Election bannerElection banner
Published:Updated:

மலையாள சினிமாவை எழ வைத்த ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலஜி... ’ஐந்து சுந்தரிகள்’..! - பகுதி 7

மலையாள சினிமாவை எழ வைத்த ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலஜி... ’ஐந்து  சுந்தரிகள்’..! - பகுதி 7
மலையாள சினிமாவை எழ வைத்த ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலஜி... ’ஐந்து சுந்தரிகள்’..! - பகுதி 7

மலையாள சினிமாவை எழ வைத்த ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலஜி... ’ஐந்து சுந்தரிகள்’..! - பகுதி 7

மலையாளப் படங்களை பற்றின அறிமுகத்துடன் ஆரம்பித்த மலையாள கிளாசிக் தொடரின் முதல் கட்டுரையில் ஒரு வீழ்ச்சியில் இருந்து தான் தற்போதைய மலையாள சினிமா எழுந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி அது எழுவதற்கு காரணமாயிருந்த பலரில் ஐந்து இயக்குநர்கள் ஐந்து குறும்படங்களை செய்தார்கள். ஐந்து சுந்தரிமார்களைப் பற்றியதாய் இருந்தது அது. நாம் காணக்கூடிய எல்லா சுந்தரிகளையும் அது பிரதிபலிக்க முயன்றதா என்றால் இல்லை. அதே நேரம் ஐந்து பெண் மனங்களை மிக நெருக்கத்தில் பின்தொடர்ந்து சொன்ன கதைகள் எல்லோருக்கும் சென்று சேர்வதாக இருந்தன. ஐந்து திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பெரிய ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருக்கின்றனர். ஒவ்வொரு கதையும் தனக்கான வர்ணத்தை ஒளியை சத்தத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு முழுமை பெற்றிருக்கிறது என்பதை இம்முறை பார்த்தபோதும் அதன் தளர்ந்து போகாத வீரியத்தின் மூலம் அறிய முடிந்தது.

முதலாவது பெண் சேதுலட்சுமி. பள்ளி செல்கிற சிறுமி. குழந்தைகளின் சுதந்திரமும் அவைகளின் சந்தோஷங்களும் அவ்வளவு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவளது வீடும், பள்ளியும், பள்ளிக்குச் செல்லும் வழிகளும், அவளுடைய வகுப்புத் தோழனுமாய் இருக்கிற நாள்கள் நம்மை நெகிழச் செய்யும். ஆனால், அவர்கள் இருவரும் தங்களை புடைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு புறப்படும்போது அதில் ஒரு பொறி இருக்கப்போவது நமக்குத் தெரியும். புதரிலிருந்து இறங்கும் பாம்புபோல அவன் வெளிப்படுகிறான். அவள் குழந்தை, சிறு குழந்தை, ஆனாலும் என்ன, அவளைக்கூட ஒழுக்கத்தின் பெயரால் ஒடுக்க முடியும். ஏனெனில் பெண்ணைப் பற்றின விநோதக் கருத்துகள் கொண்ட நோய் சமூகத்தின் எதிர் விளைவுகளுக்கு பெண்கள் அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. உனது ஆடையற்ற புகைப்படத்தைக் கொண்டு வந்து உனது ஸ்கூலின் சுவரில் ஓட்டலாமா என்று கேட்கிறான். பையனைத் துரத்திவிட்டு சேதுலட்சுமியை வண்டியில் இருத்திக்கொண்டு அவன் காட்டுக்குள் மறையும்போது படம் முடிகிறது. அந்த சிறுவனைப் போல கையாலாகாமல் நாமும் நிற்கிறோம்.

எம் முகுந்தன் எழுதிய சிறுகதை இது.

நிவின் பாலி சாண்டோ கிழவன் வேடத்தில் டிசம்பர் 31 அன்று ஒரு வீட்டுக்குள் திருடுவதற்காக இறங்குவதுதான் கதை. அங்கே தனியாய் இருக்கிற பெண்ணைக் கட்டிப்போடுகிறான். திருடுகிறான். சொல்லப் போனால் அவளே விலையுயர்ந்த பொருள்கள் எங்கே இருக்கின்றன என்பதை சொல்லுகிறாள். ஒரு இணக்கம் உருவாகிறது. புது வருடத்தைக் கொண்டாடுகிறார்கள். காதலே உருவாகிறதோ? இல்லை, அவள் அவனைக் கட்டிப் போடுகிறாள். இவன் திருடியதை பிடுங்கிக்கொண்டு விலை மதிப்பு மிக்க பெயின்டிங்கை எடுத்துக்கொண்டு புறப்படுகிறாள். அவள் அந்த வீட்டின் பெண்ணல்ல. திருடிய பொருள்களை விற்று காசாக்கி இரண்டாம் சுந்தரியான இஷா திரும்பும்போது நிவின் அவளுக்கு எதிரே. ஆட்கள் வந்து கதவைத் தட்டும்போது அவன் தனது கயிறுகளை அறுத்துக்கொள்ள அவள்தான் அந்தக் கத்தியை வீசி விட்டுப் போனாள். தனது சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டு நிவின் பைக்கை எடுக்கும்போது அவளும் ஏறி அமர்ந்து கொள்ளுவதுடன் படம் நிறைவடைகிறது.

கெளரி காதலித்து திருமணம் செய்துகொண்டவள். வீட்டாருக்கு பயந்து தனது கணவனுடன் ஆளற்ற பிரதேசத்தில் தனி வீட்டில் வாழ்கிறாள். கல்யாணமாகி மூன்று வருடங்களான அந்தத் தம்பதிக்கு இன்று திருமண நாள். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அவன், அந்தக் கணவன் மலையின் மீதிருந்து விழுந்து இறந்தது விபத்தா, தற்கொலையா என்று தெரியாது. ஆனால், இறந்த பின்னும் கார் சப்தம் கேட்டால் சன்னல் திறந்து பார்த்து ஆவியாக காத்திருக்கிறாள் அவள். மூன்றாம் கதையான இதற்கு ஒளிப்பதிவு செய்தவர் ராஜீவ் ரவி என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

உண்மையிலேயே இந்தத் தொகுப்பில் வேறு ஒரு வடிவம் கொண்டது நான்காவது கதை. சமூகம் என்பது நான்கு பேரானால் அந்த நான்கு பேர்களுக்கும் பெயர்களை வைத்துவிட்டு, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு வைக்காமல் விடுகிறார்கள். உண்ணி. ஆர் படத்தின் திரைக்கதை வசனங்களை எழுதியிருந்தார்.  Rare window  வில் அடிபட்டவன் உட்கார்ந்து உலகை பார்க்கிறதை அடிப்படையாய் எடுத்துக் கொண்டு துல்கர் பார்ப்பதுதான் நம்மை சேர்கிற கதை. குள்ளனும் மனைவியும் என்பது டைட்டில். ஆமாம், நான்காம் சுந்தரி எல்லோராலும் குள்ளனின் மனைவி என்றே அழைக்கப்படுகிறாள். அவள் உயரமாகவும் அவன் குள்ளமாகவும் இருப்பதில் அவர்களுக்கல்ல பிரச்னை. அந்த விசித்திரத் தம்பதி தங்களுக்குள் அன்பாக இருந்து கொள்வது எல்லோருக்கும் பெரிய புதிர். இருவரையும் கண்காணித்தவாறு, கிசுகிசுத்தவாறு இருக்கிறது உலகம். வலுவான ஆண் அவளுக்கு தேவைப்படுமா என்று பேசும்போது அவள் கர்ப்பவதியாவது கோபத்தை உண்டாக்குமல்லவா. ஒழுக்கம் பேசி அவர்கள் இருவரையும் குடியிருப்பை விட்டு காலி செய்யச் சொல்லும் அளவுக்குப் போகிறார்கள். ஒருநாள் பிரசவத்துக்குக் கிளம்பிப் போன குள்ளனும் மனைவியும் எங்கே என்பதைக்கூட யாரும் மறந்திருக்கும்போது குள்ளன் கைக்குழந்தையுடன் இறங்குகிறான், மனைவியின் சடலமும் வந்திருக்கிறது.

நாள்களுக்கு அப்புறம், எப்போதும் தனது மனைவிக்குக் குடை பிடித்துச் செல்லும் குள்ளன் இப்போது அந்த சிசுவை குடையில் கொண்டு செல்லுகிறான்.

கொட்டுகிற மழை. சிசுவுடன் செல்லும் குள்ளனுக்குப் பக்கத்தில் குடைக்குக் கீழே நிரப்ப முடியாத வெறுமை ஒன்றிருக்கிறது.

இப்போதும்கூட மக்களுக்கு பேசித் திரிய வேறு ஏதேனும் இருக்கும்.

யோக்கியர்களும், கண்ணியமானவர்களுமான அவர்களுக்கு யாராவது கிடைக்காமல் போகப் போவதில்லை.

இறுதியாய் ஆமி.

மிகவும் கம்பீரமான கணவனாக பஹத். வியாபாரி. காசு வியாபாரம் இவற்றில் எல்லாம் பெரும் நெருக்கடிகள் இருக்கின்றன. நகரத்துக்கு இரவுப் பயணம் போகிறான். சுந்தரியான அவனது மனைவி ஆமி போனில் பேச்சு கொடுக்கிறாள். பயணம் தானே, யோசித்துப் பதில் சொல்ல சொல்லி ஒரு விடுகதை சொல்கிறாள். தூங்கவில்லையா நீ என்று கணவன் கேட்கிறான். நீங்கள் தூங்காமலிருக்க எனக்குப் பதிலை யோசித்தாவாறிருங்கள் என்கிறாள் அவள். முதல் விடுகதை ஒரு கட்டத்திலும், இரண்டாம் விடுகதை வேறு ஒரு கட்டத்திலும் புரிகிறது. பழக்கமிருந்த ஒரு பெண்ணை எடுத்துக்கொள்ள அமைகிற சந்தர்ப்பத்தை உதறி வருவது உட்பட அவளது குரல் அவனை வழி நடத்திக் காப்பாற்றியவாறு இருக்கிறது. எனினும் வியாபார நஷ்டத்தினால் பொறுமை இழந்து அவளை கடிந்து மரியாதையாய் தூங்குகிற வழியைப் பார் என்று விடுகிறான். பொழுது விடிந்து வீட்டையடைந்ததும் அவள் இரவெல்லாம் தூங்காதிருந்ததை அறிகிறான். அவன் கூட தூங்கப் போகும்போது தூங்கி வழிந்தவாறே இனிமேல் இந்த இரவு வியாபாரம் வேண்டாம் என்கிறாள் ஆமி. ஆமாம், அவனுக்குள் அது ஏற்கெனவே முடிவாகித்தான் இருந்திருக்கும்.

