Published:Updated:

"கேர்ள்ஸை டீஸ் பண்ற கதைகள்... வேண்டவே வேண்டாம்!" - நித்யா மேனன்

சுஜிதா சென்

நித்யா மேனனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த சிறப்புப் பேட்டி

"கேர்ள்ஸை டீஸ் பண்ற கதைகள்... வேண்டவே வேண்டாம்!" - நித்யா மேனன்
"கேர்ள்ஸை டீஸ் பண்ற கதைகள்... வேண்டவே வேண்டாம்!" - நித்யா மேனன்

"மலையாளம், தெலுங்குல பாட்டு பாடியிருக்கேன். தமிழ்ல அதுமாதிரி சான்ஸ் கிடைச்சா சந்தோஷமாதான் இருக்கும். பாட்டு பாடுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்" - கொஞ்சும் தமிழில் பேசும் நித்யா மேனன், 'பிராணா', 'அப்பாவின் மீசை', 'நைன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

"கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்த ஸ்டிரைக் உங்களுக்கு எப்படி இருந்துச்சு?"

"தொடந்து ஷூட்டிங் இருக்கிறதுனால வீட்டுல இருக்க நேரம் கிடைக்கிறதே இல்லை. அதனால, முழுக்க முழுக்க வீட்டுலதான் கழிச்சேன். எங்க வீட்டைச் சுத்தி நிறைய மரம் இருக்கு. பறவைகளோட சத்தத்தைக் கேட்டுக்கிட்டிருந்தா, நேரம் போறதே தெரியாது. தவிர, நிறைய புத்தகங்கள் படிப்பேன். நிறைய சிறுகதைகள் எழுதுவேன். நான் பெங்களூர்ல பொறந்து வளர்ந்த பொண்ணு. என்னோட தாத்தா காலத்துல இருந்தே குடும்பம் இங்கே செட்டில் ஆயிட்டாங்க. மலையாளத்தைவிட தமிழ்தான் வீட்டுல அதிகமா பேசுவோம். அப்பாவுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். எனக்கு கன்னடம்தான் எழுதப் படிக்கத் தெரியும். நானும் எங்க அப்பாகிட்ட இருந்து தமிழ் கத்துக்கிட்டிருக்கேன். வீட்டு சாப்பாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால எனக்கு வேண்டியதை சமைத்து சாப்பிட இந்த விடுமுறை காலத்தைப் பயன்படுத்திக்கிட்டேன்."

"எல்லா நடிகைகளுக்கும் அவங்களோட அம்மாதான் கதை கேட்குறதுல தொடங்கி, காஸ்டியூம் டிசைன் பண்றது வரை பக்க பலமா இருப்பாங்க. உங்களுக்கும் அப்படித்தானா?"

"அம்மா, அப்பா ரெண்டுபேரும் வேலையில இருந்து ஓய்வுபெற்று வீட்டுல இருக்காங்க. வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. எனக்கு எட்டு வயசு இருக்கும்போது, என் அம்மா அப்பாதான் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அப்போ இருந்தே நடிக்கத் தொடங்கிட்டேன். அதனால, சினிமாவுல நான் நடிக்கிறதுல அவங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அதேசமயம், எனக்கு ஃபுல் சப்போர்ட்டும் கொடுக்கமாட்டாங்க. கதை கேட்குறதுல தொடங்கி, புரமோஷன்ஸ் வரை... எதுலேயும் தலையிடமாட்டாங்க. எனக்கு நிரந்தரமா ஒரு வேலை இருக்கணும், இவ்ளோ சம்பளம் வாங்கணும்னு எந்தவித எதிர்பார்ப்பும் அவங்க என்மேல வைக்கலை."  

"உங்களோட கதை தேர்வு நல்லா இருக்கு, எப்படித் தேர்ந்தெடுத்து நடிப்பீங்க?" 

"இந்தக் கதையில நாம நடிச்சா, மக்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க, இந்தக் கதை சமுதாயத்துக்குத் தேவையா, இல்லையா... இப்படிப் பல விஷயங்களை நோட் பண்ணுவேன். கதை கேட்கும்போது என் மனநிலை இப்படியே இருக்கிறதுனால, நல்ல கதைகள் எனக்கு இயல்பாவே அமைஞ்சிடுது. தவிர, எனக்கு ஒரு கதை பிடிச்சுட்டா கேமியோ ரோல் பண்றதுக்குக்கூட தயங்கமாட்டேன். எனக்குப் படத்துல முக்கியத்துவம் இருக்கணும்னு எதிர்பார்க்க மாட்டேன். அதேசமயம், பெண்களை இழிவு படுத்துற, வணிக ரீதியான முக்கியத்துவம் மட்டுமே உள்ள படங்கள்ல நடிக்கமாட்டேன்!" 

"அரசியல் பேசவே மாட்டேங்கிறீங்களே... பிடிக்காதா?" 

"அரசியல்ல இருந்து விலகி நிற்கும் சினிமா பிரபலங்கள்ல முதல் ஆள் நான்தான். அதைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை. தெரிந்த சில அரசியல் விஷயங்களையும் பொதுவெளியில் பேச விரும்பலை."

"அப்பாவின் மீசை படத்தை எப்போ எதிர்பார்க்கலாம்?"

"ரோகிணி மேடம் இயக்குநரா அறிமுகமாகுற படம். உணர்ச்சி மிக்க ஒரு அப்பா - மகன் கதை. 12 வயசுப் பையன்தான் ஹீரோ. அதுல எனக்கு ஒரு சின்ன கேரக்டர்தான். இந்தப் படம் எப்போ ரிலீஸாகும்னு நானும் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன்." என்று முடித்தார் நித்யா மேனன்.