Published:Updated:

"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்!’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்

விகடன் டீம்
"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்!’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்
"ஆமாங்க... வருத்தப்படாத வாலிபர் சங்கம் நல்ல படம்தான்!’’ - ‘விகடன் பிரஸ் மீட்’ சிவகார்த்திகேயன்

’விகடன் பிரஸ் மீட்’.... விகடன் நிருபர்களை பிரத்யேகமாக சிவகார்த்திகேயன் சந்தித்த பத்திரிகையாளர் சந்திப்பு. அந்த சந்திப்பிலிருந்து.... 

``அதிகாலை 5 மணி காட்சி, தமிழ் சினிமாவில் இருக்கிற சில ஹீரோக்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இந்தக் குறுகிய காலத்துல உங்களுக்கு அது கிடைச்சிருக்கு. அந்த காட்சிக்குக்கூட உங்க படத்தைப் பார்க்க குடும்பத்தோடு மக்கள் வர்றாங்க. எப்படி ஃபீல் பண்றீங்க?” - மா.பாண்டியராஜன்

``இது ரொம்பப் பெரிய விஷயம். அதுதான் பெரிய ப்ரஷரும்கூட. அதிகாலை 5 மணிக்கு ஷோ போடணும்னா முதல்ல அந்த ஷோ ஃபுல் ஆகுறதே பெரிய சவால். ஆனா எனக்கு அது பத்தாவது படத்துலேயே கிடைச்சிருக்கிறது ரொம்பப் பெரிய விஷயம். நீங்க சொன்னதுமாதிரி அந்த ஷோவுக்கு குடும்பத்தோட மக்கள் வருவதைப் பார்க்க முடியுது. அதுவும் ’ரெமோ’, ’வேலைக்காரன்’ வார நாள்களில் ரிலீஸானபோதும் பலர் படம் பார்த்துட்டு வாழ்த்தினாங்க. ‘இதில் தப்பான காட்சிகள் எதுவும் இருக்காது’ங்கிற நம்பிக்கையிலதான் குழந்தைகளை படம் பார்க்க அழைச்சிட்டு வர்றாங்க. அதை நான் காப்பாத்தணும்கிற பயத்தோடும் ப்ரஷரோடும்தான் அடுத்தடுத்தப் படங்களைப் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கான ஓட்டமும் திட்டமும்தான் பயங்கரமா தேவைப்படுது. அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்.” 

``காமெடிக்கு டபுள் மீனிங் அவசியம்னு நினைக்குறீங்களா?” - பிரியதர்ஷினி

``காமெடிக்கு டபுள் மீனிங் தேவையில்லை. அது இல்லாமையே நிச்சயம் சிரிக்க வைக்க முடியும். முடிஞ்சவரை அதை பண்ணிட்டும் இருக்கேன்.”

``சோஷியல் மீடியாவுல ரசிகர்கள் சண்டை போட்டுக்குறாங்க. அதைப்பத்தி என்ன நினைக்குறீங்க? உங்க ட்விட்டர் அட்மின் நீங்கதானா?” - சார்லஸ்

``என் ட்விட்டரை நான்தான் யூஸ் பண்றேன். சோஷியல் மீடியாவில் நல்ல விவாதமா இருந்தா அவங்களைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியும். ஆனா, அதுவே, சண்டையா மாறும்போதுதான் பிரச்னை. சோஷியல் மீடியாவாலதான் அவ்வளவு தகவல்கள் கிடைக்குது. இந்தமாதிரி பிரச்னைகளை தவிர்க்கிறது அவங்கவங்க கையிலதான் இருக்கு. சண்டைகளை தவிர்த்துட்டு இன்னும் நல்லவிதமா சோஷியல் மீடியாவை பயன்படுத்தலாம்.”

``உங்கக்கிட்ட உங்களுக்குப் பிடிக்காத, மாத்திக்கணும்னு நினைக்கிற குணம் எது? உங்க மனைவிகிட்ட எல்லா விஷயங்களும் ஷேர் பண்ணுவீங்களா?” -  கதிரேசன்

``குழந்தைத்தனமா சொல்லணும்னா நான் ரொம்ப நகம் கடிப்பேன். அதை மாத்திக்கணும். ரொம்ப முக்கியமா சொல்லணும்னா, நான் நிறைய யோசிச்சுகிட்டே இருப்பேன். அதை மாத்திக்கணும்” என்றதும், ``அப்படி என்ன யோசிப்பீங்க” என்று கேட்க, சிரித்துக்கொண்டே, ``உனக்கென்ன அவ்வளவு யோசிக்கிறதுக்கு இருக்கு, நீ என்ன பெரிய காரல் மார்க்ஸான்னு கேட்குறீங்களா... அப்படியில்ல... நான் ரிலாக்ஸா இருக்கும்போதுகூட ஏதாவது ஒன்னை யோசிச்சுட்டே இருப்பேன். அந்த மொமன்ட்டை என்ஜாய் பண்றதை விட்டுட்டு, ‘இது ஏன் இப்படி இருக்கு, அது ஏன் அப்படி இருக்கு’ன்னு நிறைய யோசனைகள் ஓடும். எதையுமே கொஞ்சம் தள்ளியிருந்துதான் என்ஜாய் பண்றேன்.  அதை மாத்திக்கணும்னு நினைக்கிறேன். எல்லா விஷயங்களையும் மனைவி ஆர்த்திக்கிட்ட ஷேர் பண்ணிருவேன். ஆனா ப்ரஷர் கொடுக்கிற சில விஷயங்களை மட்டும் சொல்ல மாட்டேன். ஏன்னா பிறகு அவங்களும் நிறைய யோசிக்க ஆரம்பிச்சுருவாங்க.” 

`` `ரெமோ’ படத்துக்கு முன் லேடி கெட்அப் போட்டிருக்கீங்களா? அந்த கெட்டப் போட்டுருந்தா அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க?” - வெ.வித்யா காயத்ரி

``முதல்ல நான் லேடி கெட்அப் போட்டது ஸ்கூல் படிக்கும்போது. ‘பேண்டோரா பாக்ஸ்’னு ஒரு கதை இருக்கு. அந்த பாக்ஸை திறந்தனாலதான் உலகத்துல கஷ்டமே வந்துச்சுன்னு ஒரு கான்செப்ட். அந்த பேண்டோராவா நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கலை. அவங்க தோழியா நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது. கணக்கு டீச்சர்தான் இதைப் பண்ணச் சொன்னாங்க, அவங்க அழகா இருப்பாங்க. அதனால அவங்க கேட்ட உடனே ஓகே சொல்லிட்டேன். இதுல என்ன ஹைலைட்னா, அந்த கெட்அப்ல நான் எப்படி இருந்தேன்னு பார்க்கவே இல்லை, கண்ணாடியைக்கூட பார்க்கல. போட்டோவில்தான் பார்த்தேன். அதைப்பார்த்ததுமே உடனே கிழிச்சுப்போட்டேன். அப்புறம் ஒரு நாடகத்துல புடவை கட்டிட்டு நிக்கணும்னு சொன்னாங்க. ‘போங்கடா...’னு சொல்லி ஓடிப்போயிட்டேன். பிறகு விஜய் டி.வியில பண்ணிணேன். லேடி கெட்அப்தான் க்ளாப்ஸ் வாங்குறதுக்கு ஈஸியா இருக்கும். அந்த கெட்டப்ல குட்டிக்குட்டியா பண்ணினாக்கூட போதும், ரீச் பெருசா இருக்கும்.”

``உங்க அப்பா தாஸ் பத்தி போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ரொம்ப சின்சியர்னு சொல்வாங்க... உங்களுக்கு அவர் வேலை பத்தி எவ்வளவு தெரியும்!” 

``அப்பாவுக்கு எல்லாமே கரெக்ட்டா இருக்கணும். ஜெயில் கைதிகளும் மனிதர்கள்தான். அதனால ஜெயில் ரொம்ப சுத்தமா இருக்கணும். அப்பா வேலைபார்த்த எல்லா ஜெயிலையும் பார்த்திருக்கேன், ஒரு குப்பைகூட இருக்காது. அவ்ளோ சுத்தமா இருக்கும். அதுக்காக விருதுகள்கூட வாங்கியிருக்கார். அதேமாதிரி கண்டிப்பா இருக்கணும்னு நினைப்பார். நாங்க எந்தளவு அப்பாவை மிஸ் பண்றோமோ, போலீஸ் டிபார்ட்மென்ட்டும் அந்தளவு அப்பாவை மிஸ் பண்ணும். அப்பாவை அவங்களால சரியா பார்த்துக்க முடியலை. அப்பா போனதுக்கு அப்புறம்தான் அவரைப் பற்றி நிறையத் தெரிஞ்சுகிட்டேன். அப்பாவைப்பற்றி நக்கீரன் கோபால் அண்ணன், தம்பி ராமையா அண்ணன்லாம் நிறைய சொல்லுவாங்க. அப்பாவைப் பற்றி மற்றவங்க சொல்லக் கேட்கும்போதெல்லாம் ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கும்!”

``அப்பா நேர்மையான மனிதராத வாழ்ந்திருக்கார். ஆனா இந்த சிஸ்டம் அதற்கு ஒத்துழைக்கலைனு நினைக்கிறீங்களா?”

``அப்பா வொர்க் ப்ரஷர்லதான் இறந்திருக்கார்னு ரொம்ப வருஷம் கழிச்சுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னுதான் நினைச்சேன். நேர்மையா இருக்கணும்னு நினைச்சு அவர் செய்த வேலையைக் கெடுக்க அங்க நிறைய விஷயங்கள் நடந்திருக்குனு 10 வருஷம் கழிச்சுதான் எனக்கு தெரிஞ்சது. வீட்ல இருக்கும்போது அவரை நாங்க பார்த்துக்க முடியும். ஆனால், வேலையை ரசிச்சுப் பார்க்கிற அந்த மனுஷனை கவனிக்க வேலை பார்க்கிற இடத்துல யாரும் இல்லையேனு நினைச்சா வருத்தமா இருக்கு. ஏதாவது பண்ணி, அப்பாவைக் காப்பாத்திருக்கலாம்னு இப்பத் தோணுது. அன்னைக்கு எனக்கு 20 வயசு இருந்திருந்தா, அப்பாட்ட ஏதாவது ஷேர் பண்ணி, டிஸ்கஸ் பண்ணி அவரோட ஸ்ட்ரெஸ்ஸை குறைச்சிருக்கலாம்னு தோணுது. அப்பாவுக்கு நடந்த மாதிரி இங்க நிறைய பேருக்கு நடந்திருக்கு. சிஸ்டத்தை குறைதான் சொல்லணும். அதுக்கு நம்ம மாறுனாதான் எல்லாமே மாறும். நான் அதை நோக்கித்தான் போயிட்டு இருக்கேன். நாம கரெக்ட்டா இருப்போம், யாரையும் குறைசொல்லி ஒண்ணும் ஆகப்போறது இல்லைனு நல்லா தெரிஞ்சுருச்சு!”

``ரஜினி, கமல் ரெண்டு பேரும் இப்ப அரசியலுக்கு வந்துட்டாங்க. அதனால சினிமாவுல ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீங்க நிரப்புவீங்களா?” - கதிரேசன்

``அய்யயோ... அவங்க ‘எந்திரன்-2’, ‘இந்தியன்-2’னு இன்னும் சினிமா பண்ணிட்டுதான் இருக்காங்க. அதுக்கு அப்புறம் அஜித் சார், விஜய் சார்னு ரெண்டு மிகப்பெரிய நடிகர்கள் இருக்காங்க. இந்த வரிசையில நானும் எங்கயோ இருக்கேன்னு சந்தோஷமா இருக்கு. அவ்வளவுதான்.”

``உங்களுக்கான ரசிகர் மன்றத்தை எதிர்காலத்துல எப்படி பயன்படுத்தலாம்னு இருக்கீங்க?” - கே.ஜி.மணிகண்டன்

``ரசிகர் மன்றம்தான் ஒவ்வொரு நடிகர்களுக்குமே மிகப்பெரிய பலம். அதன்மூலம்தான் ரீச்சை உணர முடியும். என் ரசிகர் மன்றத்துல நடக்குற நிகழ்வுகள் எல்லாம் திட்டமிடல்களோட ஆர்கனைஸுடா இருக்கு. இது மியூச்சுவலா இருக்கணும் என்பதுதான் என் பாயின்ட். நான் நல்ல படங்கள் பண்றதுதான் அவங்களுக்குப் பெரிய சந்தோஷம். இதைத்தாண்டி பெர்சனாலிட்டியா என்கிட்ட நல்ல குணங்கள் இருக்கணும். பேனர் கட்டுறது, கொடி கட்டுறதுன்னு இல்லாம ஒரு நபர் அவருடைய பெர்சனல் வாழ்க்கையில எந்தளவு அதைப் பயன்படுத்த முடியுமோ, பயன்படுத்தலாம். மன்றத்துல இருக்கிற நபர்கள்லாம் சேர்ந்து ஏதாவது நல்லது பண்ணலாம். அதை அவங்க பண்ணிட்டும் இருக்காங்க. 

