Published:Updated:

“ ‘மெர்சல்’ ஃபர்ஸ்ட் லுக் எப்படி ஃபைனல் ஆனது தெரியுமா?” - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி-5

“ ‘மெர்சல்’ ஃபர்ஸ்ட் லுக் எப்படி ஃபைனல் ஆனது தெரியுமா?” - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி-5
“ ‘மெர்சல்’ ஃபர்ஸ்ட் லுக் எப்படி ஃபைனல் ஆனது தெரியுமா?” - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி-5

‘மதுர’ முதல் ‘மெர்சல்’ வரை நடிகர் விஜய்யை போட்டோஷூட் செய்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார் புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்

நடிகர்களில் பலரை சினிமாவுக்காக சந்திப்பதற்கு முன்பே விளம்பரம், பெர்சனல் போட்டோஷூட்... என்று சந்தித்து இருக்கிறேன். ஆனால் விஜய் சாரை ‘மதுர’ படத்துக்கான போட்டோஷூட்டில்தான் முதன்முதலில் சந்தித்தேன். இப்போதுபோலவே அப்போதும் அவர் அதிகம் பேசமாட்டார். டு த பாயின்ட் மட்டுமே பேசுவார். அந்தப்படம் பார்க்கும்போதுதான் அவ்வளவு தீவிரமான ரசிகர்களை முதல்முறையாகப் பார்த்தேன். ஆச்சர்யமாக இருந்தது. 

அந்தப் படத்தின் இயக்குநர் மாதேஷ் சார், ‘இந்தப் பட புகைப்படங்கள் விஜய சாரின் ரசிகர்களிடம் ரீச் ஆகணும். ஏதாவது வித்தியாசமான ஸ்டைல்ல பண்ணலாம். எப்படி பண்ணலாமென்று சொல்லுங்கள்’ என்றார். ‘பார்த்த உடனேயே ‘இது மதுர ஸ்டைல்’னு சொல்லவேண்டும். ஆனா எளிமையா இருக்கணும்.’ இதுதான் அந்த போட்டோஷூட்டின் கான்செப்ட். அதற்காக அவரின் டெனிம் பேன்ட்டை லேசாகக் கிழித்து அதன் மீது கட்ச்சீஃப் ஒன்றைக் கட்டினோம். கூடவே சிவப்பு கலர் சட்டை. 

‘முயற்சி பண்ணுவோம். எப்படி வருகிறதென்று பார்த்துட்டு வேணும்னா மாத்திக்கலாம்’ என்று முடிவு செய்து சூட் பண்ணத் தொடங்கினோம். அந்த எளிமையான மாற்றத்தை தன் வித்தியாசமான நடையால் புது ஸ்டைலாக்கினார் விஜய். ‘இதுதான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ என்று முடிவு செய்தோம். இன்றும் அந்தப் படங்களை ஆட்டோக்களின் பின்னால் பார்க்க முடிகிறது என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். 

விஜய்யுடன் இணைந்து ஒர்க் பண்ணிய அடுத்த படம் ‘சச்சின்’. ஜான் சார்தான் இயக்குநர். கலைப்புலி தாணு சார் தயாரிப்பு. ‘நீங்க எடுக்கிற போட்டோஸ் புரவுசரா வரும், ஹோர்டிங்ஸா வைக்கும்போது பிரமாண்டமா இருக்கும். அதுக்கு தகுந்தமாதிரி பண்ணிக்கங்க தம்பி’ என்றார் தாணு சார். போட்டோஷூட்டுககாக கிழக்கு கடற்கரை சாலை ஓரம் தோட்டா தரணி சார் பிரமாதமான செட்களை அமைத்துத் தந்தார்.

கடலுக்கு முன் இருக்கும் பெரிய மலையில் ஜெனிலியாவும் விஜய சாரும் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் கடல் கொந்தளித்தபடி இருக்கும். இப்படி வெவ்வேறு செட்டுகள் அமைத்து இருந்தோம். ஆனால் அந்தச் சமயம் அடித்த புயலில் போட்ட அனைத்து செட்களும் பாழாகின. 

