Published:Updated:

வேலை நிறுத்தம் வாபஸ்; 'காலா' எப்போ வரும் - விஷால் அறிவிப்பு

அலாவுதின் ஹுசைன்

வேலை நிறுத்தம் வாபஸ் 47 நாட்கள் தடைக்கு பிறகு கோலாகலமாக 'மெர்க்குரி' ரிலீஸாகும் என விஷால் தெரிவித்தார். 

வேலை நிறுத்தம் வாபஸ்; 'காலா' எப்போ வரும் - விஷால் அறிவிப்பு
வேலை நிறுத்தம் வாபஸ்; 'காலா' எப்போ வரும் - விஷால் அறிவிப்பு

வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாகவும், 47 நாட்கள் தடைக்கு பிறகு கோலாகலமாக 'மெர்க்குரி' திரைப்படம் ரிலீஸாகும் எனவும் விஷால் தெரிவித்தார். 

மார்ச் 1 தொடங்கிய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தமிழக அரசின் தலையீட்டால் நேற்று முடிவுக்கு வந்தது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளான 50% வி.பி.எஃப் கட்டணக் குறைப்பு, திரையரங்குகள் கணினி மயமாக்கல், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கட்டண குறைப்பு எனத் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறப்பட்ட சூழ்நிலையில் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது என நேற்று தயாரிப்பாளர்  சங்கத்தால் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், படப்பிடிப்புகள் தொடக்கம், புதுப்படங்கள் ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் பேசுகையில் "47 நாட்களுக்கு பிறகு கோலாகலமாக  'மெர்க்குரி' ரிலீஸாகவுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முயற்சியை ஆதரித்து தமிழகத்தில் படத்தை வெளியிடாமல் இருந்த இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்கு நன்றி. இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு உறுதுணையாய் இருந்த ரஜினிகாந்த் சார், தனுஷ், லைகா நிறுவனத்தார் சுபாஷ்கரன், கருணாவிற்கு நன்றி.

'விஸ்வரூபம் 2', 'காலா' படங்கள் இந்திய அளவில் வெளியாகவுள்ளத் திரைப்படங்கள். விஸ்வரூபம் பொருத்தவரை மே மாதம் தான் கமல் சார் வெளியீடு என்றிருந்தார். ஓரிரு நாளில் ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி அமைக்கப்பட்டு இது முறைப்படுத்தப்படும்.  

காலா படக்குழு தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள்.  'காலா' படத் தயாரிப்பாளர்கள் அந்தத் தேதியில் வெளியிட விரும்புகிறார்கள் என விண்ணப்பம் வைத்தால் அதைப் பரிசீலித்து எங்கள் ஒத்துழைப்பை வழங்குவோம்" என்றார்.

மேலும் ”இந்த ஸ்டிரைக்கில்  அதிகமாக விவாதிக்கப்பட்ட நடிகர்கள் சம்பளம் குறித்து வரும் சனிக்கிழமை நடிகர்கள் சங்கக் கூட்டம் நடைபெறும்” என விஷால் தெரிவித்தார்.