இரவுகள் எத்தனை கவர்ச்சி மிக்கவை என்பதை ஒவ்வொரு பிரேமிலும் வந்திருக்கிறது.

இந்தக் கதையில் ஆமியின் குரல் மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சேதுலட்சுமி துவங்கி ஆமி வரை ஐந்தே பெண்கள். ஒரு சினிமாவில் முடிந்த வரை பார்த்திருக்கிறார்கள். ஐந்து க்ளோஸ் அப்ஸ். கொஞ்சம் உண்மைகள், அவ்வளவுதான். கொதிக்கிற இந்தப் பெண்ணியக் காலத்தில் பல கேள்விகள் எழக் கூடும். அவைகளைப் பற்றிய பிரச்னைகளை வேறு ஒரு நேரத்தில் பேசலாம். இம்மட்டிலும் கவனம் கொண்ட ஒரு நிகழ்வு நிகழ்ந்தேறி, அது முடிந்த அளவு சென்று சேர்ந்ததற்கு ஓரளவு காலம் உதவியது. மற்றும் படம் கொண்டிருந்த நல்ல நோக்கத்தை சந்தேகம் கொள்ள ஏதுமில்லை. மேலும், இந்த மாதிரிப் படங்கள் அடுத்து வரிசையாய் வந்தவாறில்லாத போதும் வந்து கொண்டிருக்கிற படங்களில் பெண்களின் கனம் கூடியது உறுதி. உலகம் முழுவதுமே வருகிற மாற்றத்தில் இந்தப் படமும் பங்கு கொண்டது என்று சொல்லலாம்.

இயக்குநர்கள் மட்டுமின்றி, இப்படத்தில் பங்குபெற்ற அத்தனை தொழிநுட்பக் கலைஞர்களுமே தங்களுடைய இலக்கைத் தொட்டிருந்தார்கள். சேதுலட்சுமியில் ஒரு கிராமம், இஷாவில் ஒரு வீடு, கௌரியில் ஒரு மலைப் பிரதேசம், குள்ளனின் மனைவியில் ஒரு குடியிருப்பு, ஆமியில் ஒரு இரவு. எதுவுமே மறக்க முடியாதவை. நடித்தவர்களைப் பற்றியும் தனியாய் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எல்லாமே கதாபாத்திரங்கள்தான். சுந்தரிகளாக வந்தவர்கள் மனம் நிறைந்தார்கள். அவர்களுடைய பாத்திரங்கள் அவர்களை சுந்தரிகளாக்கின என்பதை தனியாய் சொல்லலாம். சேதுலட்சுமியில் சேதுவாய் நடித்த குழந்தை, அவளது நண்பனாய் செய்த அந்த சோட்டா பையனில் இருந்து ஆரம்பித்து துல்கர், பகத் வரை சிறு நெருடலும் இல்லை. ஒரு படத்துக்கு முகங்களைத் தேர்வு செய்வது என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதில் கற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குள்ளனாய் நடித்த அந்த மனிதரும், அவரது மனைவியும் அந்தக் கதைக்கு எவ்வளவு பொருத்தம்.

படம் முடியும்போது புன்னகைக்க முடிகிறது.

துவங்கும்போது இருந்த அதிர்ச்சியை மெல்ல வடிகட்டியவாறு வந்து மெல்ல மக்களை சந்தோஷப்படுத்தியது ஒருவிதமான வியாபார யுக்தியாக இருந்திருக்கக் கூடும். ஆர்டரில் சேதுலட்சுமி கடைசியில் இருந்திருந்தால் வலிமையாய் பொலிந்திருக்கும் என்கிற நினைப்பு வருவதை தள்ளி நிறுத்த ஆகவில்லை. குழந்தைகள் கிழிக்கப்படுகிற இந்த கொடிய காலத்தில் சேதுவை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டியது ஒருவிதமான தொந்தரவாய் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டும் என்று படுகிறது.

இந்தப் படத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றின குறிப்பை இணையத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்கிறேன். இதைத் தவிர்த்து மற்றேதும் வெளிச்சரக்கு இல்லை என்பது உத்திரவாதம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு