Election bannerElection banner
Published:Updated:

`என்னை ஞாபகம் இருக்கா?’ - ரசிகர்களுக்குத் தமிழ் சினிமாவின் கடிதம்

`என்னை ஞாபகம் இருக்கா?’ - ரசிகர்களுக்குத் தமிழ் சினிமாவின் கடிதம்
`என்னை ஞாபகம் இருக்கா?’ - ரசிகர்களுக்குத் தமிழ் சினிமாவின் கடிதம்

தமிழ் சினிமா ஸ்டிரைக் காரணமாக, கடந்த 48 நாள்களாக வெளியாகாமல் இருந்தன தமிழ்படங்கள். இந்த வாரம் முதல் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.

நான் தமிழ் சினிமா பேசுறேன்! என்ன ஞாபகம் இருக்கா? 

என் பேரு, தமிழ்ப் படம். வார வாரம் வெள்ளிக்கிழமை உங்க ஊர் தியேட்டர்ல புதுசா ரிலீஸ் ஆவேன். என்ன ஜோலி இருந்தாலும் வாரக் கடைசி ஜாலிக்காக என்னைப் பார்க்க வருவீங்களே.. என்னை ஞாபகம் இருக்கா?

படம் ஓட்டுறவங்க காட்டுன 'படத்துல' நான் பிரச்னையில சிக்கிட்டேன். நான் ஓடும்போதுகூட, தியேட்டர்ல ஓடுன விளம்பரத்துல சம்பாதிச்சது பத்தலைனு சில கம்பெனி அதிகக் கட்டணம் வசூலிச்சுது. அதுக்கு என்னைப் புடிச்சு நிறுத்தி, ஒரு மண்டலமா (48 நாள்கள்) உங்களை இந்தி, ஹாலிவுட், மலையாளம்னு பந்தயத்துல இறக்கிவிட்டுட்டாங்களே... அந்தக் கோபம் இன்னும் இருக்கா?

நல்லதோ, கெட்டதோ... பாராட்டவும், போட்டுப் பொரட்டி எடுக்கவுமாவது என்னைய வாராவாரம் பார்க்க வந்தீங்களே... ஒன்றரை மாசமா என்னைப் பார்க்கலையே... 48 நாள் என்னையைப் பிரிஞ்ச சோகம் ஏதாச்சும் இருந்துச்சா உங்களுக்கு... இல்லை "மாஸ் ஹீரோவுல இருந்து மண்ணாங்கட்டி வரையில மொக்கைப் படமா எத்தனை தடவை வெச்சி செஞ்சியே; உனக்கு இது தேவைதான்"னு கலாய்ச்சு சிரிச்சீங்களா?! பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் காசுனு வாரா வாரம் என் பாக்கெட்டைப் பதம் பார்த்தது நீதானே...கொஞ்சநாள் ஒதுங்கி இருன்னு ஒதுக்கிட்டீங்களா?! 

ஜி.எஸ்.டி, ஆன்லைன் புக்கிங்குக்கு அதிக கட்டணம்... இப்படியெல்லாம் உங்களை வாட்டி எடுத்தது நான்தான்னு, இன்னுமா நீங்க நம்புறீங்க? இதுக்கும் சேர்த்து நியாயம் கேட்டுத்தான், என்னை 48 நாளா உட்கார வெச்சாங்கனு சொன்னா, நீங்க நம்பவா போறீங்க... அதனாலதான் கேட்குறேன், என் பேரு தமிழ்ப் படம். என்னை ஞாபகம் இருக்கா?

என்னைப் படைச்ச தயாரிப்பாளர், இயக்குநர், படக்குழுனு எல்லோரும் மொத்தமா கஷ்டப்படும்போது, நான் எப்படி சும்மா இருக்க முடியும்?! அதான், இவ்ளோ நாளா சும்மாவே இருந்துட்டேன். முன்ன மாதிரி இல்லை நான். கொஞ்சம் சரியா இல்லைனாலும், அவங்கெல்லாம் பெருசா நஷ்டப்படுறாங்கனு சொல்ல எனக்குப் பல கதைகள் இருக்கு. இப்போ எதுக்கு அதுன்னு கேட்குறீங்களா? 'நாட்டுல பல பிரச்னைகள் இருக்கிறப்போ, இப்போ நீ தேவையா?'னு கூட கேட்பீங்க. அதுக்கு என் பதில் இதுதான்.

கோடான கோடி பேரை ஹிட்லர் கொல்லும்போது, சார்லி சாப்ளின் என்னை வெளியிட்டது மக்களுக்குப் பெரிய ஆசுவாசம் தந்திருக்கும், அதைவிடப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். நான் நிற்கிறதால பிரச்னை எதாவது நிற்குமா, இல்லைதானே?! இல்ல, என்னமாதிரி உங்களை சின்ன வயசுல இருந்து சந்தோஷமா வெச்சிகிட்டது வேற ஏதாச்சும் உண்டா? 

எந்த வகையில பார்த்தாலும் நான் குறைஞ்ச பட்ச நல்லவன். முதல் காட்சியில படம் நல்லா இல்லைனு சொல்லிட்டா, அடுத்த காட்சியில ஆளே வரமாட்டீங்க... எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் 1500 ரூபாய்க்கு மேல பிளாக் டிக்கெட்கூட விற்காது. அதுக்காக, 'ஐ.பி.எல் மட்டும் தக்காளி தொக்கா?'னு கேட்காதீங்க. 

வெயிலுக்கு ஏ/சி காத்து வாங்குனதும், கார்னர் சீட்டுல காதல் பண்ணதும், ஸ்கிரீனுக்கு முன்னாடி விழுந்து விழுந்து சிரிச்சதும், க்ளைமாக்ஸ் காட்சில கண்ணீர் விட்டதும், 'ச்சய்... படமாடா இது'னு காறித் துப்பினதும் என்னையைப் பார்த்துதான்... குடும்பத்தோட வந்த எல்லோருமே என்னையைப் பார்த்தா, சந்தோஷமா திரும்புவாங்க.  இந்த 48 நாளா உங்களைப் பார்க்காம, சேர்ந்து கெடக்குற படங்களும் அதிகம், நீங்க வராம வாடிப்போன தியேட்டர்களும் அதிகம். இனி வாரா வாரம் தியேட்டருக்கு வாங்க; உங்களுக்காக நான் காத்திருக்கேன்.

என் பேரு, தமிழ்சினிமா. என்னை ஞாபகம் இருக்குதானே?!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு