Published:Updated:

சினிமா தாத்தா!

சினிமா தாத்தா!
பிரீமியம் ஸ்டோரி
சினிமா தாத்தா!

நினைவுகள்: கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்/க.தனசேகரன்

சினிமா தாத்தா!

நினைவுகள்: கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்/க.தனசேகரன்

Published:Updated:
சினிமா தாத்தா!
பிரீமியம் ஸ்டோரி
சினிமா தாத்தா!
சினிமா தாத்தா!

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் முன்பு, 'சண்டமாருதம்’ என்ற பெயரில் சினிமா மாதம் இரு முறை பத்திரிகையை நடத்திவந்தது. அதில் பணிபுரிந்த சேலத்தைச் சேர்ந்த ரா.வேங்கடசாமி, மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். 

''மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர்.சுந்தரத்தைப் பத்தி முதல்ல சொல்லிடுறேன். திருச்செங்கோட்டைச் சேர்ந்த அவர், டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி படிக்கிறதுக்காக லண்டன் போனார். போன இடத்தில் கிளாடிஸ்ஸி என்ற லண்டன் பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊர் திரும்பினார். 1933-ம் வருஷத்தில் சேலத்தைச் சேர்ந்த வேலாயுதம் பிள்ளை என்பவர், 'ஏஞ்சல் பிலிம்ஸ்’ என்ற சினிமா கம்பெனியை நடத்தி வந்தார். அவரைப் பார்த்து சுந்தரத்துக்கும் சினிமா ஆசை வந்தது. அதனால் வேலாயுதம் பிள்ளையுடன் பார்டனராகச் சேர்ந்து இரண்டு படங்களைத் தயாரித்தார். படத்தின் ஒவ்வொரு வேலைக்காகவும் அன்னிக்கு கல்கத்தா போக வேண்டி இருந்தது. 'இதுக்காக கல்கத்தா போகணுமா? சினிமா சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் சேலத்திலேயே செய்ய முடியாதா?’ன்னு யோசித்தவர், அதற்காகவே மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்காடு செல்லும் வழியில் மாடர்ன் தியேட்டர்ஸை 1935-ம் ஆண்டு ஆரம்பித்தார். ஸ்டுடியோ, ரெக்கார்டிங் தியேட்டர் என்று ஒரு சினிமாவுக்கு என்னவெல்லாம் தேவையோ, அத்தனை அம்சமும் கொண்டதாக மாடர்ன் தியேட்டர்ஸ் உருவானது. 1937-ம் வருஷம் கட்டி முடிக்கப்பட்டதும், அங்கு எடுத்த முதல் படம் 'சதி அகல்யா’.

சினிமா தாத்தா!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு பல மொழிப் படங்களும் இங்கு உருவாக... இந்திய சினிமாவின் பார்வையை சேலம் பக்கம் திருப்பினார் சுந்தரம். அப்போது நான் போஸ்ட் ஆபீஸில் வேலை பார்த்தாலும், அதிக நேரம் ஸ்டுடியோவில்தான் இருப்பேன். அந்த சமயத்தில் அங்கே பாட்டு எழுதிய கண்ணதாசன் எனக்கு நெருக்கமான நண்பரானார்.

திடீரென ஒரு நாள் கண்ணதாசன் என்னைக் கூப்பிட்டார். 'இவர் பேர் கருணாநிதி. நம்ம ஸ்டுடியோவுக்கு கதை எழுத வந்திருக்கார். இவருக்கு ஒரு வீடு பிடிச்சுக் கொடு’ன்னு சொன்னார். கோட்டை ஏரியாவில் இருந்த எங்க வீட்டுக்கு எதிரில், அவருக்கு வீடு ஒன்றை அமர்த்திக் கொடுத்தேன். சில வாரங்களில் கருணாநிதியின் அம்மா அஞ்சுகத்தம்மா, மனைவி தயாளு அம்மாள், மூத்த சம்சாரத்தின் பையன் முத்து ஆகியோர் அங்கு வந்து சேர்ந்தாங்க. எதிர் வீடு என்பதால் கருணாநிதியும் நானும் இணை பிரியாத நண்பர்களாகிட்டோம். அவரை நான் 'மூனாகானா’னுதான் கூப்பிடுவேன். அவர் சேலத்துக்கு வந்த அடுத்த வருஷமே 'மந்திரிகுமாரி’ படத்துக்கு கதை-வசனம் எழுதினார். வசனம் எழுதி முடிச்சுட்டு அதை உணர்ச்சியோட எனக்குப் படிச்சுக் காட்டுவார். சினிமா போஸ்டரில், 'கதை-வசனம் - மு.கருணாநிதி’ என்று போட்டு வந்த முதல் சினிமா அதுதான்.

தினமும் போஸ்ட் ஆபீஸ் வேலை முடிந்ததும் நான் மூனாகானா வீட்டுக்குப் போவேன். கதவைத் தட்டினால், 'அவர் இங்கே இல்லை... ஸ்டுடியோவுக்குப் போயிருக்கார்’ என்று கதவுக்கு பின்னால் இருந்து தயாளு அம்மாவின் குரல் கேட்கும். சாயந்திர வேளைகளில் டவுனில் இருந்த கொண்டையா நாயுடு போட்டோ ஸ்டுடியோவுக்குப் போவோம். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் அங்கே வருவாங்க. நேரம் போவதே தெரியாமல் எல்லோருமாக உட்கார்ந்து பேசுவோம்.

சினிமா தாத்தா!

பிரபாத் டாக்கீஸ்னு ஒரு சினிமா கொட்டகை இருந்தது. வாரத்துக்கு மூணு இங்கிலீஷ் படம் மாத்துவான். படம் மாத்தினதும் நானும் மூனாகானாவும் குதிரை வண்டியில் கிளம்பிடுவோம். அதேபோல, மாசத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை வெளியூரில் நடக்குற பொதுக்கூட்டங்களுக்கு மூனாகானா கிளம்பிடுவார். அப்போ என்னையும் விடாம இழுத்துட்டுப் போவார்.

'மந்திரிகுமாரி’க்கு அவர் வசனம் எழுதின வேளையிலதான் மாறன் 11-வது பாஸ் செய்துவிட்டு சேலம் வந்தார். அங்கு அவரை பி.யூ.சி. சேர்த்து விட்டார் மூனாகானா. நான் ஒரு நாள் வீட்டுப் பக்கம் போகவில்லை என்றாலும், அஞ்சுகம் அம்மா ரொம்பவே கோபிச்சிக்குவாங்க. பல நாள் அஞ்சுகம் அம்மாவோட சமையலை சாப்பிட்டிருக்கேன். அதேபோல, அவங்க வீட்டில் இருக்கிறவங்க ஊருக்குப் போயிட்டா, மூனாகானாவுக்கு எங்க வீட்டுலதான் சாப்பாடு.

'மந்திரிகுமாரி’ படத்தில் நடிக்க சேலம் வந்த எம்.ஜி.ஆரை கோயமுத்தூர் லாட்ஜ்ல தங்க வெச்சிருந்தாங்க. மூனாகானா என்னை ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செஞ்சு வெச்சார். அந்த சமயத்தில் 'ராஜகுமாரி’, 'மருதநாட்டு இளவரசி’ ஆகிய படங்களில் அவர்கூட ஜோடியாக நடித்த வி.என்.ஜானகியை தீவிரமாக காதலிச்சிட்டு இருந்தார். மெட்ராஸில் இருந்து ஜானகி ரிஜிஸ்டர் போஸ்ட்ல எம்.ஜி.ஆருக்கு லெட்டர் அனுப்புவாங்க. அவருக்கு வரும் கடிதங்களைக் கையெழுத்துப் போட்டு வாங்கி வைக்கும் அதிகாரத்தை எம்.ஜி.ஆர். எனக்குக் கொடுத்திருந்தார். சாயந்திரம் நான் ஸ்டுடியோவுக்குள்ள நுழைஞ்சதும், எம்.ஜி.ஆர். எங்கு இருந்தாலும் வேகமா என்னை நோக்கி ஓடி வருவார். 'ஜானகிகிட்ட இருந்து ஏதாவது கடிதம் வந்துச்சா’னு டென்ஷனா கேட்பார். கடிதம் வந்திருந்து நான் அதை அவர்கிட்டக் கொடுத்தா அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷத்தைப் பார்க்கலாம்.

காஸ்ட்யூம் டிஸைனராக இருந்த அர்த்தனாரி, அந்தக் காலத்தில புல்லட் மோட்டர் சைக்கிள் வெச்சிருந்தார். இதை கவனிச்ச எம்.ஜி.ஆர்., அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அர்த்தனாரியை வரச் சொல்லி அங்கு இருந்து ஸ்டுடியோவுக்கு புல்லட்லயே போக ஆரம்பிச்சார். எம்.ஜி.ஆர்தான் புல்லட்டை ஓட்டிட்டுப் போவார்.

சினிமா தாத்தா!

அந்த சமயத்தில் ஒரு நாள்... ஜானகி நடிச்ச ஒரு படம், அம்பிகா டாக்கீஸ்ல ரிலீஸ் ஆனது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு முதல் காட்சிக்கே போகணும்னு அடம்பிடிச்சார். தியேட்டருக்குப் போனா ஹவுஸ் ஃபுல். அடுத்த காட்சிக்குப் போகலாம்னு நான் எவ்வளவோ சொல்லியும் எம்.ஜி.ஆர். கேட்கலை. வேற வழி இல்லாம, தியேட்டர் முதலாளியைப் பிடிச்சு, புரஜெக்டர் வெச்சிருக்கிற ரூம்ல ஒரு சேர் போட்டு அதில் இருக்கும் சின்ன சந்து வழியாக எம்.ஜி.ஆரைப் படம் பார்க்க வெச்சேன்.

கோயமுத்தூர் லாட்ஜில் தங்கி இருந்த அவரைப் பார்க்க நான் போனால், உடனே அவரும் கிளம்பிடுவார். 'வா... வெளியில் போய் சாப்பிடலாம்’னு ஒரு குதிரை வண்டியைப் பிடிப்பார். தபால் ஆபீஸ் பக்கத்தில் மதீனா ஹோட்டல் இருக்கும். அங்கேதான் சாப்பிடப் போவோம். அசைவ உணவுன்னா எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடிக்கும்; வெளுத்துக் கட்டுவார்.

சினிமா தாத்தா!

எம்.ஜி.ஆரோட காதல் வெளியில் தெரிந்த பிறகு, ஜானகியோடு சேலத்திலேயே தங்கிட்டார். அவரோட வீட்டுக்கு என்னை வரவெச்சு ஜானகிகிட்ட என்னை அறிமுகம் செஞ்சார். 'நீ அனுப்பிய கடிதங்களை ஆண்டவர்தான் எனக்குக் கொண்டுவந்து கொடுப்பார்’னு எம்.ஜி.ஆர். சொன்னதும், ஜானகி முகத்தில் அப்படி ஒரு வெட்கம். சொல்ல மறந்துட்டேன்... எம்.ஜி.ஆர். என்னை ஆண்டவரேன்னுதான் கூப்பிடுவார். ஒரு வாரத்துக்குப் பிறகு வீட்டுக்குக் கூட்டிட்டுப்போய் தடபுடலான விருந்து வெச்சார். அத்தனையும் ஜானகியே சமைச்சதுன்னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார்.

மாறனைப் பற்றி சில விஷயங்களைச் சொல்லிடுறேன்...

பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. முடிச்சதும் மாறனும் சேலத்துக்கே வந்துட்டார். சினிமாவில் சாதிக்கணும்கிற வெறி அவரிடம் இருந்தது. ராத்திரி ஒன்பது மணிக்கு எழுத உட்காருவார். விடியும் வரை ஒரு நிமிஷம்கூட தூங்காம எழுதுவார். எழுதி முடிச்ச கதையோடு காலையில் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு கிளம்பிடுவார். மாறன் கதை வசனம் எழுதிய முதல் படம் 'தலை கொடுத்தான் தம்பி’. மாறன் எங்கே போனாலும் நடந்துதான் போவார். நானும் மாறனும் சேலத்தில் சுத்தாத இடமே இல்லை. குழிப்பணியாரமும் கோழிக் குழம்பும் மாறனுக்கு ரொம்ப இஷ்டம்.

இப்படி எத்தனையோ பிரபலங்களை உருவாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் இன்னிக்கு மண்ணோடு மண்ணாகிவிட்டது. தமிழ் சினிமாவின் தாய் வீடு சேலம். தமிழ்நாட்டில் உள்ள பழைமையான ஸ்டுடியோக்களில் ஒன்று 'மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்’. தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எத்தனையோ ஜாம்பவான்களை உருவாக்கியது இந்த நிறுவனம்தான்.

இன்று... மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பெயரைத் தாங்கிய பிரமாண்ட நுழைவாயில் மட்டுமே இதன் அடையாளமாக நிற்கிறது. ஸ்டுடியோ இருந்த இடங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் அதிபர்களால் வீடுகளாகக் கட்டப்பட்டுவிட்டன. எனக்கு மனசுக்கு சின்ன கஷ்டம் வந்தாலும், அந்த மாடர்ன் தியேட்டர் ஆர்ச் பக்கத்தில் போய் கொஞ்ச நேரம் உட்காருவேன். மூனாகானா, எம்.ஜி.ஆர்., மாறன் எல்லோரும் என்கூட வந்து உட்கார்ந்து பேசிட்டு இருக்கிற மாதிரியே இருக்கும். அவங்க வாழ்ந்த காலத்தில் அவங்ககூட நானும் இருந்தேன் என்பதே எனக்கு வாழ்க்கையில கிடைச்ச பெரும் பாக்கியமா நினைக்கிறேன்!'' என்று கண்கலங்கினார்.

காலங்கள்தான் எத்தனை மாற்றங்களை உருவாக்குகிறது! 

சினிமா தாத்தா!

மாடர்ன் தியேட்டர் தயாரித்த படங்களின் விவரம்:

தமிழ் - 102, தெலுங்கு - 13, மலையாளம் - 8,

சிங்களம் - 7, கன்னடம் - 4, ஆங்கிலம் - 1,

இந்தி - 1,  முதல் படம் 'சதி அகல்யா.’

கடைசிப் படம் 1982-ம் ஆண்டு வெளியான 'வெற்றி நமதே’. டி.ஆர்.சுந்தரத்தின் மகன் ராமசுந்தரம் இந்தப் படத்தை தயாரித்தார். 

சினிமா தாத்தா!

மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் ஆகஸ்ட் 29, 1963-ம் ஆண்டு காலமானார். அவருக்குப் பிறகு ஸ்டுடியோ பொறுப்புகளை அவர் மகன் ராமசுந்தரம் கவனித்து வந்தார். 'வல்லவனுக்கு வல்லவன்’, 'இரு வல்லவர்கள்’, 'வல்லவன் ஒருவன்’ ஆகிய படங்களை ராமசுந்தரமே இயக்கிப் பெரும் வெற்றியும் கண்டார். அவரும் இப்போது உயிரோடு இல்லை. ராமசுந்தரத்தின் வாரிசுகள் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்கள். 

சினிமா தாத்தா!

அழகு மகன்!

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் வாசலில் 'அழகு மகன்’ படத்துக்கு பூஜை போட்டு இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் தாய்வீடு என்பதால் இயக்குநர் அழகன் செல்வா சென்டிமென்ட்டாக இங்கே பட பூஜையை நடத்தி இருக்கிறார். பூஜையின்போது மாடர்ன் தியேட்டர்ஸில் பயன்படுத்திய புரஜெக்டரையும் வைத்து இருந்தார்கள். பூஜைக்கு சிறப்பு விருந்தினர்களாக மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நடித்த சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயக்குமாரி, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகிய பிரபலங்களும் வந்திருந்தனர்.

சி.ஐ.டி. சகுந்தலா, ''எனக்கு சொந்த ஊர் சேலம்தான். டான்ஸராக இருந்த என்னை கதாநாயகி ஆக்கியது மாடர்ன் தியேட்டர்ஸ்தான். இங்கு என் காலடி படாத இடமே கிடையாது. இப்போது இந்த நுழைவாயில் மட்டும்தான் மிச்சமிருக்கு. இதையாவது அழிஞ்சிடாம பாதுகாக்கணும்!'' என்று பழைய நினைவுகளில் மூழ்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism