வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (26/04/2018)

கடைசி தொடர்பு:12:32 (26/04/2018)

" 'சுந்தரபாண்டியன் 2' தயாரிக்கிறேன்; விஜய்சேதுபதி கேரக்டர்ல நடிக்கிறேன்!" - இந்தர்குமார்

'குற்றம் 23', 'தடம்' படங்களைத் தொடர்ந்து, 'சுந்தரபாண்டியன் 2' படத்தைத் தயாரித்துவரும் இந்தர்குமார், முதல் பாகத்தில் விஜய்சேதுபதி நடித்த கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். படம் குறித்து அவர் பேசிய தகவல்கள்.

``தமிழ் சினிமாவுல இப்போ நடந்துக்கிட்டு இருக்கிற எல்லா விஷயமும் ரொம்ப சரியானது. படம் எடுக்குற தயாரிப்பாளருக்கு லாபம்னு எதுவுமே கிடைக்கிறதில்ல. இதைச் சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. குறிப்பா, இந்தப் பிரச்னை தமிழ் சினிமாவுல மட்டும்தான் இருக்கு. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொல்றது மாதிரி, ஒரு படம் தயாரிக்கிற செலவுல பாதி ஹீரோக்களோட சம்பளமாதான் இருக்கு. சிலநேரங்களில் அவங்களுக்குக் கொடுக்குற சம்பளத் தொகைகூட படத்தோட தயாரிப்பாளருக்குத் திரும்பக் கிடைக்காது. ஆந்திரா, கேரள சினிமாக்கள்ல இது கிடையாது" விடாது பேசிக்கொண்டே தொடர்கிறார், இந்தர்குமார். ``சினிமா பிரச்னையை விடுங்க... கொஞ்சம் ஃப்ரீயா பேசலாமா?" என்றால், சிரித்துக் கொண்டே தொடர்கிறார், தயாரிப்பாளரும் நடிகருமான இந்தர்குமார். 

இந்தர்குமார்

 

``நான் அடிப்படையில் ஒரு தயாரிப்பாளர். அருண் விஜய் நடிச்ச 'குற்றம் 23' படத்தைத் தயாரிச்சேன். இப்போ மகிழ் திருமேனி இயக்கத்துல 'தடம்' படத்தைத் தயாரிச்சுக்கிட்டு இருக்கேன். அடுத்து சசிகுமார்கூட 'சுந்தரபாண்டியன் 2' படத்தைத் தயாரிக்கிறதோட, அதுல ஒரு கேரக்டர்ல நடிக்கிறேன். என் முழு அடையாளம், தயாரிப்பாளர்தான். நடிக்கிறது எதார்த்தமா அமைஞ்சது. 'குற்றம் 23' படத்தோட ஒரு நிகழ்ச்சியை டி.வியில பார்த்துட்டு, சசிகுமார் 'கொடிவீரன்' படத்துக்கு வில்லனா நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு டைரக்டர் முத்தையாவிடம் சொல்லியிருக்கார். அப்படி நடந்ததுதான், நான் நடிகரானது. பொதுவாக சினிமாவுக்கு வர்ற எல்லோருக்குமே ஒரு கனவு இருக்கும்ல... எனக்கு தயாரிப்பாளர் ஆகுறதுதான் முதல் கனவு."

தடம் இந்தர்குமார்

`` `குற்றம் 23', 'தடம்'னு வரிசையா அருண் விஜய் ஹீரோவா நடிக்கிற படங்களையே தயாரிக்க என்ன காரணம்?" 

``அந்தமாதிரி ஸ்பெஷல் காரணமெல்லாம் ஏதும் இல்ல. 'குற்றம் 23' கதையைக் கேட்டேன் ரொம்பப் பிடிச்சிருந்தது. `தடம்' படத்தையும் அப்படித்தான் தயாரிக்க முடிவு செஞ்சேன். இன்னைக்கு தமிழ் சினிமா ரசிகர்கள், ஒரு படத்துல நல்ல கதையைத்தான் எதிர்பார்க்கிறாங்க. அந்த வகையில `தடம்' எல்லோரையும் திருப்திபடுத்தும்னு நம்புறேன். இப்போ கவனம் ஃபுல்லா 'சுந்தரபாண்டியன் 2' படத்துலதான் இருக்கு. `கொடிவீரன்' சமயத்துலேயே நானும் சசிகுமாரும் சேர்ந்து ஒரு படம் பண்ணி கதை கேட்டுக்கிட்டு இருந்தோம். அப்போதான், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இந்தக் கதையைச் சொன்னார். எல்லாருக்கும் பிடிச்சிருந்தது, தயாரிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்!"   

இந்தர்குமார்

``சசிகுமார் தயாரிச்ச 'கொடிவீரன்' படத்துல நடிச்சீங்க; அப்போ அசோக்குமாரோட பழகிருப்பீங்களே?"   

``ஆமா, அசோக்குமார்தான் கம்பெனி ப்ரொடக்‌ஷனுக்கு எல்லாமே! அவர் சசிகுமாருக்கு உறவினர் மட்டுமல்ல, நல்ல நண்பர். அவரோட மரணம், சசிகுமாருக்குப் பெரும் இழப்பு. இன்னைக்கு வரைக்கும் அவர் இந்த சம்பவத்துல இருந்து மீண்டு வரலை. இன்னும் கொஞ்ச காலமாகும்; கஷ்டம்தான்."

`` `சுந்தரபாண்டியன்' படத்துல இருந்த நடிகர்கள் அப்படியே இதுலேயும் தொடருவாங்களா, மாற்றம் இருக்குமா?" 

``விஜய்சேதுபதி இருப்பாரானு கேட்க வர்றீங்க. இந்தப் படத்துல நிறைய சர்பிரைஸ் இருக்கு. முதல் பாகத்துல விஜய்சேதுபதி நடிச்ச கேரக்டர்ல, இந்தப் படத்துல நான் நடிக்கிறேன். நான் தஞ்சாவூர்காரன். பெங்களுர் சிட்டில வளர்ந்த எனக்கு, 'கொடிவீரன்' கிராமத்து வாழ்க்கையைக் கத்துக்கொடுத்துச்சு. இந்தப் படமும் கண்டிப்பா எனக்கு நல்ல அனுபவமா இருக்கும். 'சுந்தரபாண்டிய'னைவிட, இந்தப் படம் டபுள் ட்ரீட். அந்தப் படம் சிங்கிள்னா, இது சிக்ஸர்!" என்கிறார், இந்தர்குமார்.