அதைக் கேள்விப்பட்டு, `இதுல இருந்து கிடைக்கிற பெயர் எனக்கு வரட்டும், பண்ற புண்ணியம் எல்லாம் உங்களுக்கும், உங்க ஃபேமிலுக்கும் போகட்டும்'னு சொன்னேன். இதை நான் எப்படி பயன்படுத்தலாம்னு தெரியல. என் படங்களைப் பார்த்துட்டு, ‘இது நல்லா இருக்கு, இதை மாத்திக்கலாம்’னு அவங்களே சொல்லுவாங்க. நான் அடுத்த லெவலுக்குப் போகணும்னு அவங்க நினைக்கிறாங்க, நானும் அவங்களை நினைச்சுப் பார்க்கணும். அவங்க எப்போ, `நான் சிவா அண்ணா ரசிகர் மன்றத்துல இருக்கேன்'னு தன்னோட வீட்ல சொல்லி அவங்க சந்தோஷப்படுறாங்களோ, அப்போதான் நான் சந்தோஷமா இருப்பேன். நான் கேட்காமலே எல்லாத்தையும் அவங்க கொடுத்துட்டுதான் இருக்காங்க. அதுனாலதான் எனக்கு 5 மணி ஷோவே போடுறாங்க.”

``இப்போ இருக்குற தமிழ்நாட்டு அரசியல்பற்றி என்ன நினைக்குறீங்க?” - ம.கா.செந்தில்குமார்

``உங்களுக்கு என்ன கருத்து இருக்கோ, அதேதான் எனக்கும். பெரிய தலைவர்கள் சம்பந்தப்பட்ட மாற்றங்கள் நிகழும்போது எல்லா முறையுமே அது எப்பவுமே இருந்துட்டுதான் இருக்கு. மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கப்போறாங்கனு எனக்கும் ஆர்வமாதான் இருக்கு. அதுக்கான பொறுப்பு ஒவ்வொருத்தர்கிட்டயும் இருக்கு. ‘நம் தொகுதி இது. இங்க யாரெல்லாம் வேட்பாளரா நிக்கிறாங்க, யாருக்கு ஓட்டுப் போடலாம்’னு ஓட்டு போடுறதுக்கு முதல்நாள் உட்கார்ந்து யோசிப்பேன். தப்பான ஆளை தேர்வு செஞ்சு அதுல தவறுகள் நடந்தால் அதுக்கு நானும்தான் பொறுப்புங்கிற பயமும் எனக்கு இருக்கு. அதனாலே நான் யாருக்கு ஓட்டுபோடப் போறேன்னு யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்.” 

``உங்களைக் கவர்ந்த அரசியல் தலைவர் யார்?” - சனா

``கட்சி வெச்சுருக்கணும்னு அவசியம் இல்லேன்னா, அப்துல் கலாம் ஐயாவை சொல்லுவேன்.” 

``அப்போ கட்சி வெச்சுருக்கிற அரசியல்வாதின்னா யாரைச் சொல்லுவீங்க?”

``அய்யோ அடுத்த கேள்வியை நானே எடுத்துக்கொடுத்துட்டேனே... அப்படினு பார்த்தா எனக்கு நிறைய தலைவர்களைப் பிடிக்கும். எல்லா கட்சிகள்லயும் நல்லக்கண்ணு ஐயாவை பத்தி நிறைய பேர் நல்லவிதமா சொல்றாங்க. நாம பெருமைப்பட்டுக்க வேண்டிய தலைவர், நல்லக்கண்ணு ஐயா.”

``ஒரு பிரபலமா பொதுநலன் சார்ந்த விஷயங்கள்ல கூட நீங்க வெளிப்படையா கருத்து சொல்லாம இருக்கிறது ஏன்?’’ 

``நான் கருத்து சொல்லி அதனால மாற்றம் வந்துரும்னா, சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனா, எதார்த்தம் அப்படியா இருக்கு!? கருத்து சொல்றதைத் தாண்டி, அதுக்காக என்ன பண்ணனும் கேட்டா என்ன சொல்றதுனு தெரியல. ஒரு தவற்றைப் பார்க்கையில் எல்லாருக்குமே கோபம், வருத்தம், அழுகையெல்லாம் வரும். எல்லாரும் எப்படி பல்லைக் கடிச்சிட்டு கடக்குறாங்களோ அப்படித்தான் நானும் கடக்குறேன். நான் எதுவும் தவறு பண்ணக்கூடாது, என்னைச் சுத்தி இருக்குறவங்களும் பண்ணாமப் பார்த்துக்கணும்னு நினைப்பேன்!” 

`` `வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உங்க கரியர்லயே முக்கியமான படம். ஒரு விமர்சனமா சொல்லுங்க, அது நல்ல படமா?” - ப்ரியதர்ஷினி

``ரொம்ப நல்ல படம். நல்ல படம்ன்னா புதுசா ஒரு விஷயத்தை சொல்லணும்ங்கிறது இல்லை. எல்லாருக்குமே பிடிக்குதாங்கிறதுதான் முக்கியம். அந்தப் படம் மாதிரி இன்னொரு படம் பண்ணும்ங்கிறதே கஷ்டம். பொன்ராம் சார் தனியா ட்ரை பண்ணாலும் சரி, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ட்ரை பண்ணாலும் சரி, மறுபடியும் அது மாதிரி ஒரு படத்தைக் கொடுக்கிறது ரொம்ப சிரமம். ஏன்னா அதுக்குள்ள அவ்வளவு லைஃப் இருக்கு. அந்தப் படம் வந்தப்ப தியேட்டருக்கு நாங்க போகும்போது, ‘வில்லேஜை நாங்க ரொம்ப டார்க்கா பார்த்துட்டோம். ஆனா, இந்தப் படத்துல எங்க வாழ்க்கை நிறைய இருக்கு. உதாரணத்துக்கு கிராமங்கள்ல ஆடல் பாடல்ங்கிற நிகழ்ச்சியெல்லாம் ரொம்ப ஃபேமஸ்...’ இவைதான் அதிகமா வந்த கமென்ட்ஸ்.  ஒருவேளை அது நல்ல படமா இல்லைனா 36 கோடி வசூல் செஞ்சிருக்காது. ஆனா, படத்தோட பட்ஜெட், மொத்தமே ஆறு கோடிதான். அப்ப நான் பெரிய ஹீரோவும் கிடையாது. ஆடியன்ஸுக்கு அதுல ஏதோ ஒண்ணு பிடிச்சுருந்தா, அவங்க லைஃபோட எங்கயோ கனெக்ட் ஆகியிருக்குனு அர்த்தம். அந்த மாதிரியான படம், அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறைதான் வரும்!” 

சந்திப்பின் இறுதியில் விடைபெறும் போது...

``மொத்த விகடன் டீமுக்கும் நன்றி. வருஷத்துக்கு ஒண்ணு, ரெண்டு படம்தான் பண்றேன். படம் டைம்ல இன்டர்வியூனு பார்த்தாலே உங்களை எல்லாரையும் பார்க்க 10 வருஷம் ஆகியிருக்கும். இந்த பிரஸ் மீட் ரொம்ப நல்ல கான்செப்ட்டா இருக்கு. எல்லா கேள்விக்கும் பதில் சொல்கிறவன்தான் தைரியமானவன் இல்ல, எல்லாக் கேள்வியையும் எதிர்கொள்கிறவன்தான் தைரியமானவன். எனக்குள்ள இருக்கிற தைரியத்தை டெஸ்ட் பண்றதுக்கான இடமா இது இருந்தது.

இதுல ஒவ்வொருத்தவங்களோட கேள்வியிலும் அவங்களோட ஒப்பினியன்ஸ், வியூஸை பார்த்தேன். ‘இதை மாத்திக்கலாம், இல்ல நாம சரியாதான் போறோம்’னு தெரிஞ்சுக்க இது நல்ல ப்ளாட்ஃபார்மா இருக்கு. எல்லாருக்கும் ரொம்ப நன்றி. நீங்க பார்த்துட்டு இருக்கிற வேலை ரொம்ப சவாலானது. நிறைய பேர் உங்க வொர்க்கை பார்த்துட்டு இருக்காங்க, அதுல நானும் ஒருத்தன். ரொம்ப வருஷ நட்பு இது. விகடன்கிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு, ஆல் தி பெஸ்ட்!”