பிறகு, ‘இப்படி ஆகிடுச்சே சார், என்ன பண்ணலாம்’ என்று தோட்டா தரணி சாரிடம் பேசினேன். ‘கவலைப்படாதீங்க. அந்த எஃபெக்ட்டை அப்படியே செட்டுக்குள் கொண்டுவரலாம்’ என்றார். கடல் அலை பொங்குவது போன்ற எஃபெக்டை எப்படி செட்டுக்குள் கொண்டுவருவார் என்று எனக்கு ஆச்சர்யம். ஆனால் அதை அழகாக அமைத்து இருந்தார். மெஷின்கள் வைத்து தண்ணீர் பொங்குவதுபோல் செய்து இருந்தார். 

இதேபோல பசங்களுடன் விஜய் கிரிக்கெட் ஆடுவதுபோன்ற ஒரு செட். ஊட்டியில் நடக்கும் கதை என்பதால் ஸ்டுடியோ முழுவதும் புல்வெளி, மேடு பள்ளம் என்று செட் அமைத்தார். மேலும் ஜெனிலியாவும் விஜய்யும் ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். லேசாக மழை பெய்துகொண்டு இருக்கும். அதுவும் அருமையாக வந்திருந்தது. விஜய் ஒரு புல்லட்டில் தாவி ஏறுவது போன்ற ஒரு ஷாட். அவர் கழுத்தில் போட்டு இருக்கும் சால் பறந்தபடி இருக்கும். அதை ‘விஜய்யின் கிளாசிக்கான போட்டோக்களில் ஒன்று’ என்று பலர் பாதுகாத்து வருவதை அறிவேன். படத்தின் இன்னொரு ஹீரோயினான பிபாஷா பாசுவை ஷூட் பண்ண வாய்ப்பு கிடைத்தது. அந்த ஷாட்டுகள் அவ்வளவு அழகாக வந்திருந்தன. 

வெவ்வேறு காலநிலை, சூழலில் நடக்கும் ஒரு படத்தின் ஒட்டுமொத்த லுக் அண்ட ஃபீலை ஒரே ஒரு ஷாட்டில் அதுவும் இன்டோரில் வைத்து எடுக்கப்படும் புகைப்படத்தில் அதேமாதிரியான வாட்டர் எஃபெக்ட், லைட்டிங்... கொடுப்பது கடினமான விஷயம். அன்றுள்ள டெக்னாலஜியை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு பண்ணினோம். ஆனாலும் அனைத்து ஷாட்ஸும் அருமையாக வந்திருந்தன. டிசைனர் சித்தார்த்தின் கிரியேட்டிவிட்டியில் போஸ்டர் டிசைன்களும் அழகாக அமைந்திருந்தன. 

அடுத்து மோகன் ராஜா சார்  இயக்கி\ய ‘வேலாயுதம்’ படத்தில் விஜய்சாரை மீண்டும் சூட் செய்தேன். சூப்பர் ஹீரோ காஸ்ட்யூமில் விஜய் சாரை ஷூட் செய்தேன். பிறகு அந்த இமேஜை சிஜியில் ஒர்க் செய்துபோது பிரமாண்டமாக வந்திருந்தது. தவிர வேறொரு லுக்கில் கிராமத்தில் இருப்பதுபோல் வேட்டி சட்டையில் ஜெனிலியா, ஹன்சிகாவுடன் ஷூட் செய்தோம்.

மோகன்லால்-விஜய் காம்பினேஷனில் நேசன் டைரக்ஷனில் வந்த ‘ஜில்லா’ படத்தில் நிறைய ஷாட் ஷூட் செய்தோம். போஸ்டருக்காக லால் சாரும் விஜய் சாரும் டேபிளில் ஹேண்ட் ரெஸ்லிங் செய்வதுபோல் எடுத்த ஷாட் நன்றாக வந்திருந்தது. அதில் இருவரும் மசில் காட்டி போஸ் பண்ண வேண்டும். இருவரும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்பதுபோல் போஸ் பண்ணினார்கள். அதைத்தவிர விஜய்-காஜல் அகர்வால் காம்பினேஷனில் எடுத்த ரொமான்ஸ் ஷாட் இன்ட்ரஸ்டிங்காக அமைந்திருந்தது. 

‘கஜினி’யில் தொடங்கிய முருகதாஸ் சார் உடனான நட்பு ‘கத்தி படம் கடந்தும் தொடர்கிறது. இதில் விஜய் சார் ஓர் இரும்பு ராட்டை இழுத்தபடி போவதுமாதிரி எடுத்த ஷாட் ஆனந்த விகடனில் பிரதானமாக வந்திருந்தது. அதுதவிர முதல்முறையாக விஜய்-சமந்தா காம்பினேஷன் ஃப்ரெஷ்ஷாக அமைந்திருந்தது. 

அடுத்து மீண்டும் தாணு சார் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ‘தெறி’ பண்ணினார் விஜய். சமந்தா, மீனா மேம் மகள் நைனிகா நடித்த அந்தப் படத்துக்கு சன் ஸ்டுடியோவில் ஷூட் செய்தோம். இருவேறு கெட்டப்புகளில் எடுத்தோம். விஜய் பட ஃபர்ஸ்ட் லுக் போட்டோ வரும்போது அதை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்கிற பரபரப்பு இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல் புகைப்படமும் இருக்கவேண்டும், அந்த டிசைனும் அப்படி அமைய வேண்டும். இந்த பிரஷர் டிசைனருக்கு பயங்கர டென்ஷனை கொண்டுவந்து சேர்க்கும்.

படத்தில் விஜய்க்கு ஒரே கேரக்டர்தான். ஆனால் மூன்று விஜய் கேரக்டர் என்பதுபோல் வந்த ஃபர்ஸ்ட் லுக் பெரிய அளவில் பேசப்பட்டது. ‘விஜய்க்கு மூன்று கேரக்டர்களா, மூன்று கெட்டப்களா, இல்லை ஒரே கேரக்டர்தானா...’ என்று வெவ்வேறு விதமாக விவாதிக்கப்பட்டதில் அந்த ஃபர்ஸ்ட் லுக் வைரலானது. 

போணி டெயில் கெட்டப்பில் சாதுவான விஜய், போலீஸ் அதிகாரி கெட்டப்பில் மாஸ் விஜய் என்று இரண்டு கெட்டப்களில் விஜய்யை ஷூட் செய்தோம். போணி டெயில் விஜய்யுடன் குழந்தை நைனிகா காம்பினேஷன். நைனிகாவை சூட் செய்யும்போது எதிரே மீனா மேம் அமர்ந்து இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தபடி இருப்பார். அதேபோல காவல்துறை கேரக்டரில் ரவுடிகளை ஆசிரியர் போல் குச்சி வைத்து அடித்துவிட்டு அவர்களுடன் செல்ஃபி எடுப்பதுபோன்று ஷூட் செய்ததும் நன்றாக வந்திருந்தது. 

சமீபத்தில் வந்த ‘மெர்சல்’ ஷாட்ஸுக்கு நிறையவே மெனக்கெட்டோம். அப்பா வெற்றிமாறன், மகன்கள் வெற்றி, மாறன் ஆகிய மூவரது கேரக்டர்களையும் ஒரே நாளில் சூட் செய்தோம். ஆனால் அப்போது, ‘இதுதான் ஃபர்ஸ்ட் லுக்’ என்று எதையும் நாங்கள் முடிவுசெய்யவில்லை. ஏனெனில் ஒன்றை ஃபர்ஸ்ட் லுக் என்று ஃப்ரீஸ் செய்துவிட்டால் மற்ற ஷாட்களில் ஏனோதானோ என்று இருந்துவிடுவோமா என்று எங்களுக்கு நாங்களே, ‘எது ஃபர்ஸ்ட் லுக் என்று மொத்தமாக சூட் செய்து முடித்தபிறகு இறுதி செய்வோம்’ என்று முடிவு செய்தோம். 

நம் மண், ஜல்லிக்கட்டு... இப்படி தமிழகத்தை பிரதிபலிக்கும் வகையில் கைகளை தட்டியபடி மணல் பறக்க வரும் காட்சியை சூட் செய்தோம். அந்த வெற்றிமாறன் கேரக்டரை காங்கேயம் காளையுடன் ஷூட் செய்ததும் மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். ஏனெனில் அந்தக் காளையை ஸ்டுடியோவுக்குள் அழைத்து வருவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. அது ஆறடி உயரம் என்று உள்ளே கூட்டி வந்தபிறகுதான் தெரிந்தது.

இதேபோல விஜய்-நித்யாமேனன்-மகன் மூவரும் இருக்கும் ஃபேமிலி போட்டோ ஷாட்டும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதேபோல வேட்டி சட்டையில் வரும் அந்த ஐந்து ரூபாய் டாக்டர் கேரக்டரை தனியாகவும் சமந்தா காம்பினேஷனிலும் ஷூட் செய்தோம். மெஜிஷியன் கேரக்டரை வித்தியாச பின்னணியில் ஷூட் செய்ததும் நல்ல அனுபவம். 

இப்படி ஒரே நாளில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களை சூட் பண்ணினாலும் ஒவ்வொன்றுக்கும் தகுந்தாற்போல் பாடிலாங்குவேஜ், லுக், ஸ்டைல் என வித்தியாசத்தைக் கொண்டுவந்தார் விஜய். ஒவ்வொரு கேரக்டருக்கான ஷூட்டை 40 நாள் எடுத்துப் பண்ணினாலும் ஒரே நாளில் எடுக்கப்பட்ட அந்த போட்டோஷூட்டில் எந்தக் கேரக்டர் எப்படி முடி வெட்டியிருக்க வேண்டும், எப்படி ஷேவ் செய்திருக்க வேண்டும் என்று பிளானிங் சரியாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் சமூக வலைத்தளம் பவர்ஃபுல்லாக இருக்கும் இன்று அனைத்தும் கேலிக்குள்ளாகிவிடும். இப்படி அனைத்து ஷாட்ஸையும் எடுத்துமுடித்தபிறகு மணலைத் தட்டிவிட்டு மாடு பிடிக்கத் தயாராவது போன்று வரும் வெற்றிமாறன் கேரக்டரையே ஃபர்ஸ்ட் லுக்காக ரிலீஸ் செய்தனர். அது ட்ரெண்டிங் ஆனது. ஜல்லிக்கட்டு ஃபீவர் சமயம் என்பதால் அது வைரலான விவாதப்பொருளானது. ‘மதுர’ படத்தில் இருந்து ‘மெர்சல்’ வரை விஜய்யுடன் டிராவல் ஆகிறேன். அவர் அப்போது இருந்தே அதிகம் பேசமாட்டார். அமைதி. ஆனால் ஒரு ஷாட் எடுத்தபிறகு அதைப் பார்த்துவிட்டு இரண்டு நிமிடங்கள் அப்படியே அமைதியாக இருப்பார். வேறு சேஞ்ச் ஓவர் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல அமைதியாகப் போய் நின்று நிதானமா யோசித்து போஸ் பண்ணுவார். அது யுனிக்காக இருக்கும். அந்த மெனக்கெடலால்தான் அவருடைய போஸ்டருக்கு எப்போதும தனி வரவேற்பு இருக்கிறது. அதை அன்றில் இருந்து மெர்சல் வரை தக்கவைக்கிறார் என்பது மிகப்பெரிய ஆச்சர்யம்.” 

அடுத்த கட்டுரைக்கு