Published:Updated:

வீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை..! - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி?

வீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை..! - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி?
வீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை..! - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி?

அங்கே எல்லையில் பணியாற்ற வேண்டுமென்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு ராணுவவீரன். அவனது முரட்டு குணமே அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. லட்சியத்திற்காக தனது குணத்தை மாற்றிக்கொள்கிறானா, அல்லது குணம்தான் முக்கியம் என லட்சியத்தை துறக்கிறானா என்பதுதான் `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படத்தின் ஒன்-லைன் என ஒரேயொரு லைனைச் சொல்ல ஆசைதான். என்ன செய்ய இதேபோல் படத்தில் ஆறேழு ஒன்-லைன்கள் இருக்கின்றன. 

`பசிச்சா நல்லா சாப்பிடுவேன், தூக்கம் வந்தால் நல்லா தூங்குவேன், கோபம் வந்தால் நல்லா அடிப்பேன்' என எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட்டு, கையில் கிடைத்தையெல்லாம் வைத்து மண்டையைப் பிளப்பவன் சூர்யா ( அல்லு அர்ஜூன் ). அட்டாக் ஹேர்ஸ்டைலில் கோடுபோட்டு கோக்குமாக்காகத் திரியும் ஒரு ஆர்மி சோல்ஜர். பணியில் வீரம், விவேகம், விஸ்வாசம் அத்தனையும் இருந்தும், கோபம் எனும் ஒற்றை உணர்வால் ஒரு மனிதாகவே மைனஸ் மார்க் வாங்குகிறான். எல்லையில் பணியாற்ற வேண்டும் என்கிற அவனது வாழ்நாள் லட்சியமும், கோபத்தால் தடைபட்டுப் போகிறது. தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலியை, ராணுவ வேலையை, அத்தனையும் இழக்கிறான். அவன் இழந்ததையெல்லாம் திரும்பப்பெற இறுதி வாய்ப்பாக,  பிரபல மனநல மருத்துவர் ராமகிருஷ்ண ராஜுவிடம் ( அர்ஜூன் ) ஒரேயொரு கையெழுத்து வாங்கிவரச் சொல்கிறார் மூத்த ராணுவ அதிகாரி. கோபக்காரன் சூர்யா, பொறுப்பானவனாக, பொறுமைசாலியாக மாறி ராமகிருஷ்ண ராஜூவிடம் நடத்தைச் சான்றிதழில் `வெரி குட்' எனக் கையெழுத்து வாங்குகிறானா என்பதாக கதை நகர்கிறது. மேற்சொன்ன அம்புட்டு சம்பவமும் படம் ஆரம்பித்து முப்பது நிமிடங்களிலேயே நடந்துவிடுகிறது. அதன்பின், என்ன நடக்கிறதென்றால் என்னென்னமோ நடக்கிறது. சரத்குமார் வருகிறார், ஹரீஷ் உத்தமன் வருகிறார், `சிங்கம் -3' வில்லன் தாகூர் அனுப் சிங் வருகிறார். கிட்டத்தட்ட நடிக்க ஜிம்மிலிருந்து ஆள்பிடித்து வந்தாற்போல், படத்தில் அத்தனை பாடிபில்டர்கள்.

ஆந்திர தேசத்து `ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜூன்... வட்டக் கண்ணாடி, வாயில் சுருட்டு, கேமோஃப்ளேக் பேன்ட், அரைக்கை டி-ஷர்ட் என செம ஸ்டைலாக இருக்கிறார். நடனத்தில் பிச்சு உதறுகிறார், ஆக்‌ஷன் காட்சிகளில் அசரடிக்கிறார், நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். படத்தில் அவருக்குக் கொடுத்த வேலையை குட்பாயாக செய்துமுடித்திருக்கிறார். நாயகி அனு இம்மானுவேல், டோலிவுட் கமர்ஷியல் படத்தின் நாயகிகள் எப்படியிருப்பார்களே அப்படியே இருக்கிறார்; நிறைய கிளாமர், கொஞ்சம் நடிப்பு. அல்லு அர்ஜுனின் அப்பாவாக `ஆக்‌ஷன் கிங்' அர்ஜூன். அமைதியான, அலட்டலில்லாத நடிப்பு. வில்லன் கல்லாவாக சரத்குமார், ஸ்க்ரீனில் சரத்குமாரைக் காட்டியதும் நம் ஆட்கள் `குபுக்'கெனச் சிரித்துவிட்டார்கள். அந்த ஊரில் மாஸ் வில்லனாக இருப்பாரோ, என்னவோ! சில காட்சிகளிலேயே வந்தாலும் சாய்குமார் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

விஷால் சேகரின் பின்னணி இசை அட்டகாசம். பாடல்களை தெலுங்கிலேயே கேட்டுக்கொள்ளுங்கள். தமிழில், `குட்டி இடுப்பு இது இருட்டு கடை அல்வா' போன்ற வரிகள் கிலி கிளம்புகிறது. ராஜிவ் ரவியின் ஒளிப்பதிவு படத்தின் பல்ஸை கூட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு அவ்வளவு கலர்ஃபுல். படத்திற்குள் பல கதைகள் இருப்பதால், ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் தொடர்ந்து பார்த்தாற்போல் ஃபீலாகிறது. முதற்பாதியில் காமாசோமாவென நகரும் படம், இடைவெளி நெருங்கும்போது காரசாரமாய் ஆரம்பிக்கிறது. `பரவாயில்லையே' என நினைக்கும்போது பாட்டை போட்டு பயமுறித்திவிடுகிறார்கள். தேசப்பற்று பேசும் சில காட்சிகளும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும்தாம் படத்தை காப்பாற்றுகின்றன.  `கிக்', `ரேஸ் குர்ரம்', `டெம்பர்' போன்ற மெகா ஹிட் படங்களின் திரைக்கதை ஆசிரியரான வம்சி, இயக்குநராக ரசிகர்களை நிறையவே ஏமாற்றிவிட்டார்.