Published:Updated:

‘’ ‘24’ படத்துக்கு தேசிய விருது கிடைக்க ஒரு நார்த் இந்தியன்தான் காரணம்..!’’ - ஒளிப்பதிவாளர் திரு #2YearsOf24

ப.தினேஷ்குமார்
‘’ ‘24’ படத்துக்கு தேசிய விருது கிடைக்க ஒரு நார்த் இந்தியன்தான் காரணம்..!’’ - ஒளிப்பதிவாளர் திரு #2YearsOf24
‘’ ‘24’ படத்துக்கு தேசிய விருது கிடைக்க ஒரு நார்த் இந்தியன்தான் காரணம்..!’’ - ஒளிப்பதிவாளர் திரு #2YearsOf24

டைம் மெஷின்... சினிமா உலகில் எவர்கிரீன் களமிது. எந்தளவிற்கு எவர்கீரினோ, அதே அளவிற்கு சிக்கல்களும் குழப்பங்களும் நிறைந்த ஜானர். ஹாலிவுட்டில் அடிக்கடி இந்தக் களத்தில் படங்கள் வரும். தமிழில் இந்த வகைப்படங்கள் வருவது மிக அரிது. இப்படிப்பட்ட டைம்மிஷின் சப்ஜெக்ட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளிவந்தது '24' திரைப்படம். டைம் டிராவல் என்கின்ற கனமான, பார்வையாளன் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சப்ஜெக்டை, புரிய வைத்து சிக்கலான டைம் டிராவல் ஜானரில் சிக்ஸர் அடித்தது இந்த '24' திரைப்படம்.

வெற்றியோ, தோல்வியோ எதுவாகினும் அதற்கு அப்பாற்பட்டு புது முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஈடுபாடு இருந்தால் மட்டும்தான் '24' மாதிரியான கதைகளைப்  திரைப்படங்களாக்க முடியும். அப்படி மேற்கொண்ட வகையில் நடிகர் சூர்யாவைப் போல், தயாரிப்பாளர் சூர்யாவும் பாராட்டுக்குரியவர்.

'24' திரைப்படம் மாதிரியான டைம் மெஷின்  கதைகளில் சர்வசாதாரணமாக குழப்பங்கள் வரும்; காட்சிகள் பிசகும். நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது பார்வையாளனுக்கு புரிந்து கொள்ள முடியாமல் போகக்கூடிய அபாயம் மிக இயல்பாக நடக்க வாய்ப்புண்டு. ஆனால், விக்ரம் கே குமாரின் தெளிவான திரைக்கதை, விறுவிறுப்பான சம்பவங்கள் குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்ளும்படி சுவாரஸ்யமாக இருந்தது. 

இந்தப் படத்தின் இன்னொரு கதாநாயகன் ஒளிப்பதிவாளர் திரு. மேகமலையின் அழகை அள்ளித்தரும் அந்த லைட்டிங்கும், காட்சிப் பதிவும் மிகவும் பிரமாண்டமாக இருந்தன. ஆக்ஷன் காட்சிகளில் ஓடிய திருவின் கேமிராக்கள் படத்திற்கு தேவையான பரபரப்பை தந்தது. இதற்கெல்லாம் மகுடமாய், ஒளிப்பதிவிற்கான தேசிய விருது திருவிற்கு கிடைத்தது. படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆனதையொட்டி, ஒளிப்பதிவாளர் திருவை தொடர்பு கொண்டு பேசினோம்.

விக்ரம் கே குமார் டைம்டிராவல்  கதையை சொன்னதும் உங்கள் மனதில் என்ன ஓடியது?

’’கதையை  முதலில் கேட்டதும்  "Its A Very Different Film To Execute" அப்படின்னு மட்டும் தெரிஞ்சது. நான் உடனே, விக்ரம் சார்கிட்ட  "இந்த படத்தை யார் சார் தயாரிக்கிறாங்க’’னு கேட்டேன். ஏன்னா, சினிமாவை நேர்மையாக அணுகுற ஒரு தயாரிப்பாளராலதான் இதை பண்ண முடியும். இந்த படத்தோட எல்லா காட்சிகளும் நிகழ்காலத்தில் நடப்பதுபோல கிடையாது. எல்லாமே ஒரு கற்பனை உலகத்தில் நடப்பது போன்று இருந்தது. அந்த கற்பனை உலகத்தை உருவாக்குவதற்கு நிறைய தேவைப்படும். அந்த தேவைகளுக்கும் மேலே அதை அதிகமாக கொடுத்தால்தான் அந்த இடத்தை அடைய முடியும். நான் கேட்டதும் விக்ரம் சார், "சூர்யா சார்தான் படத்தை தயாரிக்கிறதா" சொன்னாரு. அப்பவே எனக்கு இந்த படத்தை சிறப்பாக எடுக்க முடியும்ங்கற  நம்பிக்கை வந்துடுச்சு.’’

டைம்டிராவல் படத்தை மற்ற படத்தில் இருந்து  வித்தியாசப்படுத்த ஒளிப்பதிவில் என்னென்ன புது முயற்சிகளில் ஈடுபட்டீங்க?

’’ஒளிப்பதிவில் நாம் புதிதாக ஒரு முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னால், அதற்கான ஒரு அமைப்பு, அந்த கதை நிகழும் இடம், சூழ்நிலை முதலியவற்றை  உருவாக்க வேண்டும். அந்த கதை நிகழும் இடத்தை உருவாக்குவது கலை இயக்குநர் மற்றும் டிசைனர் கைகளில்தான் இருக்கிறது. அதனால், நாங்க முதலில் அதைத்தான் பண்ணோம். எங்களுடைய முதல் வேலையே எப்படி இந்த கதைக்களத்தை அமைக்கலாம் என்பதில்தான் இருந்துச்சு. அதற்கு  பிறகுதான் ஒளிப்பதிவு குறித்து யோசிக்க ஆரம்பிச்சோம்.
கடினமான காட்சிகளை படமாக்குவதற்கு முன்பு குழுவாக உட்கார்ந்து அந்த காட்சி எப்படி வரணும்னு முடிவு பண்ணோம். அதுவும், முழுக்கதையும் கையில் இருந்ததால அது ரொம்ப எளிமையாக இருந்தது. ஆனால், படத்துல நாங்க ரொம்ப மெனக்கெட்டு பண்ணிய காட்சிகள்னா அந்த ’லெபாரட்டரி’ காட்சிகள்தான். அந்த லேப் ஒரு வித்தியாசமான லேபாக இருக்கணும். அது ஒரு புது அனுபவத்தை தரணும்னு முடிவு பண்ணோம். அதனால், அந்த லேப் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு பண்ற  லைட்டிங்லாம் பார்த்து பார்த்து பண்ணோம். அது எங்களுக்கு கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.’’

’24’ படத்துக்காக தேசிய விருது வாங்கியது பற்றி?

’’ ’24’ படம் பண்ணும்போது தேசிய விருது பற்றியெல்லாம் நாங்க நினைக்கலை. ஒருநாள், மணி சாரோட ’காற்று வெளியிடை’ படம் பார்த்துட்டு இருந்தேன். அதற்கு நடுவில் எனக்கு விருது கிடைச்சிருக்குன்னு நிறைய பேர் போன் பண்ணி சொன்னாங்க. எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருந்துச்சு.  பி. சி சார் என்னுடைய குரு. அவர், "You Will Deserve For that"னு சொன்னாரு. அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன். தேசிய விருது வாங்க என் மனைவி, மகளோட  போனேன். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஒரு நல்ல மகிழ்ச்சியான தருணம் அது!’’

’24’ திரைப்படத்திற்காக வந்த பாராட்டுகளில் உங்களுக்கு மறக்க முடியாத பாராட்டு?

’’ ‘24’ திரைப்படம் வெளியாகி, தேசிய விருதெல்லாம் வாங்கியதற்கு அப்புறம், தேசிய விருது ஜூரி டீம்ல இருந்த என். சந்திராங்கற நார்த் இந்தியன் கேமராமேன் என்கிட்ட ,’ ‘24’ படம் ஒளிப்பதிவு கேட்டகிரியிலேயே இல்லை. அது தனியாகத்தான் இருந்தது. நாங்க இந்த ஒளிப்பதிவை பார்த்துட்டு இதெல்லாம் தானே ஒளிப்பதிவு கேட்டகிரில இருக்கணும்’னு சொல்லி, அவர்தான் ஒளிப்பதிவு கேட்டகிரிக்கு சிபாரிசு பண்ணியிருக்காரு. இறுதியாக தேசிய விருதும் கிடைத்தது. அவர், "எல்லாரும் ஒளிப்பதிவு பண்ணிடலாம். நல்ல போட்டோகிராபி பண்ணலாம். ஆனால், ஒரு கதையை, அந்த கதையோட ஆழத்தையும் ஓட்டத்தையும்  புரிஞ்சிக்கிட்டு, அந்த கதையை இன்னும் மேலே தூக்கிகிட்டு போய் வைக்கிற மாதிரியான ஒரு போட்டோகிராபி தான் சிறந்த போட்டோகிராபி’னு சொன்னாரு. அந்த வார்த்தைகள்தான் தேசிய விருதுலையும் எழுதப்பட்டிருக்கும். அவர் சொன்ன அந்த வார்த்தைகள்தான் எனக்கு மறக்க முடியாது பாராட்டு.’’

இரண்டு வருடங்கள் கழித்து ’24’ திரைப்படத்தை திரும்பி பார்க்கும் போது நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?

" ’24’ மாதிரி இன்னும் நிறைய திரைப்படங்கள் தமிழில் வரணும். ஏன்னா, ஹாலிவுட்ல இந்த மாதிரி வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்கள் அடிக்கடி வருது. அப்படி வரும் படங்களுக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பும் இருக்கு. இனி தமிழ்ல இதுமாதிரி வித்தியாசமான ஜானர்ல நிறைய படங்கள்  வரணும். இதுதான் என்னுடைய ஆசை.’’