Published:Updated:

``படிப்பே பிடிக்கலை... இசையும் பெரிசா கத்துக்கலை... கனவு மாதிரி இருக்குது!" எஸ்.ஜானகி 80 #HBD_SJanaki

``படிப்பே பிடிக்கலை... இசையும் பெரிசா கத்துக்கலை... கனவு மாதிரி இருக்குது!" எஸ்.ஜானகி 80 #HBD_SJanaki
``படிப்பே பிடிக்கலை... இசையும் பெரிசா கத்துக்கலை... கனவு மாதிரி இருக்குது!" எஸ்.ஜானகி 80 #HBD_SJanaki

``படிப்பே பிடிக்கலை... இசையும் பெரிசா கத்துக்கலை... கனவு மாதிரி இருக்குது!" எஸ்.ஜானகி 80 #HBD_SJanaki

`சிங்கார வேலனே தேவா' என 1960-களில் பிரபலமாக ஒலிக்கத் தொடங்கிய குரல், பல மொழி மக்களையும் மயங்கவைத்தது; ஆட வைத்தது; கவலைகள் மறந்து ரசிக்கவைத்தது. என்றென்றும் நம் செவியையும் மனதையும் வருடும் திறன் படைத்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர், எஸ்.ஜானகி. இந்தியத் திரையிசைத் துறையின் முன்னோடி பின்னணிப் பாடகிகளில் ஒருவரான இவரின் பிறந்த தினம் (ஏப்ரல் 23) இன்று.  

``இவ்வளவு எண்ணிக்கையில் பாடல்களைப் பாட வேண்டும்; புகழ் அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்று ஒருநாளும் நினைத்ததில்லை. படிப்பில்கூட பெரிய நாட்டம் இருந்ததில்லை. இசை மட்டும்தான் தெரியும். ஆனால், அதைக் கற்றுக்கொள்ளவும் பெரிய முயற்சிகளை எடுத்ததில்லை. நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கிறது. கடவுளின் அருளால் இசை என்னுள் வளர்ந்தது. அதை இயன்ற அளவுக்கு என் பாடல்களின் வாயிலாக எடுத்துச்சென்றேன்" எனத் தன்னடக்கத்துடன் பேசுவதுதான் எஸ்.ஜானகியின் வழக்கம். அந்த அடக்கமே, இவரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது.

ஆந்திர மாநிலம், பள்ளப்பட்லா கிராமத்தில், 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, பின்னாளில் பல ஊர்களில் வசித்தார். படிப்பில் ஆர்வமில்லை. பெற்றோர் பலமுறை சொல்லியும் பலனில்லை. ஒருகட்டத்தில், `உன் தலையெழுத்தை நீயே தீர்மானித்துக்கொள்' என்று சொல்லிவிட்டனர். ஆனாலும், கேள்வி ஞானத்தால் சிறப்பாகப் பாடும் மகளின் இசைத்திறனை வளர்க்க விருப்பப்பட்டனர். பைடிசாமி என்ற நாதஸ்வர வித்துவானிடம் இசை கற்றுக்கொள்ளச் சென்றார் ஜானகி. 10 மாதங்களிலேயே இசையில் புலமைபெற்றார். குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பாடகியாக பணிக்குச் சேர்ந்தார். சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்தது. 1957-ம் ஆண்டு, `விதியின் விளையாட்டு' படத்தின் `பெண் என் ஆசை' என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகியானார். 

1962-ம் ஆண்டு இவர் பாடி வெளியான `சிங்காரவேலனே தேவா' (கொஞ்சும் சலங்கை) பாடலின் மூலம் பெரும் புகழ்பெற்றார். அடுத்தடுத்து பல மொழிகளில் வாய்ப்புகள் வந்தன. தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுக்கொண்டு நேர்த்தியாகப் பாடினார். 1976-ல் வெளியான `அன்னக்கிளி' படத்தின் மூலம் இளையராஜா - எஸ்.ஜானகி என்கிற அற்புத கூட்டணி உருவானது. `மச்சானைப் பார்த்தீங்களா?', `அன்னக்கிளி உன்னைத் தேடுது' எனப் படத்தில் இவர் பாடிய பாடல்கள் அத்தனையும் பட்டிதொட்டி எங்கும் ஹிட். இளையராஜாவின் இசையமைப்பில் தவிர்க்கமுடியாத பாடகியானார், எஸ்.ஜானகி. இந்தக் கூட்டணியை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய சினிமாவில் சாதனைப் பாடகியாக உயர்ந்தார்; உச்சம் தொட்டார். இளையராஜா இசை; எஸ்.ஜானகி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் டூயட் பாடல்கள் செய்த மாயாஜாலம், ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தானது. அந்தப் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் காதல் கீதமானது.

1970 - 2000-ம் ஆண்டு வரை. வீடு, ரெக்கார்டிங்தான் ஜானகியின் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. 1980-களில், ஒரே நாளில் 10 - 15-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். ரெக்கார்டிங்காக இருந்தாலும், மேடைக் கச்சேரியாக இருந்தாலும் உதடுகள் அசையுமே அன்றி, இவரின் கை கால்களில் அசைவுகள் இருக்காது. எவ்வளவு கடினமான வரிகளாக இருந்தாலும், நின்ற கோட்டிலேயே பாடிவிடுவார். ஆஸ்துமா பிரச்னைகொண்ட ஜானகிக்கு அடிக்கடி மூச்சிரைப்பு ஏற்படும். அதைப் பொருட்படுத்தாமல், குறித்த நேரத்தில் பாடிக்கொடுத்துவிடுவார். கணவர் உயிருடன் இருந்த வரை அவரின் ஊக்கமும் பங்களிப்பும் ஜானகிக்கு அதிகமாக இருந்தது.

தாலாட்டு, கிராமியம், பக்தி, குத்து, கவர்ச்சி என அனைத்து விதமான பாடல்களையும் சிறப்பாகப் பாடுவதில் வல்லவர், இவர். 4 முறை தேசிய விருது, 30-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றிருக்கிறார். 15-க்கும் மேற்பட்ட மொழிகளில், 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியவர். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, சினிமா மற்றும் மேடைக் கச்சேரிகளில் பாடுவதை நிறுத்திக்கொண்டார்.

``பெரிய பாடகியாக வேண்டும் என நினைத்து சினிமாவுக்கு வரவில்லை. என் இசைத்திறமைக்குக் கடவுள் மிகச்சிறந்த உயரத்துக்கு அழைத்துச்சென்றார். இதுவே போதும். நான் மட்டுமே வளர்வது வளர்ச்சியில்லை. என்னைவிட என் இளைய தலைமுறையினர் சிறந்த பாடகர்களாக இருக்கிறார்கள். அவர்களும் புகழ்பெற வேண்டும். அதனால், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பாடுவதைக் குறைத்துக்கொண்டேன்" என்றவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் பாடினார். இதுவே, இவரின் கடைசி மேடைக் கச்சேரி. தற்போது வெளிநிகழ்ச்சிகளிலும் மீடியாவிலும் தோன்றுவதில்லை. தற்போது ஹைதராபாத்தில் வசித்துவருகிறார்.

`` `வயசான காலத்தில் ஏன் பாடுகிறீர்கள்? உங்கள் குரலில் தடுமாற்றம் தெரிகிறதே' என்ற பிறர் சொல்லுக்கு இடம்கொடுக்க விரும்பவில்லை. அதனால், மகிழ்ச்சியுடனும் கெளரவத்துடனும் இசைத்துறையிலிருந்து விலகுகிறேன். பாடியது, புகழ்பெற்றது எல்லாம் போதும். இனி என் வீட்டில் பழைய நினைவுகளுடன் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன். அதனால், எந்தப் பொது நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை; எந்தப் பேட்டியும் கொடுப்பதில்லை" என்பார். 

ஒப்பனை இல்லாத, நகைகள் அணியாத, வெள்ளை நிறச் சேலையுடன் கூடிய எளிமையான தோற்றம். பழகுவதிலும் எளிமை. ``மக்கள் நான் நினைத்ததைவிட நிறையப் புகழையும் செல்வத்தையும் கொடுத்தார்கள். அதையெல்லாம் பெரிதாக ஒருநாளும் நினைத்ததில்லை. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக என் குரலை ரசிக்கிறார்கள். என் மேல் அளவுகடந்த அன்பைக் காட்டுகிறார்கள். இதற்கு என்ன கைம்மாறு செய்வேன் எனத் தெரியவில்லை. இப்போதும், ஒவ்வொரு நாளும் ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் வருகின்றன. அதையெல்லாம் ரசிக்கிறேன்; பதிலளிக்கிறேன். இப்படியே என் ஓய்வுக்காலம் செல்கிறது" என்கிறபோது ஜானகியின் குரலைவிடவும், குணம் நம்மை கூடுதலாகக் கவர்கிறது.

இனிமை கலந்த கணீர் குரல்... வசீகர அன்பு... நீடித்த புகழ்... இன்னும் உயரட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் ஜானகி அம்மா!

அடுத்த கட்டுரைக்கு