‘ஐ லவ் யூ’. கார்த்திக்கின் மீது அவள் கொண்ட அன்பும் காதலும் அவ்வளவு அடர்த்தியானது!

படம் துவங்கும்பொழுது கடல் அலைகள் ஓசை பின்னணியில் ‘அலைபாயுதே’ என டைட்டில் போடுவார்கள். இறுதியில் ஷக்தி தன் கணவனிடம் தன் காதலை சொல்வதுடன் முடித்திருப்பார்கள். அதாவது, அலைபாயும் கடல் கரையின் மீது கொண்ட காதலும், அலைபாயுதேவில் ஷக்தி கணவன் மீது கொண்ட காதலும் சொல்லும் செய்தி ஒன்றுதான். அது, காதல் முடிவில்லாதது, அன்பும் அந்நியோன்யமும் இருக்கும்வரை அழிவே இல்லாதது.

'அலைபாயுதே'வுடன் என்றும் அலைபாய்ந்திருப்போம்!


 

அடுத்த கட்டுரைக்கு