Election bannerElection banner
Published:Updated:

"சினிமா ஸ்டிரைக் முடிந்ததா இல்லையா... எடப்பாடியின் காமெடி மெசேஜ்!" - பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

"சினிமா ஸ்டிரைக் முடிந்ததா இல்லையா... எடப்பாடியின் காமெடி மெசேஜ்!" - பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
"சினிமா ஸ்டிரைக் முடிந்ததா இல்லையா... எடப்பாடியின் காமெடி மெசேஜ்!" - பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும்  கே.சி.வீரமணி முன்னிலையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒருநாள் கிரிக்கெட் போட்டி மாதிரி, நாள் முழுக்க நடந்து முடிந்திருக்கிறது. 

இந்திய சினிமாவே, தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவில் சிறு புரட்சியை எற்படுத்தியிருக்கிறார்கள், விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம். இந்தியாவில் எங்கேயும் இல்லாத அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப சேவையாளர்கள் வசூலிக்கும் வி.பி.எஃப் கட்டணத்தைக் குறைத்திருக்கிறது தமிழ்சினிமா என்கிறார்கள், திரைத்துறையினர். அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும்  கே.சி.வீரமணி முன்னிலையில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை, ஒருநாள் கிரிக்கெட் போட்டி மாதிரி நாள் முழுக்க நடந்து முடிந்திருக்கிறது. 

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தலைவர் விஷால், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, செயலாளர் கதிரேசன் மற்றும் துரைராஜ் ஆகியோருடன் முன்னாள் தலைவர் கேயாரும் கலந்துகொண்டார். டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்கள் சார்பில் QUBE நிறுவன அதிகாரிகள் செந்தில், அரவிந்த், UFO செயல் அதிகாரி ராஜேஷ் மிஷ்ரா, 'PRO VA' நிர்வாகி பாலா, 'ஒன் சோர்ஸ் டெக் மீடியா' உஸ்மான் ஃபகீத், PXD நிர்வாகி ஜெயபிரகாஷ், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பொருளாளர் பன்னீர்செல்வம், எஸ் பிக்சர்ஸ்  சீனு, திருப்பூர் சுப்ரமணியன், 'ஃபெஃப்சி' சார்பாக தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்துகொண்டனர். 

நான்குபேர் நான்கு விதமாய்ப் பேசுவார்கள் என்பதுபோல, "இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னரே, டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குப் பெரும் தொகை ஒன்றை லஞ்சமாகக் கொடுத்துவிட்டதாகவும், இன்றைய பேச்சுவார்த்தை அவர்களுக்கு சாதகமாகவே அமையும்" என வதந்திகள் பரவின. தவிர, டிஜிட்டல் சினிமா நிறுவனங்கள் கட்டணக் குறைப்பில் ஈடுபடாது எனவும் சிலர் அலறினர். தியேட்டர் உரிமையாளர்கள் கியூப் நிறுவனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுப்பார்கள் என்றார்கள், சிலர். 

ஆனால், உள்ளே நடந்தது வேறு. நேற்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை மூன்று பாகங்களாக நடந்து, முடிவுக்கு வந்திருக்கிறது. 

தயாரிப்பாளர்கள், கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களின் கட்டணப் பிரச்னையை எழுப்ப, திருப்பூர் சுப்ரமணியன் மற்றும் ஐ ட்ரீம்ஸ்  தியேட்டர் உரிமையாளர், கியூப் நிறுவனங்களால் வழங்கப்படும் தொழில்நுட்பங்களைப் பற்றிச் சொல்ல, தொடர்ந்து பேசிய கியூப் நிறுவன இயக்குநர் செந்தில், "எங்கள் நிறுவனத்தின்மூலம் படங்களைத் திரையிடுவதற்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் 'V-sat' என்ற சேட்டிலைட்டிற்கு வருடந்துக்கு 10 கோடி ரூபாய் வரை செலவுசெய்கிறோம்" எனத் தொடங்கிவைக்க, அவரது பேச்சுக்குக் குறுக்கிட்ட எஸ்.ஆர்.பிரபு, "படங்களைத் திரையிடுவதற்குச் செய்யும் செலவா அல்லது உங்களுக்குக் கிடைக்கும் விளம்பரங்களைத் திரையிடச் செய்யும் செலவா?'' என்று கேட்டிருக்கிறார். பிறகு, திருப்பூர் சுப்ரமணி, ஆர்.கே.செல்வமணி இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. 'மூணு தரப்பும் ஒண்ணா இருக்கும்பொதே, பிரச்னையைப் பேசி முடிச்சிடுங்க' என உத்தரவிட்டிருக்கிறார், அமைச்சர்.

சிறிது நேரத்தில், "இன்னைக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை. நல்லதோ கெட்டதோ... பிரச்னைக்குத் தீர்வு இல்லாம யாரையும் வெளியே விடாதீங்க; உள்ளேயே வெச்சு மூடுங்க" என முதல்வரிடம் இருந்து அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு மெசேஜ் வர, அதை சிரித்தபடியே சபையில் தெரிவித்திருக்கிறார். 

"இந்தக் கூட்டத்தை டெக்னிக்கல் விஷயங்களாகவே பேசி, முடித்துவிடலாம்!" என நினைத்த டிஜிட்டல் ப்ரொவைடர்களுக்குப் பேரதிர்ச்சி. பிறகு, மதியம் 3.30 மணிக்குப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பகுதியில் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் ஆன்லைன் புக்கிங் கட்டணம் மற்றும் சினிமாவை பாதிக்கும் விஷயங்களை அமைச்சர்கள் இருவரிடமும் முன்வைத்திருக்கிறார்கள். தியேட்டர் உரிமையாளர் சுப்ரமணியன், 'நடிகர்களின் சம்பளத்தால் வணிகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது' எனக் கூற, 'தியேட்டர்களை கணினி மயமாக்கிவிட்டு, கணக்குகளை சரியாகப் பெற்றுக்கொண்டு அரசுக்கு வரி கட்டுவோம்; நடிகர்களின் சம்பளத்தை முறைப்படுத்துவோம்' எனத் தெரிவித்திருக்கிறார்.

தவிர, "டிக்கெட் விலையில் வரும் வருமானத்தைப் பற்றி மட்டுமே பேசும் நீங்கள், மற்ற வருமானங்கள்குறித்து ஏன் சொல்வதில்லை?'' எனவும் கேட்டிருக்கிறார். அதற்கு, "திரையரங்குகளுக்கு முன்னர் 2.50 ரூபாய், 3.50 ரூபாய் என இருந்த மானிய மின்சாரக் கட்டணம் இன்று 10.50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது" எனத் திருப்பூர் சுப்ரமணியன் அமைச்சர்களிடம் தெரிவித்திருக்கிறார். முக்கியமாக, "Bookmyshow போன்ற நிறுவனங்கள் வசூலிக்கும் அதிக சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்" என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள், தயாரிப்பாளர்கள். 

பேச்சு வார்த்தையின் முடிவில் தயாரிப்பாளர் சங்கமே ஆன்லைன் புக்கிங் வசதியை செய்துகொடுத்து, குறைந்த சேவைக் கட்டணத்தை நிர்ணயிப்பது என்றும், சில மாதங்களில் திரையரங்குகளைக் கணினி மயமாக்குவது என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள். 

சொதப்பலாக பௌலிங் போட்ட ஒரு டீம், நல்ல பேட்டிங் ஆர்டரைக் கொண்டு களம் இறங்கியதுபோல இருந்தது, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை. இதில், அரசு முற்றிலுமாக இந்த ஸ்டிரைக்கை முடிக்கும் எண்ணத்தில் இருந்தது. அதுவரை கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனத்திற்கு ஆதரவாகப் பல விஷயங்களை முன் வைத்த திருப்பூர் சுப்ரமணியனிடம், "உங்களுக்கான சேவைகளை ஒரு நிறுவனம் 50 % தள்ளுபடியோடு தரும்போது, ஏன் மறுக்கிறீர்கள்?" எனக் கேட்டிருக்கிறார்கள், அமைச்சர்கள். கியூப் நிறுவனமும், ''எங்களுக்கு திரையரங்குகள்தான் முக்கியம். அவர்கள் சொல்லும்படியே கேட்கிறோம்!" எனச் சொல்ல, "இப்போதைக்கு தயாரிப்பாளர்கள் சொல்லும் முடிவுகளுக்கு உடன்படுங்கள்!" எனத் தெரிவித்திருக்கிறது, கியூப் நிறுவனம்.

 தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களை சப்போர்ட் செய்ய, வேறுவழியே இல்லாமல் டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்களும் இந்தக் கட்டணக் குறைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தது. இதைத் தொடர்ந்து, ஒரு வாரத்துக்கு 4000 ரூபாய் வி.பி.எஃப் கட்டணம் எனத் தயாரிப்பாளர்கள் தெரிவிக்க, டிஜிட்டல் நிறுவனங்கள் '5000 ரூபாய் வேண்டும்' என வாதிட, மேலும் சில மணிநேரம் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. 

கடைசியாக, இ-சினிமா திரையரங்குகளுக்கு 5000 ரூபாய் வாரக் கட்டணம் எனவும், அயுட்கால வி.பி.எஃப் கட்டணம் 10,000 ரூபாய் அல்லது ஒரு காட்சிக்கு 250 ரூபாய் எனவும் இறுதி செய்யப்பட்டது. இந்த வி.பி.எஃப் கட்டணங்கள் 6 மாத காலம் வரை பயன்பாட்டில் வைக்கப்பட்டு, அது டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என ஆராயப்பட்டு, பின்னர் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட டி- சினிமா திரையரங்குகளுக்குக் கூட்டு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்த கட்டணங்களே பின்பற்றப்படும் எனவும், இதற்கும் இரண்டு மாத இடைவெளியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு