Published:Updated:

``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்!" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7

``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்!" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7
News
``அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்!" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7

'காதல் மன்னன்' படத்தில் நடித்த நடிகை மானு, இப்போ எண்ண பண்றார்?

"அஜித் சாரைத் தவிர 'காதல் மன்னன்' படத்துல வேலை பார்த்த மற்ற ஆர்ட்டிஸ்ட் எல்லோருக்குமே சினிமா புதுசு.  சரண் சார் மட்டும் இல்லைனா இந்தப் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். பெண்கள் மீது அவர் அளவுகடந்த மரியாதை வெச்சிருக்கார். டாக்டர் குடும்பத்துல பொறந்து வளர்ந்த நான், இப்போ முதலமைச்சர் குடும்பத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கேன்." என்று விழிகள் விரியப் பேசத் தொடங்குகிறார், 'காதல் மன்னன்' மானு. 

"இப்போ என்ன பண்றீங்க?"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``எனக்கு மூன்று வயது பெண் குழந்தை இருக்கா. 'மானு ஆர்ட்ஸ்'ங்கிற லாப நோக்கமற்ற டிரஸ்ட்டை கடந்த 20 வருடமா நடத்திட்டு வர்றேன். ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் பெற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதுதான் இந்த டிரஸ்டின் நோக்கம். இதற்காக நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு, அதன்மூலம் வர்ற பணத்தை டிரஸ்டுக்கு செலவழிக்கிறேன். நாடக நிகழ்ச்சிகளுக்கு காஸ்டியூம்ஸ் டிசைன் பண்றதையும் பகுதிநேர வேலையா செஞ்சுட்டு வர்றேன். மாற்றுத்திறனாளிகள் பெற்ற குழந்தைகளுக்கு நடனம், இசை போன்ற கலைகளைக் கத்துக்கொடுத்துட்டிருக்கேன். அவங்களுக்கான படிப்புச் செலவு, மருத்துவச் செலவு போன்றவற்றையும் எங்களால முடிந்தளவு செஞ்சுட்டு வர்றோம்.''  

``இப்படியொரு டிரஸ்ட் நடத்தலாம்ங்கிற முடிவு எப்படி வந்துச்சு?"

``எனக்கு நடனம் தவிர வேற எதுவும் தெரியாது. நடன நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு வெளிநாடுகளுக்கு டிராவல் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போதான், 'டான்ஸ் பண்றது மூலமா நிறைய பணம் கிடைக்குது. இதை வெச்சு நம்ம சமூகத்துக்கு என்ன பண்ணிட்டோம்'னு தோணுச்சு. கையில இருந்த பணத்தை வெச்சு சமூகசேவை நோக்கத்தோட தனியாளா ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சேன். இப்போவரைக்கும் என் வருமானத்தை வெச்சுத்தான் இதை நடத்திக்கிட்டு இருக்கேன். யார்கிட்டேயும் டொனேஷன் கேட்டதில்லை. காசு கொடுக்கணும்னு விருப்பப்படுறவங்ககிட்ட நடன நிகழ்ச்சிகள் நடத்தச்சொல்லிக் கேட்பேன். அதுல வர்ற பணத்தை டிரஸ்டுக்கு செலவழிப்பேன். நிறைய நண்பர்கள் இந்தமாதிரி எனக்கு உதவி பண்ணிட்டு இருக்காங்க. 

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா போன்ற பல நாடுகள்ல நடன நிகழ்ச்சி நடத்தியிருக்கேன். இலங்கை போருக்குப் பின், அங்கே டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் பண்ண முதல் குழு எங்களோடதுதான். யோகா பயிற்சியாளராகவும் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். 2011-ல நாடக நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராகவும் வேலை பார்க்க ஆரம்பிச்சேன். இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் சரண், நடிகர் நிதின் சத்யா போன்ற சினிமா பிரபலங்கள் என் டிரஸ்டுக்கு உதவி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

2011-ம் ஆண்டு மூன்று நாள் நாடக நிகழ்ச்சி ஒண்ணு நடத்திக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு சூப்பர் ஸ்டார் வந்துட்டார். இரண்டு மணிநேரம் குழந்தைகளோட நிகழ்ச்சிகளைப் பார்த்தார். அதேமாதிரி இன்னொரு நாடகத்துக்கு பாலசந்தர் சாரும், எம்.எஸ்.வி சாரும் வந்திருந்தாங்க. எனக்கு ஏதாவது உதவின்னா, இவங்கெல்லாம் முதல் ஆளா வருவாங்க."

``திருமண வாழ்க்கை எப்படிப் போகுது?" 

``கடந்த 20 வருடமா சென்னையில இருக்கேன். என் கணவர் சந்தீப் துவாரா, மியாட் மருத்துவமனையில கேன்சர் யூனிட்ல வேலை பார்க்கிறார். 2008-ம் ஆண்டு எங்களுக்குத் திருமணம் நடந்துச்சு. கடவுள் மாதிரி ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, வாழ்க்கை சொர்க்கம் மாதிரி மாறிடுச்சு. ஏன்னா, அவர் பார்க்குற வேலை அந்த மாதிரி. மருத்துவமனைக்கு வர்ற அத்தனை கேன்சர் நோயாளிகளும் டாக்டர்களை நம்பிதான் வர்றாங்க. இவருக்கும் என்னை மாதிரி சமூக சேவை உணர்வு அதிகம். இந்த மைண்ட்-செட்தான் எங்களைச் சேர்த்து வெச்சுச்சுனு நினக்கிறேன். எங்களோடது காதல் திருமணம். திருமணத்துல எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இப்போவரை நாங்க நல்ல நண்பர்கள்னுதான் சொல்வேன். 'மானு ஆர்ட்ஸ்' தொடங்கும்போது, இவர் அதுல ஒரு உறுப்பினரா சேர்ந்தார். கிட்டத்தட்ட 20 வருடப் பழக்கம்."

``காதல் மன்னன் படத்துல கமிட் ஆன தருணம் ஞாபகத்துல இருக்கா?"

``எனக்குப் பதினாறு வயசு இருக்கும்போது, சென்னைக்கு வந்தேன். 'பத்மபூஷண்' தனஞ்ஜெயனோட நடன நிகழ்ச்சியில டான்ஸ் ஆடும்போது நடிகர் விவேக் என்னை முதல்முறையா பார்த்தார். 'காதல் மன்னன்' படத்தோட ஸ்க்ரிப்ட் வேலை முடிந்து, அஜித் படத்துல கமிட் ஆகிட்டார். ஹீரோயின் மட்டும் முடிவாகலைனு என்கிட்ட சொன்னார். அப்படியே என்னை இயக்குநர் சரண்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சார். என் குடும்பம் நடிக்க ஒத்துக்கலை. கிட்டத்தட்ட ஆறு மாசம் தொடர்ந்து பேசி, என்னையும் என் குடும்பத்தையும் சரண் சார் சம்மதிக்க வெச்சார்."

``குடும்பம் பத்தி?" 

``எங்களோடது டாக்டர் குடும்பம். தாத்தா, அப்பா, சொந்தக்காரங்க பலரும் டாக்டர்ஸ். சின்ன வயசுல இருந்து, இப்போவரை என்னோட அப்பா என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்றேன். அவரோட வார்த்தைகளை மீறி எதையும் செஞ்சதில்லை. 'காதல் மன்னன்' ஷூட்டிங்கிற்குகூட, குடும்பத்தோடதான் போவேன். ஒருநாள்கூட ஷூட்டிங் ஸ்பாட்ல என்னைத் தனியா விட்டதில்லை. நடிப்பு எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா, அதை ஒரு வேலையா தொடரணும்னு ஒருபோதும் நினைச்சதில்லை. தினமும் காலையில ஷூட்டிங்குக்கு வந்தவுடனே ஒருத்தர் நமக்கு மேக்அப் போடுவாங்க. இன்னொருத்தர் ஹேர்ஸ்டைல் பண்ணிவிடுவாங்க. இன்னொருத்தர் நமக்கான காஸ்ட்யூம்களை ரெடி பண்ணுவாங்க. இப்படிப் பலபேர் நமக்காக வேலை பார்ப்பாங்க. அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு எனக்குத் தெரியலை. நம்மளைக் கடவுள் மாதிரி ட்ரீட் பண்றாங்க. அது எனக்கு ஒருவித பயத்தைக் கொடுத்துருச்சு. நமக்குப் புரியாத விஷயத்தை நாம செய்யக்கூடாதுனு நினைச்சேன். அதனாலதான் அடுத்தடுத்து நடிக்கலை. 

அஸ்ஸாம், கவுஹாத்தியில மரியாதை மிக்க குடும்பங்கள்ல எங்க குடும்பம் முக்கியமானது. எங்க குடும்பத்து ஆட்கள் நடந்து வந்தாலே, ரோட்டுல போறவங்க வர்றவங்க எல்லாரும் வணக்கம் வெச்சுட்டுப் போவாங்க. என் தாத்தா கோபிநாத் பர்டலோய்தான் அஸ்ஸாமோட முதல் முதலமைச்சர். நான் அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயோட மருமகள். என் குடும்பமும் என் கணவர் குடும்பமும் அரசியல் பின்னணி கொண்டவங்க. என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, நான் அரசியல்ல ஈடுபடணும்னு நினைக்கிறாங்க. உலகத்துல அமைதியையும் அன்பையும் பரப்பணும்னு நினைக்கிற பாபா பக்தர்கள் நாங்கள். அஸ்ஸாம்லேயே பொறந்து வளர்ந்த பொண்ணு. கல்யாணத்துக்கு அப்புறம்தான் தமிழ்நாட்டுல செட்டில் ஆனேன். உண்மையிலேயே தமிழ் கலாசாரம் ரொம்ப அழகானது. பெண்கள் புடவை கட்டுற விதம், சாப்பாடு... என எல்லா விதத்துலேயும் தமிழ்நாடு சொர்க்கம் மாதிரி இருக்கு."

``அஜித்தோட நடித்த அனுபவம்..." 

``அஜித் சார் எப்போ என்கிட்ட பேசுனாலும், 'எனக்கு உன்னைப்பத்தி நல்லாத் தெரியும் மானு. சினிமாவுல இருக்கணும்ங்கிறது உன் விருப்பமில்லை. ஆனா, இந்த ஒரு படத்தை மட்டும் முடிச்சுக் கொடுத்துட்டுப் போங்க. பாதியிலேயே போயிடாதீங்க'னு சொல்வார். 

ஷூட்டிங் முடிந்த அடுத்தநாளே அஸ்ஸாமுக்குப் போயிட்டேன். சென்னையில இருந்தா நிறைய பட வாய்ப்புகள் வரும். தொடர்ந்து 'நோ' சொல்லிகிட்டே இருக்கமுடியாது. அதனாலதான், மீடியாக்களுக்குப் பேட்டிகூட கொடுக்கலை. அப்போ நான் அதிகமா பணம் எதிர்பாக்குறேன், புகழ் எதிர்பார்க்குறேன்னு ஒவ்வொரு தயாரிப்பாளரும் ஒவ்வொருவிதமா சொல்ல ஆரம்பிச்சாங்க. போகப் போகத்தான் எனக்கு நடிக்க விருப்பமில்லைனு அவங்களுக்குப் புரிஞ்சது. அப்புறம் டான்ஸ் கத்துக்கிறதுக்காக மறுபடியும் சென்னைக்கு வந்தேன். வரலாறு இளங்கலைப் பட்டமும், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் முடிச்சேன். பரதநாட்டியம், கதக் மற்றும் மணிப்பூரி ஆகிய நடனங்களைக் கத்துக்கிட்டேன். அரங்கேற்றம் முடிந்ததும் வெளிநாடுகள்ல நடன நிகழ்ச்சிகள்ல பங்கேற்க ஆரம்பிச்சேன். 15 வருடம் கழித்து 2014-ல 'என்ன சத்தம் இந்த நேரம்' படத்துல நடிக்கச்சொல்லி கேட்டிருந்தாங்க. இயக்குநர் குரு ரமேஷோட முதல் படம். இவர் ஏற்கெனவே 'காதல் மன்னன்' படத்துல வேலை பார்த்திருக்கார்னு சொன்னார். வெறும் நான்கு நாள்கள்தான் ஷூட்டிங். இந்தப் படத்தோட அனுபவம் முதல் படத்தைவிட பெட்டரா இருந்துச்சு. ஏன்னா, என்னால இந்த தடவை சினிமானா என்னனு புரிஞ்சுக்க முடிஞ்சது. அதாவது, இப்போ சினிமா கார்ப்பரேட் நிறுவனம் மாதிரி செயல்படுதுனு தெரிஞ்சுகிட்டேன்." என்று முடித்தார், மானு.