Published:Updated:

“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி!’’
“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி!’’

வெ.நீலகண்டன், பரிசல் கிருஷ்ணா, படங்கள் தி.குமரகுருபரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி!’’

வி.எம் ஸ்டுடியோவில் உள்ள அந்தச் சின்ன அறையில், அமைதியாக கம்பராமாயணம் வாசித்துக்கொண்டிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். 20 ஆண்டுகளில் 70 திரைப்படங்களை இயக்கியவர். இதில், ரஜினிகாந்த் நடித்த படங்கள் மட்டுமே 25; கமலஹாசன் நடித்தவை 10; சிவாஜி நடித்த படங்கள் மூன்று; 80-களில் மினிமம் கியாரன்டி இயக்குநராகக் கொண்டாடப்பட்டவர், எஸ்.பி.முத்துராமன்.

இவரது பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா கண்டவை. `நிம்மதி உங்கள் சாய்ஸ்,' `ஒரு மனிதனின் கதை' என தொலைக்காட்சித் தொடர்களிலும் முத்திரைப் பதித்தவர். 40 ஆண்டுகாலம் தமிழ்த் திரையுலகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த எஸ்.பி.முத்துராமன், அதற்குரிய அடையாளங்களே இல்லாமல் எளிய மனிதராக நம்மை வரவேற்கிறார். தன் சாதனைகளையும் அனுபவங்களையும் முன்னிறுத்திக் கொள்ளாமல், ஒரு பார்வையாளனாக தற்கால சினிமா குறித்த தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

“40 ஆண்டுகளாக சினிமாவில் கலந்திருக்கிறீர்கள். மாற்றங்கள், வளர்ச்சிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

“பிரமாண்டமான வளர்ச்சி. தொழில்நுட்பம் கற்பனைக்கும் அப்பாற்பட்டு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை. `போக்கிரி ராஜா,' `நெற்றிக்கண்' என நான் இயக்கிய இரட்டை வேடப் படங்கள் எல்லாமே ‘மேனுவல்’தான். கேமரா லென்ஸின் ஒரு பக்கத்தில் கறுப்பு பேப்பர் ஒட்டி, மறுபக்கத்தில் படமாக்குவோம். பேப்பரை ஒட்டுவதில் கொஞ்சம் பிசகினாலும் திரையில் கோடு தெரிந்து அசிங்கமாகிவிடும். எக்ஸ்போஷருக்காக வெயிலுக்குக் காத்திருப்போம். இன்றைக்கு எந்த லைட்டிலும் ஷூட் செய்யலாம். மூன்று, நான்கு வேடங்கள் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. தொழில்நுட்பத்தை நன்கு கற்றுணர்ந்த கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் போய் சாதிக்கிறார்கள். அதே நேரத்தில், தொழில்நுட்பம் வளர்ந்த அளவுக்கு ஆக்கத்திறன் வளரவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. கதைக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம், கவர்ச்சி இருந்தால்தான் வியாபாரம் ஆகும் என்ற மாயை வளர்ந்திருக்கிறது. நானும் 'முரட்டுக்காளை,' 'சகலகலா வல்லவன்' என நிறைய கமர்ஷியல் படங்கள் இயக்கியவன்தான். ஆனால், அடிப்படையில், ஒரு கதைக்குள்தான் படம் பயணிக்கும். விருந்தில் நிறைய பதார்த்தங்களை வைத்து விட்டு, சோற்றைக் குறைவாக வைத்தால் எப்படியோ, அப்படித் தான் கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் படம் எடுப்பதும். எங்கள் காலத்தில் `கதை இலாகா' என ஒரு குழுவே இருக்கும். எங்கள் கதை இலாகாவில் பஞ்சு அருணாசலம், கலைஞானம், மகேந்திரன், பாஸ்கர் ஆகியோர் இருந்தார்கள்.''

“அப்போதெல்லாம் ஸ்டூடியோக்களே படங்களைத் தயாரித்தன. தொழில் பாதுகாப்பும் ஒழுங்கும் இருந்தன. இப்போது, தயாரிப்பு தனி நபர்களின் கைகளுக்கு வந்திருக்கிறது. இது நல்ல மாற்றமா?’’

“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி!’’

(நீண்ட நேரம் யோசிக்கிறார்) “இது முக்கியமான கேள்வி. எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஏவி.எம் போன்றோர் முழுமையாக தொழிலைக் கற்றுக்கொண்டு சினிமா எடுக்க வந்தார்கள். பின்னர் தேவர், பாலாஜி... சமீபத்தில் ஆர்.பி.சௌத்ரி வரைகூட இந்தத் தொடர்ச்சியை நான் பார்த்தேன். கதையை வைத்தே இதற்கு இவ்வளவு பட்ஜெட், இவ்வளவு பிசினஸ் என்று சொல்லிவிடுவார்கள். இன்றைக்கு, நிறைய பேர் சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாமல், சினிமா மீதுள்ள கவர்ச்சியால் படம் தயாரிக்க வருகிறார்கள். எங்கள் காலத்தில் படம் உருவாக்கத்துக்கு ஒரு வரைமுறை இருந்தது. முதலில் கதை. பிறகு, பட்ஜெட். தொடக்கத்தில் இருந்து முடிவு வரைக்கும் எல்லாவற்றுக்கும் கணக்குப் போட்டுவிட்டுத்தான் படப்பிடிப் புக்கே செல்வோம். பெரும்பாலும் அந்தக் கணக்கைவிட குறைவாகத் தான் செலவாகும். அதிகமாகும் பட்சத்தில், அதை தயாரிப்பாளரின் முடிவுக்கு விடுவோம். அவர் விரும்பினால் செய்வோம். விரும்பாதபட்சத்தில் விட்டுவிடுவோம். நினைத்த மாதிரி படம் ஓடும். இதையெல்லாம் பின்பற்றியதால்தான் நான், `மினிமம் கியாரன்டி டைரக்டர்' என்று பெயர் வாங்கினேன். முன்பெல்லாம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர் என மூன்று பேர்தான் ஒரு படத்தின் வணிகத்தில் பங்கு வகிப்பார்கள். இன்று, பெரிய படங்களைத் தவிர, மற்ற படங்களுக்கு விநியோகஸ்தரைத் தேடவேண்டியதாக இருக்கிறது. எல்லாச் சுமைகளும் தயாரிப்பாளர் தலையில்தான் விழுகின்றன. மார்க்கெட்டிங் வரை எல்லா வற்றையும் அவரே செய்கிறார். தியேட்டரில் 100 நாள், 50 நாள் என்றிருந்த சினிமா, இப்போது ஒரு ஷோ, இரண்டு ஷோ என்ற நிலைக்கு வந்துவிட்டது. நூற்றுக்கு 10 படங்கள்தான் தப்பிக்கின்றன. 90 படங்கள் சிக்கிக்கொள்கின்றன. இழந்த தயாரிப் பாளர்கள், சினிமாவைவிட்டே போய் விடுகிறார்கள். சினிமா கவர்ச்சியால் வேறு சிலர் உள்ளே வருகிறார்கள். இப்படித்தான் இன்றைய நிலை, வருவதும் போவதுமாக இருக்கிறது. ஆனால், இது நல்லதல்ல. எல்லோருமாக அமர்ந்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பது என் ஆசை.''

“முன்பெல்லாம் இயக்குநர் ஆவதற்கு ஒரு முறை இருந்தது. ஓர் இயக்குநரிடம் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகே படம் இயக்குவார்கள். இன்று, குறும்படம் எடுத்தாலே படம் இயக்கிவிடலாம் என்ற நிலை. இது ஆக்கப்பூர்வமானதா?''

“நல்ல விஷயம்தானே? திறமைக்குத்தான் இங்கே மரியாதை. எங்கள் காலம் வேறு. நான் ஏவி.எம் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் எடிட்டிங் உதவியாளராக இருந்தேன். கமல் அறிமுகமான `களத்தூர் கண்ணம்மா'வில் முதன்முதலாக பீம்சிங்கிடம் உதவி இயக்குநராக என்னைச் சேர்த்துவிட்டார் ஏவி.மெய்யப்பன் ஐயா. அதற்குப் பிறகு, கிருஷ்ணன்-பஞ்சுவிடமும் கொஞ்ச காலம். பிறகு, சரவணன் சார் என்னை ஏ.சி.திருலோகச்சந்தர் சாரிடம் சேர்த்துவிட்டார். அவரிடம் 14 படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்தேன். அவரிடம்தான் நான் சினிமாவை முழுமையாகக் கற்றேன். என் 70 படங்கள், சீரியல்களைத் தொடங்கும் முன்பு, ஸ்கிரிப்டை ஏ.சி.டி-ஐயாவிடம் கொடுத்து அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டுதான் ஆரம்பிப்பேன். இன்றைக்கு நிலை வேறு. நான்கு ஐந்து ஆண்டு அனுபவங்களை, உலகப் படங்களைப் பார்த்து நான்கைந்து நாட்களில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அப்படி வரும் பலர், ஒரு சில படங்களோடு காணாமல் போய்விடுகிறார்கள். இதற்குக் காரணம், போதிய அடித்தளம் இல்லாதது. நான் 70 படங்கள் இயக்கியிருக்கிறேன். கே.பி சார் 100 படங்கள்... ராமநாராயணன் 120 படங்களுக்கு மேல்... தாசரி நாராயணராவ் 100-க்கு மேல்... இதற்கெல்லாம் காரணம், நாங்கள் பெற்ற களப்பயிற்சி.''

“சினிமாவால் சமூகம் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?''

“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி!’’

“ஒரு சம்பவம் சொல்கிறேன். சிவசங்கரியின் ‘ஒரு மனிதனின் கதை’ நாவலை தூர்தர்ஷனுக்காக இயக்கி, ஒளிபரப்பினோம். அப்போதெல்லாம், தூர்தர்ஷனின் ஒளிபரப்பு வெறும் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே இருக்கும். அந்தத் தொடருக்கு வந்த வரவேற்பும் கடிதங்களும் ஏராளம். ஒளிபரப்பாகும் நேரத்தில் தெருக்களே வெறிச்சோடிவிடும். ‘உங்கள் சீரியலைப் பார்த்து என் கணவர் குடியை விட்டுவிட்டார்’ என்று கடிதங்கள் வரும். அந்த வரவேற்பைப் பார்த்து, `அதைப் படமாக்கலாம்' என்றார் சரவணன் சார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் சம்பளம் வாங்காமல் பணியாற்றினார்கள். ‘தியாகு’ என்ற பெயரில் படம் தயாரானது. படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் எவரும் வாங்க முன்வரவில்லை. ‘இது பிரசாரப் படம். கமர்ஷியலாகப் போகாது’ என்று சொல்லி விட்டார்கள். ஆறு மாதங்களுக்கு மேல் முடங்கிக் கிடந்தது. அதன் பிறகு, சிவசங்கரி இந்தப் படம் பற்றி முதல்வராக இருந்த கலைஞரிடம் பேச, அவர் படத்தைப் பார்த்தார். அரசே அன்பளிப்பாகப் பெற்று தியேட்டர்களில் வெளியிட்டது. இதை எப்படி எடுத்துக்கொள்வது? சினிமா என்பது ஒரு வணிகம். நல்லதை எடுத்துக்கொள்வதும், கெட்டதை புறக் கணிப்பதும் நம் கையில்தான். ஆனால், படைப்பாளிகளுக்கும் பொறுப்பு வேண்டும்.''

“ `கபாலி' பார்த்தீர்களா? ரஜினியிடம் என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?''

“ `கபாலி' ரஜினி படமாக இல்லாமல், ரஞ்சித் படமாக வந்திருந்தது. ரஜினி அவருடைய வயதுக்குத் தகுந்த மாதிரி நடித்திருந்தார். இத்தனை உச்சத்துக்குப் பிறகும், அவர் டைரக்டரின் நடிகராக இருப்பதுதான் அவரது வெற்றிக்குக் காரணம். ரஜினியைப் பொறுத்த வரை அவர் மனதுக்குப் பிடிக்காவிட்டால், ஒரு காட்சியில்கூட நடிக்க மாட்டார். ‘என்னமோ இடிக்குது சார்’ என்று யோசிப்பார். விதவிதமான கதைக்களங்களை ரஜினி தேர்வு செய்கிறார். கமலும் எனக்கு ஆச்சர்யம்தான். எவ்வளவு பரிசோதனைகள்? என் பார்வையில் ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி.''

``இப்போது சினிமாவை விட்டு  விலகியிருக்க என்ன காரணம்?’’

“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி!’’

“ `மினிமம் கியாரன்டி இயக்குநர்’ என்று எனக்கு ஒரு பெயர் இருக்கிறது. அதைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.  இப்போது சினிமா எடுப்பது பெரிய ரிஸ்க். கணக்குப் போட்டெல்லாம் சினிமா எடுக்க முடியாது. இப்போதைய சினிமாச்சூழலே எனக்கு ஒட்டவில்லை என்பதுதான் உண்மை. நான் சினிமாவில் இருந்து ஒதுங்க இன்னொரு காரணமும் இருக்கிறது. என் மனைவி பெயர் கமலா. எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய வரம் கமலா. 1973-ல் இருந்து, 93 வரை... 20 ஆண்டுகளில் 70 படங்கள் இயக்கினேன். சினிமாவில் 23 துறைகளை கையாண்டு, அவற்றுக்கு தலைவனாக, ஓர் இயக்குநராக பல டென்ஷன்கள். வீட்டில் இருந்ததைவிட ஸ்டுடியோவில்தான் அதிகம் இருந்திருக்கிறேன். என் பக்கத்திலேயே இருந்து குடும்பத்தில் நான் சுமக்க வேண்டிய சுமையையும் தானே சுமந்தாள் கமலா. என் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. 'பாண்டியன்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, உடனே வீட்டுக்கு வரச் சொல்லி செய்தி வந்தது. போய்ப் பார்த்தால், கமலா மாரடைப்பு வந்து இறந்து கிடந்தாள்.  `நீதான் கமலாவைக் கொன்றுவிட்டாய்' என்று இப்போதும் என் மனசாட்சி உறுத்திக்கொண்டு இருக்கிறது. அவள் மரணத்துக்குப் பிறகு என் செயல்பாடுகள் பாதியாகிவிட்டன. படிப்படியாக எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி விட்டேன். தனிமையும், முதுமையும் பாதிக் காமல் இருக்க, கம்பன் கழகம், கண்ணதாசன் கழகம் என்று இலக்கிய விழாக்களுக்குப் போகிறேன். நிறைய எழுதுகிறேன். இப்போது, எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட வாழ்க்கை முறை,

சும்மா இருப்பதே சுகம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு