Published:Updated:

கடத்தப்படாத சிறுவனைத் தேடி அலையும் விலங்கு கூட்டம்! #WinnieThePooh #MovieRewind

சுரேஷ் கண்ணன்
கடத்தப்படாத சிறுவனைத் தேடி அலையும் விலங்கு கூட்டம்!  #WinnieThePooh #MovieRewind
கடத்தப்படாத சிறுவனைத் தேடி அலையும் விலங்கு கூட்டம்! #WinnieThePooh #MovieRewind

குழந்தைகளையும் குழந்தை மனம் படைத்தவர்களையும் நிச்சயம் சுண்டி இழுக்கும் ஜாலியான அனிமேஷன் திரைப்படம் இது. பசிக்காகத் தேனைத் தேடி அலையும், குழந்தை போன்ற தோற்றமுள்ள அப்பாவி கரடி, விவரம் இல்லாவிட்டாலும் போலியாகப் பெருமிதம் காட்டும் ஆந்தை, ஆங்கில மொழியில் உள்ள குறிப்புகளைத் தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு சொதப்பும் இதர விலங்குகள் எனச் சுவாரஸ்யமான காட்சிகளால் கலகலக்கிறது Winnie The Pooh திரைப்படம்.

பிரபல பிரிட்டிஷ் கதாசிரியரான ஏ.ஏ.மைன், 'வின்னி தி பூ’ என்கிற தலைப்பில் 1926-ம் ஆண்டில் எழுதிய கதைத் தொகுதிகள் மிகவும் பிரபலமடைந்தன. தன் மகன் வைத்திருந்த கரடிப் பொம்மையைப் பிரதானமான பாத்திரமாக்கி இந்தக் கதைகளை எழுதினார். இதையொட்டி அவர் எழுதிய தொடர்கள் மிகுந்த புகழைத் தேடித்தந்தன. இதன் அடிப்படையில் பல தொலைக்காட்சி தொடர்களும் திரைப்படங்களும் உருவாகின. இந்த வரிசையில் 2011-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம்தான், வின்னி தி பூ ( Winnie the Pooh). அப்பாவித்தனமான கரடி ஒன்று, தன் தோழர்களுடன் இணைந்து சொதப்பும் ஜாலியான தவறுகளும் சம்பவங்களும்.

பூ ( Pooh) என்கிற அந்தக் கரடிக்குக் காலையில் எழுந்தவுடனேயே பயங்கரப் பசி. சாப்பிடத் தேன் கிடைக்குமா என்று காடெங்கும் தேடி அலைகிறது. அப்போது, கழுதை நண்பன் சோகத்துடன் அமர்ந்திருப்பதைப்  பார்க்கிறது. ''என்னாச்சு’ என்று அக்கறையுடன் விசாரிக்கிறது. 'என் வாலைக் காணவில்லை’ என்று துயரத்தோடு சொல்கிறது கழுதை. அது சும்மாவே எப்போதும் கவலையுடன் இருக்கும். வால் வேறு காணாமல்போனால் சொல்ல வேண்டுமா?

'இதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமே’ என்று பூ உட்பட இதர விலங்குகள் கலந்தாலோசிக்கின்றன. குட்டிப் பன்றி, முயல், ஆந்தை, பெண் கங்காரு, அதன் குட்டி, புலி என்று ஒரு பட்டாளமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முயல்கின்றன. கடிகாரம், பலூன் என்று ஆளாளுக்கு ஒரு 'வாலை’ எடுத்துவந்து, கழுதைக்கு ஒட்டிப் பார்க்கின்றன. ம்ஹூம்... எதுவும் சரிவரவில்லை. கழுதைக்கு வெற்றிகரமான வாலை கொண்டுவருபவருக்குப் பரிசு தரலாம் என முடிவுசெய்கின்றன. 'ஒரு ஜாடி தேன்’ என்பதுதான் அந்தப் பரிசு. ஏற்கெனவே பசியில் இருக்கும் பூ-வுக்கு இந்தத் 'தேன்’ வார்த்தை, மேலும் பசியைக் கூட்டுகிறது. 

கழுதையின் வால் பிரச்னையே தீராத நிலையில், இன்னொரு பிரச்னையும் முளைக்கிறது. கிறிஸ்டோபர் ராபின் என்கிற சிறுவனைத் தேடிச்செல்லும் பூ, வீடு பூட்டிக் கிடப்பதை திகைப்புடன் பார்க்கிறது. வெளியே ஒரு தாளில் குறிப்பு எழுதப்பட்டுள்ளது. என்ன முயன்றும் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கரடியால் வாசிக்க முடியவில்லை. காட்டின் அதிபுத்திசாலியான ஆந்தையை அணுகுகிறது. 'Back Soon’ என ராபின் எழுதிவைத்திருந்த குறிப்பை, தவறாகப் புரிந்துகொள்கிறது அந்த ஆந்தை, 'Backson’ என்கிற அரக்கன் ராபினை கடத்திவிட்டான் என்று அவிழ்த்து விடுகிறது. 

அவ்வளவுதான்... காடே பரபரப்பாகிறது. பேக்சன் 'பயங்கரவாதி’யிடமிருந்து சிறுவனை மீட்பதற்காக ஆளாளுக்கு ஒரு திட்டத்தைச் சொல்கிறார்கள். அந்தத் திட்டங்களால், அரக்கனைப் பிடிப்பதற்காகத் தாங்கள் பறித்த குழியில் தாங்களே விழும் சோகமும் ஏற்படுகின்றது. அப்புறம்... கழுதைக்கு வால் கிடைத்ததா? ராபினுக்கு என்னவாயிற்று? பேக்சன் அரக்கன் பிடிபட்டானா? பூ-வின் பசி தீர்ந்ததா என்பதையெல்லாம் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

வால்டி டிஸ்னி ஸ்டுடியோவின் உருவாக்கத்தில் காட்சிகள் வண்ணமயமாகவும், அபாரமான கற்பனை வளத்துடனும், குதூகலிக்கவைக்கும் நகைச்சுவையுடனும் தயாரிக்கப்பட்டுள்ளன. படம் முழுவதும், பசியினால் பொருமும் தன் வயிற்றைத் தடவி, சமாதானப்படுத்திக் கொண்டேயிருக்கும் பூ-வை, முதல் பார்வையிலேயே நமக்குப் பிடித்துவிடுகிறது. அதன் பசி தீர வேண்டுமே என மனம் ஏங்குகிறது.

'வின்னி தி பூ’ கதைப் புத்தகத்தையும் அனிமேஷன் காட்சிகளையும் இணைத்திருப்பது சுவாரஸ்யமான உத்தி. பூ-வை தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காகப் புத்தகத்தை தலைகீழாகத் தட்டுவது முதல், புத்தகத்தில் உள்ள வாக்கியங்களும் எழுத்துகளும், படக் காட்சிகளின் இடையே பல்வேறு விதமாகத் துள்ளிக்குதிப்பது வரை, குறும்பையும் புத்திசாலித்தனத்தையும் திரைக்கதையில் கலந்துள்ளார்கள். விலங்குகள் ஏறியவுடன் வாக்கியங்கள் கவிழ்ந்து வீழ்வது, அவற்றின் மீதாக ஓடுவது, குழிக்குள் விழுந்த வாக்கியங்களைப் பற்றிக்கொண்டு விலங்குகள் மேலே ஏறித் தப்பிப்பது எனப் புத்தகமும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இந்தத் திரைப்படத்தில் மாறியிருக்கிறது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல் விழிக்கும் கரடி, புரிந்ததுபோல மேதாவித்தனமாக பாவனை  செய்யும் ஆந்தை, பூ-வின் குட்டி நண்பனான பிக்லே, அம்மாவின் வயிற்றிலிருந்து குதித்து அவ்வப்போது ரகளை செய்யும் கங்காரு குட்டி, பயந்தாங்கொள்ளி புலி செய்யும் அலப்பறைகள் என ஒவ்வொன்றும் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கின்றன. காடு முழுவதும் தேனாக மாறி, அவற்றில் ஆனந்தமாக பூ விழுந்து புரளும் கற்பனைக் காட்சி அற்புதம். பூ-வின் நல்லியல்பு காரணமாக, இறுதிக்காட்சியில் அதற்குக் கிடைக்கும் பிரமாண்டமான பரிசு நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

 Stephen J.Anderson மற்றும் Don Hall இணைந்து இயக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம், பல விருதுகளைப் பெற்றுள்ளன. பாடல்களும்  Henry Jackman அபாரமான பின்னணி இசையும் காதுகளுக்குத் தேன் விருந்து. 

winne

 இந்தப் படத்தைக் குழந்தைகளுடன் கண்டு குதூகலிக்கலாம்.