Published:Updated:

சாய் பல்லவியின் முதல் தமிழ்ப்படம்... பிரேமம் கொள்ளவைக்கிறாரா..!? - ‘தியா’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
சாய் பல்லவியின் முதல் தமிழ்ப்படம்... பிரேமம் கொள்ளவைக்கிறாரா..!? - ‘தியா’ விமர்சனம்
சாய் பல்லவியின் முதல் தமிழ்ப்படம்... பிரேமம் கொள்ளவைக்கிறாரா..!? - ‘தியா’ விமர்சனம்

சாய் பல்லவியின் முதல் தமிழ்ப்படம்... பிரேமம் கொள்ளவைக்கிறாரா..!? - ‘தியா’ விமர்சனம்

தமிழ் சினிமாவில் பால்வாடி பாப்பாக்கள் ஆரம்பித்து பாட்டி, தாத்தாக்கள் வரை எல்லோரையும் பேயாகக் காண்பித்தாயிற்று. இனி வேறு யாரை பேயாக காட்டலாமென பேய்த்தனமாக யோசித்து வெறித்தனமான கதையோடு களமிறங்கியிருக்கிறார்கள் 'தியா' குழுவினர்.  அதாவது, ஒரு கலைக்கப்பட்ட கரு பேயாகி, வளர்ந்து, ஆனா ஆவன்னா படித்து, வெள்ளை கவுன் போட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வந்து, தன்னை கலைக்கச் சொன்னவர்களைக் கொலைசெய்கிறது. இதுதான் 'தியா' படத்தின் ஒரு வரிக்கதை. பேயின் லிஸ்டில் பேயின் அப்பாவும் இருக்க, அந்தப் பேய் அப்பாவையும் கொலை செய்ததா, அம்மா சாய்பல்லவி என்ன செய்கிறார் போன்ற கேள்விகளுக்கான பதில்தான் மீதிக்கதை.

நாயகன் கிருஷ்ணாவாக, ஆந்திர தேசத்து ஹீரோ நாக சௌர்யா நடித்திருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். என்ன,  படத்தில் அவருக்கு சிவில் இன்ஜினீயர் கதாபாத்திரம்! 'சந்திரமுகி' பிரபு, 'பொம்மாயி' சுதீப் என பேய் படத்தில் வரும் ஹீரோக்கள் பெரும்பாலும் சிவில் இன்ஜினீயராகவே இருப்பதுதான் என்ன டிசைன் என தெரியவில்லை. நாயகி துளசியாக சாய்பல்லவி. தமிழ்சினிமாவுக்கு அறிமுக நடிகையாக இப்படம் நல்லதொர் ஆரம்பம். சின்னச் சின்ன முகபாவனைகள் மூலம் அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளைக் கடத்துகிறார். சிரிக்க, அழ, கோபப்பட அத்தனைக்கும் படத்தில் இடமிருக்கிறது, அட்டகாசமாகச் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த படத்தையும் தனி ஆளாக தூக்கிச் சுமந்திருக்கிறார் என்றுகூட சொல்லலாம்.   வெல்கம் டு தமிழ் சினிமா சாய் பல்லவி! இந்த எனர்ஜியை மட்டும் என்னைக்கும் விட்றாதீங்க.

 ஆர்.ஜே.பாலாஜி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரை அந்த காக்கி காஸ்ட்யூமில் பார்த்தாலே சிரிப்புவருகிறது. மேலும், கிடைத்த கேப்பில் எல்லாம் கவுன்டர்களைப் போட்டு மென்மேலும் சிரிக்கவைக்கிறார். 'தெறி', 'வேதாளம்', 'விஸ்வரூபம்' வரிசையில் ஆர்.ஜே.பாலாஜியின் டிரான்ஸ்ஃபர்மேஷனும் பேசப்படும். குமரவேல், நிழல்கள் ரவி, சந்தானபாரதி, ரேகா, வெரோனிகா அரோரா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா எனப் பலரும் படத்தில் தலைகாட்டியிருக்கிறார்கள்.

இதுதான் படத்தின் கதை, கதை இப்படித்தான் நகரப்போகிறது, நகரும் கதை இப்படித்தான் முடியப்போகிறது என படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே சொல்லிவிடலாம். இதுதான் 'தியா'வின் மிகப்பெரிய மைனஸ். சஸ்பென்ஸ், சர்ப்ரைஸ், ட்விஸ்ட், திகீர், திருப்புமுனைகள் என எல்லாவற்றுக்கும் கதையில் இடம் இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட சமாச்சாரங்களே படத்தில் இருக்கக் கூடாது என்பதில் மும்முரமாக அமர்ந்து திரைக்கதை எழுதியதுபோல தெரிகிறது. பாத்ரூம் குழாயை திறந்துவிடுவது, வெள்ளை டிரெஸ் அணிவது என தமிழ் சினிமாவின் பேய்களுக்கென்றே உண்டான சில குணாதிசயங்கள் இந்த பேய்க்கும் உண்டு. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல பேய்க்கும் வயசாகும் என்பதெல்லாம் புதுப் புரளியாக இருக்கிறது. அதிலும், கலைக்கப்பட்ட கரு வளர்ந்து பழிவாங்குகிறது எனும் கதையின் கருவே தலைசுற்றவைக்கிறது. எந்த ஃப்ரேமிலும் தியாவாக வரும் சிறுமியின் நிழலைக் காட்டாதது சிறப்பு.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு வேற லெவல். ஒவ்வொரு ஃப்ரேமும் கோணமும் டெக்னிக்கலாக படத்தின் தரத்தைக் கூட்டியிருக்கிறது. கார் விபத்து நடக்கும் காட்சியில், நீரவ்வின் கேமராவும் சீ.ஜி-யும் இணைந்து மிரட்டியிருக்கிறது. சாம்.சிஎஸ்ஸின் பின்னணி இசை, படத்தோடு ஒன்றி பயணித்திருக்கிறது. ஆண்டனியின் படத் தொகுப்பில் குறையொன்றுமில்லை. நன்றாக நடித்துமிருக்கிறார் மனிதர். விஜய் - அஜயன் பாலா கூட்டணியில் வசனங்கள் நிறைவு. 

சாதாரண 'பேய் பழிவாங்கல் கதை'தான், திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்து, காட்சிகளையும் புதுமையாக எழுதியிருந்தால், 'தியா' நிச்சயம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருப்பாள். 

அடுத்த கட்டுரைக்கு