
ஞானப்பழம்
இந்தவார சுட்ட படம் சரண் இயக்கத்தில் வெளிவந்த `மோதி விளையாடு'. ஸ்டார் இயக்குநரின் படம், கூடவே ஹரிஹரனின் கலோனியல் கஸின்ஸ் குழுவின் இசை என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியான இந்தப் படம், 2004-ல் வெளியான `100 Days with Mr. Arrogant' என்ற கொரியப் படத்தின் தழுவல்!

முதலில் ஒரிஜினலின் கதை. ஹா இயோங் என்ற பள்ளி மாணவிதான் படத்தின் நாயகி. தன் காதலனோடு தங்கள் காதலின் 100-வது நாளை கொண்டாட ஹோட்டலுக்குச் செல்கிறாள். அங்கே,`நமக்குள் ஒத்துவராது. பிரிந்துவிடுவோம்' எனக் காதலன் சொல்ல, கடுப்பில் அவனுக்கு வாங்கிய கிஃப்ட்டைப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்துவிட்டு சாலையில் சோகமாய் நடந்து போகிறாள். அப்போது, ஓர் ஓரமாய் கிடக்கும் கோக் டின்னைப் பார்க்கிறாள். தன் காதலனை நினைத்துக்கொண்டே அந்த டின்னை ஓங்கி உதைக்கிறாள். அது சாலையில் கார் ஓட்டிச் செல்லும் ஓர் இளைஞனின் தலையில் விழ, அந்தத் தடுமாற்றத்தில் கார் சுவற்றில் மோதிவிடுகிறது. அந்த இளைஞனின் பெயர் ஹியூங் ஜுன். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பையன். கோபமாய் ஹா இயோங்கிடம் வரும் அவன், தன் காரில் ஏற்பட்ட சேதத்திற்கு 3000 டாலர்கள் பணம் தருமாறு கூறுகிறான். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனக்கூறும் ஹா இயோங், அங்கிருந்து ஓடிவிடுகிறாள். போகும் அவசரத்தில் தன் ஸ்கூல் ஐ.டி கார்டை அவள் தவறவிட, அது ஹியூங் கண்ணில் மாட்டுகிறது. அதில் இருக்கும் ஹா இயோங்கின் நம்பருக்கு போன் செய்து பணம் தரும்படி மிரட்டுகிறான் ஹியூங். போனை கட் செய்துவிட்டு பள்ளிக்கு சென்றுவிடுகிறாள் ஹா. அன்று மாலை பள்ளிக்கு வெளியே, ஹா இயோங்கைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கோபத்தோடு ஹா, அந்தப் போஸ்டரை கிழிக்க முற்பட, அங்கு வரும் ஹியூங் அவளைத் தூக்கிச் செல்கிறான். நேராக ஓர் உணவு விடுதிக்குச் செல்லும் அவன், `என் கடனைக் கழிக்க வேண்டுமென்றால் சில நாட்கள் நீ என் அடிமையாக இருந்து வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்' என ஒப்பந்தம் போடுகிறான். வேறு வழியில்லாமல் அதில் கையெழுத்துப் போடுகிறாள் ஹா இயோங். மறுநாள் அவளைத் தன் வீட்டிற்கு வரச் சொல்கிறான் ஹியூங். வீட்டைச் சுத்தம் செய்வது, ஷாப்பிங் சென்றால் பை தூக்குவது என ஹியூங்கின் எடுபிடியாகவே மாறிப் போகிறாள் ஹா. ஒரு நாள் தற்செயலாக ஹியூங்கின் காருக்கு மொத்தமாய் ஏற்பட்ட செலவே 10 டாலர்கள்தான் என அவளுக்குத் தெரிய வருகிறது. கோபத்தில் அவன் கார் முழுவதும் கிறுக்கி வைக்கிறாள். இப்போது ஹியூங்கிற்கு நிஜமாகவே ஆயிரக்கணக்கில் செலவு. `இதுவரை என்னை ஏமாற்றியதற்கு பழிவாங்க இப்படி செய்தேன்' என ஹா சொல்ல, `இப்போது ஆன செலவிற்கு நீ இன்னும் பல மாதங்கள் அடிமையாக இருக்க வேண்டும்' என ஹியூங் பதிலடி தர, வாக்குவாதம் முற்றுகிறது.
பழிவாங்க முடிவு செய்யும் ஹியூங், ஹா இயோங்கின் அம்மாவிடம் தன்னை ஒரு டியூஷன் மாஸ்டர் என அறிமுகப்படுத்திக்கொள்கிறான். தன் மக்கு மகளுக்கு பாடம் சொல்லித் தருமாறு அவள் கேட்டுக்கொள்ள, வீட்டுக்கே வந்து குடைச்சல்கள் கொடுக்கிறான் ஹியூங். இந்த மோதல்கள் எல்லாம் மெல்ல மெல்ல காதலாக மாறுகிறது. அவளை அழைத்துக்கொண்டு டூர் செல்கிறான் ஹியூங். அங்கு அவர்களுக்குள்ளான நெருக்கம் இன்னும் அதிகமாகிறது. ஆனால் பரஸ்பரம் சொல்லிக்கொள்ள தயங்குகின்றனர். இருவரும் சந்தித்து நூறு நாட்கள் ஆனதைக் கொண்டாட வெளியே செல்கிறார்கள். திரும்பி வரும்போது சாலையில் வைத்து அவளை முத்தமிடுகிறான் ஹியூங். இதை பார்த்துவிடும் ஹா இயோங்கின் அம்மா, தன் மகளை விட்டு விலகிவிடுமாறு ஹியூங்கிடம் சொல்கிறாள். மறுநாளிலிருந்து ஹியூங்கின் போன் நாட் ரீச்சபிள் ஆகிறது. அவனுடைய வீடும் காலியாக இருக்கிறது. அவனைத் தேடிப்போகும் ஹா இயோங்கிடம் `நான் உன்னை காதலிக்கவில்லை. சும்மா டைம்பாஸுக்குப் பழகினேன்' என்கிறான் ஹியூங். அவன்மேல் இருக்கும் கோபத்தை படிப்பில் காட்டுகிறாள். ரிசல்ட்... அவள் விரும்பிய கல்லூரியிலேயே இடம் கிடைக்கிறது. அன்று இரவு திடீரென அவள்முன் ஆஜராகும் ஹியூங், `நீ நல்லா படிக்கணும்னுதான் நான் அப்படிப் பொய் சொன்னேன்' எனச் சொல்ல சுபம். கடைசி சீனில் ஹா இயோங் காரில் செல்ல, அவள் மீது ஒரு கேன் வந்து விழுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம்டா என்ற கருத்தோடு படம் முடிகிறது.

இப்போது தமிழ் வெர்ஷனுக்கு வருவோம். பணக்காரரான கலாபவன் மணியின் ஒரே மகன் வினய். ஜாலியாய் ஊர் சுற்றும் ப்ளேபாய். மயில்சாமியோடு ஹீரோயின் காஜலுக்கு ஒரு மோதல் ஏற்பட, அவர் விட்டெறியும் கோலா கேன் வினய் தலையில் அடிக்கிறது. அதனால் கார் டேமேஜாக பதிலுக்கு காஜலை எடுபிடியாக்குகிறார் வினய். அதன்பின் அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன மோதல்கள் காதலில் முடிவதுதான் கதை. மையக்கதை மட்டுமல்ல, காஜல் எடுபிடியாக இருக்கும் சில சீன்கள், வினய்யின் நண்பன் கேரக்டர் போன்றவை எல்லாம் கொரியன் படத்திலிருந்து சுடச்சுட இறக்கப்பட்டவை.
இதற்கு நடுவே கலாபவன் மணியின் வளர்ப்பு மகன்தான் வினய் என்கிற ட்விஸ்ட் வேறு. இதைத்தான் பிரசாந்தின் `ஸ்டார்' படத்திலும் செய்திருந்தார்கள். அப்பாவைப் பழிவாங்க வினய் செய்யும் `அடங்கப்பா' லாஜிக் தந்திரங்கள், எல்லா ஃப்ரேமிலும் முறைக்க மட்டுமே செய்யும் வில்லன் கேரக்டர் என ஏகப்பட்ட சொதப்பல்கள் இருந்ததால் படம் புஸ்வாணம் ஆனது. நடந்த ஒரே பாசிட்டிவ் விஷயம்... காஜலுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியதுதான்!
- இன்னும் சுடும்