Published:Updated:

``அப்போ 'சக்கரை' இப்போ `சர்வம் தாள மயம்'! " - 'அப்போ இப்போ' வினீத். பகுதி 6

``அப்போ 'சக்கரை' இப்போ `சர்வம் தாள மயம்'! " - 'அப்போ இப்போ' வினீத். பகுதி 6
``அப்போ 'சக்கரை' இப்போ `சர்வம் தாள மயம்'! " - 'அப்போ இப்போ' வினீத். பகுதி 6

'ஆவாரம் பூ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் வினீத், எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு 'சர்வம் தாள மயம்' படத்தில் நடிக்கிறார். அவருடைய 'அப்போ இப்போ' கதை இது.

'ஆவாரம் பூ' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 'ஜென்டில்மேன்', 'வேதம்', 'சந்திரமுகி' எனப் பல படங்களில் நடித்தவர், நடிகர் வினீத். நல்ல நடிகர் மட்டுமின்றி பரதநாட்டியக் கலைஞரான வினீத் இப்போ என்ன பண்றார்... சந்தித்தோம். 

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கேரளா. ஆனால், எனக்குத் தமிழ் ரொம்பப் பிடிக்கும். சென்னையில்தான் பி.காம் முடித்தேன். சின்ன வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். என் பரதநாட்டிய குரு, கலாமண்டலம் சரஸ்வதி. என் சினிமா கரியரைத் தொடங்கி வைத்தது, எம்.டி.வாசுதேவன் நாயர். சரஸ்வதியோட கணவர். என் முதல் மலையாளப் படமான 'இடநிலங்கள்' படத்துக்கு ஸ்கிரிப்ட் வாசுதேவன் சார்தான். அவர்தான் எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடித்தேன். எனக்குச் சின்ன ரோல்தான். ஆனா, முக்கியமான ரோல்!. 

என் ரெண்டாவது படத்தில், ஹீரோ சான்ஸ் கிடைத்தது. அதற்கும் வாசுதேவன் சார்தான் ஸ்க்ரிப்ட் ரைட்டர். பிறகு தொடர்ந்து பல மலையாளப் படங்கள் நடிச்சுக்கிட்டு இருந்தேன். தமிழில் 'ஆவாரம் பூ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இந்தப் படத்திற்காக ஃபிலிம் பேன்ஸ் அசோசியேஷன் தமிழ்நாடு சார்பாக சிறந்த அறிமுக நாயகன் விருது கிடைத்தது. 

'ஆவராம்பூ' படத்தின் வாய்ப்பு இயக்குநர் பரதன் மூலமாகக் கிடைத்த வாய்ப்பு. ஏற்கெனவே 'வைஷாலி' என்ற ஒரு மலையாளப் படத்தை பரதன் இயக்கினார். அந்தப் படத்தின் ஆடிஷனுக்காக நான் போனேன். ஆனால், சில காரணங்களால் முடியாமல் போனது. பிறகு, 'பிராணமம்' என்ற மலையாளம் படத்தை பரதன் இயக்க, நான் நடித்தேன். மம்முட்டி, சுஹாசினி நடித்த படம். படத்தில் இடம்பெற்ற நான்கு இளைஞர்கள் கேரக்டரில், நானும் ஒருவன்.  

சென்னை நியூ காலேஜில் பி.காம் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. கேரளாவில் ஒரு நடிகராக என்னைப் பலருக்கும் தெரியும். அதனால், சென்னையில் படித்தேன். அந்த நேரத்தில்தான் பரதநாட்டியப் பயிற்சி பெற்றேன். ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் பரதன் சாரை சந்தித்தேன், அவரது 'ஆவாரம் பூ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'ஆவாரம்பூ' படத்தில் இடம்பெற்ற ஹீரோவின் நண்பர் கேரக்டருக்குத்தான் என்னை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு, என்ன நினைத்தாரோ... என்னை ஹீரோ ஆக்கிவிட்டார். ஹீரோ 'சக்கரை' கேரக்டருக்கு என்னை போட்டோஷூட் செய்த தேதிகூட எனக்கு ஞாபகம் இருக்கிறது, மே 21, 1991-ல்தான் அந்த போட்டோஷூட் நடந்தது. நாள் மறக்காமல் இருக்கக் காரணம், அன்றைய தினம்தான் ராஜீவ்காந்தி  கொல்லப்பட்டார். அன்று நடந்த பல வன்முறை நிகழ்வுகளில் இருந்து என்னைப் பாதுகாத்தது, இயக்குநர் பரதன் சார்தான். 

'ஆவாரம் பூ' பெரிய வெற்றியைப் பெற்றது. மலையாளத்திலும் தொடர்ந்து படங்களில் நடித்தேன். திடீரென ஒருநாள் இயக்குநர் பாலசந்தர்  அலுவலகத்தில் இருந்து அழைப்பு. 'பாலசந்தர் பேசுறேன்' என்ற குரலைக் கேட்டவுன் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. 'உன் படம் பார்த்தேன், ரொம்ப நல்ல நடிச்சிருக்க... நான் ஒரு படம் பண்றேன். அதுல நீ நடி. அடுத்து எப்போ சென்னைக்கு வர்றியோ, அப்போ வந்து மீட் பண்ணு' என்றார். சென்னை வந்து பாலசந்தர் சாரை சந்தித்தேன். 'ஜாதிமல்லி' கதையைச் சொன்னார். என் கேரக்டர் பெயர், 'மாஸ்கோ'. இயக்குநர் சிகரம் படத்தில் நான் நடித்தது அவ்ளோ சந்தோஷம். 

பிறகு, 'ஜென்டில்மேன்' பட வாய்ப்பு வந்தது. குஞ்சுமோன் சார் மூலமாகக் கிடைத்த வாய்ப்பு இது. அதற்கு முன் ஷங்கர் சாரை நான் பார்த்ததில்லை. ஜீவா சார்தான் கேமராமேன். மனோராமா ஆச்சிகூட இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் பெருமையா இருந்தது. ஏனெனில், எனக்கு ஆச்சி மனோரமாவின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். முதல் முறையா இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் அவரை சந்தித்தேன்.  

படத்தில் நான் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியை எடுக்கும்போது, எனக்கு ரொம்பப் பயம். ஏனெனில், அந்தக் காட்சியைப் படமாக்கும்போது, பஸ் ரீவர்ஸில் போகும், என் தலை பஸ் சக்கரத்தின் அடியில் இருக்கும். கொஞ்சம் தவறினாலும், என் தலை அவ்வளவுதான். அதனால், ரொம்பப் பயந்தேன். அர்ஜூன் சாருடன் 'ஜென்டில் மேன்' படத்துக்குப் பிறகு 'வேதம்' படத்தில் நடித்தேன். ஒரு நடிகராக அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இயக்குநராக முதல் முறை பார்த்தது இந்தப் படத்தில்தான். அர்ஜூன் சார் நடிப்பைச் சொல்லித்தரும் விதம் ரொம்ப அழகாக இருக்கும். பாடல் காட்சிகளுக்குக்கூட மேனரிஸங்களைச் சொல்லிக்கொடுத்து அசத்துவார். 

என் கரியரில் மறக்கமுடியாத படம், 'மே மாதம்'. ரஹ்மான் சாரோட இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட். பிறகு, 'காதல் தேசம்' எனக்குப் பெரிய ரீச் கொடுத்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது, 'காதல் தேசம்'.  குஞ்சுமோன் சார் மூலமாகத்தான் 'காதல் தேசம்' பட வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

அதற்குப் பிறகு, எனக்கு தமிழைவிடத் தெலுங்கில் பல படங்கள் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் நடித்தேன். 

'காதல் தேசம்' படத்தின் ஷூட்டிங்கின்போதே படத்தில் நடித்த தபு, அப்பாஸ் உள்பட அனைவரும் நல்ல நட்போடு இருந்தோம். ரிலீஸுக்குப் பிறகும் அந்த நட்பு தொடர்ந்தது. வாய்ப்பு கிடைக்கும்போது சந்தித்துப் பேசிக்கொண்டோம். அப்பாஸ் தற்போது நியூசிலாந்தில் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில்தான் அவருடன் பேஸ்புக்கில் தொடர்புகொண்டு பேசினேன். அவருடைய குழந்தைகள் எல்லாம் நன்றாக வளர்ந்துவிட்டார்கள். சமீபத்தில் தபுவை கேரளாவில் என் உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பார்த்துப் பேசினேன். அப்பாஸ், தபு இருவரையும் இத்தனை வருடம் கழித்துப் பார்த்துப் பேசினாலும் நேற்று பழகியது மாதிரிதான் இருக்கும்!" என்ற வினீத், நடிகர் நாசரைப் பற்றி சொல்கிறார்.  

``தங்கமான மனிதர் நாசர் சார். அவருடைய எளிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோடு அவுட்டோர் படப்பிடிப்புக்குப் போவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு மரத்தைப் பார்த்தால், அதன் வேர் வரை ஆராயும் இயற்கை விரும்பி அவர். அவருடைய இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். நல்ல நண்பர்!" என்றவரிடம், 'சந்திரமுகி' அனுபவங்களைக் கேட்டேன். 

''ரஜினி சாருடன் எனக்கு முதல் படம், 'சந்திரமுகி'. எனக்கு சினிமாவில் அவருடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அது இந்தப் படத்தின் மூலமாகத்தான் நிறைவேறியது. 'ரா...ரா...' பாடல் ஷூட்டிங்கின்போது நானும், ஜோதிகாவும் ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்போம். அப்போது, அங்கே இயக்குநர் வாசு, ரஜினி, பிரபு எல்லோரும் இருப்பார்கள். ஜோதிகாவுடன் படத்தில் இடம்பெறும் இந்த முக்கியமான பாடலில் நடித்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. ஜோதிகா கிளாசிக் நடனம் கத்துக்கிட்டதில்லை. ஆனால், படத்தில் பிரமாதமாக ஆடியிருந்தார். 'சந்திரமுகி' வாழ்க்கையில் மறக்கமுடியாத படம்!" என்றவர், 'இப்போ' கதைகளைச் சொன்னார்.  

``எனக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருக்கு. குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டேன். மனைவி பரதநாட்டியப் பள்ளி நடத்திக்கிட்டு இருக்காங்க. என் பொண்ணு பரதநாட்டியம் கத்துகிட்டு இருக்காங்க. தொடர்ந்து மலையாளப் படங்கள் பண்ணினேன். தமிழில்தான் 8 வருட இடைவெளி விழுந்துவிட்டது. என் பரதநாட்டியமும் மேடைகளில் அரங்கேறிக்கிட்டுதான் இருக்கு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ராஜீவ்மேனனின் 'சர்வம் தாள மயம்' படத்தில் நடித்திருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ்தான் ஹீரோ. முக்கியமான, சவாலான கேரக்டர் எனக்கு... இனி தொடர்ந்து தமிழ் படங்களில் பார்க்கலாம்!" என்கிறார், வினீத். 

அடுத்த கட்டுரைக்கு