Published:Updated:

``செளந்தர்யாதான் 'சந்திரமுகி'யா நடிக்கணும்னு சொன்னப்போதான், அந்தத் துயரம் நடந்தது!" - பி.வாசு #RememberingSoundarya

``செளந்தர்யாதான் 'சந்திரமுகி'யா நடிக்கணும்னு சொன்னப்போதான், அந்தத் துயரம் நடந்தது!" - பி.வாசு #RememberingSoundarya

இன்று பல நடிகைகள் பெரிய நடிகர்களோடு நடிக்கக் காத்திருக்கிறார்கள். ஆனால், பெரிய நடிகர்கள் பலர் செளந்தர் கால்ஷீட்டுக்காகக் காத்திருந்த கதைகள் சினிமாவில் உண்டு. நேற்று (17-04-2018) அவருடைய நினைவு நாள். நடிகை செளந்தர்யா குறித்த நினைவுகளைப் பகிர்கிறார், இயக்குநர் பி.வாசு.

``செளந்தர்யாதான் 'சந்திரமுகி'யா நடிக்கணும்னு சொன்னப்போதான், அந்தத் துயரம் நடந்தது!" - பி.வாசு #RememberingSoundarya

இன்று பல நடிகைகள் பெரிய நடிகர்களோடு நடிக்கக் காத்திருக்கிறார்கள். ஆனால், பெரிய நடிகர்கள் பலர் செளந்தர் கால்ஷீட்டுக்காகக் காத்திருந்த கதைகள் சினிமாவில் உண்டு. நேற்று (17-04-2018) அவருடைய நினைவு நாள். நடிகை செளந்தர்யா குறித்த நினைவுகளைப் பகிர்கிறார், இயக்குநர் பி.வாசு.

Published:Updated:
``செளந்தர்யாதான் 'சந்திரமுகி'யா நடிக்கணும்னு சொன்னப்போதான், அந்தத் துயரம் நடந்தது!" - பி.வாசு #RememberingSoundarya

இன்று பல கதாநாயகிகள் உச்ச நட்சத்திரங்களுடன் நடிக்க முந்திக்கொண்டிருக்கும் சூழலில், அன்றைய டாப் ஸ்டார்ஸ் இவரது தேதிகளுக்காகக் காத்திருந்த கதைகள் உண்டு; இவர் இல்லாததால் படங்களைக் கைவிட்ட நிஜமும் உண்டு. இவ்வளவு பெரிய ஆதர்சம் பெற்றவர்  நடிகை, சௌந்தர்யா. நேற்று (17-04-2018) அவருடைய நினைவு நாள்.

பதினாறு வயதில் பள்ளி விடுமுறையில் விளையாட்டாக நடிக்க ஆரம்பித்து, 1992-ம் ஆண்டு கன்னடத்தில் `கந்தர்வா' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் சௌந்தர்யா. எளிய நடிப்பும் தோற்றமும் இவரை ரசிகர்களிடையே வெகுவிரைவில் பிரபலமடையச் செய்தது. பிறகு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக் நடித்த `பொன்னுமணி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அவரின் மெல்லிய புன்னகை பெண்களையும் வசீகரித்தது. `நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு' பாடலும், படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. கூடவே சௌந்தர்யாவுக்குத் தெலுங்குப் பட வாய்ப்புகளும் தொடந்து வந்தன. தெலுங்கில் வெளிவந்த `அம்மொரு' திரைப்படம், தமிழில் `அம்மன்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக மக்கள் இந்தப் படத்தை ரசித்தார்கள். தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் படங்களாக அமைந்து, தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின் அந்தஸ்த்தைப் பெற்றார். 

தமிழில் டாப் லிஸ்ட் நடிகையாக வலம் வரவில்லை என்றாலும், நடிகை ஶ்ரீதேவிக்குப் பிறகு அவர் காலத்தில் அமிதாப், ரஜினி, கமல், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மோகன்லால், விஷ்ணுவர்தன் என அனைத்து மொழிகளின் உச்ச நட்சத்திரங்களோடு நடித்த பெருமை, சௌந்தர்யாவுக்கு உண்டு. செளந்தர்யாவின் நினைவுகள் குறித்துப் பேச, தமிழில் குறைவான படங்களே இருக்கின்றன என்பது பெரும் வருத்தம். இவரின் தந்தை கன்னடத் திரைப்பட எழுத்தாளர் சத்யநாராயண் நினைவாக 2002-ல் சௌந்தர்யா தயாரித்து நடித்த `Dweepa' திரைப்படம் தேசியவிருது உட்பட பல விருதுகளை வென்றது. சௌந்தர்யா திரையுலகில் கடைசியாக நடித்த படம், `ஆப்தமித்ரா'. தமிழில்  `சந்திரமுகி'யாக ரீமேக் ஆனது. கங்கா, நாகவல்லி என இருவேடங்களிலும் தமிழ் மற்றும் மலையாள சந்திரமுகிகளைவிட ஒருபடி மேலே இருக்கும் இவரின் நடிப்பு.   

டாக்டர் ஆகும் தன் கனவு நனவாகாதபோதிலும், சினிமாவில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டார், செளந்தர்யா. இவருக்கு சினிமாவில் இயக்குநர் ஆகும் எண்ணமும் இருந்தது. ஒரு நடிகையாக செளந்தர்யா பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என உங்களுக்கு நினைக்கத் தோன்றினால், அதுதான் செளந்தர்யாவின் வெற்றி. ஏனெனில், செளந்தர்யா அவர் நடித்த கேரக்டர்களில் இயல்பில் கரைந்துவிடுவார். 12 வருட திரைத்துறை வாழ்க்கையில் 5 மொழிகள், நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் என்று இருக்கும்போது, தெலுங்கில் இவரோடு அதிக படங்களில் நடித்த ஜெகபதி பாபுவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், 2003-ல் தனது உறவினரான பிரகாஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஏப்ரல் 17, 2004-ல் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபிக்குப் பிரசாரம் செய்ய பெங்களூரிலிருந்து கரீம் நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, செளந்தர்யா சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தன் குடும்பத்தினர் முன்னிலையிலேயே சௌந்தர்யா உடல் கருகி உயிரிழந்தார். இந்த விபத்தில் இவர் அண்ணனும் உயிரிழந்தார். பாலகிருஷ்ணாவுடன் இணைந்து இவர் கதாநாயகியாக நடிக்கவிருந்த `நர்த்தனசாலா' என்ற திரைப்படம், இவரது மறைவால் கைவிடப்பட்டது.    

சௌந்தர்யா கடைசியாக நடித்த `ஆப்தமித்ரா' கன்னடப் படத்தை இயக்கியவர், பி.வாசு. நடிகை செளந்தர்யாவின் நினைவுகள் குறித்து அவரிடம் பேசினோம். 

``சௌந்தர்யாவின் அப்பா கன்னடத்தில் பெரிய வசனகர்த்தா. எனக்கு நல்ல நண்பர். `செந்தமிழ்பாட்டு' டிஸ்கஷன் நேரத்தில் சௌந்தர்யாவை அழைத்துவந்து, `ஆர்.வி.உதயகுமார் தமிழில் அறிமுகப்படுத்தறார்... ஆசீர்வாதம் பண்ணுங்க சார்'னு என்னிடம் அறிமுகப்படுத்தினார். `பொன்னுமணி' படம் பார்த்தேன். அழகான முகம், தனித்துவமான சிரிப்பு, ஹோம்லி லுக்... செளந்தர்யாகிட்ட அந்தக் கேரக்டருக்குத் தகுந்த எல்லாமும் இருந்தது. அந்தப் படத்துல இடம்பெற்ற `நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு' பாட்டு இன்னும் என மனசுல நிற்குது. நான் அவங்களை என் படத்துல நடிக்க வைக்கணும்னு நினைக்கும்போது, `அவர் நேரத்துக்கு ஷூட்டிங் வரமாட்டார்'னு பலர் சொன்னாங்க. 

பல நாள்கள் கழிச்சு, `ஆப்தமித்ரா' படத்துல நடிக்க வைக்கலாம்னு முடிவெடுத்தேன். அப்போ, `சௌந்தர்யா கன்னடத்தில் நடிச்ச படங்கள் சரியாகப் போகலை'னு தயாரிப்பாளர் சொன்னார். `குஷ்பு 'சின்னத்தம்பி' படத்துல அறிமுகம் ஆகும்போதும் இப்படித்தான் சொன்னாங்க. ஆனா, அந்தப் படம் பெரிய ஹிட் ஆச்சு. நீங்க கவலைப்படாதீங்க'னு தயாரிப்பாளருக்கு நம்பிக்கை கொடுத்து ஒப்பந்தம் செஞ்சோம். 

ஷூட்டிங்குக்கு நேரத்துக்கு வரமாட்டாங்கனு நான் அவங்கமேல வெச்சிருந்த தப்பான இமேஜை முதல்நாளே உடைச்சிட்டாங்க. `இவ்வளவு பன்ஞ்சுவலா இருக்கீங்க. உங்களைப் பத்தி ஏன் தப்பா சொல்றாங்க'னு கேட்டேன். 'நான் நிறையா படங்கள்ல தொடர்ந்து நடிச்சுக்கிட்டு இருந்ததுனால ஒரே சமயத்துல ரெண்டு படங்களோட ஷூட்டிங்ல நடிக்கவேண்டிய கட்டாயம் இருக்கும். `கொஞ்சம் லேட்டா வருவேன் சார்'னு மேனேஜர்கிட்ட சொல்லிடுவேன். ஆனா, ஹீரோ, டைரக்டர் டென்ஷன் ஆயிடுவாங்களோனு அதை அவங்க சொல்லமாட்டாங்க. அதான் சார் பிரச்னை'னு சொன்னாங்க. 

இதுமட்டுமல்ல, ``அந்தப் படத்துல வர்ற கட்டில் காட்சியில நான் நடிச்சுக் காட்டுறதை எனக்குத் தெரியாம ரெக்கார்டு பண்ணச் சொல்லி, அதைப் பார்த்து நடிச்சுப் பார்த்துட்டு, நான் நினைச்ச மாதிரி நடிச்சுக் கொடுத்தாங்க. நான், `சூப்பர்'னு சொல்லிட்டேன். ஆனா, `இருங்க சார்.. நீங்க பண்ணமாதிரி ஃபோர்ஷா இல்ல, நான் மறுபடியும் நடிக்கிறேன்'னு சொன்னாங்க. இந்த லெவல் டெடிகேஷனை நான் எந்த நடிகைகிட்டேயும் பார்த்ததில்லை. படம் முடிக்கிற நேரம், `ரா... ரா' பாட்டு எடுத்தோம். ஒரே ஒரு டான்ஸ் ஸ்கூல் பொண்ணு சௌந்தர்யாவுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்துட்டு இருக்காங்க. சௌந்தர்யாவோ கேரவனுக்குப் போயிட்டு போயிட்டு வர்றாங்க. டைம் வீணாகிட்டே இருந்துனால, எனக்கு டென்ஷன் ஜாஸ்தியாகிடுச்சு. `என்ன பிரச்னை உனக்கு, ஏன் இப்படிப் பண்ற, நான் படத்தை முடிக்க வேணாமா?'னு கத்திட்டேன். அவங்க ஒரு வார்த்தை பேசலை. மறுபடியும் கேரவனுக்குப் போயிட்டு வந்தாங்க. மறுநாள் ஏப்ரல் 13-ம் தேதி இன்னொரு சாங் ஷூட் இருந்தது. அதுக்கு, ஃபுல் சப்போர்ட் கொடுத்து முடிச்சுக் கொடுத்தாங்க. செளந்தர்யாவுக்கான எல்லா போர்ஷனும் முடிஞ்சு, அவங்க ஊருக்குப் போயிட்டாங்க.

காரில் வரும்போது என் அசிஸ்டன்ட் டைரக்டர், ``சார் உங்ககிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும், நேத்து செளந்தர்யா மேடமுக்கு ஃபுட் பாயிஸன் ஆயிடுச்சு. நீங்க அவ்ளோ கோபமா பேசுனீங்க, அவங்க ஒரு வார்த்தையும் பேசலை. `சார் முடிக்கிற ஸ்பீடுல இருக்காங்க போகட்டும்னு சொல்லி என்கிட்டேயும் இதை அவர்கிட்ட சொல்லிடாதீங்க'னு சொல்லிட்டாங்க'னு சொன்னான். ரெண்டுநாள் கழிச்சு 'ஒரு நல்ல டைரக்டர்கூட வேலை செஞ்ச திருப்தி எனக்கு... உங்க டைரக்‌ஷன்ல நான் திரும்ப நடிக்கணும்'னு மெசேஜ் பண்ணியிருந்தாங்க. 

ஏப்ரல் 17-ம் தேதினு நினைக்கிறேன். ஒரு மதியநேரம், `சந்திரமுகி' எடுக்கலாம்னு சிவாஜி ப்ரொடக்‌ஷன்ல நான் பேசிட்டு இருந்தேன். பிரபுவோட அண்ணன் ராம்குமார்கிட்ட சௌந்தர்யா அனுப்புன மெசெஜைக் காட்டி, சௌந்தர்யாதான் இந்தப் படத்தோட ஹீரோயின்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்போதான், என் போன் ரிங் அடிச்சது. யாருனு எடுத்துப் பார்த்தா, கன்னடத்துல செளந்தர்யாகூட நடிச்ச ஒரு நடிகை பேசுனாங்க. போன்ல அவங்க, `சார் சௌந்தர்யா மேடம் ஹெலிகாப்டர் வெடிச்சு இறந்துட்டாங்க!'னு சொன்னதும் எனக்குப் பெரும் அதிர்ச்சி. என்ன பண்றதுனு தெரியலை.  ராம்கிட்ட `நான் வீட்டுக்குக் கிளம்புறேன்'னு வந்துட்டேன்!.

ஆர்.வி.உதயகுமார் போன் பண்ணி, `அண்ணன் என் படத்துல அறிமுகமாகி, உன் படத்துல கடைசியா நடிச்சுட்டு அந்தப் பொண்ணு போயிடுச்சே!'னு ஃபீல் பண்ணார். `` `உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாதே'னு நீ வெச்ச பாட்டுதான்யா எனக்கு ஞாபகம் வருது"னு உதயகுமார்கிட்ட சொன்னேன். என் அசிஸ்டன்ட் போன் பண்ணி, ``சார் அன்னிக்கு நான் இதைச் சொல்லலை... செளந்தர்யா, `நெருப்புனா எனக்கு பயம். அந்த சேலை எரியிற காட்சிக்குப் பதிலா வேற எடுக்க முடியுமா?'னு கேட்டாங்க சார். நான்தான், `ஃபுல் சேஃப்டி இருக்கு, பயப்படாதீங்க'னு சொல்லி நடிக்கவெச்சேன். அந்த ஷாட் ஓகே ஆனதும் ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. இப்போ தீயில கருகிக் கெடக்குறாங்க சார்"னு அழுதான். யார் சொன்னாலும் இதை நம்பமாட்டாங்க. ஒரு சினிமா கதை மாதிரி இருக்கும். அவங்க இறந்த பிறகுதான், இந்தப் படம் ரிலீஸ் ஆச்சு. `ஆப்தமித்ரா' படத்துக்காக சிறந்த நடிகைனு ஃபிலிம்பேர் விருது கொடுத்தாங்க. அவங்க அம்மா அந்த அவார்டை வாங்கும்போது, நாங்க எல்லாரும் கண் கலங்கி உட்கார்ந்திருந்தோம்.

``பிறகு, தமிழ்ல `சந்திரமுகி' எடுக்கும்போது, படத்துல சிம்ரன் நடிக்கிறதா இருந்து, பிறகுதான் ஜோதிகா நடிச்சாங்க. படத்தை முழுசா பார்த்த ஜோதிகா, `தாங்க்ஸ் டூ சிம்ரன்'னு சொன்னாங்க. `நீங்க சௌந்தர்யாவுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும்'னு சொன்னேன். அந்தப் `பொன்னுமணி' படத்துல வர்ற சௌந்தர்யாவோட சிரிப்பு எனக்கு இன்னைக்கும் வரைக்கும் ஞாபகத்துல இருக்கு. அவங்களை மறக்குறது ரொம்பவே கஷ்டம்!"  என கனத்த இதயத்தோடு விடைபெற்றார், இயக்குநர் வாசு.