Published:Updated:

``சிம்பன்ஸியை வைத்து 'கொரில்லா' படத்தை எடுக்காதீர்கள்!" - 'ஜீவா' மூலம் பீட்டா ரீ-என்ட்ரி

``சிம்பன்ஸியை வைத்து 'கொரில்லா' படத்தை எடுக்காதீர்கள்!" - 'ஜீவா'  மூலம் பீட்டா ரீ-என்ட்ரி
``சிம்பன்ஸியை வைத்து 'கொரில்லா' படத்தை எடுக்காதீர்கள்!" - 'ஜீவா' மூலம் பீட்டா ரீ-என்ட்ரி

``சிம்பன்ஸியை வைத்து 'கொரில்லா' படத்தை எடுக்காதீர்கள்!" - 'ஜீவா' மூலம் பீட்டா ரீ-என்ட்ரி

தமிழகத்தில் இன்று நடக்கும் பல தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குப் பெரும் முன்னுதாரணமாக இருந்தது, மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரிய போராட்டம். அந்தப் போராட்டத்துக்கு வித்தாய் அமைந்தது, சர்வதேச விலங்கு ஆர்வலர் அமைப்பான பீட்டா. தமிழக மக்களின் உணர்வை மதித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தை மாதத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகம் பக்கம் மீண்டும் சற்று எட்டிப் பார்த்திருக்கிறது, பீட்டா இந்தியா அமைப்பு. தற்போது, ஜீவா நடித்துவரும் 'கொரில்லா' படத்தில் 'காங்' என்ற சிம்பன்ஸியை  நடிக்க வைத்துள்ளனர். இந்தக் காட்சிகளை தாய்லாந்தில் பிரத்யேகமாகப் படம்பிடித்து வந்தனர். இந்நிலையில், பீட்டாவின் இந்திய அலுவலர் சச்சின் பங்கேரா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'கொரில்லா' படத்தின் இயக்குநர் டான் சாண்டியை உண்மையான சிம்பன்ஸியை வைத்துப் படமாக்குவதை குறைத்துக்கொண்டு ஹாலிவுட்டில் எடுக்கப்படுவதுபோல சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மீதமிருக்கும் சிம்பன்ஸி சம்பந்தமான பகுதிகளைப் படமாக்கலாம்" எனக் கூறியிருக்கிறார்.


மேலும், அதில் "முற்போக்கு சிந்தனை மிக்க எந்த ஒரு இயக்குநரும் ஒரு விலங்கை பரபரப்பான படப்பிடிப்பு தளத்துக்குக் கொண்டுவந்து நடிக்கவைக்க கனவில்கூட நினைக்கமாட்டார். தவிர, படப்பிடிப்புகளில் குறைவான நேரத்தில் 'சரியாக' நடிக்க வேண்டுமென ஒரு விலங்கை அதன் பயிற்சியாளர் அடித்து, உதைத்துத் துன்புறுத்துவார்.
 
தொலைக்காட்சி, சினிமா மற்றும் விளம்பரப் படங்களுக்காக இத்தகைய நடிப்புப் பயிற்சி கொடுக்கப்படும் விலங்குகள் பிறந்த உடனேயே அவற்றின் தாயிடமிருந்தும், அதன் வாழ்வியல் சூழலில் இருந்தும் பிரிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் துன்புறுத்தப்படுகிறது. இப்படிக் கூண்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் விலங்குகள் பெரிதும் மன உலைச்சலுக்கு ஆளாகி, அதைக் கையாள முடியாத சூழலுக்கும் தள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. 

இப்படியெல்லாம் துன்பறுத்தாமல் 'ஜங்கிள் புக்', 'பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்' போன்ற பல திரைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் படம் எடுக்கிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்துப் படத்தின் தயாரிப்பாளர் விஜயராகவேந்திராவுடன் பேசினோம். ``பீட்டா இந்தியா அமைப்பு, இயக்குநர் டான் சாண்டியைத் தொடர்புகொண்டு படத்துக்காக சிம்பன்ஸியைப் பயன்படுத்தாதீர்கள் என்றும், அதனால் விலங்குகளுக்கு நடக்கும் பிரச்னைகள் குறித்தும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். மேலும் இனி 'கொரில்லா' படப்பிடிப்பில் உண்மையான விலங்குகளைப் பயன்படுத்தாமல், ஹாலிவுட் படங்களைப்போல சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆனால், நாங்கள் சிம்பன்ஸி சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளையும் படமாக்கிவிட்டோம். இவை அனைத்தும் தாய்லாந்து அரசிடம் முறையான முன் அனுமதி பெற்று, அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே எடுக்கப்பட்டிருக்கிறது. இதை பீட்டா அமைப்பிடமும் தெரிவித்துள்ளோம். அவர்கள், 'இதன்பிறகு எடுக்கவேண்டிய காட்சிகள் இருந்தால், எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். 

தமிழ் சினிமாவில் நடந்து வந்த வேலை நிறுத்தம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அப்படியே கிடப்பில் இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான வேலைகளில் இருக்கிறேன்" என்று முடித்தார்.

முதல் முறையாக நிஜ சிம்பன்ஸி குரங்கை வைத்து எடுக்கப்படும் தமிழ்ப் படம், 'கொரில்லா'. இப்படத்தில் ஜீவாவுடன் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே, சதீஷ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். 

அடுத்த கட்டுரைக்கு