Published:Updated:

’’பாரதிராஜா சொன்ன வார்த்தை; மகேந்திரன்-கர்ணன் கொடுத்த கடிதம்..!’’ - சிம்புதேவன் ஷேரிங் #8YearsOfIrumbuKottaiMurattuSingam

ப.தினேஷ்குமார்
’’பாரதிராஜா சொன்ன வார்த்தை; மகேந்திரன்-கர்ணன் கொடுத்த கடிதம்..!’’ - சிம்புதேவன் ஷேரிங் #8YearsOfIrumbuKottaiMurattuSingam
’’பாரதிராஜா சொன்ன வார்த்தை; மகேந்திரன்-கர்ணன் கொடுத்த கடிதம்..!’’ - சிம்புதேவன் ஷேரிங் #8YearsOfIrumbuKottaiMurattuSingam

கற்பனையில் மிதந்துவரும், அது ஒரு தனி உலகம். காமிக்ஸ்களில் நாம் பார்த்து வியந்த உலகம். தமிழில் கேமிரா மாமேதை கர்ணன் காட்டிய ’கௌபாய்’ உலகம் அது. அப்படிப்பட்ட கௌபாய் உலகத்தை 38 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு மீண்டும் படம் பிடித்துக் காட்டியது லாரன்ஸ் நடித்த ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ திரைப்படம். 

இரண்டரை மணி நேர சினிமாவில் குறைந்தபட்சம் ஒரு நிமிட இடைவெளிக்கு ஒருமுறையாவது வாய்விட்டு சிரித்துக்கொண்டே இருக்குமளவுக்கு  சி(ரி)றப்பாக இருந்தது இந்த ’இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’. மேலு‌ம், அது மறக்க முடியாத ஒரு கௌபாய் அனுபவமாக இருந்தது. 

சீறிப்பாயும்  குதிரைகள், இரண்டுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், அழகிய தொப்பி, அசத்தலான கோட் சூட், ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் என ஜெய்சங்கர் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் கௌபாய் கலாசாரத்தை மீண்டும் கொண்டு வந்தார் இயக்குநர் சிம்புதேவன். படம் வெளிவந்து இன்றோடு எட்டு வருடங்கள் ஆனதையொட்டி இயக்குநர் சிம்புதேவனை தொடர்புகொண்டு பேசினோம்.

``கௌபாய் ஜானர்ல ஒரு படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோணுச்சு?''

’’ரெண்டு விஷயங்களை நான் சொல்லிக்கிறேன். முதலாவது, கௌபாய் ஜானர்ல ஏற்கெனவே கர்ணன் சார் படம் பண்ணியிருக்காரு. இரண்டாவது, கௌபாய் கலாசாரம் எல்லாருமே விரும்பி பார்க்கிற குதிரை, புதையல், ஒரு சின்ன கிராமம் இந்த மாதிரியான ஒரு சுவாரஸ்யமான அமைப்பை உடையது. அதனால், அந்த சமயத்தில் எனக்கு கௌபாய் ஜானர்ல படம் பண்ணணும்னு தோணுச்சு. காமிக்ஸ் படிக்கிற எல்லோருக்கும் கௌபாய் கலாசாரம் தெரியும். இந்த இரண்டும்தான் கௌபாய் ஜானர்ல படம் இயக்கலாம்ங்கற எண்ணம் வர காரணமாக இருந்துச்சு.’’

''38 வருஷத்துக்கு அப்புறம் தமிழ்ல கௌபாய் படம் எடுக்குறப்போ, அதற்காக நீங்க எந்தளவுக்கு மெனக்கெட்டிங்க?''

’’என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு இயக்குநராக மெனக்கெட்டால்தான் அதற்கான அவுட்புட் கிடைக்கும். நான் இயக்கிய ’புலிகேசி’யாகட்டும், ’புலி’யாகட்டும் எல்லா ஜானரிலுமே அந்த கதைகளுக்கு எவ்வளவு உழைப்பைக் கொடுக்கணுமோ அந்த உழைப்பை கொடுத்துடுவேன். அது ’இரும்புக்கோட்டை’க்கும் செஞ்சேன். இந்தப் படத்தை எந்த இடத்தில் எடுக்கலாம்ங்கறதுல இருந்து எல்லா விஷயங்களிலும் என்னுடைய மெனக்கெடல்கள் இருந்தது.’’

''இந்த கதையை யாரை மனசுல நினைச்சுக்கிட்டு எழுதுனிங்க?''

’’ ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ கதையை பொதுவாகத்தான் எழுதியிருந்தேன். அப்புறம் கதையை முடிக்கும்போது, ராகவா லாரன்ஸ் சார் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அதன்பிறகு, சார்கிட்டதான் முதல்ல கதையைச் சொன்னேன். அவருக்கே இந்த கதை ஓகே ஆயிடுச்சு. யாரையும் மனசுல நினைச்சுலாம் எழுதலை.’’

``ராகவா லாரன்ஸ் கதையை கேட்டுட்டு என்ன சொன்னார்னு ஞாபகம் இருக்கா?''

’’கதையை கேட்கும்போது, அந்த கதையில் இருந்த ஸ்டைலிஷான விஷயங்கள்லாம் லாரன்ஸ் சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ’ஸ்டைலுக்கு நல்ல ஸ்கோப் உள்ள கதை சார் இது. நல்லா பண்ணுவோம் சார்’னு சொன்னாரு. நானும் லாரன்ஸ் சாரும் இணையப்போறதே அவருக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்துச்சு. படமும் நல்லாயிருந்துச்சு.’’

``நீங்க நினைச்ச எதிர்பார்ப்பு மக்கள்கிட்ட கிடைச்சதுனு நினைக்குறீங்களா?''

’’இன்னைக்கு வரைக்குமே குழந்தைகள்லாம் சொல்வாங்க. நிறைய போன் கால்கள் வரும். படம் வந்தபொழுதே நல்ல வரவேற்பு இருந்தது. பாரதிராஜா சார் படம் பார்த்துட்டு, ’ரொம்ப யூனிக்கா இருந்ததுப்பா’னு சொன்னாரு. மகேந்திரன் சார் எனக்கு ஒரு கடிதமே எழுதினாரு. கர்ணன் சார் படம் பார்த்துட்டு ’நல்லா இருக்கு’னு சொன்னாரு. எனக்கு ஒரு கடிதமும் கொடுத்தாரு.’’ 

``எட்டு வருடங்கள் கழித்து `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' படத்தை திரும்பிப் பார்க்கும்போது என்ன சொல்ல விரும்புறீங்க?''

``ஒருவிதமான திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.’’