Published:Updated:

`படுத்தி எடுக்காதீங்க... என்பதுதான் உங்களுக்கான பதில்!' - 'அலைபேசி' படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு

'அலைபேசி' திரைவிமர்சனம்.

`படுத்தி எடுக்காதீங்க... என்பதுதான் உங்களுக்கான பதில்!' - 'அலைபேசி' படம் எப்படி?
`படுத்தி எடுக்காதீங்க... என்பதுதான் உங்களுக்கான பதில்!' - 'அலைபேசி' படம் எப்படி?

எத்தனையோ காதல் கதைகளைச் சந்தித்திருக்கிறது தமிழ்சினிமா. ஆனால், அந்தப் படங்களையெல்லாம் 'வீ டோன்ட் கேர்' என விரட்டி அடித்து, புதுவிதமான(?) காதல் கதையாகச் சொல்கிறது 'அலைபேசி.' 

இன்ஜினீயர் ஹீரோ, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஹீரோயின்... இருவருக்கிடையேயான காதல் எப்படி மலர்கிறது, எப்படி காதலிக்கிறார்கள், இவர்களது காதல் சேர்ந்ததா இல்லையா... தும்மலாகக் கடந்துவிட வேண்டிய இந்த ஒருவரியைத்தான், முழுநீளப் படமாக்கி இருமலாக இழுத்தடித்திருக்கிறார்கள்.

இன்ஷூரன்ஸ் கம்பெனியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கும் கீதாவுக்கு, டார்கெட் முடிக்க வேண்டிய கட்டாயம். ஒவ்வொருவருக்காகப் போன் செய்து பாலிசி எடுக்கச் சொல்லி கெஞ்சும்போது, ஹீரோ அகில் சிக்குகிறார். 'பாலிசி' என்றதுமே திட்டித் தீர்த்து போனை வைக்கும் ஹீரோவுக்கு, 'திட்டிட்டோமோ' என மனசு கேட்காமல், ஹீரோயின் கீதாவுக்குப் போன் செய்து பேசுகிறார்; பரிதாபப்பட்டு நண்பர்கள் சிலருக்கு பாலிசி எடுத்துக் கொடுக்கிறார். 

அப்புறம்... மறுபடியும் நூறு பேருக்குப் பாலிசி எடுத்துக் கொடுக்கிறார். போதாதா... டார்கெட் முடிக்காமல் திட்டு வாங்கும் ஹீரோயினுக்கு, மேனேஜர் புரொமோஷனோடு வாட்ச் ஒன்றும் பரிசாகக் கிடைக்கிறது. (பரிசு கிடைக்கக் காரணமாக இருந்தவர் ஹீரோ என்பதால், தனக்குக் கிடைத்த லேடீஸ் வாட்ச்சை ஹீரோவுக்குக் கொடுப்பதுதான், மேலே சொன்ன புதுவிதமான காதல்!).

இதற்கிடையில், சித்தாளிடம் அத்துமீறிய கொத்தனாரின் கையை முறிக்கிறார் ஹீரோ. அதற்கு அவர் முறைக்க, வில்லனாக வரும் ஏரியா கவுன்சிலரின் அடியாட்கள் விறைக்க, அவர்களை ஹீரோ அடிக்க... படம் பார்ப்பவர்கள் வெறுக்கிறார்கள்.

ஹீரோயினை ஒவ்வொருமுறையும் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் சொல்லிவைத்தாற்போல ஒரு பிரச்னை ஹீரோவுக்கு! இதற்கிடையில் எப்படிக் காதல் செய்வது? (ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் எனப் பறந்துகொண்டிருக்கும் நவீன யுகத்தில் இருந்துகொண்டு 'காதல் கோட்டை' ரேஞ்சில் பார்க்காமல் காதலிப்பது ஓவரோ ஓவர்தான்!). 'இனிமே இப்படிப் பண்ணாதப்பா' என ஹீரோவிடம் பவ்யமாக நடந்துகொள்ளும் வில்லன்கூட, அடுத்தமுறை எதுவும் செய்யாத ஹீரோவை ஓட ஓட விரட்டுகிறார். சரி... என்னதான்யா உங்க பிரச்னை எனக் கேட்கவைக்கும் இடியாப்பச் சிக்கல் திரைக்கதையில், 'ஹீரோயினுக்குக் கல்யாணம்' என்ற ட்வீட்ஸ் வருகிறது. அவ்வளவுதான்... ஹீரோ, ஹீரோயின் சேர்ந்தார்களா இல்லையா என்ற கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் படத்தை முடிக்கிறார்கள்.

சிறுபட்ஜெட் படங்கள் தெரியும், இது குறுபட்ஜெட் படம்போல!  கண்ணை உறுத்தும் காஸ்ட்யூம்கள், 'ஒன் டூ த்ரீ' சொல்லி அடிவாங்குவதுபோல அமைக்கப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகள்... முடியல! குந்தாங்கூறாகத் தட்டி வைத்ததுபோல இருக்கிறது, செல்வதாசனின் இசை. 

ஹீரோவை மூன்று நான்கு முறை சந்திக்க நினைத்து முடியவில்லை என்ற காரணத்துக்காகக் கல்யாணத்துக்கு ஓகே சொல்கிறார் ஹீரோயின். 'அங்கே மீட் பண்ணலாம், இங்கே மீட் பண்ணலாம்' என அளந்துகொண்டிருந்த நேரத்தில், ஹீரோ வேலை பார்க்கும் கட்டடத்துக்கு வந்திருந்தாலே எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. 'அது சரிப்படாதுப்பா' என இயக்குநர் நினைத்திருந்தால், ஹீரோயின் வேலை பார்க்கும் அலுவலகத்துக்குச் சென்றிருந்தால் போதுமே... ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்க ஒரு வரம்பு இருக்கிறது இயக்குநர் முரளிபாரதி.

ஹீரோ, 'கல்லூரி' அகில். தமிழ் சினிமாவில் திக்குத் தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்போல! (நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து 'நடிங்க' பாஸ்!). இவரைத் தவிர, படத்தில் இருக்கும் இன்னொரு அறிந்த முகம், சிங்கம்புலி. ஓவர் ஆக்டிங்கில் மிதந்திருக்கிறார். 'மாயாண்டி குடும்பத்தார்', 'தேசிங்குராஜா' படங்களில் பார்த்த சிங்கம்புலியை இந்தப் படத்தில் தேட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஹீரோ - ஹீரோயின் காதலுக்காக 'இவங்க மட்டும் சேரலைனா, வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணி, மெரினாவில் புரட்சி பண்ணுவேன்' என்ற வசனமெல்லாம் வெந்த புண்ணில் ஈட்டியை விட்டு ஆட்டுவதுபோல இருக்கிறது.  

'கலக்கப்போவது யாரு' முல்லை - கோதண்டம் ஜோடியை ஒப்புக்குச் சப்பாணியாய் வைத்திருக்கிறார் இயக்குநர். கானா பாலாவின் 'ஏன்டா லவ்வுல' பாட்டும் ஊறுகாய்தான். படத்தில் யார்தான் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்... நிலாவும் சூரியனும்! காலைப் பொழுதைக் குறிப்பிட சூரியன், இரவைக் குறிப்பிட நிலா. பீச் பின்னணிக்காட்சி ஒன்றில், மேகங்கள் எல்லாம் ஜெட் வேகத்தில் பறந்துகொண்டிருந்தது யார் பார்த்த வேலை?

'படுத்தி எடுக்காதீங்க...' என்பதுதான் உங்களுக்கான பதில்!

'என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' - திரைவிமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!