Published:Updated:

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
பிரீமியம் ஸ்டோரி
அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

சந்திப்பு: எஸ்.ரஜித் ,படங்கள்/ஞானபிரகாசம்

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

சந்திப்பு: எஸ்.ரஜித் ,படங்கள்/ஞானபிரகாசம்

Published:Updated:
அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
பிரீமியம் ஸ்டோரி
அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்
அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

ரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு உள்ள ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற முதல் தமிழ் திரைப்பட இயக்குநர், ஸ்ரீதர். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க டிரென்ட் செட்டர். ஆபாசம், வன்முறை, விரசம், மெகா பட்ஜெட் ஆகியவற்றை எல்லாம் நம்பாமல், மனதைத் தொடும் கதை, பொருத்தமான வசனம், புதிய டெக்னிக்குகள் என்று ஏராளமான வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தவர் ஸ்ரீதர்.

ஸ்ரீதரின் பள்ளிப் பருவம் முதல் இறுதி வரை துணையாக இருந்தவர் கோபு. 40 வெற்றிப் படங்களுக்குக் கதை, வசனம் எழுதியதோடு 14 படங்களையும் இயக்கியுள்ள கோபு, ஸ்ரீதருடன் இணைந்திருந்த அந்த இனிய நாட்களை, நமக்காக நினைவு கூர்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

''செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் உயர் நிலைப்பள்ளியில் ஐந்தாவது படிக்கும்போது ஸ்ரீதரை முதன் முதலா சந்தித்தேன். என் வாழ்வே ஸ்ரீதரால் திசைமாறப்போகிறது என்பது அப்போது சத்தியமாக எனக்குத் தெரியாது. எஸ்.எஸ்.எல்.சி. வரை இணைந்து படித்தோம். அப்போதெல்லாம் பள்ளி ஆண்டு விழாவில் ஸ்ரீதர் கதை, வசனம் எழுதி, ஹீரோவாக நடித்த சமூக நாடகம் நடைபெறும். அதில் காமெடியனாக நான் நடிப்பேன். பள்ளி மாணவர்களிடையே, ஸ்ரீதருக்கு அப்போதே நல்ல மவுசு.

ஸ்ரீதர் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி, 'ரத்த பாசம்’, 'எதிர்பாராதது’ ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். இரண்டும் பெரிய ஹிட். அதனால், ஸ்ரீதருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இலக்கணத் தமிழில் பேசிய தமிழ் சினிமாவை யதார்த்த உலகத்துக்கு தன் வசனம் மூலம் இழுத்து வந்தவர் ஸ்ரீதர்தான். அதன் பிறகு வீனஸ் பிக்சர்ஸ் கோவிந்தராஜன் (சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் தந்தை) வீனஸ் கிருஷ்ணமூர்த்தி (இயக்குநர் மணிரத்னத்தின் சித்தப்பா), ஸ்ரீதர் மூவரும் தயாரிப்பாளர்களாக இணைந்தனர். 'உத்தமபுத்திரன்’, 'அமரதீபம்’ ஆகிய இரு படங்களைத் தயாரித்தார்கள். இரண்டிலும் சிவாஜி கணேசன் கதாநாயகன். கதை வசனம் - ஸ்ரீதர். இயக்கம் டி.பிரகாஷ் ராவ். இரண்டுமே வெற்றிப்படங்கள்.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

கதை, வசனத்தில் ஸ்ரீதர் வெற்றி பெற்றதை அடுத்து, வீனஸ் கிருஷ்ணமூர்த்தி அவரிடம், 'நம்ப படங்களை நீயே டைரக்ட் பண்ணேன்’ என்றார். ஸ்ரீதருக்கும் ஆசை வந்துவிட்டது.

