Published:Updated:

’’ ‘ரீமேக்தானே... எதுக்கு கதைலாம் சொல்றீங்க'ன்னார் விஜய்..!’’ – ‘கில்லி’ கதை சொல்லும் தரணி #14YearsOfGhilli

தார்மிக் லீ
’’ ‘ரீமேக்தானே... எதுக்கு கதைலாம் சொல்றீங்க'ன்னார் விஜய்..!’’ – ‘கில்லி’  கதை சொல்லும் தரணி #14YearsOfGhilli
’’ ‘ரீமேக்தானே... எதுக்கு கதைலாம் சொல்றீங்க'ன்னார் விஜய்..!’’ – ‘கில்லி’ கதை சொல்லும் தரணி #14YearsOfGhilli

’’ ‘ரீமேக்தானே... எதுக்கு கதைலாம் சொல்றீங்க'ன்னார் விஜய்..!’’ – ‘கில்லி’ கதை சொல்லும் தரணி #14YearsOfGhilli

எனக்கு நினைவு தெரிந்து நான் தியேட்டரில் பார்த்த முதல் படமென்றால் விஜய் நடித்த கில்லி படத்தைத்தான் சொல்வேன். காரணம் படத்தைத் தவிர்த்து அங்கு நடந்த ஒட்டுமொத்த நிகழ்வுகள் அனைத்தும் இன்னமும் என் ஞாபகத்தில் இருக்கிறது. `இளையதளபதி விஜய்' என்ற எழுத்துகளோடு, கறுப்புச் சட்டை போட்டு ஒருவர் நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும் தியேட்டரில் இருந்த அனைவரும் பேப்பரை கிழித்துப் பறக்கவிட்டு, விசில் சத்ததில் அரங்கத்தையே அதிரடித்தனர். படம் முடியும் வரை ஓயாத அலைகளைப் போல் ஒருவரின் குரலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. 

நான் வளர, வளர விஜய்யும் உச்ச நடிகராக வளர்ந்துகொண்டே வந்தார். இருந்தாலும், கில்லி போன்ற படத்தை அவரே நினைத்தாலும்  மறுபடியும் நடிக்க முடியாது, தரணியே நினைத்தாலும் அதுபோன்ற படத்தை இயக்க முடியாது. இப்படிப்பட்ட படம் வெளிவந்து இன்றோடு (17.04.2018) 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. விஜய் அளவுக்கு இல்லாவிட்டாலும், நானும் ஒரு சினிமா ரிப்போர்டர் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், இயக்குநர் தரணியிடமே படத்தைப் பற்றிய சுவராஸ்யத் தகவல்களை கேட்டு மகிழ்ந்திட அவரைத் தொடர்பு கொண்டேன்!

``இந்தப் படத்தை இயக்குற வாய்ப்பு உங்களுக்கு எப்படி வந்தது?''

"ரத்னம் சார் ஏற்கெனவே இந்தப் படத்துடைய ரைட்ஸை வாங்கி வெச்சுருந்தார். நடிக்கிறதுக்காக விஜய் சார்கிட்டேயும் டேட்ஸ் வாங்கி வெச்சிருந்தார். ஏம்.எம்.ரத்தினம் சார்கிட்ட, `தரணி இந்தப் படத்தை ரீ-மேக் பண்ணுவாரா' னு கேட்டிருக்கார். அதுக்கு முன்னாடி நாள்தான், ‘ `ஒக்கடு' படம் பார்த்தேன். நான் நினைச்சது எல்லாமே அந்தப் படத்துல இருக்கு நம்ம பண்ணலாம் சார்'னு ரத்னம் சார்கிட்ட சொன்னேன். எல்லாம் ஓகே பண்ணதும் நான் ஒரு வாரம் டைம் கேட்டேன். `என்ன சார் எல்லாத்துக்கும் ஓகே சொன்னீங்க, அப்புறம் ஒரு வாரம் டைம் கேட்குறீங்க'னு கேட்டார். `இல்ல சார் இது ஊசி போற பிரியாணி கிடையாது, நம்ம பண்ணலேன்னா யார் வேணாலும் இந்தப் படத்தைப் பண்ணுவாங்க. நான் இந்தப் படம் எந்த ஊர்ல ஓடிருக்குன்னு பார்த்துட்டு, ஒக்கடு படத்துடைய இயக்குநரையும் நான் மீட் பண்ணப் போறேன். அவர் எதையாவது மிஸ் பண்ணியிருந்தா நம்ம பண்ணலாம்'னு ரத்னம் சார்கிட்ட சொன்னேன். அதே மாதிரி எல்லாத்தையும் முடிச்சிட்டுதான், விஜய் சார்கிட்ட கதை சொல்றதுக்கு ரெடியானேன்.''

``கில்லி படத்துக்குப் பின்னால இருக்குற கதை என்ன?''

``தெலுங்குல வந்திருந்த ஒக்கடு படம் பார்த்தேன். கபடியை வைத்து ஒரு படம் பண்ணலாம்ங்கிற ப்ளான்ல இருந்தேன். கபடியை வெச்சு இதுக்கு முன்னாடியும் படங்கள் வந்ததில்லை. அந்தக் காலகட்டத்துல விளையாட்டை வெச்சு படம் பெருசா வந்ததே இல்லை. அதே மாதிரி லைட் ஹவுஸ்ல ஒரு காதல் கதையும் என்கிட்ட இருந்தது. அங்கிருந்து பார்த்தா சிட்டி முழுக்கத் தெரியும், லவ்வுக்கு உண்டான ஃபீலும் அங்க கிடைக்கும், சின்ன வயசுல மொட்டை மாடி எகிறி குதிச்சு விளையாடிய காலமெல்லாம் இருக்கு, இப்படி வெவ்வேறு உணர்வுகளைக் கொண்டு படம் பண்ணணும்னு நினைச்சேன். இது எல்லாத்தையுமே யூஸ் பண்ண ஒரு களமாதான் எனக்கு கில்லி பட வாய்ப்பு கிடைச்சது. எனக்கு ஒக்கடு படம் பார்க்கும்போதே நான் ஒரு பக்கம் இதை சேர்த்திடலாம், அதை சேர்த்திடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.'' 

``படத்துல நடிக்கிற `கில்லி' (விஜய்) பேசும்போது அவர் என்ன சொன்னார்?''

``விஜய் சார்கிட்ட ``கதை சொல்லவா சார்'னு கேட்ட உடனே அவர் என்கிட்ட சொன்ன முதல் வார்த்தை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. `ரீ-மேக்தானே பண்ணப் போறோம், பின்ன ஏன் கதைலாம் சொல்றீங்க'னு கேட்டார்.  ``ஒக்கடு' படத்துல பிரகாஷ் ராஜ் கேரக்டர் அழுக்கா குளிக்காம இருக்கார், அவரை நம்ம படத்துல அப்படியே குளிப்பாட்டி கூட்டி வந்துருவோம் சார். இது மாதிரி நிறைய மாறுதல்கள் பண்ணியிருக்கேன். உங்களுக்குப் பிடிக்கலேன்னா யாரை வேணாலும் வெச்சுப் பண்ணுங்க'னு சொன்னேன். நான் கதை சொல்லி முடிச்சதும், ரத்னம் சாரை கூப்பிட்டு `நான் பண்றேன்'னு ஒப்புக்கொண்டார்.'' 

``ஷூட்டிங் ஸ்பாட்ல விஜய் எப்படி இருப்பார்?''

``அவர்கிட்ட இருக்கிற அழகு எல்லோரும் சொல்றதுதான். நான் அப்போதான் நேர்ல பார்த்தேன். ஒரு முறை கமிட் ஆகிட்டார்ன்னா, அமைதியா இருந்து, எல்லா வேலைகளையும் முடிச்சிக்கொடுத்துட்டுதான் போவார். அதுக்கு முன்னாடி நிறைய கேள்விகள் கேட்பார். எல்லாம் அவருக்கு பிடிச்சிருந்தா, அடுத்து ஒரு கேள்வியும் கேட்காம, படத்துக்குத் தகுந்த மாதிரி நடிச்சிக்கொடுத்துட்டு போயிட்டே இருப்பார். விஜய் அந்த விஷயத்துல உண்மையிலே கில்லிதான். மதுரை மீனாட்சியம்மன் கோவில்ல ஷூட் பண்றது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுக்கு அப்புறம் நிறைய படங்கள் எடுத்திருந்தாலும், முதல்ல எடுத்தது `கில்லி' படத்தைத்தான். சுமோவுல ஏறி, எதிர்க்க வர்ற சுமோவையும் இடிச்சிட்டு போற மாதிரி காட்சி, அதெல்லாம் விஜய் சாரேதான் பண்ணார். படம் முடியுற வரைக்கும் விஜய் சார் கூடவேதான் இருந்தார். சண்டைக் காட்சிகளுக்கு மாதிரி, கபடிக்கும் ஸ்டன்ட் தேவைப்பட்டது. நானும் விஜய் சாரும் நிறைய கபடி மேட்ச் விளையாடுறதைப் பார்த்தோம், அவங்க மூவ்மென்ட்ஸ் ரொம்ப உன்னிப்பா வாட்ச் பண்ணோம். கபடி ராஜேந்திரன், குணசேகரன்னு ரெண்டு பேரை வெச்சு விஜய் சாருக்குப் பயிற்சி கொடுத்தோம். அவரும் அதை கில்லி மாதிரியே பண்ணிட்டார்.

``ரெண்டு செல்லங்களும் ஸ்பாட்ல எப்படி?''

``பிரகாஷ் ராஜைப் பொறுத்தவரை, அவரும் ஒரு விஜய்தான். கதைக்குத் தகுந்த நடிப்பை வெளிக்காட்டுறதுல இவரும் கில்லிதான். நான் நடந்து வர்றேன், மேல அந்த பொண்ணு உட்கார்ந்திருக்குன்னா, நான் சேட்டையா எதாவது பார்த்துச் சொல்லணும் லடா'னு என்கிட்ட சொன்னார். அது ஒண்ணும் இல்ல சார், த்ரிஷா அங்க உட்கார்ந்திருப்பாங்க, சும்மா அவங்களைப் பார்த்து ’ஹாய் செல்லம்’னு சந்தோஷமா மட்டும் சொல்லுங்க சார் போதும்னு சொன்னேன். இது ரொம்பரொம்ப சூப்பரா இருக்கே செல்லம்னு யதார்த்தமா நடந்த விஷயம் இந்த செல்லம் மேட்டர். இது மாதிரி நிறைய மேஜிக் நடந்த படம்தான் கில்லி. த்ரிஷாவும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஒரு சாதாரண ஹீரோயினுக்கான ரோல் இல்லை அவங்களுக்கு. நடக்குற சண்டைக் காட்சிகள்லேயும் இருக்கணும், சேத்துல விழுகணும், லைட்ஹவுஸ்ல இருந்து ஒரு கொடை மேல குதிக்கணும், இது மாதிரி நிறைய ஆக்‌ஷன் சீன்கள் த்ரிஷாவும் பண்ணாங்க. எனக்கு ஒருபக்கம் பயமா இருந்தது. ஆனா அவங்க ரொம்ப கூலா ஒரு தடவை கொடை மேல குதிச்சிட்டு, ஒன்ஸ் மோர் போகலாமானு கேட்டாங்க. என்னது இன்னோர் தடவையா, பேசாம இருமானு சொன்னேன். ஒரு கட்டத்துக்கு மேல எல்லோரும் என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.'' 

``படத்துல உங்களுக்குச் சவாலான விஷயமா எது இருந்தது?''

``டெக்னிக்கல் விஷயங்கள், கிராஃபிக்ஸ் மாதிரியான விஷயங்கள்லாம் அப்போ இருக்காது. எல்லாத்தையுமே செட் போட்டு எடுத்திருந்தது ரொம்ப சவாலா இருந்தது. எந்த இடத்துல சொதப்புனாலும் ஒட்டுமொத்த படமுமே சொதப்பிரும். லைட்ஹவுஸ் செட்ல இருந்து, விஜய் தங்கியிருந்த வீட்டு மொட்டை மாடி அமைக்கிறது வரைக்கும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்ப சவாலாதான் இருந்தது. அதே மாதிரி நான் ரொம்ப பயந்த விஷயம் படத்துல இருந்த ஸ்டன்ட் காட்சிகள். விஜய்ல ஆரம்பிச்சு, த்ரிஷா வரைக்கும் எல்லாருக்குமே ஸ்டன்ட் பண்ற மாதிரியான சீன்கள் இருக்கும்.'

படத்துக்கு இசையமைத்த வித்யாசாகர், வசனம் எழுதிய பரதன், எடிட்டர் விஜயன், டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், கல்யாண், சண்டைப் பயிற்சியாளர் ராக்கி ராஜேஷ், துணை இயக்குநர்கள், முக்கியமா ஒளிப்பதிவாளர் கோபிநாத் இவங்க எல்லாரோட மெனக்கெடல்னாலேயும்தான் படம் இந்த அளவுக்கு வெற்றிப் படமா அமைஞ்சது. என்னை நம்பி இந்தப் படத்தைப் பண்ணக் கொடுத்த ரத்னம் சாருக்கும் என்னுடைய நன்றியை சொல்லிக்கிறேன். பாக்யராஜ் சாரும் படத்தைப் பார்த்துட்டு, ’ரொம்ப தைரியம் வேணும்யா சீனை மாத்துறதுக்கு, தப்பாச்சுன்னா உன்னுடைய கரியரே கேள்விக்குறியா ஆகிருக்கும், ரொம்ப நல்லா பண்ணிருக்க'னு வியந்து என்னைப் பாராட்டினதும் என்னால மறக்க முடியாது'' என நெகிழ்ந்து பேட்டியை முடித்துக்கொண்டார் தரணி. 

அடுத்த கட்டுரைக்கு