Published:Updated:

"பாடம்... யாருக்கு, யாருக்கோ!" - 'பாடம்' படம் எப்படி? #Paadam

விகடன் விமர்சனக்குழு
"பாடம்... யாருக்கு, யாருக்கோ!" - 'பாடம்' படம் எப்படி? #Paadam
"பாடம்... யாருக்கு, யாருக்கோ!" - 'பாடம்' படம் எப்படி? #Paadam

'பாடம்' திரை விமர்சனம்

'தமிழ்நாட்டுல தமிழ்தாண்டா படிக்கணும்; இங்கிலீஷ் எதுக்கு?!' என்ற வெறுப்போடு இருக்கும் மாணவனுக்கு ஆங்கிலம் படிக்கவேண்டிய கட்டாயம் வருகிறது. அந்த மாணவன் ஆங்கிலம் படித்தானா, தமிழுக்குப் பெருமை சேர்த்தானா? என்பதை இங்கி பிங்கி பாங்கி காட்சிகளோடு சொல்கிறது, 'பாடம்'.

போலீஸ் அதிகாரி 'கோட்டை பெருமாளா'க வரும் நாகேந்திரனுக்கும், அவரது மகனுக்கும் ஆங்கிலம் என்றாலே அலர்ஜி. 'டேக் யுவர் சீட்' என்றால், நாற்காலியைக் கையில் எடுத்துக்கொண்டு சிரிப்பார், கோட்டை பெருமாள். 'ஆங்கிலம்' என்ற வார்த்தையைக் கேட்டாலே, அவரது மகன் ஜீவாவுக்கு காதில் சாவு மணி அடிக்கும் சத்தம் கேட்கும்! தமிழ் தெரியாத உயர் அதிகாரியிடம் ஆங்கிலம் தெரியாத நாகேந்திரன் 'வெகுளியாக' நடந்துகொண்டார் என்பதற்காக சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். கிராமத்திலிருந்து சென்னைக்குப் போகும் குஷியில் இருக்கும் அவரது மகன், தன் ஆங்கில வாத்தியாரிடம் 'எனக்கு இங்கிலீஷ்ல தெரிஞ்ச ஒரே வார்த்தை, குட் பை’ என ’தேவதையைக் கண்டேன்’ தனுஷ் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துவிட்டு சென்னைக்கு செல்கிறார். சொந்த ஊரில் ஆங்கிலத்தை 'ஒரு' பாடமாகப் படித்த மகனை, சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்துவிட்டு, முழுக்க ஆங்கில வழிக் கல்வியைப் படிக்கச் சொல்லி, சேர்த்துவிடுகிறார், அப்பா. அப்பாவுக்கு மகன் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்பது, ஆசை; மகனுக்கு அது பெரும் எரிச்சல்! இருவரில் வென்றது யார்... என்பதுதான், 'பாடம்' படம்.

சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் மூன்று சிறுவர்களுக்கு 'மார்க் ஆண்டனி' மியூசிக் பில்டப், ஜூஸ் கேட்டுப் பிரச்னை பண்ணும் 'பப்ளி' சிறுவர்களை பபுல்கம் வைத்து அட்டாக் செய்வது போன்ற காட்சிகளெல்லாம் படம் பார்ப்பவர்களை பார்கார்ன் சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறது. 'விவேகம்' படத்தின் காட்சியை யூ-டியூபில் நாயகன் பார்ப்பதுபோல் ஒரு காட்சி வருகிறது. அதில், காபி ரைட்ஸ் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக 'இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்' வசனத்தை அஜித் வாய்ஸில் யாரோ ஒருவர் மிமிக்ரி செய்திருப்பதெல்லாம் பார்க்க முடியல ப்ரோ!. படத்தில் ஹீரோயினாக வரும் ஸ்கூல் பொண்ணு தங்கள் அபார்ட்மென்ட் விழாவில் 'அழகே அழகே....' பாடலைப் பிண்ணனியில் ஆடியோவை ஓடவிட்டுப் பாடவிட்டிருக்கிறார்கள் என்பது, 'லிப் சிங்க்' பரிதாபங்களில் தெரிகிறது. 

பள்ளியில் இருந்து வெளிவர 'ஹீரோ' ஜீவா செய்யும் வேலைகள் அனைத்தும் அவருக்கே தெரியாமல் பாசிட்டிவ்வாக மாறிவிடுகிறது. 'பிரேமம்' மலர் டீச்சரை லெஃப்டில் இன்கிகேட்டர் போட்டு ரைட்டில் ஓவர்டேக் செய்கிறார், இந்தி டீச்சராக வரும் யாசிகா ஆனந்த். கரும்பலகையில் அவர் எழுதிப்போடும் 'இந்தி' என்ற வார்த்தையே இந்தியில் தவறு என்பதால், டீச்சருக்குப் பாடம் எடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. வில்லன் என்று அவரே சொல்லிக்கொள்ளத் தயங்கும் அளவுக்கு ஒரு 'டெரர்' வில்லன் விஜித். படத்தில் ஆங்கில வாத்தியார் இவர்தான். மனுஷன் அடித்தே கொள்கிறார்.  காதலிப்பதாகப் பொய் சொல்லிவிட்டு, வில்லன் விஜித் இந்தி டீச்சரை சீண்டும் சமயத்தில், பிரின்சிபல் குரலில் மிமிக்ரி செய்து காப்பாற்றுகிறார், ஜீவா. இப்படிப் பல களேபரங்களோடு நகர்ந்துகொண்டிருக்க, 'ஆங்கிலம் வேண்டாம்' என அந்தப் பள்ளியில் இருந்து எஸ்ஸாகிறார், ஜீவா. இங்கேதான் அடுத்த டுவிஸ்ட்... மீண்டும் இழுத்துப் பிடித்து அந்தப் பள்ளியில் சேர்த்துவிட அப்பா நாகேந்திரன் முயற்சிக்க, 'மாநில அளவிலான ஆங்கிலப் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு ஜெயித்தால் சேர்த்துக்கொள்கிறோம்!' என எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி நிபந்தனையைக் கொடுக்கிறது, பள்ளி நிர்வாகம்.  பிறகென்ன... அப்பாவின் ஆசைக்காக வெறித்தனமாக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார், ஜீவா. (இதை முதல் காட்சியிலேயே செஞ்சிருந்தா, டிக்கெட் செலவு மிச்சம் ஆகியிருக்கும் பாஸ்!) 

தமிழில் மிகக் குறைவாகவே வரும் குழந்தைகளுக்கான சினிமாவைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநர் ராஜசேகர், படத்தை சிறுபிள்ளைத் தனமாக எடுத்திருப்பது வேதனை. படத்தின் அனைத்து காட்சிகளிலும், 'எப்படிப்பட்ட சீன் தெரியுமா இது... ரசிங்கடா!' எனக் குச்சியால் குத்துவது போல இருக்கிறது, திரைக்கதை. முதல் பாதியில் ஆங்கிலத்திற்கு எதிராக நகரும் கதைக்களம், அப்படியே பிரைவேட் பள்ளிகளுக்கு விசிட் அடித்துவிட்டு, மீண்டும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் காட்சிகளில் திரும்பி... ஸ்ஸப்பா ப்ளீஸ்! 

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒட்டாமல் இம்சை செய்கிறது, டப்பிங். தேனடை, ஒத்தரோசா மாதிரியான கேரக்டரில் நம்மை ரசிக்கவைத்த மதுமிதாவுக்கு, 'அம்மா' கேரக்டர். எமோஷனல் காட்சிகளுக்கு உங்க ரியாக்‌ஷன்ஸ் இருக்கே... இப்படியெல்லாம் பண்ணாதீங்க மேடம், ப்ளீஸ்! இசை, கணேஷ் ராகவேந்திரா. 'ரேணிகுண்டா'வுக்கு இசையமைத்தவருக்கு இருக்கும் திறமையை இயக்குநர் பயன்படுத்திக்கொள்ளாதது, கொடுமை. 'போட்டுவிடு, கேட்கட்டும்' என்ற ரேஞ்சில் ஒலிக்கும் பாடல்கள் காதுக்குள் கட்டெறும்பு போன ஃபீல்! ஆங்காங்கே இருக்கும் அரைகுறை சி.ஜி காட்சிகளைத் தவிர, எஸ்.எஸ்.மனோவின் ஒளிப்பதிவு ஓகே ரகம். படத்தைத் எடிட்டிங் செய்திருக்கும் ஜிபின் பி.எஸ் என்பவர்தான், தயாரிப்பாளரும்கூட! (எடிட் பண்ண அனுபவத்தை ஷேர் பண்ணுங்க சார்!) 

ஆங்கில வழிக்கல்வி எதற்கு, அரசாங்கப் பள்ளிகள் வேண்டும் போன்ற பல கருத்துகளை முன் வைக்கும் இயக்குநர் ராஜசேகர்தான், 'தமிழ் மட்டுமே பேசணும்னு நினைக்கிறது தப்புய்யா' என்கிறார். படத்தின் டீஸரில் 'ஒரு தமிழ் மாணவனின் போராட்டம்' எனக் கேப்ஷன் கொடுத்திருக்கும் இவர்தான், 'இந்தியக் கல்வி முறையில் மாற்றம் வேண்டும்'னு அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார் என்றும் மேற்கோள் காட்டுகிறார். 'என்னங்க சார் உங்க பிரச்னை?' எனக் கேட்காமல் இருக்கமுடியவில்லை. திரைப்படம் மூலம் கருத்து சொல்வது சரிதான்... எது கருத்து எனவும் சொல்லவேண்டும்தானே?! 

தமிழ்சினிமா ஸ்டிரைக் முடிவில் கிடைத்த முக்கியமான புள்ளி விவரங்களில் ஒன்று, 'நூறில் ஐந்து சதவிகித தயாரிப்பாளர்கள்தான் லாபம் அடைகிறார்கள்' என்பது. தமிழ்நாட்டில் கதைகளுக்குப் பஞ்சமில்லை. இதுபோன்ற படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு 'ஆழ்ந்த வருத்தங்கள்' என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. 

'தியா' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

அடுத்த கட்டுரைக்கு