Published:Updated:

எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்

எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்

ஓவியம் : ஹாசிப்கான்

எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்

ஓவியம் : ஹாசிப்கான்

Published:Updated:
எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்
எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்

மிழ்க் கலாசாரம் என்பதே பல பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவோடு பிணைக்கப்பட்டதுதான். தமிழர்களுக்கு இசை என்றால்... திரையிசை; இலக்கியம் என்றால்... சினிமா பாடல்கள்; ‘தத்துவம்’ என்ற சொல்லின் விரிவான பொருளை ஒதுக்கிவைத்து விட்டு, ‘சட்டி சுட்டதடா, கைவிட்ட
தடா’, ‘போனால் போகட்டும் போடா’ போன்ற வாழ்வின் நிலையாமையைச் சொல்லும் கண்ணதாசனின் பாடல்களைத் ‘தத்துவப் பாடல்கள்’ என்று வரித்துக்கொண்டவர்கள் தமிழர்கள்.

சொலவடைகளும் பழமொழிகளும் நிரம்பியவை தமிழரின் மரபு. ஆனால், சமீபமாகச் சொலவடைகள், பழமொழிகளின் இடத்தை வடிவேலுவின் நகைச்சுவை வசனங்களும் பிரபல நாயகர்களின் பஞ்ச் டயலாக்குகளும் பதிலீடு செய்கின்றன. இப்படியாக மொழி அமைப்பு தொடங்கி அன்றாட வாழ்வு வரை தமிழ்க் கலாசாரமும் தமிழ் சினிமாவும் பின்னிப் பிணைந்துள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் தமிழர்களால் உச்சநாயகர்களாகக் கொண்டாடப் படும் மூன்று நடிகர்கள் குறித்து இந்தக் கட்டுரை ஆராய முயல்கிறது. மாறிவந்த ரசிக மனோபாவத்தின் வழியாக தமிழ்ச்சூழலைப் புரிந்துகொள்ளும் முயற்சி இது என்றும் சொல்லலாம்.

தொடக்கத்தில் இருந்தே இருமை எதிர்வுகளாக எதிரிணை நாயகர்களை உருவாக்கிக்கொண்டாடுவது தமிழ் ரசிக மனோபாவத்தின் அடிப்படை. தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ், சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி என்று அது தொடர்கிறது. பொதுவாகத் தமிழர்கள் பிம்பங்களின் அடிப்படையிலேயே தங்களுக்கான உச்ச நாயகர்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். திரையில் அந்த நடிகர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரங்கள் வழியாகக் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட இயல்புகள் குறித்த தகவல்களின் அடிப்படையிலான பிம்பங்கள் என இருவகையான பிம்பங்கள் வழியாகவும் உச்ச நாயகர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இந்த பிம்பங்கள் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் காலகட்டங்களில் எப்படி மாறிவந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்ற வரிசையில் அஜித் - விஜய் என்ற எதிரிணை நாயகர்களை வைப்பது கொஞ்சம் குழப்பமானதுதான். விஜய்தான் அந்த இடத்துக்கு வருபவர். ஆனாலும், விஜயின் செல்வாக்கை மீறி அஜித்துக்கான ஆரவாரம் ஏன் தூக்கலாக அமைகிறது?

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையில் ரஜினிக்கும் கமலுக்கும் இடையில் சில துல்லியமான வித்தியாசங்கள் இருந்தன. சிவாஜியும் கமலும் நடிப்புக்குச் சவால் விடும் பாத்திரங்களை ஏற்றவர்கள். நாயகப் பிம்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் குடிகாரனாக, மனநோயாளியாக, தேசத் துரோகியாக, திருடனாக, நோயாளியாக, பெண் பித்தராக... என்று இப்படிப் பல பாத்திரங்களை ஏற்றவர்கள். பாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்கள் உருவைச் சிதைத்துக்கொண்டவர்கள். ஆனால், எம்.ஜி.ஆரோ, ரஜினியோ... இப்படியான பரிசோதனை முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக்
கொண்டவர்கள் கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்

அடிப்படையில் எம்.ஜி.ஆர் படங்கள் என்பவை உருமாற்றப்பட்ட நீதிக்கதைகள் தான். எம்.ஜி.ஆர் என்றால் தொழிலாளிகளுக்காகக் குரல் கொடுப்பவர், தாய் சொல்லைத் தட்டாதவர், அம்மாவுக்காக எதையும் தியாகம்செய்பவர், இரண்டு பெண்களால் காதலிக்கப்படும் வசீகரம் நிறைந்தவர், ஆனால் பெரும்பாலும் ஏழைப் பெண்ணையே காதலித்து மணம் முடிப்பவர், சட்டத்தை மீறாதவர், தேசத்தைக் காப்பவர், பெண்களின் மானத்தைக் கொடியவர்களிடமிருந்து காப்பாற்றுபவர் என்ற பிம்பங்களின் அடிப்படையிலானவை அவரது படங்கள்.

ரஜினி நாயகனாக உருவாகிவந்த 80களின் காலகட்டம், வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிறைந்த காலகட்டம். அதனால் ‘கோபக்கார இளைஞன்’ பாத்திரங்களை அவரது தொடக்கக் காலப் படங்கள் பிரதிபலித்தன. பின்பு அதோடு, பாம்பைக் கண்டாலே பயப்பட்டு நடுங்கும் அப்பாவி இளைஞன், திமிர் பிடித்த பெண்ணை அடக்கும் வீரமுள்ள ஆண்மகன், மத நம்பிக்கையும் பக்தியும்கொண்ட இளைஞன் போன்ற பிம்பங்களும் அவர் படங்களில் இணைந்துகொண்டன. எப்படிப் பார்த்தாலும் அடிப்படையில் எம்.ஜி.ஆர் படங்களைப் போலவே ரஜினி படங்களும் ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கும், அம்மா, தங்கை போன்ற பெண்கள் மீது பாசம் பொழியும் நேர்மையான இளைஞன் என்ற பிம்பங்களின் அடிப்படையில் அமைந்தவையே.

மிக முக்கியமாக சிவாஜியும் கமலும்  படத்தின் இடையிலோ, இறுதியிலோ மரணமடைவது போன்ற காட்சிகளை வைக்கத் தயங்காதவர்கள். `அந்த நாள்’, `பாசமலர்’ என்று சிவாஜிக்கும், `வாழ்வே மாயம்’, `குருதிப்புனல்’ என்று கமலுக்கும் பல படங்களைச் சொல்லலாம். ஆனால், எம்.ஜி.ஆர் இறப்பதை அவரது ரசிகர்கள் விரும்புவது இல்லை. அவர் இறந்ததைப் போல் நடித்த ‘ராஜா தேசிங்கு’ ஒரு படுதோல்விப் படம். ரஜினியோ செத்தாலும்கூட உயிர்த்தெழுவார். ‘அதிசயப்பிறவி’ படத்தில் ஒரு ரஜினி இறந்தாலும் அச்சு அசல் இன்னொரு ரஜினி இருப்பார்.  ‘சிவாஜி’ படத்தில் சிவாஜியாக ‘இறக்கும்’ ரஜினி ‘எம்.ஜி.ஆராக’ உயிர்த்தெழுந்து தலையில் தாளமிட்டபடியே தோன்றுவார்.

இப்படி எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு இடையிலும் ரஜினி - கமலுக்கு இடையிலும் துல்லியமான கோட்டை நம்மால் வரைய முடியும். ஆனால், அஜித் - விஜய்க்கு இடையில் அப்படியான துல்லியமான வித்தியாசங்களைச் சொல்ல முடியாது. இருவரும் தொடக்கக் காலங்களில் காதல் படங்களில் நடித்ததன் மூலம் இளமை நாயகர்களாகத் தங்களை நிறுவிக்கொண்டவர்கள். பிறகு, ‘ரெட்’ படத்தின் மூலம் அஜித்தும் ‘திருமலை’ படத்தின் மூலம் விஜய்யும் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தார்கள். ஒருவரை ஒருவர் சீண்டும் பஞ்ச் டயலாக்குகள், தொடக்கக் காட்சிப் பாடல்கள் என இருவரின் படங்களும் ஒரே மாதிரியானவை. இருவருமே சவாலான பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் இல்லை.

பிறகு ஏன் எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில் விஜயை இணைக்காமல் அஜித்தை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்? காரணம், எம்.ஜி.ஆர், ரஜினிக்கு இருந்ததைப் போலவே அஜித்துக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனாலேயே சமீபகாலத் திரைப்படங்களில் தொடர்பே இல்லாமல் கூட அஜித்தின் பெயரோ, படமோ, சினிமா போஸ்டரோ இடம்பெறுகிறது. அப்படி அஜித்தின் பெயர் சினிமாக்களிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ உச்சரிக்கப்படும்போதெல்லாம் ஆரவாரம் விண்ணைப் பிளக்கிறது; விசில் பறக்கிறது.

சரி, ‘ஏன் உங்களுக்கு அஜித்தைப் பிடிக்கிறது?’ என்று கேட்டால் வரக்கூடிய பதில்கள், ‘அஜித் மிகத் தன்னம்பிக்கை கொண்டவர்; எந்த சினிமா குடும்பப் பின்னணியும் இல்லாமல் முன்னுக்கு வந்தவர்; நிறைய அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர், ரேஸில் ஆர்வம் உள்ளவர், நன்றாகப் பிரியாணி சமைப்பவர், விளம்பரங்களை விரும்பாதவர்.’ சரி, இதனால் ஒரு நடிகரை வெறித்தனமாகப் பிடிக்க வேண்டுமா? ஒரு நடிகரின் வேலை சிறப்பாக நடிப்பதுதானே என்று கேட்டால், யாரிடமும் பதில் இருக்காது. ‘எம்.ஜி.ஆர் கொடை வள்ளல்’ என்று திரைக்கு வெளியிலான பிம்பங்களின் அடிப்படையில் அவருக்கான அபிமானம் கட்டப்பட்டதைப்போல அஜித் மீதான முரட்டுத்தனமான அபிமானங்களின் அடிப்படை, அஜித் பற்றி திரைக்கு வெளியே கட்டப்பட்ட பிம்பங்கள்தான்.

சினிமாவில் எம்.ஜி.ஆரும் ரஜினியும் நாயகர்களுக்கு என்று உருவாக்கிய பிம்பங்களில் இருந்து விலகியவை அஜித்தின் பிம்பங்கள். இதை அஜித்தின் சாதனை என்று சொல்ல முடியாது. மாறிவந்துள்ள ரசிக மனோபாவமும் அதற்கு அடிப்படையான சமூக-பொருளாதாரச் சூழலும்தான் முக்கியமான காரணங்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அஜித்தை விரும்புவதற்கான முக்கியக் காரணமாக அவரது ரசிகர்கள் சொல்வது, ‘அவர் தானாகவே முன்னுக்கு வந்தவர்’ என்பது. எம்.ஜி.ஆர்., ரஜினி காலத்தைவிட இப்போது தமிழ்த் திரையுலகில் சினிமா குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. நாயகர்கள் என்றால், விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, நாயகிகள் என்றால், கீர்த்தி சுரேஷ், ஸ்ருதிஹாசன், வரலெட்சுமி, இசையமைப்பாளர்கள் என்றால் கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர்களில் மதன் கார்க்கி என்று சினிமா குடும்பங்களில் இருந்து வாரிசுகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், தமிழக அரசியலில் மேலோங்கியுள்ள குடும்ப அரசியலின் மீதான வெறுப்புகூட அஜித்தின் ‘தானாக முன்னுக்கு வந்தவர்’ என்ற பிம்பத்துக்குப் பெருகும் ஆதரவுக்குக் காரணமாக இருக்கலாம். மீண்டும் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித்துக்குத் திரும்பலாம்.

எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்

எம்.ஜி.ஆர் படங்களில் அநீதிக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், அதில் வன்முறை மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். சண்டைக்காட்சிகளும்கூட திருவிழாவில் வேடிக்கை பார்க்கிற கேளிக்கை மனோபாவத்தின் அடிப்படையிலானதாக இருக்குமே தவிர, ரத்தம் கொப்பளிக்கும் வன்முறைக் காட்சிகளாக இருக்காது. முக்கியமாக, பல எம்.ஜி.ஆர் படங்களின் இறுதியில் வில்லன்கள் மனம் திருந்திவிடுவார்கள் அல்லது காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். ‘அநீதி இழைப்பவர்கள் மனம் திருந்துவதும் சட்டப்படி தண்டிக்கப்படுவதும்’ மட்டுமே எம்.ஜி.ஆர் படங்களின் நோக்கமே தவிர, முற்றிலுமாக எதிரிகளை அழித்தொழிப்பது இல்லை. அன்றைய காலகட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த காந்திய அரசியல், பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை விடுதலை அரசியல், அண்ணாவின் தலைமையிலான திராவிட அரசியல் என எல்லாமே சாத்வீகப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை எம்.ஜி.ஆர் படங்களிலும் பிரதிபலித்தன. ஆனால் ரஜினி படங்களிலோ, வன்முறை நிறைந்த சண்டைக்காட்சிகளும் எதிரிகளைத் தாக்கிக் காயப்படுத்துவதுமான காட்சிகளே நிறைந்திருந்தன. அஜித்தின் படங்களிலோ அது எதிரிகளை அழித்தொழிப்பதாக உச்சம் பெற்றன. குறைந்தபட்சம் ஐந்து படங்களிலாவது அஜித் துப்பாக்கியும் கையுமாக அலைந்திருப்பார்.

எம்.ஜி.ஆர்., படங்களில் தன்னை ஒழுக்கவாதியாக நிறுவிக்கொண்டவர். குடிக்கும் புகைக்கும் தடை. தப்பித்தவறிக் குடித்தாலும் ‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?’ என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டவர். ஆனால், ரஜினியோ சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் கவ்வியபடியே அறிமுகமானவர். அவருக்கான ஆரவாரமான வரவேற்பு அந்த ஸ்டைலான சிகரெட் காட்சிகள் மூலமே அமைந்தன. அஜித்தோ ‘சத்தியமா இனிமே குடிக்கக் கூடாது’ என்று ‘மங்காத்தா’வில் ஹேங் ஓவரில் புலம்புபவர். வெறுமனே பழக்க வழக்கங்களின் அடிப்படையிலான மதிப்பீடுகள் மட்டுமல்ல, அடிப்படை அறவியல் மதிப்பீடுகள்கூட எம்.ஜி.ஆர் காலத்துக்கும் அஜித் காலத்துக்கும் மாறிவந்திருப்பதை அவர்களது படங்களை ஆராய்ந்தால் புரிந்துகொள்ளலாம்.

எம்.ஜி.ஆரைப் போல் அல்லாமல் ரஜினி குடிக்கும் புகைக்கும் காட்சிகளில் நடித்தாலும் அடிப்படையில் ரஜினியும் அநீதியை எதிர்த்த, நீதியின் பக்கம் நிற்கும் நாயகன்தான். அடிதடி, தகராறில் ஈடுபடுபவராக இருந்தாலும் பிறகு மனம் திருந்தி நேர்வழியில் செல்பவர் (உதாரணம்: நல்லவனுக்கு நல்லவன்). அடிப்படையில் நாயகர்கள் என்பவர்கள் நீதியை நிலை நாட்டும் நேர்மையாளர்கள், சொந்த வாழ்க்கையில் தன் கண் முன்னே நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்க முடியாத பார்வையாளர்களுக்கான பிம்ப வடிகால்கள் என்று எம்.ஜி.ஆரும் ரஜினியும் கட்டமைத்த பிம்பங்களை ‘மங்காத்தா’ மூலம் உடைத்தவர் அஜித். அங்கு நீதி இல்லை; அறம் இல்லை; எந்த மதிப்பீடுகளும் தேவை இல்லை. பணம், பணம், பணம்... (Money, Money, Money) அது மட்டும்தான் வாழ்வுக்குத் தேவை; அதற்காக எதையும் செய்யலாம். பெண்களை நேசிப்பது, அவர்களைக் காப்பாற்றுவது என்று எம்.ஜி.ஆர்., ரஜினி படங்களில் இருக்கும் பிம்பங்கள் ‘மங்காத்தா’வில் முற்றிலுமாகத் தலைகீழானது. பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக பொய்யாகக் காதலிப்பவர், காதலியின் தந்தையை ஓடும் காரில் இருந்து தள்ளிவிடத் தயங்காதவர் ‘மங்காத்தா’ அஜித். பணத்துக்காக காவல் துறையின் நீதி, நேர்மை எல்லாவற்றையும் கடாசித் தள்ளியவர், எவரை வேண்டுமானாலும் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து பிளாக்மெயில் செய்பவர்; யாரை வேண்டுமானாலும் போட்டுத் தள்ளத் தயங்காதவர். உண்மையில் எம்.ஜி.ஆர்., ரஜினி போன்ற நாயகர்களின் ‘கடமை’கள் எதையும் ‘மங்காத்தா’ அஜித் செய்வதே இல்லை. சொல்லப்போனால், அதில் ஹீரோவே இல்லை. முற்றிலுமான வில்லன் பாத்திரம் தமிழ் ரசிகர்களால் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ‘ஆரண்யகாண்டம்’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ படங்களும் இதே காலகட்டத்தில் வந்த அறவியலுக்கு மாறான, பணத்தை அடிப்படையாகக்கொண்ட படங்கள் என்றாலும் ’மங்காத்தா’வில் இதை உச்சநாயகரான அஜித் செய்தார் என்பதுதான் முக்கியமானது.

அப்படியானால் நீதி, நேர்மை, ஒழுக்க மதிப்பீடுகளின் அடிப்படையிலான நாயகப் பிம்பம் என்ன ஆனது? காந்திய அரசியல், திராவிட அரசியல் என லட்சியவாதங்கள் தளர்வுற்ற பலவீனமான காலம் இது. இங்கே ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் லட்சியவாதங்களுக்கும் தியாகங்களுக்கும் எந்த மதிப்பும் இல்லை. நுகர்வுக் கலாசாரத்தை அடிப்படையாகக்கொண்ட உலகமயப் பொருளாதாரச் சூழலில் எல்லாமே, ‘மங்காத்தா’ போன்ற சூதாட்டம்தான். தனியார் பள்ளிகளில் நன்கொடைகளைக் கொட்டும் சமூகம், கல்வி என்பது வேலைவாய்ப்புக்கும் சந்தைக்கும் என்ற முடிவுக்கு வந்த சமூகம், விளம்பரங்களில் வரும் எல்லாவற்றையும் வாங்கிக் குவித்து வீட்டை நிறைப்பதற்காக எல்லா வகைகளிலும் பணம் சம்பாதிக்கத் துடிக்கும் சமூகம், பள்ளிகளைத் தனியார்வசம் கொடுத்துவிட்டு சாராயம் விற்கும் அரசாங்கம்... இந்த சமூகப் பொருளாதாரச் சூழலே அஜித்தின் பிம்பங்களுக்கு நியாயம் சேர்த்தது. அவருக்கு எம்.ஜி.ஆரைப் போல திரையில் திராவிட அரசியல், தொடக்ககால ரஜினியைப் போல ‘அநீதிக்கு எதிரான கோபக்கார இளைஞன்’ பிம்பம் என்று சுமைகள் எதுவும் இல்லை. ’ரெட்’ படத்தில் இருந்தே `தீனா’, `பில்லா’, `பில்லா 2’, `வில்லன்’, `சிட்டிசன்’ என்று பெரும்பாலும் அஜித் எதிர்மறைப் பிம்பங்களை அதிகம் ஏற்று நடித்திருக்கிறார் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்களையும் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் தன் படங்களில் மட்டும் அல்ல... சினிமாவுக்கு வெளியிலும் தன் பிம்பங்கள் குறித்த அதீதப் பிரக்ஞைகொண்டவர். தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும் இல்லாத எம்.ஜி.ஆரை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அவரது சடலம்கூட தொப்பியுடனும் கறுப்புக் கண்ணாடியுடனுமே புதைக்கப்பட்டது. தன் பிம்பத்தைக் கட்டிக்காப்பாற்றுவது குறித்த எம்.ஜி.ஆரின் அதீத அக்கறையை விளக்க இரண்டு சம்பவங்களை எடுத்துக்காட்டாகச் சொல்வார் ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். 1981-ம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரு மாணவர் அமைப்பின் தலைவர் மாலையிட்டபோது எம்.ஜி.ஆரின் தொப்பியைச் சாய்த்துவிட, ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர் அந்த இளைஞரை அறைந்தாராம். அதேபோல் கர்நாடகா, கொல்லூர் மூகாம்பிகை கோயிலைவிட்டு எம்.ஜி.ஆர் வெளியே வந்தபோது தொப்பி, கண்ணாடி இல்லாத தோற்றத்தை ஒரு புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்க முயற்சிக்க, எம்.ஜி.ஆரின் பாதுகாவலர்கள் கேமராவில் இருந்து நெகட்டிவை எடுத்து அழித்தார்களாம். (`பிம்பச்சிறை’ - எம்.எஸ்.எஸ்.பாண்டியன், தமிழில் பூ.கொ.சரவணன், பிரக்ஞை பதிப்பகம் வெளியீடு, பக்கம் 140).

எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்

ஆனால் ரஜினியோ, இதற்கு நேரெதிர். படங்களில் தனக்கான இளமைத் தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ளச் சிரமப்படுபவர். ஆனால் பொது இடங்களிலோ, வழுக்கைத் தலையுடனும் மழிக்காத முகத்துடனும் வலம் வருபவர். ஆனால் அஜித்தோ, படங்களிலும்கூட இப்போது நரைத்த தலையுடன் தோன்றுகிறார். அது ‘சால்ட் பெப்பர் லுக்’ என்று போற்றப்படுகிறது. நரைத்த முடியுடன் தோன்றுவதற்கு ரஜினி ‘கபாலி’ வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் அஜித்தோ, சர்வசாதாரணமாக நரைத்த தலைமுடியுடன் தோன்றுகிறார்.

மேலும் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் மூவருக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமை, மூவருமே தமிழர்கள் அல்ல என்பதுதான். தமிழ்ச் சமூகம் அடிப்படையில் சாதியச் சமூகம். சினிமாவையும் நடிகர்களையும் அது அப்படித்தான் அணுகியது. ரசிகர் மன்றங்களின் பின்னுள்ள சாதிய அரசியல் குறித்து தினம் ஒரு கட்டுரை எழுதலாம். இப்படியான சாதிய மனநிலையில் உறைந்துள்ள தமிழ் ரசிகர்கள், பெரும்பாலும் தமிழர்கள் அல்லாத நடிகர்களையே தங்கள் உச்ச நாயகர்களாக வரித்துக்கொண்டார்கள். மூவரின் படங்களிலும் உள்ள இன்னும் ஒரு முக்கிய ஒற்றுமை, பெண்களைக் குறித்த பார்வை.

பெரியாரைத் தங்கள் முன்னோடியாகச் சொல்லிக்கொண்ட தி.மு.க-வினர் பெரியாரிடமிருந்து வேறுபட்ட முக்கியமான புள்ளி, அவர்களது ஆணாதிக்கப் பார்வை. இது அப்பட்டமாக எம்.ஜி.ஆர் படங்களில் பிரதிபலித்தது. எல்லாப் படங்களிலும் மானபங்கப்படுத்தப்படும் பெண்கள் எம்.ஜி.ஆர் வந்து காப்பாற்றுவதற்காகக் காத்திருந்தனர். ‘இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை’ என்று ஆணாதிக்க வரையறைகளை வரையறுத்துத் தள்ளினார் எம்.ஜி.ஆர். ‘பொம்பளை பொம்பளையா இருக்கணும்’ என்ற ரஜினியின் படங்களில் மேலோங்கியிருந்த ஆணாதிக்கக்கூறுகள் பற்றித் தனியே சொல்லவேண்டியது இல்லை. அஜித் படங்களிலோ, பெண்களுக்கான இடம் என எதுவுமே இல்லை.

தமிழ் சினிமா என்பதே  பெரிதும் ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்படும் ஆண் சினிமாதான். இப்படியான சினிமா பிம்பங்களால் உருவாக்கப்படும் உச்ச நாயகர்களும் ஆணாதிக்கத்தைப் பிரதிபலிப்பதில் புதிதாக என்ன ஆச்சர்யம்... என்ன அதிர்ச்சி இருக்கப்போகிறது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism