Published:Updated:

''சுசீந்திரன் சார் மேல கோபம் இல்லை; ஆனா, வருத்தம் இருக்கு!" - மெஹ்ரின் பிர்ஸாடா

சுசீந்திரன் சார் மேல எனக்குக் கோபம் இல்லை, வருத்தம்தான் இருக்கிறது என்கிறார், நடிகை மெஹ்ரின் பிர்ஸாடா. 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்துக்குப் பிறகு 'நோட்டா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், மெஹ்ரின்.

''சுசீந்திரன் சார் மேல கோபம் இல்லை; ஆனா, வருத்தம் இருக்கு!" - மெஹ்ரின் பிர்ஸாடா
''சுசீந்திரன் சார் மேல கோபம் இல்லை; ஆனா, வருத்தம் இருக்கு!" - மெஹ்ரின் பிர்ஸாடா

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர், மெஹ்ரின் பிர்ஸாடா. தற்போது 'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் 'நோட்டா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ''என்னோட பெற்றோர்கள்தான் என்னுடைய சினிமா வெற்றிக்கு காரணம். மொழி புரியலைனாலும் நான் நடிச்ச அத்தனைப் படங்களையும் தவறாம பார்த்துடுவாங்க. என் குடும்பத்துக்கும் மீடியாவுக்கும் துளிகூட சம்பந்தம் இல்ல. அப்பா ஒரு விவசாயி. அம்மா பொறுப்பான குடும்பத் தலைவி" - படபடவெனப் பேச ஆரம்பிக்கிறார், மெஹ்ரின். 

''பத்து வருடமா சினிமாவுல நடிச்சிட்டு வர்ற நீங்க, போன வருடம்தான் தமிழுக்கு அறிமுகமானீங்க. இதை எப்படிப் பார்க்குறீங்க, சினிமா ஆர்வம் எப்படி வந்துச்சு?" 

''ஸ்கூல் படிக்கும்போது சர்வதேச ரோட்டரி க்ளப் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவில் துணைத் தலைவரா இருந்தேன். சின்ன வயசுல இருந்து நாட்டுக்கு சேவை செய்யணும்னு ஆசையில என்சிசி கேடெட்டா (NCC Cadet) இருந்தேன். கூடவே பரதநாட்டியமும் கத்துக்கிட்டேன். நியூயார்க், வாஷிங்டன் டிசியில உலகளாவிய தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியா கலந்துக்கிட்டேன்.  தவிர, தேசிய அளவுல நடந்த துப்பாக்கி சுடும் போட்டிகள்ல பங்கேற்றிருக்கேன். சினிமாவுல நடிக்கணும்ங்கிறது என் விருப்பம் கிடையாது. எதார்த்தமா காலேஜ் படிக்கும்போது ஒரு தனியார் நிறுவனம் நடத்துன அழகிப் போட்டியில கலந்துக்கிட்டேன். அப்போ இது எனக்கு ஒரு பெரிய விஷயமாவே தெரியல. இது மூலமா 2013-ல மிஸ் பர்சனாலிட்டி சவுத் ஆசியா அழகிப் போட்டியில கலந்துக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. அதுல டைட்டில் வின் பண்ணேன். அதுதான் என் வாழ்க்கையை திருப்பிப்போட்ட மொமெண்ட். அப்படியே கொஞ்சநாள் மாடலிங் துறை. சினிமாவுல கால் பதிச்சு ரொம்ப வருடத்துக்குப் பிறகு தமிழ்ல அறிமுகமாகுறதை நினைக்கும்போது பெருமையா இருக்கு." 

'' 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் இரண்டாவது முறையா தியேட்டர்ல ரிலீஸானப்போ, ஹீரோயின் காட்சிகள் அனைத்தையும் கட் பண்ணிட்டாங்களே... அதுக்காக வருத்தப்பட்டீங்களா?"

''இந்தப் படத்துல நடிச்சதுக்கு நான் ஒருபோதும் வருத்தப்படலை. சுசீந்திரன் சார் மேல எந்தக் கோபமும் இல்லை. இந்த மாதிரியான சில விஷயங்கள் சினிமாவுல சகஜம்தான். இயக்குநரோட விருப்பதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கணும். அவரோட முடிவு எனக்குப் புரியும். ஆனாலும், கொஞ்சம் வருத்தம் இருக்கு. தமிழ்ல 'நோட்டா'தான் என்னோட முதல் படம்னு சொல்வேன். இதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்குற நிறைய விஷயங்கள் இருக்கு. இந்தப் படம் தமிழ் அண்ட் தெலுங்குல ரிலீஸ் ஆகுது. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனோட மகன், சாந்தா ரவி கே.சந்திரன்தான் படத்தோட ஒளிப்பதிவாளர். தமிழ்ல 'நோட்டா'தான் இவருக்கு முதல் படம். இன்றைய சூழல்ல அரசியல் எவ்வளவு முக்கியம்னு பொதுமக்களுக்கு உணர்த்தணும். அதுதான், இந்தப் படத்தோட நோக்கம். இன்றைய இளைஞர்களை ஊக்கப்படுத்தி அரசியல்ல ஈடுபடுத்திக்க வைக்கிற மாதிரியான கதை இது!"  

'' 'நோட்டா' பட அனுபவம் எப்படி இருக்கு?"

''ஸ்டிரைக் முடிந்த அடுத்தநாளே ஷூட்டிங் தொடங்கிருச்சு. சென்னை அண்ட் ஹைதராபாத்ல ஷூட்டிங் பண்ணிக்கிட்டு இருக்கோம். விஜய் தேவரகொண்டாவோட நிறைய படங்கள் பார்த்திருக்கேன். அவர் நடிச்சதுலேயே 'பெல்லி சூப்புலு' எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். இன்னைக்கு இவரோட சேர்ந்து நடிக்கிறது ரொம்பப் பெருமையா இருக்கு. பார்க்கிறதுக்கு சாக்லேட் பாய் மாதிரி இருப்பார். ஆனா, கடின உழைப்பாளி. எந்த மாதிரியான காட்சியா இருந்தாலும், ஒரே டேக்ல ஓகே பண்ணிடுவார். தமிழ்ல டப்பிங் பேசுறதுக்கான முயற்சிகளை எடுத்துக்கிட்டு வர்றார். நாசர் சார்தான் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லி நடிப்பு கத்துக்கொடுக்கிறார். தெலுங்கு படத்துல நாசர் சார் எனக்கு அப்பாவா நடிச்சிருக்கார். இந்தப் படத்துல சத்யராஜ் சார் எனக்கு அப்பாவா நடிக்கிறார். ரெண்டு அப்பாக்களும் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்." என்று அழுத்தமாகச் சொல்கிறார், மெஹ்ரின் பிர்ஸாடா.