Published:Updated:

"என் அழுகை சீன்ஸ்தான் என் பிள்ளைகளுக்கு செம காமெடி!" 'மெட்டி ஒலி' சாந்தி

"என் அழுகை சீன்ஸ்தான் என் பிள்ளைகளுக்கு செம காமெடி!" 'மெட்டி ஒலி' சாந்தி
News
"என் அழுகை சீன்ஸ்தான் என் பிள்ளைகளுக்கு செம காமெடி!" 'மெட்டி ஒலி' சாந்தி

"27 வருஷமா டான்ஸரா வொர்க் பண்றேன். ஆனா, அந்த அடையாளத்தைப் பலரும் மறந்துட்டாங்க. 'மங்களா'னுதான் எங்க போனாலும் கூப்பிடுறாங்க. அதனால பெருமையா நினைக்கிறேன்."

"27 வருஷமா டான்ஸரா வொர்க் பண்றேன். ஆனாலும், அதைப் பலரும் மறந்துட்டாங்க. எங்கே போனாலும் 'மங்களா'னுதான் கூப்பிடறாங்க. அதையும் பெருமையாகவே நினைக்கிறேன்" எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான, 'மெட்டி ஒலி' சாந்தி. சமீபத்தில் முடிந்த 'குலதெய்வம்' சீரியலில் மங்களசுந்தரி கதாபாத்திரத்தில் நடித்தவர்.

"டான்ஸ் மாஸ்டரா இருந்தவர் நடிகையானது எப்படி?"

"நிறைய வெற்றிப் பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணியிருக்கிறேன். '5 ஸ்டார்', 'சிநேகிதியே' உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தும் நடிக்கலை. 'மெட்டி ஒலி' இன்ட்ரோ பாட்டுக்கு கோரியோகிராபி பண்ணி டான்ஸ் ஆடியிருப்பேன். அந்த டைட்டில் பாடலுக்கு நிறைய ரசிகர்கள் உருவானாங்க. 'மெட்டி ஒலி' சாந்தி என எனக்கு அடைமொழியும் கிடைச்சது. நடிக்கும் வாய்ப்புகளும் வந்துச்சு. அப்போதெல்லாம் அதில் ஆர்வம் இருந்ததில்லை. ஒருமுறை திருமுருகன் சாரை சந்திச்சப்ப அவரும், 'நீங்க நடிக்கலாமே மாஸ்டர்'னு சொன்னார். 'நல்ல கேரக்டர் இருந்தா சொல்லுங்க சார். நடிக்கிறேன்'னு சும்மா சொன்னேன். சில மாதங்களிலேயே 'புது சீரியல் எடுக்கிறேன். நீங்க நடிக்கிறீங்க'னு சொன்னார். நான் நடிப்பேன்னு நம்பவேயில்லை. ஆனால், அது நடந்துச்சு. 'குலதெய்வம்' மங்களசுந்தரி ஆனேன்."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"நடிப்பு அனுபவம் இல்லாமல் தொடக்கத்தில் தடுமாற்றம் இருந்துச்சா?"

"இல்லை. ஆடிஷனில் பலரையும் நடிச்சுக்காட்ட சொல்லி செலக்ட் பண்ணினபோதும், என்னை போட்டோ ஷூட் மட்டும் எடுத்துட்டு அனுப்பிட்டாங்க. திடீர்னு நடிக்க வரச்சொல்லிட்டார் திருமுருகன் சார். முதல் நாளில், 'என்னை ஏன் ஆடிஷன் பண்ணலை?'னு கேட்டேன். 'நீங்க நல்லா நடிப்பீங்கனு நம்பிக்கை இருந்துச்சு'னு சொன்னார். அந்த நம்பிக்கையைப் பூர்த்திசெய்துட்டேன்னு நம்பறேன். டான்ஸரா, டான்ஸ் மாஸ்டரா கேமரா முன்னாடி நிறைய வொர்க் பண்ணியிருக்கிறதால், கேமரா முன்னாடி எந்தத் தடுமாற்றமும் இல்லை. வடிவுக்கரசி அம்மா, மெளலி சாருக்கு மகளா நடிச்சேன். அவங்க ரெண்டு பேருமே சினிமாவில் பெரிய சீனியர்ஸ். முதல் ரெண்டு வாரத்துக்குக் கொஞ்சம் தடுமாற்றம் இருந்துச்சு. அப்போ, திருமுருகன் சார் நடிச்சுக்காட்டி நிறைய ஹெல்ப் பண்ணினார்.''

"சீரியல் நடிப்பினால் கிடைச்ச மறக்கமுடியாத அனுபவம் பற்றி..."

" 'அண்ணே... அந்தப் பொம்பளையை (வடிவுக்கரசி அம்மாவை) முதல்ல போகச்சொல்லு'னு என் அண்ணா துரைபாண்டியிடம் சொல்றதுதான் முதல் நாள் முதல் ஷாட். தொடக்கத்திலேயே வடிவுக்கரசி அம்மாவை திட்டணுமானு தயங்கினேன். 'இது வெறும் நடிப்புதான். கேரக்டர்படி என்னை உங்களுக்குப் பிடிக்காது. நான் தப்பா எதுவும் நினைக்க மாட்டேன்'னு சொன்னாங்க. இப்படி நிறையச் சம்பவங்கள் நடந்திருக்கு. சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச சில மாதங்களிலேயே ஆடியன்ஸ்கிட்ட பாராட்டுகள் கிடைக்க ஆரம்பிச்சது. என் நிஜ பேயரை மறந்துட்டு, 'மங்களா', 'மங்களசுந்தரி'னுதான் கூப்பிடறாங்க. என் டான்ஸ் யூனியனிலும் நடிகை வந்துட்டாங்கனு அன்பா கிண்டல் பண்றாங்க."


 

"சீரியல் டீமை எவ்ளோ மிஸ் பண்றீங்க?"

"சொல்லத் தெரியலை. ஆனால், நினைச்சாலே அழுகை வந்திடும். ஷூட்டிங் ஸ்பாட்டுல சிலர் எங்கிட்ட டான்ஸ் கத்துக்கொடுக்கச் சொல்வாங்க. நான் வித்தியாசமா டான்ஸ் ஆடிக் காட்டுவேன். இதனால், ஷாட் இல்லாத நேரங்களில் ஆட்டம் பாட்டம்னு அமர்க்களம் பண்ணுவோம். எல்லோருமே என்னை மாஸ்டர்னு கூப்பிடுவாங்க. சின்ன வயசிலிருந்தே ஃபேமிலி நபர்கள் சூழ வளர்ந்தவள் நான். ஆனால், என் அப்பா மற்றும் ரெண்டு அக்காவும் இறந்துட்டாங்க. அதனால், உண்டான வருத்தத்தைப் போக்கினது 'குலதெய்வம்' சீரியல் டீம். எல்லோரும் ஃபேமிலி நபர்களாகப் பழகினோம். சீரியல் முடிஞ்சுட்டாலும், வாரம் ஒருத்தர் வீட்டு விருந்தில் மீட் பண்ணிக்க பிளான் பண்ணியிருக்கோம். இன்னிக்கு துரைபாண்டி அண்ணன் வீட்டுல விருந்து." 

"அடுத்த புராஜெக்ட்ஸ் பற்றி..."

"அரவிந்த்சாமி சார் ஹீரோவா நடிக்கும் 'வணங்காமுடி' படத்தில் வில்லியா நடிக்கிறேன். சில படங்களில் டான்ஸ் மாஸ்டராவும் வொர்க் பண்ணிட்டிருக்கேன். நடிப்பு, டான்ஸ் மாஸ்டர்னு ரெண்டு வொர்க்கும் தொடரும். திருமுருகன் சாரின், 'கல்யாண வீடு' புது சீரியல் தொடங்கியிருக்கு. அதிலும் நான் உண்டுன்னு சொல்லியிருக்கார். எப்போ என் என்ட்ரி தொடங்கும்னு தெரியலை."

"ஃபேமிலி நபர்கள் எப்படி சப்போர்ட் பண்றாங்க?"

" 'உன் விருப்பப்படி டான்ஸ், நடிப்பில் கவனம் செலுத்து'னு கணவர் அரவிந்த் வித்யாசகர் ஃபுல் சப்போர்ட் கொடுத்திருக்கார். மேக்கப், டிரஸ் என நான் சரிசெய்துக்கவேண்டிய விஷயங்களை என் பொண்ணு கவனிச்சு சொல்வாள். டிவியில் என் சீன்ஸ் வரும்போது, பொண்ணு பவிஷ்யா, பையன் தாரக் கைத்தட்டி ரசிப்பாங்க. நான் அழும் காட்சியில் சிரிப்பாங்க. நான் அழுதால், அது அவங்களுக்கு செம காமெடி காட்சியா இருக்கு. என் மாமியாரும் மாமனாரும் திருவண்ணாமலையில் வசிக்கிறாங்க. 'எங்க மருமகள் நடிக்கிறா'னு பெருமையா சொல்லி சந்தோஷப்படறாங்க. அன்பான குடும்பம். அழகான வாழ்க்கை."