ஒரு முழுப் படத்தையே நம்மை ரீப்பீட் மோடில் பார்க்க வைத்தது, `மைக்கல் மதன காம ராஜன்', `காதலா காதலா', `வசூல் ராஜா', `பஞ்ச தந்திரம்' போன்ற படங்கள்தான். படம் முழுக்க சிரிக்க வைக்க முடியும் என்பதை சாத்தியப்படுத்தியது, `கமல்ஹாசன் - கிரேஸி மோகன்' என்ற இந்த இருவரது கூட்டணி. இவருக்கான பக்காவான ஜோடி என ஶ்ரீதேவியை சொல்லிவருகிறார்கள். ஆனால், கமலுக்குப் பொருத்தமான ஜோடி கிரேஸி மோகன்தான். இது `அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்தே வொர்க்அவுட் ஆகி வருகிறது. அப்படி வொர்க்அவுட் ஆன கெமிஸ்ட்ரிகளில் `காதலா காதலா' படமும் ஒன்று. இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதைப் பற்றிய ஓர் சிறப்புப் பகிர்வு.
கிரேஸி மோகனுக்கு தமிழ் எழுத்தாளர்களில் சோ, மௌலி மற்றும் சாவியை ரொம்பவே பிடிக்கும். அதேபோல், பிரிட்டிஷ் எழுத்தாளரான பி.ஜி.வுட்ஹவுஸும் கிரேஸிக்கு ஃபேவரைட். அவருடைய `Dimensions of humour' என்று அழைக்கப்படும் காமெடி கான்செப்ட்டை, தன்னுடைய எல்லாப் படங்களிலுமே பயன்படுத்தி வந்தார். வடிவேலுவின் காமெடிகளை நம் அன்றாட வாழ்வில் பொருத்தி, எப்படி காமெடி கவுன்டர்களுக்காகப் பயன்படுத்துகிறோமோ, கிரேஸியின் வசனங்கள், காமெடிகள் அனைத்துக்குமே நாம்தான் இன்ஸ்பிரேஷன். அதாவது, நமக்கே தெரியாமல் அன்றாட வாழ்வில் எதிர்பாரத விதமாக நம்மைச் சுற்றி நடக்கும் நகைச்சுவைகள்தான் கிரேஸி மோகனின் படங்களில் காமெடிகளாக இடம்பெற்றிருக்கும்.
உதாரணத்துக்கு, பதற்றமான ஒரு சூழலில் நம் வாய் குளறி, வார்த்தைகள் மாறுவது இயல்பு. `தொட்டிலையும் கிள்ளிவிட்டு, கொழந்தையையும் ஆட்டிவிடுவீங்களே' (மறுபடியும் ஒருக்கா அந்தப் பழமொழியை வாசிச்சுப் பாருங்க, நீங்களே சிரிப்பீங்க!). முதல் முறை படத்தின் காமெடிகளைப் பார்க்கும்போது அதற்குள் இருக்கும் டீடெயிலிங் கண்டிப்பாகப் புலப்படாது. அதையே இரண்டாம் முறை பார்த்தால், இதுபோன்ற `இன்ஸைட்' ஜோக் புரியும். அதனால்தான் இவரின் வசனங்களில் வரும் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது.
கமல் - கிரேஸி கூட்டணி என்றும் நம்மை ஏமாற்றியதில்லை. கிரேஸிக்கு வார்த்தைகளில் விளையாடுவது மிகவும் பிடித்த ஒன்று. `காதலா காதலா' படத்தில் இடம்பெறும் காட்சி இது. கமல் ஒரு இறந்தவரின் வீட்டுக்குச் செல்வார், அவர் பெயர் ராபர்ட்சன். இறந்தவரின் மகன் அஜய் ரத்னத்துக்கும், கமலுக்கு நடக்கும் உரையாடல், கீழே உள்ள புகைப்படத்தில்!
இதுபோல்தான் படம் முழுவதும் பல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். சார்லி சாப்ளின் `Chaplinesqe slapstick' ரக காமெடிகளுக்கு சொந்தக்காரர். அதாவது, வசனமே இல்லாமல் சிரிக்க வைப்பது சாப்ளின் ஸ்டைல். கிரேஸி, `Dialog comedy + Chaplinesqe slapstick' என இரண்டு மெத்தட்களையுமே பயன்படுத்தக்கூடியவர்.
உதாரணமாக படத்தில் குழந்தையை வைத்து இடம்பெற்றிருக்கும் ஒரு காமெடியில் காணலாம். ஒருபக்கம் வடிவேலு இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களைக் கண்டுபிடித்து கையும் களவுமாக சிக்கவைக்க, அவர்களிடம் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருப்பார். மறுபக்கம் கமல், ரம்பா, சௌந்தர்யா ஆகிய மூவரும் சொல்லும் பொய்களை சரிகட்ட எம்.எஸ்.விஸ்வநாதனிடமும், ஶ்ரீவித்யாவிடமும் சமாளித்துக்கொண்டிருப்பார்கள். இதில், மிச்சம் இருப்பது ஒருவர். அவர்தான் பிரபுதேவா. இவர்தான், `சாப்ளின்ஸ்க் ஸ்லாப்ஸ்டிக்' காமெடியை செய்துகொண்டிருப்பார். அதாவது, அனைவரும் வசனங்களின் வாயிலாக நகைச்சுவைகளைக் கடத்துகொண்டிருக்க, பிரபுதேவா தன் செய்கைகள் மூலமும் பாடி லாங்குவேஜ் மூலமும் காமெடி செய்துகொண்டிருப்பார். இதுதான் கிரேஸியின் டச். கிரேஸி - கமல் கம்போவில் வெளியான படங்கள் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்தால் இது தெரியும்.
கிரேஸியின் வசனங்களுக்கும் காமெடிகளுக்கும் ஒரு எண்ட் கார்டு போட முடியாது. படம் முழுவதும் வந்துகொண்டே இருக்கும். ஆரம்பத்தில் கமல் பெயின்டிங் வரைந்து இறந்தவர்களின் வீட்டுக்குச் சென்று விற்கும் கான்செப்ட் கொஞ்ச நேரத்திலே முடிந்துவிட்டாலும், அதைப் படத்தில் ஆங்காங்கே காமெடிகளுக்காகப் பயன்படுத்திக்கொண்டே இருப்பார். அதேமாதிரி செய்யும் செயல்களிலும் காமெடிகளை அள்ளித் தெளித்திருப்பார். ஊரிலிருந்து ரம்பாவைப் பார்க்க வந்திருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனை சௌந்தர்யாவின் அப்பா என நினைத்துவிடுவார், கமல். ரம்பாவைத் திட்டிய காரணத்தினால், கமலின் கையைப் பிடித்து, `தப்பு பண்ணிட்டேன் மாப்ளே, உங்க கையைக் காலா நினைக்கிறேன்' எனச் சொல்வார். அதற்குக் கமல், `அய்யய்ய கையை காலா நினைக்கிறதுல என்னங்க இருக்கு, நான்கூட தூங்கும்போது கையில கொசு கடிச்சிருச்சுனு காலைச் சொறிவேன்' என பதில் கூறுவார். இதை வார்த்தைகளாகச் சொன்னாலே சிரிப்பு வரும், படம் முழுவதும் இதே ரகத்தில் காமெடி இருந்தால், எப்படி இருக்கும்?
தன்னைத் தானே வருத்திக்கொண்டு காமெடி செய்வது சாப்ளினின் ஸ்டைல். நடக்கும் இயல்பான விஷயங்களை வைத்து, டபுள் மீனிங் இல்லாமலும், அடுத்தவர்களைப் புண்படுத்தாமலும் காமெடி செய்வது கிரேஸியின் ஸ்டைல். இந்தப் படம் வெளியாகி இருபது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களது காம்போ நம்மைச் சிரிக்க வைக்கத் தவறுவதில்லை.
வாழ்த்துகள் கிரேஸி - கமல். யூ போத் ஆர் வெரி கிரேஸி!
'அலைபாயுதே' படம் குறித்த ஸ்பெஷல் கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.