`இவருக்குப் பதில் இவர்' -இது சீரியல் பாணி! `நடிகர் இனி இயக்குநர்' என்பதுதான் சினிமா பாணி! இசையமைப்பாளர்கள் ஹீரோக்கள் ஆவது கோடம்பாக்கத்து ஸ்டைல் என்றால் பக்கத்து ஸ்டேட் சினிமாக்களில், `காமெடியன் டூ இயக்குநர்' என ட்ரெண்ட் செட் பண்ணுவது லேட்டஸ்ட் ஸ்டைல்! அப்படி புரமோஷன் பெற்று அவங்க சினிமா உலகைக் கலக்கி எடுக்கும் மூன்று பேரைப் பற்றிய சிம்பிள் அண்ட் க்விக் வியூ இது...

சௌபின் ஷாஹீர்:
சௌபின் சினிமாவுக்குள் நுழைந்த போதே உதவி இயக்குநராய் நுழைந்தவர். சித்திக், ஃபாசில், சந்தோஷ் சிவன், ராஜீவ் ரவி, அமல்நீரத் போன்றவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்து கொண்டிருந்தவருக்கு ராஜீவ் ரவி இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த `அன்னயும் ரசூலும்' படம் மூலம் சின்ன ரோலில் நடிக்கத் தொடங்கினார். `பிரேமம்' படத்தில் பிடி மாஸ்டர் ரோல் தொடங்கி பலவும் கவனம் பெற்றன. ஃபகத் ஃபாசிலை `பனி பள்ளி' என்ற படத்தில் இயக்க வேண்டியவர், ஃபகத் பிஸியானதால் அது அப்படியே நின்று போனது. தற்போது வேறு ஒரு கதையில் நடிகர்கள் தேடுதலில் இருக்கிறார். `பறவ' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தை `பெங்களூர் டேய்ஸ்', `பிரேமம்' படங்களைத் தயாரித்த அன்வர் ரஷீத் தயாரிக்கிறார். ஃபகத் தமிழில் மோகன் ராஜா படத்தில் நடித்து முடித்த பின்பு தனது `பனி பள்ளி' படத்தை இயக்கவிருக்கிறார் சௌபின்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திலீஷ் போத்தன்:
உதவி இயக்குநர் டூ நடிகர் டூ இயக்குநர் என்ற டிராவல் திலீஷ் போத்தனுடையது! தியேட்டர் ஆர்ட்ஸில் எம்.பில் முடித்துவிட்டு ஒரு படத்தின் கடைசி ஷெட்யூலில் மட்டும் உதவி இயக்குநராக வேலை செய்து முடித்திருந்தார். அப்போது நண்பர் மூலம் ஆஷிக்அபுவின் முதல் படமான `சால்ட் அண்டு பெப்பர்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்கப்்பட்டார். திலீஷின் ஆர்வத்தைப் பார்த்த ஆஷிக்அபு படத்தின் அசோஷியேட் இயக்குநராகவும் இணைத்துக் கொண்டார். `சால்ட் அண்டு பெப்பர்', `22 ஃபீமேல் கோட்டயம்', `டா தடியா', `5 சுந்தரிகள்', 'இடுக்கி கோல்டு', `கேங்ஸ்டர், `டமார் படார்' போன்ற படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்தவர், அதன் பின் மூன்று படங்களில் நடிக்கவும் செய்தார். இப்போது `மகேஷின்டே பிரதிகாரம்' என்ற ஒரே படத்தில் இயக்குநர் அவதாரம். தொடர் தோல்விகளை சந்தித்துக்கொண்டிருந்த ஃபகத் ஃபாசிலுக்கு மிகப் பெரிய ஹிட்டாக இப்படம் அமைந்தது. தன்னை அடித்தவனைத் திருப்பி அடிக்காமல் காலில் செருப்பு போடமாட்டேன் என சபதம் எடுக்கும் சாமான்ய ஹீரோவின் கதை இது. அந்த லைனை அவ்வளவு நேட்டிவிட்டியுடனும் நகைச்சுவையுடனும் செம பேக்கேஜாகக் கொடுத்திருந்தார் திலீஷ். இவர் அடுத்து இயக்கும் படத்தின் ஹீரோவும் ஃபகத் ஃபாசில் தான்!

ஸ்ரீனிவாஸ் அவசரலா:
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த இயக்குநர். சினிமா ஃபேஷன் என்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று ஸ்க்ரீன் ரைட்டிங் படித்து வந்தார். நானி அறிமுகமான `ஆஷ்தா சம்மா' படத்தில் நடிக்கத் தொடங்கியவர் கடைசியாக நடித்தது அதே நானி நடித்த `ஜென்டில்மேன்' படத்தில், அதுவும் வில்லனாக! இயக்குநர் ஆசை அடிக்கடி சீண்டும் போதெல்லாம், அதை ஓரமாக அமர வைத்து `அதுக்கு இது நேரமில்ல... கொஞ்சம் பொறுமையா இரு' என தனக்குத் தானே அட்வைஸ் சொல்லிக்கொண்டார். சரியான சமயம் பார்த்து `ஊஹலு குசகுசலுடே' படம் மூலம் இயக்குநர் என்ட்ரியைக் கொடுத்தார். படத்தின் கதை அப்படியே ஷாரூக் நடித்த `யெஸ் பாஸ்' (தமிழில் குரு என் ஆளு) டிட்டோதான் என்றாலும் ஃப்ரெஷ் ட்ரீட்மெண்டால் செம ஹிட்டானது. பிறகு சின்ன கேப் எடுத்துக்கொண்டு `ஜோ அச்யுதாநந்தா' மூலம் மறுபடி எல்லாச் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். ``சின்னச் சின்ன ரோல்களில் நடிக்கும் போது என்னை அடிக்கிற மாதிரி சீன் இருந்தா ஒரு பெரிய ஸ்டார் என்னை நிஜமாவே அறைஞ்சிருக்கார். அதுக்கு ஸாரி கூட கேட்காம போயிட்டே இருப்பார். அவருக்கெல்லாம் இந்த ஹிட்தான் என் பதிலடி!'' எனச் சிரிக்கிறார் அவசரலா.
சூப்பர்லா!
- பா.ஜான்சன்