Published:Updated:

'போலீஸார் தடையை மீறி வாகனப் பேரணி!’ கடலூரில் கொதித்த இயக்குநர் கௌதமன்

'போலீஸார் தடையை மீறி வாகனப் பேரணி!’ கடலூரில் கொதித்த இயக்குநர் கௌதமன்
'போலீஸார் தடையை மீறி வாகனப் பேரணி!’ கடலூரில் கொதித்த இயக்குநர் கௌதமன்

 நாங்கள் திட்டமிட்டப்படி பேரணியை நடத்துவோம். இது மக்கள் ஆட்சி. மன்னர் ஆட்சி இல்லை.  மே 3-ம் தேதி கடலூரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், இளைஞர்களை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்துவோம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் இருந்து சென்னைக்கு வரும் 3-ம் தேதி நடக்க இருக்கும் இருசக்கர வாகனப் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். 

தமிழக மண்ணில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் இருந்து சென்னை நோக்கி 3-ம் தேதி இருசக்கர வாகன பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பேரணிக்குக் காவல்துறை அனுமதி கேட்டு இன்று இயக்குநர் வ.கௌதமன் தலைமையில் டி.எஸ்.பி. லாக்மேக்கிடம் கடிதம் கொடுத்தனர். வாகனப் பேரணியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் எனக்கூறி கடலூர் போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். 

இதுகுறித்து பேசிய இயக்குநர் வ.கௌதமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எப்படிச் சொன்னாலும் மக்கள் போராட்டத்துக்கு தமிழக  அரசு அனுமதி கொடுக்க மறுக்கிறது. இந்த மண் சுடுகாடானாலும் பராவில்லை, தமிழ் மாணவர்கள் எத்தனை பேர் இறந்தாலும் தமிழக அரசு கவலைப்படாமல் தமிழ் இனத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பயந்து மாநில அரசு துணை போய்க்கொண்டிருக்கிறது. மே 6-ம் தேதி நீட் தேர்வு நடந்தால் தமிழகத்தில் இன்னும் எத்தனை அனிதாக்கள் இறப்பார்கள் என சொல்ல முடியாது. நேற்று ஒரு மாணவன் தூக்குப் போட்டு இறந்துள்ளார். நாங்கள் நீட் வேணாம், நீர் வேணும் என்கிறோம்.

மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த எங்கள் இளைஞர்கள் 19 நாள்களுக்கு முன்பு அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஆனால், போலீஸார் இன்று தருகிறோம், நாளை தருகிறோம் என காலம் தாழ்த்தி, இன்று அனுமதி மறுத்திருக்கிறார்கள். நாங்கள் திட்டமிட்டப்படி பேரணியை நடத்துவோம். இது மக்கள் ஆட்சி. மன்னர் ஆட்சி இல்லை. மே 3-ம் தேதி கடலூரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், இளைஞர்களை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்துவோம். ராணுவமே வந்தாலும் சரி, காவல்துறை துப்பாக்கியை நெஞ்சுக்கு நேராக நீட்டினாலும் பேரணி நடக்கும். பேரணிக்கு இன்னும் அதிக நாள்கள் இல்லை, இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம். அங்கு நீதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பேரணி நடக்கும். ஐபிஎல் நடக்காமல் செய்த மாதிரி, தமிழகம் வந்த பிரதமரை வானத்தில் பறக்க வைத்தோம். நாங்கள் எங்கள் உரிமையை மீட்க உயிரைக் கொடுத்தாவது போராடுவோம்’ என்றார் ஆவேசமாக. 

அடுத்த கட்டுரைக்கு