அப்போது நான் பாரிமுனையில் இயங் கிவந்த ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனத்தில் உதவி மேனேஜராக இருந்தேன். ஒரு நாள் திடீரென்று என் ஆபீஸுக்கு வந்த ஸ்ரீதர், அவர் புதிதாக வாங்கியிருந்த ஃபியட் காரை எனக்குக் காட்டினார். அத்துடன், 'ஆபீஸில் சொல்லிவிட்டு வா மதுராந்தகம் வரைக்கும் காரிலே போயிட்டு வரலாம்!’ என்றார். கார் கிளம்பியது. 'கார் ஓட்ட எப்போ கற்றுக்கொண்டே?’- நான். 'நேற்றுதான்...’ என்றார் கூலாக. டிரங்க் ரோட்டில் கார் போய்க் கொண்டிருந்தது. அப்போது காரின் ஸ்பீடா மீட்டரில் மைல் கணக்குதான். '100-னு இதிலே போட்டிருக்கே... கார் அவ்வளவு ஸ்பீடு போகுமா!’ என்று தெரியாத்தனமாகக் கேட்டேன். அவ்வளவுதான்... ஸ்ரீதருக்கு ஏதோ உசுப்பிவிட்டாற் போல் இருந் திருக்கும். மறுகணம் கார் 50... 60... 70... 80 மைல் ஸ்பீடில் பாயத் தொடங்கியது. எனக்கோ ஒரே உதறல். நேற்று கார் கற்றுக் கொண்டவன் 80 மைல் வேகத்தில் போனால் என்ன ஆகும்? குறிப்பிட்ட இடம் வந்தபிறகுதான் நிம்மதி அடைந்தேன். பயணத்தின்போதே, 'நான் டைரக்டராகப் போகிறேன். நீ என் அசிஸ்டன்ட் டயலாக் ரைட்டர். இன்னியோடு ஆபீஸ் வேலையை ராஜினாமா செய்யுறே!’ என்று கட்டளையே போட்டார். நான் பெரிதாக யோசிக்கவே இல்லை. அவர் சொன்னபடியே ஆபீஸுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, ஸ்ரீதருடன் சேர்ந்துவிட்டேன். அன்று எடுத்த அந்த முடிவுக்காக, இன்றும் நான் பெருமைப் படுகிறேன். ஸ்ரீதர் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்தது கிடையாது. ஸ்ரீதரிடம் கர்வம் கிடையாது. தன்னைப் பற்றியும் தனது சாதனைகள் பற்றியும் எப்போதும் யாருடனும் பேசவே மாட்டார்.

ஸ்ரீதரின் கதை, வசனம், இயக்கத்தில் 'கல்யாண பரிசு’ உருவானது. முக்கோணக் காதல் கதை. படம் சூப்பர் ஹிட். ஜெமினி கணேசனுக்கு ரொமான்டிக் ஹீரோவாக கல்லூரி மாணவர், மாணவியரிடையே பெரிய ரசிகர் வட்டம் உருவானது. படத்தில் கே.ஏ.தங்கவேலுவின் நகைச் சுவைக் காட்சிகளுக்குப் பிரமாதமான வரவேற்பு. தன்னை பிரபல எழுத்தாளர் பைரவன் என்று தன் மனைவியிடமே பொய் சொல்லுவார் அவர். அடிக்கடி பொய் சொல்லி அகப்பட்டுக் கொள்ளும் கேரக்டர். ஸ்ரீதருக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த ஒரு ரகசியத்தை உங்களிடம் இப்போது சொல்கிறேன். பள்ளிக்கூடத்தில் எங்களுடன் வெங்கடேஷ் என்ற ஒரு மாணவன் படித்தான். எதற்கும், எப்போதும், நிறையக் கற்பனையோடு பொய் சொல்லும் அவன் கேரெக்டரைத்தான் ஸ்ரீதரும் நானும் டெவலப் செய்து, தங்கவேலு கதாபாத்திரமாக உருவாக்கினோம்.

1958-ல் ரிலீஸான, 'கல்யாண பரிசு’ படத்தை எல்லோரும் பாராட்டி, 'தென்னாட்டு சாந்தாராம்’ என்று ஸ்ரீதரை உயர்த்திப் பிடித்தார்கள். பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜாவை இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட். படத்தின் டைட்டிலில் 'உதவி வசனம்’ - சடகோபன் என்று வரும். அது என் நிஜப்பெயர். 'கல்யாண பரிசு’ எடுத்தபோது ஸ்ரீதரின் வயசு 26.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

அடுத்து ஏ.நாகேஸ்வர ராவ் - சரோஜாதேவி ஜோடி நடித்த தெலுங்குப் படமும், ராஜ்கபூர்- வைஜயந்திமாலா நடித்த 'நஸரானா’ இந்திப் படமும் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியாகி மகத்தான வெற்றி பெற்று, இந்தியா முழுக்கப் புகழ்பெற்றார் ஸ்ரீதர்.

இந்தி 'கல்யாண பரிசு’ ஷூட்டிங்கில், ஒரு ஷாட் எப்படி வைக்க வேண்டும் என்று ராஜ்கபூர், ஒளிப்பதிவாளர் சுந்தரத்திடம் சொன்னார். 'ஐ நோ மை ஜாப், நீங்க சொல்ல வேண்டாம்!’ என்று சுந்தரம் பட்டென்று சொல்லிவிட்டார். நாங்கள் சற்று பயந்தோம். 'பெரிய நடிகர்... டைரக்டராச்சே!’ என்று. ஆனால், சிறிது நேரம் கழித்து, ராஜ்கபூரே தான் பேசிய தற்கு வருத்தம் தெரிவித்தார்.

'மீண்ட சொர்க்கம்’ படத்தின்போது, நடனக் காட்சியில் தனக்கு க்ளோசப் ஷாட் வைக்கும்படி பத்மினி கேட்டார். 'சரி, பப்பிம்மா, அப்படியே வைக்கறேன்!’ என்ற ஸ்ரீதர், 'அடுத்த ஷாட் எங்கே, எப்படி வைக்கணும்மா?’ என்று திருப் பிக்கேட்டார். அதன் பிறகு பத்மினி பேசவேயில்லை. ஜெமினி - பத்மினி நடித்த, 'மீண்ட சொர்க்கம்’ ஸ்ரீதருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணனின் மனைவியார் என்.எஸ்.கே. மதுரம், அதன் தயாரிப்பாளர்.

அடுத்ததாக ஸ்ரீதர் இயக்கி,  சிவாஜி-சரோஜாதேவி நடித்த 'விடி வெள்ளி’ படம் 100 நாட்கள் ஓடி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது.

வீனஸ் பிக்சர்ஸில் பங்குதாரராக இருந்த ஸ்ரீதர், சொந்தமாகப் படம் தயாரிக்க ஆசைப் பட்டார். அதைக் கேள்விப்பட்டதும், 'ஏம்ப்பா, கதை, வசனம் மட்டும் எழுதி நல்ல, பேர், பணம் சம்பாதிச்சால் போதுமே... எதுக்கு படத்தயாரிப்பு செய்து ரிஸ்க் எடுக்கறே?’ என்று நான் எதேச்சையாகக் கேட்டேன். 'துணிச்சலா ஏதாவது செய்யணும்டா... நீ இந்த மிடில் கிளாஸ் மென்டாலிட்டியை தூக்கி எறிடா!’ன்னார். அந்த துணிச்சல்தான் அவரது மிகப்பெரிய பலம். இப்படி 1960-ல் உருவானதுதான் சித்ராலயா. ஒளிப் பதிவாளர்கள் வின்சென்ட், பி.என்.சுந்தரம், ஸ்ரீதரின் தம்பி சி.வி.ராஜேந்திரன், ஸ்டில்ஸ் அருணாசலம், நாகபூஷணம், நான் உட்பட அனைவரும் 50 சதவிகிதம் ஸ்ரீதர் 50 சதவிகிதம் என்று தொடங்கினோம்.

சித்ராலயாவின் முதல் படம் 'தேன் நிலவு’. காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம். இந்தியில் ஏற்கெனவே புகழ்பெற்றிருந்த வைஜயந்திமாலாவுக்கும் இது மறக்க முடியாத படம். ஸ்ரீநகரில் 50 நாட்கள் படப்பிடிப்பு என்பதால், ஒரு புதுமையான காரியம் செய்தார் ஸ்ரீதர். 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு என்பதால் நடிகர் - நடிகைகள் சென்னைக்கு சென்று வருவதைத் தவிர்க்க... முக்கிய நடிகர், நடிகைகள் அனைவரையும் குடும்பத்தினருடன் அழைத்துச் சென்றார்.

வைஜயந்திமாலா வடநாட்டில் புகழ் பெற்றவர் என்பதால், அவர் கலந்து கொள்ளும் படப்பிடிப்பின்போது கட்டுக்கு அடங்காத கூட்டம் வரும். பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன், நான் உட்பட படப்பிடிப்பில் ஸ்ரீதருக்கு உதவி செய்ததை விட, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேலையைத்தான் அதிகமாகச் செய்தோம். இனி மையான காதல் கதை. காஷ்மீரில் படமாக்கியது படத்துக்கு பெரிய ப்ளஸ் பாயின்ட். 'தேன் நிலவு’ படம் நன்றாக ஓடினாலும், நாங்கள் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.

எனவே, சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தோம். அதுதான், 'நெஞ்சில் ஓர் ஆலயம்’. முக்கோணக் காதல் கதை. விஜயா - வாஹினி ஸ்டூடியோவின் ஒன்பதாவது தளத்தில் உருவாக்கப்பட்ட, ஆஸ்பத்திரி செட்டில் 25 நாட்களில், 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் உருவானது. அதுவரை, இவ்வளவு குறுகிய காலத்தில், வேறு எந்த ஒரு தமிழ்ப் படமும் எடுக்கப்படவில்லை. ஒரே செட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டது மற்றொரு சிறப்பு. 'சாத்தியமா?’ என்று மற்றவர்கள் மலைக்கும் நேரத்துக்குள் அதைச் செய்து முடித்தார், ஸ்ரீதர்.

கன்னட நடிகர் கல்யாண்குமார் ஹீரோ. தமிழுக்கு அறிமுகம். நடிகர் பாலாஜியின் சிபாரிசின் பெயரில் நாகேஷை, ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். படத்தில் தேவிகா மட்டுமே பிரபலமானவர். இந்தப் படத்தில் கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணியில் எல்லாப் பாடல்களும் ஹிட். எஸ்.வி.சஹஸ்ரநாமம் நாடக குழுவில், நடித்துக் கொண்டிருந்த முத்துராமனை, அவர் கண்களுக்காகவே தேர்ந்தெடுத்து, இரண்டாவது ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். நேர்த்தியாகக் கதை சொல்லும் ஸ்ரீதரின் திறமை, உணர்ச்சி மிகுந்த டயலாக், க்ளைமாக்ஸில் எதிர் பாராத திருப்பம் - இவை படத்தின் ப்ளஸ் பாயின்ட்டுகள். இருந்தும், படத்தை வாங்க, விநி யோகஸ்தர்கள் எவரும் முன்வரவில்லை.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

ஆனாலும் மனம் தளராமல் தன் னம்பிக்கையுடன் எல்லா இடங்களிலும் சொந்தமாகப் படத்தை வெளியிட்டார் ஸ்ரீதர். அது எவ்வளவு பெரிய ரிஸ்க் என்பது திரைத்துறையினருக்குத் தெரியும். அவருடைய நம் பிக்கை பொய்க்கவில்லை. தினமும் ஹவுஸ் ஃபுல் ரிப்போர்ட்தான். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சென்னை, மதுரையில் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. சித்ராலயா பேனருக்கும்... ஸ்ரீதருக்கும் திரைப் படத் துறையில் மதிப்பு கூடியது!

ராஜேந்திரகுமார், ராஜ்குமார், மீனா குமாரி, மெஹ்மூத் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்து இந்தப் படம், இந்தியில் 'தில் ஏக் மந்திர்’ என்ற பெயரில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியானது. இந்தியிலும் சூப்பர் ஹிட்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீதரும் நானும் சென்னை காந்தி சிலை அருகே, மெரினா கடற்கரையில் உட்கார்ந்து, அடுத்த படத்துக்கான கதை பற்றிப் பேசுவோம். பிற்காலத்தில்தான் ஹோட்டலில் ரூம் போட்டு கதை டிஸ்கஷன் செய்வது வழக்கமானது. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ சீரியஸான படம் என்பதால், அடுத்து லைட்டாக காதல் ப்ளஸ் காமெடி சப்ஜெக்ட் ஒன்றை வண்ணத்தில் உருவாக்க முடிவு செய்தோம். அப்படி உருவானதுதான் 'காதலிக்க நேரமில்லை’.

தமிழின் முதல் ஈஸ்ட்மன் கலர் படம். விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட். பெரிய நட்சத்திரக் கும்பல் கொண்ட 'காதலிக்க நேரமில்லை’ படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்துச் சிரிக்காத தமிழ் குடும்பம் இருக்காது. கொடூரமான வில்லனாகப் படங்களில் பெயர் எடுத்த குணசித்திர நடிகர் டி.எஸ்.பாலையாவும் நாகேஷ§ம் இணையும் காட்சிகள் நகைச்சுவையின் உச்ச கட்டம்.

'காதலிக்க நேரமில்லை’ டைட்டிலில், கதை-வசனம் 'ஸ்ரீதர்-கோபு’ என்று இருவர் பெயரையும் சேர்த்து, தனி கார்டு போட்டது ஸ்ரீதரின் பெருந்தன்மைக்கு எடுத்துகாட்டு. பட விமர்சனங்களில் பத்திரிகைகள் ஸ்ரீதரை வானளாவப் புகழ்ந்து எழுதின. 'இளமை டச்’ என்பதற்கு ஸ்ரீதர்தான் அதாரிட்டியாகக் கருதப்பட்டார். பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியர் மற்றும் இளைஞர்களிடையே அவருக்கு பெரிய கிரேஸ் ஏற்பட்டது. அவர் எங்கு சென்றாலும் இளவட்டங்கள் அவரைச் சூழ்ந்து கொண்டன.

ஒரு முறை புகழ் பெற்ற தயா ரிப்பாளரும் இயக்குநருமான வி.சாந்தா ராமை, சந்தித்தபோது அவர் கால்களைத் தொட்டு வணங்கிய ஸ்ரீதர், 'நீங்கள்தான் என் மானசீக குரு’ என்று சொன்னார். சாந்தாராம் அப்படியே ஸ்ரீதரை கட்டித் தழுவி பாராட்டியதை இன்றும் மறக்க முடியாது.

  1965-ம் வருடம், சென்னை ராணி மேரி கல்லூரி மாணவியான தேவசேனாவை, ஸ்ரீதருக்கு திருமணம் செய்ய வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்தார்கள். மறக்க முடியாத பல காதல் ஜோடிகளைத் தனது படங்களில் உருவாக்கி ரசிகர்களின் நினைவில் நிறுத்திய ஸ்ரீதர், தனது சொந்த வாழ்வில் எவரையும் காதலிக்கவில்லை!

அந்தக் காலகட்டத்தில் தென்னிந் தியாவை உலுக்கிய திருமணம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உட்பட தமிழ் திரை உலக நட்சத்திரங்கள், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் உட்படத் தெலுங்குத் திரை உலகம், ராஜ்கபூர், வைஜயந்திமாலா உள்பட ஏராளமான இந்தி நட்சத்திரங்கள் எஸ்.எஸ்.வாசன், ஏவி.எம் செட்டியார், நாகிரெட்டி போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என்று ஏராளமான கூட்டம். சென்னை தேனாம்பேட்டை ஆபட்ஸ்பரி மண்டபத்தில் நடந்த திருமணத்தால் அன்றைக்கு மவுண்ட் ரோடே டிராஃபிக்கால் ஸ்தம்பித்தது. சித்ராலயாவின் யூனிட் ஆட்கள் அனைவரையும், நெல்லூருக்கு அழைத்துப் போய், தேவசேனாவின் பெற்றோர், அருமையான விருந்து வைத்தார்கள்.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

ஸ்ரீதர் எப்போதுமே ஸ்டைலிஷ்ஷாக இருப்பார். உயர்தர வாழ்க்கை வாழ்ந்தவர். அவரது மனைவி தேவசேனாவின் ஆங்கில அறிவு அபாரமானது. தஞ்சாவூர் பெயின்டிங்குகளை ஆர்வத்தோடு சேகரிப்பார். எப்போதும் சினிமா பற்றி மட்டும் நினைக்கும் ஸ்ரீதரையும் அவர்களது மகன் சஞ்சய், மகள் ஸ்ரீப்ரியா உட்பட குடும்பத்தைத் திறம்பட நிர்வாகம் செய்வார். மொத்தத்தில், திரையுலகில் பலர் வியந்தும் பலர் பொறாமைப்படும் பொருத்தமான ஜோடி ஸ்ரீதர்-தேவசேனா. ஸ்ரீதருக்கு அவர் அதிர்ஷ்ட லட்சுமியும்கூட.

  பிரபல புல்லாங்குழல் மேதை ஃப்ளூட் மாலியின் வாழ்க்கையில் இன்ஸ்பயர் ஆகி ஸ்ரீதர் எடுத்த படம் 'கலைக் கோயில்’. ஆர்ட் டைரக்டர் கங்கா, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்த படம் இது. படத்தின் கதாநாயகன் முத்துராமன் அருமையான வீணை கலைஞன். அவர் தந்தை எஸ்.வி.ரங்காராவ். இருவருக்கும் இடையே ஏற்படும் மனப்போராட்டம்தான் கதை. காலை ஏழு மணிக்கு பூஜை போட்டு, தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த ஸ்ரீதர் திட்டமிட்டிருந்தார். பொதுவாகவே, காலை ஷூட்டிங் என்றால் ரங்காராவ், லேட்டாகத்தான் வருவார். பூஜைக்கும் வரவில்லை. காத்திருந்தோம். டென்ஷன்தான் ஏறியது. என்னை அழைத்து, 'இன்னும் அவர் வரலை. வெயிட் பண்ணுவதில் பிரயோஜனம் இல்லை. அந்த ரோலில் எஸ்.வி.சுப்பையா அண்ணனைப் போட முடிவு பண்ணிவிட்டேன்!’ என்றார். பரபரப்பான அவசர ஏற்பாடுகளுக்குப் பிறகு சுப்பையாவும் வந்தார். படப்பிடிப்பு ஆரம்பமானது.

ஒன்பது மணிக்கு மேல் எஸ்.வி.ரங்காராவ் வந்தார். கோபப்படுவாரோ என்று தயங்கியவாறே, அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். ஸ்ரீதர் மீது அவருக்கு நல்ல மரியாதை. 'நோ பிராப்ளம், ஹி இஸ் எ ஜென்டில்மேன். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அவருக்கு என் வாழ்த்துகளைச் சொல்லுங்க!’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். இப்படித்தான் எஸ்.வி.சுப்பையா அதில் நடித்தார். 'கலைக்கோயில்’ படத்தை மிகுந்த கலை நயத்தோடு உருவாக்கினார் ஸ்ரீதர். ஆனால், அது வெளியாகி மூன்று வாரங்கள் மட்டுமே ஓடியது.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

'வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோரை அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். கதை அமைப்பு, பாடல்கள், காதல் காட்சிகள் நேர்த்தியாக அமைந்தன.

சென்னை மவுண்ட் ரோடில் ஆனந்த் தியேட்டரில் 'வெண்ணிற ஆடை’ படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் செய்வதற்கு வரிசை டி.வி.எஸ். பஸ் ஸ்டாப் வரை நீண்டது என்பது அந்த நாளைய சாதனை. ஸ்ரீதரின் இளமை டச் இதிலும் ஸ்ட்ராங்காக இருந்தது. கடைசியில் எதிர்பாராத திருப்பம் வரும். ஏனோ தெரியவில்லை... படத்துக்கு, சென்ஸார், 'ஏ’ சர்டிஃபிகேட் வழங்கினார்கள். படம் ஹிட் ஆனது. நூறு நாட்கள் ஓடியது.

இந்தப் படத்தில், நிர்மலா நடித்த ரோலில் முதலில் மற்றொரு புதுமுகமாக நடிகை ஹேமமாலினியை அறிமுகப்படுத்த நினைத்தார் ஸ்ரீதர். அவருக்கு மேக்கப் டெஸ்ட் எல்லாம் எடுத்த பிறகு, ஹேமமாலினி மிகவும் ஒல்லியாக இருப்பதாக உணர்ந்தார் ஸ்ரீதர். எனவே, அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்த மாட்டார் என்று கருதி அவரை நிராகரித்தார்.

அதன் பிறகு மிகவும் குறுகிய காலத்தில் இந்தித் திரைப்பட உலகில், கதாநாயகியாக அறிமுகமாகி... 'கனவுக் கன்னி’ பட்டம் பெற்று, இந்தியில் முன்னணி நட்சத்திரமாகிவிட்டார் ஹேமமாலினி.

  எம்.ஜி.ஆருக்காக ஸ்ரீதர் ஒரு கதையை தயார் செய்தார். எம்.ஜி.ஆருக்கும் அது பிடித்துவிட்டது. 'அன்று சிந்திய ரத்தம்’ என்று பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்துக்கு, ஒரே ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் ஏதேதோ காரணங்களால் படம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் ஸ்ரீதர், சிவாஜிக்காக 'சிவந்தமண்’ கதையை எழுதினார்.

'யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதற்கேற்ப, ஸ்ரீதரை பெரும் சோதனைக்கு உள்ளாக்கிய படம் 'சிவந்த மண்’. சித்ராலயா பேனரில் மிகப்பெரிய பட்ஜெட்டில், ஒரே சமயத்தில் தமிழிலும் இந்தியிலும் எடுக்கப்பட்ட படம். இந்தியில் ராஜேந்திரகுமார், வஹிதாரெஹ்மான், அஜீத் நடித்தனர். பெயர் 'தர்த்தி’. தமிழில் சிவாஜி, காஞ்சனா, ரங்காராவ், நம்பியார் ஆகியோர் நடித்தனர். ஐரோப்பிய நாடுகளில் அதிக நாட்கள் படமாக்கப்பட்ட முதல் படம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பாரீஸ், லண்டன் ஆகிய நகரங்களில் படமாக்கினோம்.

இந்தப் படத்துக்காக பிரமாண்டமான செட்டுகள் பல போட்டோம். ஏராளமான பொருட் செலவில், வாஹினி ஸ்டூடியோவில் பெரிய நதியை உருவாக்கினோம்.

படத்தின் ஹைலைட் 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான்...’ என்ற பாடல் காட்சி. எல்.ஆர்.ஈஸ்வரி, அருமையாகப் பாடியிருப்பர். படத்தில் பாட்டுக்கு நடனமாடும் காஞ்சனாவை அராபிய வேட சிவாஜி சாட்டையால் அடித்தபடி இருப்பார்.

'சிவந்த மண்’ தமிழில் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. ஆனால், 'தர்த்தி’ சரியாக ஓடவில்லை. ஸ்ரீதர் மிகப்பெரிய நஷ்டத்தை முதன்முதலாக சந்தித்தார். அதிலிருந்து மீள அவருக்குப் பல வருடங்கள் ஆனது. சினிமா பற்றி நன்கு அறிந்த பெரிய ஜீனியஸ் செய்த, மாபெரும் தவறு அது.

  எம்.ஜி.ஆரை வைத்து பல ஆண்டுகள் கழித்து ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய படம் 'உரிமைக்குரல்’. எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்காக ஸ்ரீதரின் 'டைரக்டர் டச்’களுடன் எடுக்கப்பட்ட படம் எனலாம். இது மாபெரும் வெற்றி அடைந்ததால், ஸ்ரீதருக்கு கணிசமான லாபம் கிடைத்தது. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட்.

சடையப்பச் செட்டியாருக்காக எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் இயக்கிய படம் 'மீனவ நண்பன்’. இதுவும் வெற்றிப்படமே.

கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா ஜெயசித்ரா நடித்த ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது’ வியாபார ரீதியாக பெரிய ஹிட் ஆனது. தொடர்ந்து 1981-ம் ஆண்டு, நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் மற்றும் ஜெமினி கணேசனின் மகள் ஜெயா ஸ்ரீதர் இருவரையும் இணைத்து நடிக்க வைத்து ஸ்ரீதர் இயக்கிய 'நினைவெல்லாம் நித்யா’, அவருக்கு மிகுந்த திருப்தி அளித்த வெற்றிப் படம்.

ரஜினி, ராதா, ஜெய்சங்கர் நடித்த 'துடிக்கும் கரங்கள்’ ஹிட் ஆனது. ஒரு நடிகைக்கும் அவர் மகளுக்கும் இடையே நடைபெறும் மனப் போராட்டத்தைப் பிரதிபலிக்கும் 'ஆலய தீபம்’, படம் ஸ்ரீதரின் சிறந்த படங்களான கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் படங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு அவரது 'டச்’ நிறைந்த படம். இதுவும் நூறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.

சென்னை தேவி குரூப் ஆப் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் தயாரித்த 'தென்றலே என்னைத் தொடு’ படத்தில் நடிகர் மோகனுடன், ஜெயஸ்ரீ என்ற புதுமுகத்தை ஹீரோயினாக ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். இனிமையான காதல் கதை. வெள்ளிவிழா கொண்டாடிய படம் இது.

தொடர்ந்து, கமல் - அம்பிகா நடித்த 'நானும் ஒரு தொழிலாளி’ படத்தை ஸ்ரீதர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் எடுத்தார் படம் கை கொடுக்கவில்லை. ஏகப்பட்ட நஷ்டம். கொஞ்சம் இடைவெளிக்குப்பிறகு விக்ரம், ரோகிணி இருவரையும் நடிக்க வைத்து 'தந்துவிட்டேன் என்னை’ என்ற படத்தை ஆரம்பித்தார் ஸ்ரீதர். இந்தப் படம் ஒரு மிடில் கிளாஸ் காதல் கதை. இந்தப் படமும் தோல்விப் படமாக அமைந்தது.

ஸ்ரீதர் தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனையாளர். இவருக்கு மத்திய அரசு, பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற விருதுகள் கொடுத்து கௌரவிக்கவில்லை. திரைப்படத்துறை சாதனையாளருக்கு அளிக்கப்படும் தாதா சாஹிப் பால்கே விருதும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் என் நண்பனுக்கு என்றென்றும் நிரந்தரமான இடம் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை.

அந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்

1975-80 காலகட்டத்தில் கோபு, வெளித் தயாரிப்பாளர்களுக்கு கதை, வசனம், டைரக்ஷன் செய்திருக்கிறார். ஏவி.எம் நிறுவனத்துக்காக அவர் எழுதி டைரக்ட் செய்த முழு நீள நகைச்சுவைப்படம் 'காசேதான் கடவுளடா’. நடிகர் ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த 'தைரியலட்சுமி’, 'காலமடி காலம்’, 'அத்தையா மாமியா’ உள்பட பல படங்களை எழுதி இயக்கியுள்ளார். 'வீட்டுக்குவீடு’ கோபு எழுதி, இயக்கி சூப்பர் ஹிட்டான படம். ஏவி.எம்-மின், 'பாட்டி சொல்லைத் தட்டாதே’ - சூப்பர் ஹிட் படத்துக்கு கதை, வசனம் கோபுதான். இவரது மனைவி கமலா சடகோபன் பிரபல எழுத்தாளர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism