Published:Updated:

ஷங்கர், மணிரத்னம், மிஷ்கின், பாலா - இவங்க எல்லாம் ஸ்கூல் டீச்சரா இருந்திருந்தா?

சில டைரக்டர்ஸ் ஸ்கூல் டீச்சரா இருந்தா எப்பிடிலாம் பாடம் நடத்தியிருப்பாங்க? வாங்க சொல்றேன்...

ஷங்கர், மணிரத்னம், மிஷ்கின், பாலா - இவங்க எல்லாம் ஸ்கூல் டீச்சரா இருந்திருந்தா?
ஷங்கர், மணிரத்னம், மிஷ்கின், பாலா - இவங்க எல்லாம் ஸ்கூல் டீச்சரா இருந்திருந்தா?

சில டைரக்டர்ஸ் ஸ்கூல் டீச்சரா இருந்தா, எப்படில்லாம் பாடம் நடத்தியிருப்பாங்க? வாங்க சொல்றேன்...

ஷங்கர்:

சரியா படிக்காத பசங்களுக்கு, கருட புராணத்தின்படி கும்பிபாகம், அந்தகூபம், மிருகினஜம்போ ஸாரி... கிருமிபோஜனம் மாதிரியான தண்டனைகளைக் கொடுத்திருப்பார். டூர் கூட்டிட்டுப் போகச் சொன்னா, லோக்கல்லாம் கிடையாது; வேற லெவல்தான். அமெரிக்கா, லண்டன், சீனானு வெளிநாட்டுக்குதான் டூர்  கூட்டிட்டுப் போவார். எல்லா க்ளாஸ்லயும் பிளாக்போர்டுக்குக் கறுப்பு கலர் பூசினா, இவர் க்ளாஸ்ல மட்டும் கலர் கலரா பெயின்ட் பூசியிருப்பார். ஒவ்வொரு பாடம் நடத்தி முடிச்சதும் `உங்க டூத்பேஸ்ட்ல உப்பிருக்கா?' ரேஞ்சுக்கு, மைக்கை நீட்டி `நான் நடத்தின பாடத்தைப் பற்றி கருத்துச் சொல்லுங்க'னு கேட்டு ஸ்டூடென்ட்ஸை வறுத்தெடுப்பார். 

மணிரத்னம்:

இவர் க்ளாஸ் எடுத்தார்னா ஈ, எறும்பு பேசுறதைக்கூட கேட்கலாம், அவ்வளவு நிசப்தமா இருக்கும். கதவு, ஜன்னல் எல்லாத்தையும் மூடி வெச்சுட்டு, இருட்டுலதான் க்ளாஸ் எடுப்பார். மொத்தப் பாடத்தையும் 20 வார்த்தைகள்ல நடத்தி முடிச்சுடுவார். பரீட்சைக்கு கொஸ்டீன் எடுத்தாக்கூட ஒன் மார்க் கேள்வியாத்தான் கேட்பார். க்ளாஸ்ல ஸ்டூடன்ட் எழுந்து `ஏன்?',  `எதுக்காக?'னு டவுட் கேட்டா `புக்', `சிலபஸ்'னு பதில் சொல்லி சமாளிச்சுடுவார். இதன் விளைவா ஸ்டூடன்ட்ஸும் பரீட்சையில `தெரியாது'னு ஒரே வார்த்தையில பதில் எழுதி வெச்சுட்டு ஃபெயிலாப்போயிடுவாங்க.

மிஷ்கின்: 

பிதாகரஸ் தேற்றம் பற்றி பாடமெடுக்கும்போது உலகத்தின் அனைத்துத் துயரங்களையும் கண்களில் தேக்கிவைத்துக் கத்தி பாடம் எடுத்து பயமுறுத்துவார். அதே ஆள் இயற்பியல் வகுப்பெடுக்கும்போது இரண்டு மெழுகுவத்திகளை ஏற்றிவைத்து நடுவே நின்றுகொண்டு இமைக்காமல் ஹஸ்கி வாய்ஸில் மொத்தப் பாடத்தையும் எடுப்பார். என்ன பாடம் எடுத்தாலும் நிச்சயமா தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஏதாவது ஒரு மேற்கோள்காட்டிவிடுவார்.

வகுப்பைக் கவனிக்காத மாணவர்களை முட்டிக்குக் கீழே பிரம்பால் அடித்து நரம்பைச் சுண்டி இழுப்பார். ``ஒரு அட்டைப்பெட்டியில் வெட்டப்பட்ட முப்பது ஆப்பிள் துண்டுகள். அதுல ஒண்ணு கிரீன், ஒண்ணு ரெட். அப்படின்னா, எத்தனை ஆப்பிள்கள் அந்தப் பெட்டியில இருந்துச்சு?'' எனக் கணக்கு வகுப்பு எடுப்பார். கூலிங்கிளாஸ் போட்டிருப்பதால், சமயங்களில் உட்கார்ந்தபடி தூங்கிவிடுவார். மஞ்சள் கலரில் டிரெஸ் போட்டு வருபவர்களுக்கு, நிச்சயமாக நல்ல மதிப்பெண் கிடைக்கும் 

ராம்:  

மிஷ்கினின் தம்பிதான் இந்த ராம். அவரைவிட கடும் கோபக்கார வாத்தியார். தமிழ் வகுப்பைத் தவிர, வேறு வகுப்பே எடுக்க மாட்டார். தமிழ் க்ளாஸுக்கு யாராவது வராம கட்டடிச்சா, சைக்கோவாக மாறி கட்டிவைத்து அடிப்பார். தமிழில் பேரன்பு, வாஞ்சை, பேரன்பின் ஆதி ஊற்று, ஆகப்பெரும் துயரம், மென்சோகம், தேநீர் அன்பு, மழை நேசம், பிரியங்கள் வாழும் கூடு என நெக்குருகும் வார்த்தைகளில் கட்டுரைகள் எழுதினால், 100-க்கு 100 மார்க் போடுவார். தமிழில் 100 மார்க் எடுக்கும் ட்ரெண்ட்டை கொண்டுவந்து மாணவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்தாலும் இவரின் தாடிக்குப் பயந்தே பாதி பேர் வகுப்புக்கு ஒழுங்காக வருவதில்லை. 

ஹரி:

நிச்சயமாக உடற்கல்வி ஆசிரியராகத்தான் இருப்பார். எப்போதும் எதிர்காற்றில் சைக்கிள் விடும் ஆளைப்போலவே இருக்கும் ஹரி வேலைனு வந்துட்டா சிங்கமாக மாறிவிடுவார். வேக ஓட்டப்பந்தயம், வேக நீச்சல், வேக நீளம் தாண்டுதல், வேக உயரம் தாண்டுதல் என எல்லாமே `வேக வேகமாவே' இருக்கும். கிரவுண்டில் மெதுவாக நடந்து செல்லும் பசங்களை முட்டிக்குமுட்டி தட்டுவார். ஸ்கூல் பிரேயர் டைமில் தேசிய கீதம் பாடும்போது யாரேனும் பேசினால் ஒரே அப்பாக அப்பிவிடுவார். என்.சி.சி மாஸ்டராகவும் சிலகாலம் பாடமெடுத்த அனுபவமுள்ளவர். ஆனாலும் அடிக்கடி லீவு போட்டு பள்ளிக்கு அருகில் இருக்கும் மளிகைக்கடையில் பிஸியாகிவிடுவார். இதனால் மாணவர்கள் இவர் மீது தலைமை ஆசிரியரிடம் புகார் சொல்வார்கள். ஆனால், அந்தக் கடையின் ஓனரே பொட்டலம் மடித்து மடித்தே உயர்ந்த தலைமை ஆசிரியர்தான் என்பது மாணவர்களுக்குத் தெரியாது! 

கௌதம் மேனன்:

`தமிழ்ல பாடம் எடுக்குறேன்' எனச் சொல்லி, க்ளாஸ்க்கு உள்ளே வந்த கௌதம் மேனன் இங்கிலீஸ்லயே தமிழ் வகுப்புகள் எடுப்பார். `ஹேய் ஆக்சுவலி... இந்தத் திருக்குறள், இட்ஸ் எ ஃபேபுலஸ் 2 லைன் போயம் யு நோ... லவ்வ டிஃபரென்ட்டா டிஸ்க்ரைப் பண்ணுவது'னு இங்கிலீஸ்லயே தமிழ்ப் பாடம் எடுப்பார். `நான் இன்ஜினீயர் ஆகப்போறேன்'னு சொல்ற பசங்களை இவருக்கு ரொம்பப் புடிக்கும். அகநானூறு, குறுந்தொகை, தலைவன்-தலைவி, பசலை நோய் போன்ற விஷயங்களைக்கூட ஆக்ஸ்ஃபோர்டு அக்சென்ட்ல எடுத்து கிலி உண்டாக்குவார்.  `உலகத்துல எத்தனையோ வாத்தி இருக்கிறப்போ நான் ஏன் இந்த ஆள் க்ளாஸ்ல உட்கார்ந்திருக்கேன்?' என எல்லோரையும் நினைக்கவைப்பார். 


டி.ஆர்:

இவர் வேலை செய்ற ஸ்கூல்ல, டீச்சர், ஹெட்மாஸ்டர், கரஸ்பாண்டென்ட், க்ளர்க், வாட்ச்மேன், மணி அடிப்பவர் எல்லாமே இவர்தான். ஸ்கூலுக்கு லேட்டா வர்ற பசங்ககிட்ட, ``டேய்... மணி பத்து, லேட்டா வந்தா ஆகிடுவ வெத்து, நல்லா படிச்சாதான்டா கெத்து" ரைமிங்கா காட்டுக்கத்து கத்துவார். அதனால அடுத்த நாள்ல இருந்து அவங்க ஸ்கூலுக்கே வர மாட்டாங்க. ஆனாலும் விட மாட்டார். பசங்க வீட்டுக்கே போய்,  ``உறவு காத்தக் கிளியா உங்களை நினைச்சேன். ஆனா, என்னை இழவு காத்தக் கிளியா நினைச்சுட்டீங்க..!' என அழுது ஸ்கூலுக்கு வரவழைப்பார்.  ``ஓ காட் பீட்டிஃபுல்... டண்டணக்கா டணக்க நக்கா!''  என பாடிக்கொண்டே பாடம் நடத்துவார். இன்ஸ்ட்ரூமென்டே இல்லாம இசையமைப்பது எப்படினு பசங்களுக்கு சம்மர் க்ளாஸ் எடுப்பார். எந்தப் பொண்ணாவது இவரை `அண்ணா'னு கூப்பிட்டா, உடனே `தங்கச்ச்ச்ச்சி...'னு சென்டிமென்ட்ல அழ ஆரம்பிச்சுடுவார். அந்த வீக்பாயின்டை வைத்தே பொண்ணுங்க எல்லோரும் மார்க் அதிகமா வாங்கிடுவாங்க! 

பாலா:

இப்ப இவர் ஹெட்மாஸ்டரா இருக்கார். ஆனாலும் அப்பப்போ க்ளாஸ் எடுத்து டரியலாக்குவார்.  ``ஹே லூஸுப்பயலுகளா!''னு சொல்லிட்டு திடீர் இன்ஸ்ஃபெக்‌ஷன் வருவார். ஏதாவது ஒரு க்ளாஸ்க்குள்ள புகுந்து ஸ்டூடன்ட்ஸ் எல்லோரையும் கொஸ்டீன் கேட்டு பதில் சொல்லலைன்னா அடி வெளுத்தெடுப்பார். இலையே இல்லாத மொட்டைமரத்து அடியில போய் உட்காரச் சொல்லி பாடம் எடுப்பார்.  என்னதான் பாடம் நடத்தினாலும், மிமிக்ரி, மல்யுத்தம், மோனோ ஆக்ட்டிங் என ஆயக்கலைகள் அத்தனையும் கத்துக்கச் சொல்லி பசங்களை வேற லெவலில் உருவாக்குவார். ஃபர்ஸ்ட் ரேங்க் மாணவனைக்கூட நல்லா வெச்சுசெய்வார் என்பதால், இவர் வகுப்பே அமைதியாக இருக்கும்.