Election bannerElection banner
Published:Updated:

``பிரபுதேவா மாஸ், விஜய் சேதுபதி பாஸ், ரஜினி க்ளாஸ்!"- ஹீரோயின்ஸ் ஷேரிங்ஸ்

``பிரபுதேவா மாஸ், விஜய் சேதுபதி பாஸ், ரஜினி க்ளாஸ்!"- ஹீரோயின்ஸ் ஷேரிங்ஸ்
``பிரபுதேவா மாஸ், விஜய் சேதுபதி பாஸ், ரஜினி க்ளாஸ்!"- ஹீரோயின்ஸ் ஷேரிங்ஸ்

சினிமா ஸ்டிரைக் முடிந்து அடுத்தடுத்து ரிலீஸுக்காகப் படங்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பிற மொழிகளில் ஹிட் அடித்து, தமிழுக்கு அறிமுகம் ஆகியிருக்கும் ஹீரோயின்கள் சிலரிடம் பேசினோம்.

சினிமா ஸ்டிரைக் முடிந்து, ரஜினியின் `காலா', கமல்ஹாசனின் `விஸ்வரூபம் 2' உள்பட அடுத்தடுத்து பல ரிலீஸுக்காகப் படங்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பிற மொழிகளில் ஹிட் அடித்து, தமிழுக்கு அதகள என்ட்ரி கொடுக்கவிருக்கும் ஹீரோயின்ஸ் சிலரிடம் பேசினோம். 

அதா ஷர்மா 

`` `இது நம்ம ஆளு' படத்தின் `மாமன் வெயிட்டிங்' பாடலின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிய அதா சர்மா, தற்போது `சார்லி சாப்ளின் 2' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தியில் பல முன்னணி ஹீரோயின்களுக்கு நிகராகப் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ``பிரபுதேவா சார் மாஸ் டான்ஸர் மட்டுமல்ல, நல்ல இயக்குநரும்கூட. அவரோட சேர்ந்து இந்தப் படத்துல ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கேன். நான்தான் பிரபுதேவாவுக்கு ஜோடி" என்று உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார், அதா ஷர்மா. 

``குடும்பம் பத்தி சொல்லுங்க"

``பூர்வீகம் கேரளா. ஆனா, பொறந்து வளர்ந்தது மும்பை. வீட்ல மலையாளத்தைவிட இந்திதான் அதிகமா பேசுவோம். அப்பா இந்தியக் கடற்படை கேப்டன். அம்மா கிளாசிக்கல் டான்ஸர். போன வருடம் அப்பா ஒரு விபத்துல இறந்துட்டார். வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. குடும்பத்தை சரிவர கவனிச்சுக்கிட்டு, சினிமாவுலேயும் நடிக்கணும் என்பது மிகப்பெரிய சவாலா இருக்கு" 

`` `சார்லி சாப்ளின் 2' எப்படி வந்துருக்கு?"

``நான் நடனத்துல பட்டப்படிப்பு முடிச்சிருக்கேன். ஏழு வருடமா கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டு இருக்கேன். இந்தி, தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகள்ல பத்துப் படங்கள் நடிச்சிருக்கேன். `சார்லி சாப்ளின் 2'  படத்துக்குப் பாட்டு பாடத்தான் வந்தேன். இயக்குநர் சக்தி சிதம்பரம் நடிக்க வெச்சுட்டார். உடனடியா ஸ்பாட்ல ஆடிஷன் பண்ணாங்க. இதுல ஒரு பாடலும் பாடியிருக்கேன். படத்துல நிக்கி கல்ராணியும் , நானும் டபுள் ஹீரோயின்ஸ்! ஹியூமரும் கிளாமரும் சேர்ந்த படம், இது!" 

``பிரபு, பிரபுதேவா, சக்தி சிதம்பரம், நிக்கி கல்ராணி கூட்டணி எப்படி இருக்கு. படத்துல உங்க ரோல் என்ன?"

``பிரபு சார் எனக்கு அப்பா மாதிரி. ஷூட்டிங் ஸ்பாட்டை வீடு மாதிரி உணர வெச்சது அவர்தான். அவர் யார்கிட்டேயும் கோபப்பட்டு பேசி நான் பார்த்ததில்லை. சமையல் பண்றவங்கள்ல இருந்து படத்துல நடிக்கிற ஹீரோ வரை எல்லோரையும் சமமா நடத்துவார். படத்துல 500 பேருக்கு முன்னாடி நின்னு நடிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை. அத்தனை பேருக்கு முன்னாடி நடிக்கத் தயங்கினேன். அப்போ, பிரபு சார்தான் என்னை அதுக்கேத்த மாதிரி தயார்படுத்தி நடிக்க வெச்சார். அவர் இல்லைனா இந்தப் படத்துல நான் சரியா நடிச்சிருப்பேனானு தெரியலை. சக்தி சிதம்பரம் சாரோட மனைவிதான் எனக்குத் தமிழ் உச்சரிப்பைச் சொல்லிக் கொடுத்தாங்க. என் பெஸ்ட் ஃபிரெண்ட் நிக்கி கல்ராணி தன்னம்பிக்கைக்கு மிகச் சிறந்த உதாரணம். திறமையான கடின உழைப்பாளியும்கூட."

``இதுக்கு முன்னாடி தமிழ்ப் படங்கள் பார்த்திருக்கீங்களா?"

``எனக்கு தனுஷ் சாரை ரொம்பப் பிடிக்கும், அவர் படங்கள் எல்லாத்தையும் தியேட்டர்ல போய் பார்க்கணும்னு ஆசைப்படுவேன். அப்படி நிறைய படங்கள் பார்த்திருக்கேன். அவரோட சேர்ந்து ஒரு விளம்பரப் படத்திலும் நடிச்சிருக்கேன். தனுஷ் என்னோட நல்ல நண்பரும்கூட. இப்போ பிரபுதேவா சாரோட நடிச்சதுனால, அவரும் என் ஃபேவரைட் ஆயிட்டார்." 

மிருணாளினி

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் அன்பர்களுக்கு `மிர்னாளினி' வழக்கமான பெயர்களுள் ஒன்று. தனக்கென இருக்கும் ரசிகர்கூட்டத்தின் ஆக்கத்தால், இவரது சிங்கிள் டப்ஸ்மாஷ் வீடியோ ஒரு மில்லியன் பார்வைகள் வரை கடந்து செல்கிறது. இவர் தற்போது `நகல்' மற்றும் `சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 

``டப்ஸ்மாஷ் டூ சினிமா டிராவல்..."

``2016-லதான் டப்ஸ்மாஷ் பண்ண ஸ்டார்ட் பண்ணேன். இவ்வளோ ரீச் இருக்கும்னு அப்போ எனக்குத் தெரியாம போச்சு. ஒருபக்கம் சமூக வலைதளங்கள்ல ஃபேன்ஸ் கூடிகிட்டே இருக்க, மறுபக்கம் சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சுச்சு. `நகல்' படத்துக்குப் பிறகு `சூப்பர் டீலக்ஸ்' வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்ல எங்க எல்லாரையும் நல்லாப் பார்த்துகிற பாஸ், விஜய் சேதுபதிதான்"

``தொடர்ந்து பட வாய்ப்புகளைத் தவிர்த்துட்டு இருந்த நீங்க, திடீர்னு `நகல்' படத்துல கமிட் ஆகுறதுக்கான காரணம் என்ன?" 

``ரொம்ப வழக்கமான குடும்பம்தான் என்னுடையது. யாரும் சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் அல்ல. அம்மா ஹவுஸ் வைஃப், அப்பாவுக்கு பிரைவேட் கம்பெனியில வேலை. எட்டாவது படிக்கிற தம்பி இருக்கான். எல்லா அம்மா, அப்பாவுக்கும் தன்னோட பொண்ணு சினிமாத்துறைக்குள்ள போனா எந்தமாதிரியான பயம் இருக்குமோ, அது எங்க வீட்டுலேயும் இருந்துச்சு. முதல் வாய்ப்பு வந்தப்போ, வீட்ல ஒப்புக்கவே இல்லை. தவிர, பார்க்குற வேலையை விட்டுட்டு முழுமூச்சா சினிமாவுல இறங்குறதுக்கு, நடிப்பு ஒண்ணும் நிரந்தர வேலையும் கிடையாது. முக்கியமா, சினிமாவுல நடிச்சதுக்குப் பிறகு என்னோட பெர்சனல் வாழ்க்கை என்னாகும்ங்கிற பயம் எனக்குள்ள இருந்துச்சு. இப்போ என்னோட வேலையையும், நடிப்பையும் நான் ஒருசேர பார்த்துட்டு இருக்கேன். நடிப்புக்காக வேலையை விடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன். சினிமா சார்ந்த என்னோட இந்தப் புரிதலுக்காக, வீட்ல என்னை நடிக்க அனுப்பிட்டாங்கனு நினைக்கிறேன்."

``ஃபேன் ஃபாலோயர்ஸ் கூடியதுக்குப் பிறகு எப்படி உணர்றீங்க?"

``டப்ஸ்மாஷுக்கு முன்னாடி வாழ்க்கை எப்படி இருந்ததோ, அப்படியேதான் இப்போவும் இருக்கு. சென்னையில இருந்தாக்கூட, மக்கள் ஏதோ என்னை அடையாளம் கண்டுக்குவாங்க. ஆனா, பெங்களூர்ல நான் ஒரு சாதாரண பொண்ணு மாதிரிதான் இருக்கேன். ரொம்ப அபூர்வமா யாராவது ஒருத்தர் ரெண்டுபேர் என்கிட்டே வந்து, `அந்த டப்ஸ்மாஷ் பொண்ணு நீங்கதானே'னு கேட்பாங்க.

இந்த ஃபேன்ஸ் கிளப் எதுவுமே நிரந்தரம் இல்லை. இன்னைக்கு நம்மளோட டப்ஸ்மாஷுக்காக சமூக வலைதளங்கள்ல அதிகரித்த ரசிகர் கூட்டம், நாளைக்கு வேறு ஒருத்தவங்களுக்கு அப்படியே மாறிடும். ஆரம்பத்துல என்னோட பெயர்ல நிறைய ரசிகர் பக்கங்கள் ஆரம்பிச்சப்போ, ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. ஒரு விருது வாங்குவதைவிட அதிக சந்தோசம் ரசிகர்கள்கிட்ட இருந்து கிடைக்கும். சின்ன வயசுல டிவி பார்க்கும்போது, `எப்போதாவது டிவியில நாமளும் வந்துடமாட்டோமா?'ங்கிற ஆசை இருந்துச்சு. அதோட வெளிப்பாடுதான், டப்ஸ்மாஷ்."  

சாக்ஷி   அகர்வால்

`ராஜா ராணி' படத்தில் துணை நடிகையாகத் தமிழுக்கு அறிமுகமானவர், சாக்‌ஷி அகர்வால். ``பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்திருந்தாலும், `காலா' எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். எனது சினிமா கனவின் திறவுகோல்" என்று பேச ஆரம்பிக்கிறார், சாக்‌ஷி.  

``மலையாளத்துல முதல் படம் பண்றீங்க? ஓரளவுக்குத் தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமான நீங்க, மலையாள சினிமாக்களை எப்படிப் பார்க்குறீங்க?"

``மலையாளத்துல என்னுடைய முதல் படமான `ஓராயிரம் கிண்ணக்கலால்' ரிலீஸுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். பிஜு மேனன் எனக்கு ஜோடியா நடிச்சிருக்கார். நாங்க ரெண்டுபெரும் யூகே ரிட்டர்ன்  ஃபேமிலியா வர்றோம். ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்ங்கிற எண்ணத்துல சில பல காமெடிகளைச் செய்வோம். அது எப்படிப் போய் முடியுது என்பதுதான் கதை. 

தொழில்நுட்பம், கதை ரெண்டுலேயுமே மற்ற மொழிகளைவிட மலையாளப் படங்கள் ஒருபடி மேலே இருக்குனு சொல்லலாம். கதையும் கதாபாத்திரங்களும் அவ்வளோ யதார்த்தமா இருக்கும். அதனால மலையாளப் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. இந்தப் படத்துக்கான ஆடிஷன் நடந்தப்போ, `நீங்க ரொம்ப யதார்த்தமா நடிக்கிறீங்க. மலையாள ரசிகர்களுக்கு இப்படி இருந்தாதான் பிடிக்கும்'னு இயக்குநர் ப்ரமோத் மோகன் சொன்னார். இந்தப் படத்துல எனக்குத் துளிகூட மேக்அப் போடலை. மேக்அப் தன்னம்பிக்கையை அதிகமாக்கும்னு சொல்வாங்க. ஆனா, எனக்குத் தெரிஞ்சு மலையாள நடிகைகள் யாருமே அவ்வளவா மேக்அப் போடுறதில்லை. ஆனா, அவங்க எல்லாரும் பிரமாதமா நடிக்கிறாங்க, என்னையும் ஃபீல் ஃப்ரீயா உணர வெச்சாங்க. தூக்கத்துல இருந்து எழுந்திருக்கும்போது எந்த நடிகைகளும் தேவதை மாதிரி இருக்கிறதில்லை. மேக்அப்தான் எங்களை அழகா மாத்துது. அதுல இருந்தும் விடுதலை அளிக்கும் மலையாள சினிமா, உண்மையிலேயே க்ளாஸ்தான்."

``இத்தனை வருடம் சின்னச் சின்ன ரோல்ல நடிச்சுட்டிருந்த உங்களுக்கு இப்போதான் பெரிய பட வாய்ப்புகள் வந்திருக்கு. இந்தக் காத்திருப்பின் வலி எப்படியானது?"

``நான் அண்ணா யுனிவர்சிட்டியில இன்ஜினீரிங் கோல்ட் மெடலிஸ்ட். சின்ன வயசுல இருந்தே ஐ.ஏ.எஸ் ஆகணும்னுதான் ஆசை; நடிகையாகணும்னு கனவுலகூட விரும்பியது இல்லை. அதுக்காக பயங்கரமா படிச்சுட்டு இருந்தேன். இன்ஜினீயரிங் முடிச்சிட்டு எம்.பி.ஏ ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணேன். அப்புறம் அமெரிக்காவுல `லீ ஸ்ட்ராஸ்பார்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்'ல `மெத்தட் ஆக்டிங்' கோர்ஸ் பண்ணேன். தென்னிந்தியாவுலேயே இந்த கோர்ஸ் படிச்ச ஒரே நடிகை நான்தான். ஹாலிவுட் நடிகர்கள் பெரும்பாலும் இந்த இன்ஸ்டிட்யூட்ல படிச்சிருக்காங்க. அப்போதான் படிப்பை ஓரங்கட்டிட்டு எனக்குப் பிடிச்ச வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டேன். இந்த உலகத்துக்கு நம்ம முகமும் தெரியவரணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு சினிமாதான் பெஸ்ட் சாய்ஸ்னு முடிவு பண்ணேன். அந்த எண்ணத்தோட மாடலிங்ல காலடி எடுத்து வெச்சேன். அப்போ நான் இன்ஃபோசிஸ்ல வேலை பார்த்துக்கிட்டு மாடலிங்கை பார்ட் டைமா பண்ணிக்கிட்டு இருந்தேன். நேரம் ஒத்துழைக்காததுனால, முழுநேரமா மாடலிங் மட்டும் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அப்போதான், `ராஜா ராணி' படத்துக்கான ஆடிஷன் நடக்கிறதைக் கேள்விப்பட்டேன். ஏற்கெனவே நிறைய டிவி விளம்பரங்கள்ல நடிச்சிருக்கிறதுனால என்னை ஈஸியா செலக்ட் பண்ணிட்டாங்க. அதுதான், இப்போ `காலா' படம் வரை வந்து விட்டிருக்கு."

`` `காலா' பட அனுபவம் எப்படி இருந்துச்சு?"

``நிறைய படங்கள்ல நடிச்சிருந்தாலும், நடிப்புல நிறைய பிழைகளைப் பண்ணிக்கிட்டுத்தான் இருந்தேன். அதெல்லாத்தையும் மாத்துனது `காலா' படம்தான். சினிமாத்துறையில `இதுதான் சக்ஸஸ் ஃபார்முலா'னு எதையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஒருத்தருக்கு வொர்க்அவுட் ஆகுறது மத்தவங்களுக்கு செட் ஆகாது. முன்னாடி வேலை செய்துட்டு இருந்த லாபகரமான தொழிலை விட்டுட்டு சினிமாவுக்கு வந்ததுனால, சரியா நடிக்க முடியாத சில சமயங்கள்ல மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கேன். சினிமாவுல எனக்கு நல்ல எதிர்காலம் இல்லைனா, வாழ்க்கை எனக்கு நம்பிக்கையற்றதா மாறிடும். அந்த அளவுக்கு சினிமாவுல நடிக்கணும்ங்கிற ஆசையும், ஆர்வமும் இப்போ எனக்கு வந்திருக்கு. இப்படி அப்பப்போ வர்ற நெகட்டிவ் எண்ணங்களை முழுசா மாத்துனது, `காலா' டீம்தான்!" பாசிட்டிவாக முடிக்கிறார், சாக்‌ஷி. 

வார்ம் வெல்கம் ஹீரோயின்ஸ் !

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு