Published:Updated:

’’ மெர்க்குரி’, ஒரு கார்ப்பரேட் கிரைம் திரைப்படம்..!’’ - சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்

அலாவுதின் ஹுசைன்

கொடைக்கானல் யூனிலிவெர் நிறுவனத்தின் பாதரச கலப்படத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மெர்க்குரி ஒரு கார்ப்பரேட் கிரைம் பற்றிய திரைப்படமென சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன் பாராட்டியுள்ளார்...

’’ மெர்க்குரி’, ஒரு கார்ப்பரேட் கிரைம் திரைப்படம்..!’’ - சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்
’’ மெர்க்குரி’, ஒரு கார்ப்பரேட் கிரைம் திரைப்படம்..!’’ - சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சினிமா ஸ்டிரைக்கின் ஒரு பகுதியாக புதுப்படங்களை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ளது. இதன் காரணமாக 'மெர்க்குரி' தமிழ்நாட்டை விடுத்து உலகமெங்கும் சென்றவாரம் ரிலீஸ் ஆனது. 

இந்நிலையில் நேற்று நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு சென்னையிலுள்ள தாகூர் திரையரங்கில் 'மெர்க்குரி' திரையிடப்பட்டது. சிறப்பு காட்சியில் பங்கேற்ற சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன், "கொடைகானல் யூனிலிவெர் நிறுவனத்தின் பாதரச கலப்படத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கார்ப்பரேட் கிரைம் திரைப்படம்’’ என முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.

படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையே, படம் எப்படி இருக்கு என்று கேட்டு தெரிந்து கொள்வோம் என போன் செய்தேன். 'மெர்க்குரி' குறித்து பேசிய அவர், "இது வெறும் கொடைக்கானல் பாதரச கலப்பட விவகாரத்தை மட்டும் வைத்து எடுத்த படம் அல்ல. எண்ணூர் துறைமுக பிரச்னை, ஓ.என்.ஜி.சி மீத்தேன் பிரச்னை , தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை என எல்லா பிரச்னைகளிலும் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் அரசியல் பற்றியும், ஆதிக்கத்தைப் பற்றியும், மக்கள் அவலத்தை பற்றியும் கூற முற்பட்டிருக்கிறார். வழக்கமாகச்  சினிமாவில் யாரும் எடுத்திராத மௌனப் படத்தின் மூலமாகக் கூறும் முயற்சியை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எடுத்திருக்கிறார். இத்தகைய படைப்பாளிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த மாதிரி தொழிற்சாலை விவகாரங்களில் நாம் மேம்போக்காக நமக்குள் சண்டையிட்டு கொள்கிறோம். நம் மீது ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் காரர்களை நாம் விட்டுவிடுகிறோம்’’ என்றவரிடம், ’ஊடகம் மற்றும் கலைத்துறை இத்தகைய சூழலியல் விஷயங்களில் எப்படி செயல் படுகிறது’ என்று கேட்டேன்.

"எண்ணூர் காமராஜர் துறைமுக பிரச்னை, ஓ.என்.ஜி.சி மீத்தேன் பிரச்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை என பிரச்னைகள் எழும்போது மட்டும் அதை மூட வேண்டும் எனக் கூட்டமாக முழங்குகிறோம். இதை இன்னும் வலிமை மிக்க ஒரு குரலாய் ஒலிக்கச் செய்ய நாம் இந்த பிரச்னைகளில் இருக்கும் கார்ப்பரேட் விஷயங்களை பகுத்தாய வேண்டும். இங்குள்ள மக்களாட்சி யாருக்காக இருக்கு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் இந்த அரசு தூத்துக்குடி மக்கள் பக்கமா, இல்லை அந்த முதலாளிகளின் பக்கமா? மீத்தேன் விவகாரத்தில் விவசாயிகளின் பக்கமா, இல்லை அந்த ஓ.என்.ஜி.சி பக்கமா? என கார்ப்பரேட் பின்னணிகளைக் குறித்து ஆராய வேண்டும்" என்றார்

’மெர்க்குரி' படம் தமிழகத்தில் வெளியாகாததைக் குறித்து 'மெர்க்குரி' படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ‘’இன்று தமிழகத்தில் நடந்து வரும் பிர்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட ஒரு சமுதாயக் கருத்தைக் கொண்டுள்ள படம். வெளியிட்ட அனைத்து தென் மாநிலங்களிலும் ரசிகர்களால் இதை கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படத்தை இந்தச் சூழலில் காட்ட இயலவில்லை என்பது வருத்தமாக இருந்தாலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாங்கள் படத்தை வெளியிடவில்லை. நாளை அரசு நடத்தும் பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும், படம் தமிழகத்தில் ரிலீசாகும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பிரபுதேவா கேட்டுக் கொண்டதின்படி ரசிகர்கள் பைரஸி தளங்களில் படம் பார்க்காமல் இருக்க வேண்டும்" என்றார்.

30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படம், ’மெர்க்குரி’ என்பது குறிப்பிடத்தக்கது.