Published:Updated:

பிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..! - `மெர்க்குரி’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
பிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..! - `மெர்க்குரி’ விமர்சனம்
பிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..! - `மெர்க்குரி’ விமர்சனம்

பிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..! - `மெர்க்குரி’ விமர்சனம்

பாழடைந்த ஃபேக்டரி, அதில் மாட்டிக்கொள்ளும் ஐந்து இளைஞர்கள்... என ஹாலிவுட்காரர்கள் தேய்த்தெடுத்த ஒன்லைனை வைத்து கார்ப்பரேட் அராஜகத்துக்கு எதிராக `மெர்க்குரி' படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். 

மெர்க்குரி கழிவுகளால் கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை இழந்த இந்துஜா, சனத், தீபக், ஷஷான்க் மற்றும் அனிஷ் ஆகியோர் `ஹோப்' பள்ளியின் முன்னாள் மாணவர்கள். தங்களது அலுமினி மீட்டுக்காக ஒன்றுகூடும் இந்த ஐந்து பேரை, ஏன் பிரபுதேவா கொலை செய்யத் துரத்துகிறார், இவர்களுக்கும் பிரபுதேவாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதை சமூக அக்கறை கலந்தும் கார்ப்பரேட்டின் பேராசையால் ஏற்பட்ட விளைவு என்ன என்பதையும் `மெர்க்குரி'யாக நமக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 

`It was going well' எனத் தொடங்கும் அலுமினி மீட்டிங், பார்ட்டியில் தொடங்குகிறது படம். தங்களுக்குக் காது கேட்காமல் இருந்தாலும் ஹெடெசிபலில் பாட்டை ஒலிக்கவிட்டு நடனமாடி மகிழ்கிறார்கள் அந்த ஐந்து பேர். இந்துஜாவின் பிறந்தநாளில் தன்னுடைய காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும் சனத், இந்துஜாவைத் தனியாகக் காரில் அழைத்துச் செல்கிறார். நண்பர்களும் உடன் வந்துவிடுவதால், வேகம் எடுக்கிறது பயணம். அந்த வேகத்தால் ஒரு விபத்து ஏற்படுகிறது. விபத்தால் ஏற்படும் ஒரு சிக்கலிலிருந்து இந்த ஐந்து பேரும் மீண்டார்களா இல்லையா என்பது மீதிக்கதை.

படத்தின் காஸ்ட்டிங்கில் எந்தவிதக் குறையும் சொல்லமுடியாத அளவுக்கு நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார், இயக்குநர். எண்ணிக்கை குறைவு என்றாலும் அந்தந்த கேரக்டர்களுக்கு நடிகர்கள் பக்காவாகப் பொருந்தியிருக்கிறார்கள். குறிப்பாக, பிரபுதேவாவின் பாடி லாங்குவேஜ் அபாரம். துள்ளல் நடனம், குட்டிக் குட்டி காமெடி ரியாக்‌ஷன்கள்... என இதுவரை கண்களைக் குளிரவிட்டவர், முதன்முறையாக மிரட்சியைப் பரிசாகக் கொடுத்து முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறார் பிரபுதேவா. 

படத்தில் ஆங்காங்கே பல குறியீடுகளைத் தனக்கே உரித்தான ஸ்டைலில் உதிர்த்திருக்கிறார் கார்த்திக். படத்தின் மிக முக்கியமான அந்த இரண்டு காட்சிகளிலும் மான் ஒன்று வருவதை, `DEER CROSSING' இடத்திலுள்ள சிசிடிவி கேமராவோடு சம்பந்தப்படுத்தி சொல்லவரும் குறியீடு நச்! இந்தப் படத்தை ஏன் சைலன்ட் மூவியாக எடுக்க வேண்டும் எனும் கேள்வி எழ வாய்ப்பு கொடுக்காததே, இயக்குநரின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. வசனங்கள் வரும் ஓரிரு காட்சிகளையும் சாமர்த்தியமாக சைலன்ட் ஆக்கியிருக்கிறார்.

பாழடைந்த ஃபேக்டரி, அதில் மாட்டிக்கொள்ளும் ஐந்து இளைஞர்கள் என ஹாலிவுட்டில் எக்கச்சக்கமாகப் பயன்படுத்தபட்ட கதைக்களம் என்பதால், முதல்பாதியில் `Hills Have eyes', `Wrong turn' போன்ற படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிகிறது. இரண்டாம் பாதியில் அப்படியே யூ-டர்ன் போட்டு வேறு பக்கமாகத் திரைக்கதையைத் திரும்பியிருப்பது கார்த்திக் சுப்புராஜ் டச்.

படத்தின் ரியல் ஹீரோ சந்தோஷ் நாராயணன்தான். இடைவெளிகளில் இட்டு நிரப்பும் இசைக்கு இந்தப் படத்தில் வேலையில்லை. முதலிலிருந்து இறுதிவரை எங்கும் எதிலும் அவர்தான். கரி படிந்த சமையல் கூடத்தில் தொடங்கும் ச.நா-வின் விரல்வித்தை நேரம் ஆக ஆக இதயத்துடிப்பை அருகிலிருப்பவர் கேட்கும்படி அதிரச் செய்கிறது. அதுவும் பட்பட்டெனத் தாவும் இன்டர்வெல் சீக்வென்ஸில் சந்தோஷின் இசை மிரட்டல்!

ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா கோணங்கள் படத்தின் தன்மையைவிட்டு விலகாமல் பார்த்துக்கொள்கிறது. அதேபோல் படத்தின் கலர் டோன் கதைசெல்லும் மனநிலைக்கு ஏதுவாக இருக்கிறது. `ஜிகர்தண்டா’ படத்துக்கு தேசியவிருது வாங்கிய எடிட்டர் விவேக் ஹர்ஷன், தான் ஒரு நல்ல தொழில்நுட்பக் கலைஞர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். வசனம் இல்லாத படம் என்பதால், அதிக நேரப் படமாக இல்லாமல், ஒன்றரை மணி நேரப் படமாக கட் செய்து கொடுத்திருக்கும் எடிட்டரைக் கட்டாயம் பாராட்டலாம்.

சைலன்ட் மூவி என்பதால் வழக்கத்தைவிட மிகையாக ரியாக்ட் செய்ய வேண்டும் என்ற தேவை இருக்கிறதுதான். ஆனால், சில காட்சிகளில் துருத்தித் தெரியும் இந்துஜா, தீபக் பரமேஷ் போன்றவர்களின் ஓவர் ஆக்டிங்கைத் தவிர்த்திருக்கலாம். தொழிற்சாலையில் சிக்கிக்கொண்டவர்கள் இளைஞர்களாக இருந்தும், ஒருவர்கூட  பிரபுதேவாவை எதிர்த்து சண்டைபோடாமல் பயந்து ஓடுவது நகைப்புக்குரியது.

மெர்க்குரி கழிவுகள் அங்குள்ள குழந்தைகளை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதைத் திரைப்படத்துக்குள் உணர்வுபூர்வமாக காட்டாமல், படம் முடிந்தபிறகு வரலாற்றுச் செய்திகளைப் போடுவது, பார்வையாளர்கள் இருக்கையை விட்டுக் கிளம்பும்போது ரெடிமேடாகத் தூண்டப்படும் காட்சிகளாக இருக்கிறது. `We ended up in a wrong war' என்ற கதையின் மையக் கருவை நியாயப்படுத்த நிறைய காட்சிகளைக் கார்த்திக் சுப்புராஜ் யோசித்திருந்தாலும், க்ளைமாக்ஸில் இருக்கும் லாஜிக் சறுக்கல்கள்தான், `It could have ended the right way' எனத் தோன்ற வைக்கிறது.

30 வருடங்களுக்கு முன்பு வெளியான `பேசும் படம்' என்ற வசனமில்லாத படத்துக்குப் பிறகு வந்திருக்கும், மெளனப் படம் இது. தமிழ் சினிமாவின் புதுப்புது முயற்சிகளுக்கு இந்தப் படம் ஒரு தொடக்கம்!

அடுத்த கட்டுரைக்கு