Published:Updated:

சிங்கிள் கேர்ள் ஆர்மி ஆனதெல்லாம்... சான்ஸே இல்லை ஓவியா! #HBDOviya

சுஜிதா சென்

ஓவியா பிறந்தநாள் தினத்தன்று சினிமாவில் அவர் கடந்து வந்த பாதைகளைப் பற்றிய சிறப்புக் கட்டுரை

சிங்கிள் கேர்ள் ஆர்மி ஆனதெல்லாம்... சான்ஸே இல்லை ஓவியா! #HBDOviya
சிங்கிள் கேர்ள் ஆர்மி ஆனதெல்லாம்... சான்ஸே இல்லை ஓவியா! #HBDOviya

ன்று 38-வது நாள். நேரம் மாலை 4 மணி. "நீ ஏன் என்னை இப்படி பண்ணே...அப்படியெல்லாம் பழகினே...முத்தம் தந்தே...இப்போ இப்படி மாறிட்டே, ஃப்ரென்ட்னு சொல்ற, சட்டு சட்டுனு மாறுறே, என்னால அப்படியெல்லாம் மாற முடியாது" என்று பிக் பாஸ் வீட்டிற்குள் இத்தனை நாள்களாக அழுத்திக்கொண்டிருந்த குமிழ் உடைகிறது. உண்மையான காதல் உணர்வையும் தன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தவிப்பையும் நொடிக்கொருமுறை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். அந்த நடவடிக்கைகளுக்குப் பின் வைக்கப்பட்ட விமர்சனங்கள், கொஞ்சநஞ்சம் அல்ல. 'பைத்தியம்', 'அட்டென்ஷன் சீக்கிங்', 'இம்மெச்சூர் கேர்ள்' என்று அந்நாள்களில் அவர் கடந்து வந்த வார்த்தைகளை, அந்த வீட்டில் வேறொருவர் கடக்க நேர்ந்திருந்தால், கட்டாயம் மிஞ்சியிருப்பது மனவருத்தம் மட்டுமே. தனிமையில் இருக்கும்போது, 'வலி கடத்துதல்' என்பது அவ்வளவு எளிதல்ல. எதிர்மறை எண்ணங்கள் சூழ் வீட்டில் தாக்குப்பிடித்து, முகமூடி போட்டுக்கொள்ளாமல், அப்படியே தனது இயல்பை வெளிப்படுத்துவது, இந்த உலகில் பலருக்கும் அமையாத ஒன்று. அதைப் பார்த்த நம் மனம் அவரது குழந்தைத்தனத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் செய்தது. ஏனெனில் இவர்தான் நம் ஆல்டர் ஈகோவின் அற்புத வெளிப்பாடு. 

ஒன்றரை மணி நேர டிவி ஷோவில் ஒன் கேர்ள் ஆர்மியாக செயல்பட்டு ஆயிரமாயிரம் லைக்குகளையும், ஷேர்களையும் தன் வசம் இழுத்தவர் இவர். இவை அனைத்துக்கும் காரணம் அவருடைய நேர்மையும், தன்னலமில்லா செயல்பாடுகளும் தான். நடனமாடுவதில் தொடங்கி, அழுவது வரைக்கும் அத்தனையும் வசீகர விமர்சனங்களால் நம் வாயை அசைபோட வைத்தன. என்னதான் தவறு அடுத்தவர்களிடம் இருந்தாலும், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் முற்போக்குத் தன்மை, தரம்.! இவர் வீட்டை விட்டு வெளியேறிய அன்று, பிக் பாஸ் பார்ப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்த ரசிகர்களும் ஏராளம். நள்ளிரவு மழையில் நனைவது தொடங்கி, 'டேக் இட் லைட்' பாலிசியை கடைபிடிப்பது வரை பெண்களுக்கே உரித்தான இயல்பான குணங்களையும் இன்று தன்னுடையதாக பேசவைத்திருக்கிறார் இந்த பிக் பாஸ் தேவதை, பெயர் ஓவியா.! 

'களவாணி' மகேஸ்வரி, 'முத்துக்கு முத்தாக' ஸ்வேதா, 'மெரினா' சொப்பன சுந்தரி, 'கலகலப்பு' மாயா, 'மதயானைக் கூட்டம்' ரிது என நம் வீட்டுப் பெண்ணாக இவர் வாழ்ந்த கதாபாத்திரங்கள் ஏராளம்.  ஓவியா சினிமாவுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர் அறிமுகமான 2007-ஆம் ஆண்டில்தான் அமலா பால், எமி ஜாக்சன் ஆகியோரின் சினிமா பயணமும் ஆரம்பித்தது. அவர்களுக்கு நிகராக ஒவ்வொருவரின் வீட்டிலும் கொண்டாடப்பட்ட ஓவியாவை வளரவிடாமல் தடுத்தது அவரது 'அந்த' முடிவுதான். கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி, நல்ல நடிகை என்று பெயர் வாங்கியவர், பின்னர் க்ளாமருக்கு அதிக இடம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். 

ஸ்கூல் யூனிஃபார்மில் 'களவாணி' மகேஷாக, அவர் செய்த அழிச்சாட்டியங்கள், கலகலப்பில் அவரது க்ளாமர் கெட்டபின் மூலம் மொத்தமாக திசை மாறியது. அன்றுவரை அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் களைந்து, மார்க்கெட் இழந்து, 'ஃபெய்லியர் படங்களின் நாயகி' என்றாகிவிட்டார். அதை கொஞ்சம் சீர் செய்து மறுபடியும் ஹோம்லி கெட்டப்பில் அவரை நிலை நிற்கச் செய்ததுதான் 'மதயானைக் கூட்டம்' திரைப்படம். அறிமுக நடிகர் கதிர், அறிமுக இயக்குநர் விக்ரம் சுகுமாரன், ஓவியா கம்பேக் என்று உருவான இந்த கூட்டணியின் வெற்றிக்கு சாட்சி அப்படத்தின் ஒற்றைப் பாடலின் ஹிட் என்று கூறலாம். மதயானைக் கூட்டம் படத்துக்குப் பின்பு மீண்டும் சோர்ந்து போன இவரது சினிமா பாதை, பிக் பாஸ் நிகழ்ச்சியால் மெருகேற்றப்பட்டது. சரியாக இந்நிகழ்ச்சிக்கு முந்தய ஆண்டான 2016-ல் அவரது அம்மா மறைந்த சம்பவம் திரையுலகினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும்கூட தெரிவிக்கப்படவில்லை. இதைப் பற்றி விமல் அளித்த பேட்டியில், "எதேச்சையாக ஓவியாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோதுதான் தெரியவந்தது, அவரது அம்மா உயிர்நீத்த சம்பவம். இருப்பினும், முன்பு அவரை எப்படி சந்தோஷமாக பார்த்தேனோ, அன்றும் என்னிடம் அப்படித்தான் பேசினார். தன்னுடைய கவலை மற்றவர்களை பாதித்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். மற்றவர்களுக்கு சந்தோஷத்தை மட்டுமே அளிக்கும் பாசிட்டிவ் வெளிச்சம் ஓவியா" என்று கூறியிருக்கிறார். 

முப்படைகளையும் தாண்டி நான்காவது படையாக உருவான ஓவியா ஆர்மியின் மூலம் 'நீங்க ஷட்டப் பண்ணுங்க', 'கொக்கு நெட்ட கொக்கு', 'திரும்பிக்கோ...இல்லைன்னா ஸ்ப்ரே அடிச்சுப் போட்ருவேன்' போன்ற பொன்மொழிகள் வைரலானது. மிகவும் எதார்த்தமாக இருக்கும் குணங்கள் கொண்ட பெண்களை 'ஓவியா' என்று அழைக்கும் அளவுக்கு இவரது தன்னிகரில்லா பண்பு மக்களுடன் ஒன்ற வைத்தது. கடினமான பாதையைக் கடந்து வந்தும் சோகம் இவரை அப்பிக்கொள்ளாததற்கு காரணம், ஓவியாவின் உலகில் அவருக்கு முன்னுரிமை தரப்பட்டு வாழ்க்கையை நகர்த்தும் மனநிலைதான். 'மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்' என்ற கேள்வி ஒருபோதும் அவருக்கு முட்டுக்கட்டை போட்டதில்லை. தன்னுடைய உலகின் பிரத்யேக விதிகளின் படி வாழ நினைக்கும் ஓவியாவின் அடுத்த கட்ட சினிமா வெற்றி, பல முன்னணி கதாநாயகிகளுக்கு நிகராக கமிட்டாகியிருக்கும் படங்கள்தாம். 'சிலுக்குவார் பட்டி சிங்கம்', 'களவாணி-2', '90 எம்எல்', 'கணேசா மீண்டும் சிந்திப்போம்' என இந்த ஆண்டு படங்கள் வரிசை கட்டியிருக்கிறது. ஓவியா புரட்சிப் படையில் தொடங்கி, அகில இந்திய ஓவியா பேரவை வரை முக்குக்கு முக்கு போஸ்டர் ஒட்டி நூறு நாள்கள் கொண்டாடிய பிக் பாஸ் அழகியின் பிறந்த தினம் இன்று. இனி அவர் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியைத் தழுவினாலும், அவர் 'நம்ம வீட்டுப் பொண்ணு' என்று நினைக்கும் மிடில்-ஏஜ் ரசிகர்கூட்டம் என்றும் மாறாது. வெல்டன் ஓவியா, மைல்ஸ் டு கோ.!