Published:Updated:

'மீம்ஸ் மூலமா இன்னும் பல புரட்சி பண்ணலாம்னுதான், இந்தப் பாட்டு!' - இசையமைப்பாளர் குரு கல்யாண்

'மாத்தியோசி' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்திருக்கும் குரு கல்யாண், மீம்ஸ்களுக்காக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார். அப்பாடல் குறித்தும், தனது சினிமா பயணம் குறித்தும் பேசியிருக்கிறார்.

'மீம்ஸ் மூலமா இன்னும் பல புரட்சி பண்ணலாம்னுதான், இந்தப் பாட்டு!' - இசையமைப்பாளர் குரு கல்யாண்
'மீம்ஸ் மூலமா இன்னும் பல புரட்சி பண்ணலாம்னுதான், இந்தப் பாட்டு!' - இசையமைப்பாளர் குரு கல்யாண்

"என்னைப் பொறுத்தவரை மீம்ஸுங்கிறது ஒரு மார்டன் என்.எஸ்.கே. சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும்!" என்று தன்னுடைய 'மீம்ஸ் பாடல்' குறித்துப் பேச ஆரம்பிக்கிறார், இசையமைப்பாளர் குரு கல்யாண். வைரல் உலகில் இவரது 'மீம்ஸ் பாடல்' லேட்டஸ்ட் வரவு. தமிழ்நாட்டிலிருந்து பரவி, உலகே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பல புரட்சிகளை நிகழ்த்திய மீம்ஸ்களுக்கு ஒரு 'ட்ரிபியூட்' பாடலை இசையமைத்து, எழுதி, பாடியிருக்கிறார், குரு கல்யாண். 

"மீடியாவுல பல துறைகள் இருந்தும் இசையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?"

"சின்ன வயசுல இருந்தே எனக்குப் படிப்பைவிட பாட்டுதான் நல்லா வந்துச்சு. நிறைய விஷயங்களை என்னால ஞாபகம் வெச்சுக்க முடியாது, அதைப் பாட்டா படிச்சு ஞாபகம் வெச்சுக்குவேன். எனக்கு எல்லா நேரத்துலேயும் எல்லா விதத்துலேயும் பாட்டுதான் வசதியா இருக்கு, அதையே கரியராவும் தேர்ந்தெடுத்துட்டேன்!"

"சினிமா என்ட்ரி?" 

"பாடுற திறமையும், ஆர்வமும் சின்ன வயசுலேயே இருந்ததுனால, வீணை, கீ போர்ட், தாரை, தப்பட்டை... இப்படிப் பல இசைக்கருவிகளை இசைக்கக் கத்துக்கிட்டேன். 'பார்த்தேன்... சிரித்தேன்...' பாட்டை ரீமிக்ஸ்ல மியூசிக் பண்ணி வெச்சிருந்தேன். அதைக் கேட்ட இயக்குநர் நந்தா பெரியசாமி, 'நல்லா இருக்கே, என்னோட 'மாத்தியோசி' படத்துக்கு நீங்கதான் மியூசிக் பண்றீங்க!'னு வாய்ப்பு கொடுத்துட்டார். அவர் மூலமாதான் சினிமாவுக்கு வந்தேன்." 

"அதிகளவில் ஆல்பம் வெளியிடுவதற்கான காரணம்?" 

"சினிமாவுக்கு மியூசிக் பண்ணும்போது, அதுல வர்ற பாடல்கள் கதையை மையப்படுத்திதான் இருக்கணும். இயக்குநர் சொல்றதை வெச்சு, கதையோட சூழலுக்குத் தகுந்தமாதிரியும்தான் இசையமைக்க முடியும். ஆல்பம் பண்ணும்போது, முழு சுதந்திரம் கிடைக்கும். மக்களோட ரசனை, விருப்பங்கள் எல்லாம் நாளுக்கு நாள் எப்படி மாறிக்கிட்டு இருக்குனு புரிஞ்சுக்கிட்டு அதுக்குத் தகுந்தமாதிரி பாடல்களை உருவாக்கலாம். 'வதுவை நன்மணம்'னு பழனி பாரதி எழுதுன ஒரு கவிதையை ஆனந்த விகடன்ல படிச்சேன். அந்தக் கவிதை அவ்ளோ அழகா இருந்துச்சு, அதேசமயம் பலருக்கும் புரியாத பாணியில இருந்துச்சு. அந்தக் கவிதை பலருக்கும் போய்ச்சேரணும்னு, அதைப் பாடலா உருவாக்கி யூடியூப்ல ரிலீஸ் பண்ணேன். அதுக்கு ரெஸ்பான்ஸ் ரொம்பப் பெருசா கிடைச்சது. பிறகு, அந்த ரூட்டையே கன்டினியூ பண்ண ஆரம்பிச்சிட்டேன்." 

"மீம்ஸ் பத்தி ஒரு பாடல் வெளியிட்டிருக்கீங்க. எப்படிப் பிடிச்சீங்க இந்த ஐடியாவை?" 

"காலையில எழுந்ததுல இருந்து, ராத்திரி தூங்குற வரை... இப்போ இருக்கிற மனிதனோட வாழ்க்கையில் மீம்ஸ் முக்கியமான அங்கமா மாறிடுச்சு. எந்தக் கருத்துக்கும் அதோட முக்கியத்துவத்தை நகைச்சுவையோட சொல்ற ஆயுதம், மீம்ஸ். மீம்ஸை ஒரு மார்டன் என்.எஸ்.கிருஷ்ணன்னு சொன்னா சரியா இருக்கும். அதனாலதான், மீம்ஸூக்கு ஒரு ட்ரிபியூட்டா இருக்கட்டும்னு இந்தப் பாட்டை உருவாக்கினேன்!"

"உங்க மீம்ஸ் பாட்டு பாசிட்டிவ் எனர்ஜியோட இருக்கே, மீம்ஸ் மூலமா நெகட்டிவ் எதுவும் இல்லைனு நினைக்கிறீங்களா?" 

"இருக்கு... ஆனா, பாசிட்டிவ்தான் அதிகமா இருக்கு. ஒவ்வொரு மனுஷனும் சமுதாயப் பிரச்னைகளைப் பெரிய அளவுல எடுத்துக்கிட்டு, அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தணும்னு நினைக்கிறான். ஜல்லிக்கட்டுப் போராட்டம் பெரிய புரட்சியை ஏற்படுத்துனதுல மீம்ஸுக்கும் பெரிய பங்கு இருக்கு. இப்படிப் பல புரட்சிகளை மீம்ஸ் மூலமா பண்ணலாம்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. தவிர, எனக்கும் இந்தமாதிரி சமுதாயத்துக்கு ஏதாவது பண்ற பாடல்களை உருவாக்கணும்னுதான் ஆசை. ஆல்பங்கள்ல மட்டுமில்ல, சினிமாவிலும் சமூக அக்கறையைப் பரப்பணும்!"

"மறக்கமுடியாத பாராட்டு?"

"மீடியா மூலமா கிடைச்சதுதான். முதல்முதல்ல உருவாக்குன 'வதுவை நன்மணம்' பாட்டுக்கு விகடன்ல விமர்சனமே வந்திருந்தது. அதுக்குப் பிறகு பல மீடியாக்கள் பாராட்டியிருக்காங்க."

''சினிமாவுல உங்க இலக்கு?"

"எல்லா இசைக் கருவிகளையும் வெச்சு பிரமாண்டமான ஒரு பாடலை உருவாக்கணும்னு ஆசை. அதை நோக்கித்தான் பயணப்பட்டுக்கிட்டு இருக்கேன். இப்போ, 'குரல் 146'னு ஒரு படத்துக்கு மியூசிக் பண்ணியிருக்கேன். இந்தப் படத்துல எம்.எஸ்.சுப்புலட்சுமியோட பேத்தி ஐஸ்வர்யா ஒரு பாட்டு பாடியிருக்காங்க."