Published:Updated:

"பெரிய நடிகர்களுக்கு சம்மர் ஹாலிடே; பிரச்னை எங்களுக்குத்தான்!" - போண்டா மணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"பெரிய நடிகர்களுக்கு சம்மர் ஹாலிடே; பிரச்னை எங்களுக்குத்தான்!" - போண்டா மணி
"பெரிய நடிகர்களுக்கு சம்மர் ஹாலிடே; பிரச்னை எங்களுக்குத்தான்!" - போண்டா மணி

"பெரிய நடிகர்களுக்கு சம்மர் ஹாலிடே; பிரச்னை எங்களுக்குத்தான்!" - போண்டா மணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 45 நாள்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஸ்டிரைக். கியூப் பிரச்னை உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடந்து வரும் இதனால், மொத்த சினிமா உலகமும் பாதிப்பில் இருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக பலமுறை திரையரங்கு உரிமையாளர்கள், கியூப் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட  பலரிடமும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சந்தித்துப் பேசினார். நியாயமான பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்த ஸ்டிரைக் மும்முரமாக நடந்துகொண்டிருந்தாலும், சினிமா ஷூட்டிங்கை மட்டுமே நம்பியிருக்கும் பல துணை நடிகர், நடிகைகள் தினசரி வருமானம் இல்லாமல் பெரும் பாதிப்பில் இருக்கிறார்கள். பெரிய நடிகர், நடிகைகளோடு ஒப்பிடும்போது, இவர்களது நிலை படுமோசம். அவர்கள் சிலரிடம், இந்த பாதிப்பு குறித்துப் பேசினேன். 

'' நாங்க மட்டுமில்ல, இதனால பலரும் பாதிக்கப்பட்டிருக்காங்க." என்று பேச ஆரம்பிக்கிறார், நடிகர் போண்டா மணி. 

"என்னைப் பொருத்தவரைக்கும் சொல்லணும்னா, நான் பெரிய நடிகர்  இல்ல. பெரிய வருமானம் இருக்கிற நடிகரும் இல்ல. இப்போ நடந்துக்கிட்டு இருக்கிற ஸ்டிரைக்னால என்னை மாதிரி பல துணை நடிகர்களுக்குதான் பெரிய பாதிப்பு. பெரிய நடிகர்களைப் பொருத்தவரைக்கும் இந்த ஸ்டிரைக் மூலமா பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. தவிர, இது வெயில் காலம் வேற... அதனால வெளிநாட்டுக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துட்டு வந்துடுவாங்க. ஆனா, என்ன மாதிரியான கலைஞர்கள் ரொம்பக் கஷ்டப்படுறாங்க. முன்னாடியெல்லாம் இப்படி சில பிரச்னைகள் நடக்கும்போது, ஷூட்டிங் நிறுத்தக்கூடாதுனு சொல்வாங்க. ஆனா, இப்போ பலநாளா ஷூட்டிங் இல்லை. இது, தப்பான விஷயமாதான் எனக்குப் படுது. 

எங்களுக்கு மாசத்துக்கு 5 - 10 நாள்தான் வேலை கிடைக்கும். ஷூட்டிங் நடந்துச்சுனா எனக்கு ஒருநாள் வருமானம் 10,000 வரும். இப்போ, ஷூட்டிங் இல்லாததுனால இருக்கிற காசை வெச்சு மேனேஜ் பண்ணிட்டிருக்கேன். தவிர, கலைநிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு அதுமூலமா கிடைக்கிற காசை வெச்சு இப்போதைக்கு குடும்பத்தை ஓட்டிக்கிட்டிருக்கேன். ஆனா, நான் மட்டும் சாப்பிட்டா போதுமா? சினிமாவை மட்டும் நம்பியிருக்கிற சக கலைஞர்களும் சாப்பிட வேண்டாமா... துணை நடிகர்கள் சிலருக்கு நாளைக்கு 500 ரூபாய் வாங்கிட்டு நடிக்கிறவங்களும் இருக்காங்க. அவங்கெல்லாம் ஷூட்டிங் இல்லாததுனால, வேற வேலைக்குப் போய் கஷ்டப்படுறதையும் நான் பார்க்குறேன். 

வடிவேலு சார் தொடர்ந்து சினிமாவுல நடிச்சுக்கிட்டு இருந்தப்போ அவரை நம்பி சிலர் இருந்தாங்க. தொடர்ந்து அவரோட கூட்டணி போட்டு நடிச்சுக்கிட்டு இருந்தோம். எல்லா இயக்குநர்களும் எங்க கால்ஷீட்டையும் சேர்த்து வாங்குனாங்க. இப்போ, வடிவேலு சார் அவ்வளவா நடிக்கிறதில்லை. அதனால, எங்களை மறந்துட்டாங்க. ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். நாடகக் கலைஞர்களோட நிலைமை இன்னும் மோசம். இந்தப் பிரச்னைகளுக்கு ஷூட்டிங்கை நிறுத்தாமலும் போராடலாம்; ஆனா, அதை எடுத்துச் சொல்ற இடத்துல நாம இல்லை!" என்றார், வேதனையாக!  

"உங்களோட ஆதங்கத்தை யாரிடமாவது சொன்னீங்களா?"

"ராதாரவி அண்ணன் தலைமையில் இருக்கும்போது என்னை மாதிரி ஆளுங்க துணிஞ்சு பேசுனோம், வாய்ப்புகளும் கொடுத்தாங்க. இப்போ விஷால் சார் தலைமை பொறுப்புக்கு வந்ததுக்குப் பிறகு நாங்க பேசுறதுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலை. பெரிய இடத்துல இருக்கிறவங்களே பேசித் தீர்மானம் போடுறாங்க. ராதாரவி சார் அப்படி இல்லை. நாடகக் கலைஞர்கள், துணை நடிகர்களையும் மீட்டிங்க்கு கூப்பிட்டு எங்களோட கருத்துக்களைக் கேட்பார். இதனால, ராதாரவி சாருக்கு நான் சப்போர்ட் பண்ணிப் பேசுறேன்னு நினைக்காதீங்க. நமக்கு எல்லா நடிகர்களும் வேணும். எல்லோரும் ஒரே இனம்தான்னு நினைக்கிறவன். வசதியா இருக்கிற சிலர் நாடகக் கலைஞர்களோட கஷ்டத்தை உணர்வதில்லை. பழைய நடிகர்கள் எல்லாம் தங்களோட இருக்கிற நாடகக் கலைஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பாங்க. இப்போ அப்படி யாரும் இல்லை!" என ஆதங்கப்படுகிறார், போண்டாமணி. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு