அஜித்... வெற்றியோ தோல்வியோ... மனங்கவர் கலைஞன்! #HBDAjith

அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்

அஜித்... வெற்றியோ தோல்வியோ... மனங்கவர் கலைஞன்!   #HBDAjith

பள்ளிப் பருவத்தை பாதியிலேயே இழந்த சிறுவன்... பைக்கின் மீது உள்ள தீராக் காதலால் மெக்கானிக்கான இளைஞன்... சினிமாவின் மீதுள்ள ஈர்ப்பினால் விடாமுயற்சியோடு போராடி, தற்போது 'தல' என்ற செல்லப் பெயரோடு கோலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் கலைஞன்... இளைய தளபதியின் மதிப்பிற்குரிய போட்டியாளன்... இவை அனைத்திற்கும் சொந்தக்காரர், 'மை டியர் தல' அஜித்குமார். பிள்ளையார் சுழியாகப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, கட்டுரைக்குள் போவோம்.  

அஜித்தின் ஆரம்பகாலம்...

அஜித் குமார்

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பைக் ஷெட்டில் மெக்கானிக்காக வேலைக்கு சேர்ந்தார், அஜித். காரணம், பைக், கார் ரேஸின் மேல் உள்ள அதீதக் காதல். அது, ஆங்காங்கே நடக்கும் பைக் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ள வைத்தது. பணம் தேவைப்பட்டதால், சின்னச் சின்ன விளம்பரங்களில் நடித்து, அதில் வரும் வருமானத்தை வைத்துப் பந்தயங்களில் கலந்துகொண்டார். அந்த சமயத்தில்தான், அவரைத் தேடி சினிமா வாய்ப்பு வந்தது. 'என் வீடு என் கணவர்' படத்தில் சிறு வேடத்தில் நடித்து, திரையுலகில் ஆரவாரமின்றி தன் கால்களைப் பதித்தார், அஜித். அதற்குப் பின் 'பிரேம புஸ்தகம்' எனும் தெலுங்குப் படத்தில் ஹீரோவானார். எதிர்பாராத விதமாக அந்தப் படத்தின் இயக்குநர், படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தினால் இறந்துவிட, அவரது தந்தையால் அந்தப் படம் இயக்கப்பட்டது. 

அந்தப் படத்தை முடித்தபின், மீண்டும் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் நடித்துக்கொண்டே, தன் லேட்டஸ்ட் புகைப்படங்களைக் கையில் வைத்துக்கொண்டு சினிமா துறையில் வேலை செய்யும் அனைவரிடமும் வாய்ப்பு கேட்டு அலைந்துகொண்டிருந்தார். வேட்டி விளம்பரம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தபோது, சுரேஷ் சந்திரா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அஜித், அவரது புகைப்படங்களைக் கொடுத்து நடிக்க வாய்ப்பு கேட்டிருந்தார். அவர்தான் அஜித்தின் இன்றைய மேனேஜர். அப்போது, 'அமராவதி' படத்தின் ஹீரோவாக நடிக்க வேறொருவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் செல்வாவிடம், அஜித்தின் புகைப்படங்களைக் காட்டியிருக்கிறார், சுரேஷ் சந்திரா. 'இந்தப் பையனைத்தான் நாங்களும் தேடிட்டு இருந்தோம், வரச் சொல்லுங்க' எனச் சொல்லி, அஜித்தை அமராவதியுடன் ஜோடி சேர்த்தார், செல்வா. அந்தப் படத்தில் அஜித்துக்குக் குரல் கொடுத்தவர், விக்ரம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, ரிலீஸ் ஆகத் தயார் நிலையில் இருந்தது. 

அந்த முதல் சந்திப்பு...

விஜய் - அஜித்

தியேட்டரில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸைப் பார்க்க, அஜித், செல்வா, ஒளிப்பதிவாளர் இமயவரம்பன் உள்பட பலர்,  வடபழனி கமலா தியேட்டருக்கு வெளியே பைக்கில் நின்றுகொண்டிருந்தனர். குழந்தை நட்சத்திரமாக நடித்து, முதல் முறையாக 'நாளைய தீர்ப்பு' எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார், ஒரு புதுமுக நடிகர். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக வேலை செய்தவர்தான் இவர்களுடன் இருந்த இமயவரம்பன். அங்கு நின்றுகொண்டிருந்த அவரிடம், 'ஹாய்' என்று கை காட்டியிருக்கிறார், அந்தப் புதுமுக நடிகர். அப்போது அங்கிருப்பவர்கள் அனைவரோடும் சேர்த்து அஜித்துக்கும் அவரை அறிமுகம் செய்துவைக்கிறார், இமயவரம்பன். 'அஜித்... இவர்தான் விஜய். விஜய்... இவர்தான் அஜித்' என்கிறார். அஜித்துக்கு அதுதான் முதல் படம் என்பதால், 'ஹாய் பாஸ். ஆல் தி பெஸ்ட்' என்று இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். இப்படித்தான் இவர்களது முதல் சந்திப்பு நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தை கேள்விப்படும்போது 'புயலுக்கு முன் அமைதி' என்ற பழமொழிதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 

சினிமா குழப்பம்...

அஜித் குமார்

'அமராவதி' படத்திற்குப் பிறகு 'பாச மலர்கள்' படத்தில் கேரக்டர் ரோலுக்கான சான்ஸ், அஜித்தைத் தேடிவந்தது. 'பைக் ரேஸில் கலந்துகொள்ள காசு வேண்டும்' என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு, மறுப்பு தெரிவிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட காலகட்டம் அது. இந்தப் படத்திலும் விக்ரம்தான் அஜித்துக்குக் குரல் கொடுத்தார். பைக் ரேஸில் நடந்த விபத்து ஒன்றில் அஜித் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். 'பவித்ரா' படத்தில் அஜித்துக்கு ஆபரேஷன் முடிந்து படுக்கையில் இருக்கும் கதாபாத்திரம். 'நிஜத்திலே அப்படித்தானே இருக்கோம், இதையே படத்துல பண்ணுவோம்' என்று நினைத்த அஜித், 'பவித்ரா' படத்தில் நடிக்கக் கமிட்டானார். பின்னர் ஒரு சில மனக் கசப்புகளோடுதான் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுதான் அஜித்தை ஒரு நடிகனாக பார்த்துக்கொண்டிருந்த சமயம். அந்த சமயத்தில் சில டி.வி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அஜித்தைத் தேடி வந்தது. ஆனால், 'சினிமாவுக்கு வந்த பின் எதற்காக மறுபடியும் டி.வி சீரியலில் நடிக்கவேண்டும்' என்ற எண்ணம் அஜித்தின் சினிமா ஆசையை உத்வேகப்படுத்தியது. இப்படித்தான் இவருக்குள் இருந்த குழப்பம், ஆசையாக மாறியது. அது 'ஆசை' படத்திலே நிறைவேறியது. இந்தப் படம்தான் அஜித் என்ற ஒரு நடிகனை திரும்பிப் பார்க்க வைத்தது.  

'அமர்களம்' காதல்...

'அமர்களம்' படத்தில் நடிக்க ஷாலினியிடம் பேசும்போது முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. 'சின்ன வயசுல இருந்து எனக்கு நடிச்சு நடிச்சு திகட்டிருச்சு, நான் படிக்கப்போறேன்', என்று இயக்குநர் சரணிடம் சொல்லியிருக்கிறார். சரண், இதை அஜித்திடம் சொல்ல உடனே ஷாலினிக்கு போன் செய்து பேசியிருக்கிறார். ஷாலினியின் தோழிகள் அஜித்தின் ரசிகை என்பதால், ஷாலினி நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் ஆரம்பித்தது. தியேட்டரில் இருந்து ரீல் பெட்டியை எடுத்துவரும் காட்சியில் ஷாலினியின் கையை கத்தியால் கிழிப்பது போன்ற காட்சி. இதைப் படமாக்கும்போது உண்மையிலேயே ஷாலினியின் கைகள் கிழித்து ரத்தம் வரத் தொடங்கியது. ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளமும் உறைந்துபோனது. அஜித் உடனடியாக முதலுதவி செய்தார். ஷாலினி இனி இந்தப் படத்தில் நடிக்கமாட்டார் என்று அனைவரும் நினைக்க, ஷாலினியின் அப்பா, 'ஷாலுவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டா, படம் கண்டிப்பா ஹிட்' என்று சென்டிமென்ட் வசனத்தைப் பேசியிருக்கிறார்.

அஜித் - ஷாலினி

இப்படி படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த சின்னச் சின்ன விஷயங்கள், அஜித்தின் காதல் செல்களுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஒருநாள் வேகமாக இயக்குநர் சரணிடம் சென்று, 'சரண் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஒரே ஷெட்யூல்ல முடிச்சிடுங்க. ரொம்பநாள் இந்தப் படத்துல நடிச்சேன்னா ஷாலுவை லவ் பண்ணிடுவேன் போல' எனச் சொல்லியிருக்கிறார். ஷாலினியும் அப்போது பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தார். இதைக்கேட்டதும், ஷாலினி வெட்கத்தில் தலை குனிந்துவிட்டார். அங்கேதான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின் வரும் காதல் காட்சிகளுக்கும் அது உதவியது. அஜித் - ஷாலினியின் காதல்தான், காதலிக்கும் பல ரோமியோ - ஜூலியட்டுகளுக்கு இன்ஸ்பிரேஷன்.

தமிழ் சினிமாவில் உதித்த இரட்டைகள்...

தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா, சிவாஜி - எம்.ஜி.ஆர், ரஜினி - கமல் என ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து பல போட்டியாளர்களைக் கண்டுள்ளது தமிழ்சினிமா. நடிப்பு ஜாம்பவான்களின் ஆதிக்கம், தமிழ்சினிமாவில் தலைதூக்கி இருந்த நேரத்தில் வந்தவர்கள்தான், விஜய் - அஜித். இவர்களைத் தொடர்ந்து தனுஷ் - சிம்பு, விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன், என இரட்டைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், வரிசையில் விஜய், அஜித் இடம்பெற்றது சரி, தமிழ் சினிமாவின் ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தில் இடம்பிடிப்பதும் சரி, அது அவ்வளவு சாதரணமான காரியமில்லை. 

இதற்காக இருவரும் தனித்தனியே சந்தித்த இன்னல்களும், இடையூருகளும் ஏராளம். 'நாளைய தீர்ப்பு' படத்தின் தோல்விக்குப் பின், 'இந்த மூஞ்சியை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்கவேண்டியிருக்கு' என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்காக மூலையில் முடங்கியிருந்தால், 'இளைய தளபதி' விஜய்யையும் நாம் பார்த்திருக்க முடியாது. பல அறுவை சிகிச்சைகளுக்கு இரையான போதும், தன்னம்பிக்கையைக் கைவிடாமல் ரசிகர்களுக்காகப் படம் நடிக்கும் அஜித்தையும் நாம் பார்த்திருக்க முடியாது. இருவருமே தங்களைத் தானே செதுக்கியவர்கள்தான். 

அஜித்

சிவாஜியும், கமலும் ஒரே வழியில் பயணிப்பவர்கள். அதாவது, அவர்கள் படத்தில் அவர்களையே சாகடிக்கத் தயங்கமாட்டார்கள். 'நாயகன்' என்ற பிம்பத்தை உடைத்து எந்த விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர்கள். அதற்கு நேரெதினாவர்கள்தான், ரஜினியும், எம்.ஜி.ஆரும். அவர்கள் படத்தில் சமூகக் கருத்து, தொழிலாளர் வர்க்கத்திற்குக் குரல் கொடுப்பது, தாய் சொல்லை மதிப்பது என இதுபோன்ற காட்சியமைப்புகள்தான் அதிகமாக இருக்கும். இப்படிக் கதை பார்த்து, களம் பார்த்து படங்கள் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான், இந்த இருவரும் காதல் நாயகர்களாகக் களமிறங்கினார்கள். ஆம், இவர்கள் ஆரம்ப காலத்தில் அனைத்துப் படங்களும் காதல் கதைகொண்ட படங்கள்தான். அஜித் 'காதல் மன்னனாக' ஆட்சி செய்ய நினைத்தால், விஜய் 'காதலுக்கு மரியாதை' கொடுத்துக்கொண்டிருப்பார். அஜித் 'அவள் வருவாளா' என்று காத்துக்கொண்டிருந்தால், விஜய் 'துள்ளாத மனதை வைத்துத் துள்ளி'க்கொண்டிருப்பார். இப்படி இருக்கும்போது, 'மாஸ்' என்ற வட்டத்திற்குள் இருவரும் சுருங்கியது எப்போது?

ரசிகர்கள் சண்டை...

அஜித், அவரது 30-வது படமாக, 'தக்‌ஷத்' என்ற இந்திப் படத்தின் ரீ-மேக்கில் நடிப்பதாக இருந்தது. அந்த சமயத்தில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்தப் படம் டிராப் ஆனது. அந்த சமயத்தில் அஜித்துக்கு ஒரு இயக்குநரின் ஞாபகம் வருகிறது. அவரை அழைத்து, 'நீங்கதானே தம்பி எஸ்.ஜே.சூர்யா அசிஸ்டன்ட். 'வாலி' பட ஸ்பாட்ல பார்த்திருக்கேன். ஏதாவது கதை வெச்சுருக்கீங்களா?' எனக் கேட்டுள்ளார். 'தங்கையின் காதலனைக் கொல்லத்துடிக்கும் அண்ணன். கொடுத்த சத்தியத்துக்காக தங்கையின் காதலனைக் காப்பாற்றப் போராடும் வளர்ப்பு அண்ணன்' என படத்தின் ஒன்லைனை சொல்லியிருக்கிறார், அந்த அறிமுக இயக்குநர். அவர்தான், இன்றைய வெற்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் பெயர் 'தீனா'. அந்தப் படத்தின் மூலம்தான் மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார், அஜித். இவ்வளவும் நடந்தது 2001-ல். அடுத்த ஒரு வருடத்தில் 'திருமலை' படத்தின் மூலம் மாஸாக மாறினார், விஜய். இப்படித்தான் இருவரும் மாஸ் என்ற வட்டத்திற்குள் வந்தார்கள். இதுக்குத் தகுந்த மாதிரி ரசிகர்கள் சண்டையும் ஆரம்பித்தது. 

அஜித்தை ஏன் பிடிக்கும்?

அஜித்

எந்த விழாக்களிலும் கலந்துகொள்வது இல்லை, சமூகப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. ரசிகர் மன்றங்களையும் வேண்டாமென ஒதுக்கித் தள்ளியவர், யார் நினைத்தாலும் அவ்வளவு எளிதில் அவரைப் பார்க்க முடியாது, பேட்டிகள் கொடுக்கமாட்டார், தொடர் தோல்வியடைந்த பின்னும், ஒரே இயக்குநருடன் படம் பண்ணுபவர்... இப்படிப் பல விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டாலும், அஜித்தை ஏன் பிடிக்கிறது? என்று அஜித் ரசிகர்களிடம் கேட்டால் அவர்களது பதில், 'அஜித் மிகவும் தன்னம்பிக்கையானவர்', 'எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வந்தவர்', 'விளம்பரங்களை விரும்பாதவர்', 'வெறித்தனமாக கார், பைக் ஓட்டுவார்' எனத் திரைக்கு வெளியில் அவருக்கு இருக்கும் பிம்பங்களை வைத்துதான் அவருக்கு ரசிகனாக இருக்கிறார்கள். ஆகச்சிறந்த ஒரு கலைஞனின் திறனே சிறப்பாக நடிப்பதுதானே என்று கேட்டால், அது எதுவும் அஜித்திடம் எடுபடாது. 'திரையில் உங்களைப் பார்த்தாலே போதும்' என்ற மனநிலையில்தான் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் சார்பாக உங்களிடம் (அஜித்திடம்) ஒரு கோரிக்கை...

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். உங்களை எந்தப் பொது விழாக்களிலும் நாங்கள் பார்க்க வேண்டாம், பேட்டியும் கொடுக்க வேண்டாம். எந்த சமூக பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டாம், சமூக வலைதளங்களில் வைரலாகும் உங்களது புகைப்படமே எங்களுக்குப் போதும். எந்த பெரிய இயக்குநர்களுடனும் நீங்கள் படம் பண்ண வேண்டாம். என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் அனைவரும் கலாய்த்தாலும் பரவாயில்லை. படம் பண்ணுங்க, உங்களை ஸ்க்ரீன்ல பார்த்தாலே போதும்!

பிறந்தநாள் வாழ்த்துகள் தல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!