Published:Updated:

விஸ்வரூபம்: சிக்கல் அவிழ்ந்த கதை...!

விஸ்வரூபம்: சிக்கல்  அவிழ்ந்த கதை...!
விஸ்வரூபம்: சிக்கல் அவிழ்ந்த கதை...!
விஸ்வரூபம்: சிக்கல்  அவிழ்ந்த கதை...!

ஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் தமிழக அரசின் தடை என  'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கல், தீர்வை நோக்கிச் செல்லத்தொடங்கியதன்  பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.

'விஸ்வரூபம்' படத்திற்கு விதிக்கப்பட்ட தடையினால் தாம் சொத்துக்களை இழக்க  நேரிடும் என்றும், தமிழகத்தை விட்டே செல்லப்ப்போவதாகவும் கமலஹாசன்,  புதன்கிழமையன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் குமுறியது தமிழகம் முழுவதும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் தமிழக அரசை குறை கூறி திமுக தலைவர்  கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் விமர்சிக்க தொடங்கிய  நிலையில், மவுனம் சாதித்து வந்த திரையுலக பிரபலங்களும் கமலுக்கு ஆதரவாக குரல்  கொடுக்கத் தொடங்கினர்.

##~~##
இதனால் கம்லுக்கு ஆதரவாக அனுதாப அலை வீசத்தொடங்கியது.அதே சமயம் அது  தமது அரசுக்கு எதிராகவும் திரும்புவதாக உணர்ந்த ஜெயலலிதா,மறுநாளே- அதாவது  வியாழக்கிழமையன்று காலை, கோட்டையில் இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை  நடத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதா.
அப்போது இப்பிரச்னையில் கமலின் அணுகுமுறை மற்றும் அரசின் நடவடிக்கையை  விமர்சிப்பவர்களை சாடிய ஜெயலலிதா, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுதான் தமது  முதல்கடமை என்றும், அதே சமயம பிரச்னைக்கு சுமூக தீர்வு காண இருதரப்பும்  பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து கொடுக்கும்  என்று அறிவித்தார்.
அவர் இவ்வாறு அறிவித்ததுமே, விஸ்வரூபம் படத்திற்கான சிக்கலின் முதல் முடிச்சு  அவிழத்தொடங்கியது.
இதனிடையே ஜெயலலிதா செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பே கமலின்  ஆழ்வார்பேட்டை வீட்டில் குழுமிய நடிகர் சிவக்குமார், நடிகை ராதிகா உள்ளிட்ட சினிமா  பிரபலங்கள், மேற்கூறிய பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, செய்தியாளர்கள்  கூட்டத்தை கூட்டினர்.
அப்போது பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு கூறிய யோசனைக்கு  நன்றி தெரிவித்துக்கொண்ட அவர்கள், அவரது யோசனையின்படியே இஸ்லாமிய  அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றனர்.
அப்போதே விஸ்வரூபம் சிக்கலிலிருந்து விடுபடப்போவதற்கான அறிகுறிகள்  தென்படத்தொடங்கியது.
அதற்கு முன்னதாக இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட முக்கிய  சினிமா புள்ளிகள் பலர் கமலுடன் பேசியதாகவும், அப்போது விஸ்வரூபம் படத்திற்கு  விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் ஒருவேளை நீக்கினாலும்,  படத்திற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புகளினால் பிரச்னை வரலாம் என தியேட்டர்  உரிமையாளர்கள் அச்சப்பட வாய்ப்புள்ளது.எனவே போராட்டக்காரர்களுடன் பேசி தீர்ப்பதே  நல்லது என்று ஆலோசனை கூறியதாகவும், அதனை கமல் ஏற்றுக்கொண்டதாகவும்  கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில்தான் ஜெயலலிதாவின் பேட்டியை தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்புகளும்  பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து அறிவிப்பு வெளியிடவும், அதுவரை நீடித்துவந்த  இறுக்கமான சூழ்நிலை தளரத்தொடங்கி, பிரச்னை தீர்வை நோக்கிச்  செல்லத்தொடங்கியது.
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துவிட்டதால்,  அநேகமாக இந்த பேச்சுவார்த்தை என்பது ஒரு அதிகாரப்பூர்வ மற்றும் சம்பிரதாய  சடங்காகவே இருக்கும். வருகிற புதன்கிழமையன்று விஸ்வரூபம் தொடர்பான வழக்கு  சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, தடை உத்தரவை  விலக்கிக்கொள்ளும் முடிவை தமிழக அரசு தெரிவித்து பிரச்னை  தீர்க்கப்படலாம்.இதனையடுத்து படமும் உடனடியாக திரைக்கு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.