Published:Updated:

இந்த ஒன் லைனரை வெச்சு சீட் நுனி த்ரில்லர் கொடுத்திருக்கலாம் இயக்குநரே..! - ‘காத்திருப்போர் பட்டியல்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
இந்த ஒன் லைனரை வெச்சு சீட் நுனி த்ரில்லர் கொடுத்திருக்கலாம் இயக்குநரே..! - ‘காத்திருப்போர் பட்டியல்’ விமர்சனம்
இந்த ஒன் லைனரை வெச்சு சீட் நுனி த்ரில்லர் கொடுத்திருக்கலாம் இயக்குநரே..! - ‘காத்திருப்போர் பட்டியல்’ விமர்சனம்

இந்த ஒன் லைனரை வெச்சு சீட் நுனி த்ரில்லர் கொடுத்திருக்கலாம் இயக்குநரே..! - ‘காத்திருப்போர் பட்டியல்’ விமர்சனம்

`சட்டம் ஒழுங்கு போலீஸைப் பார்த்து அஞ்சும் மக்கள், ரயில்வே போலீஸாரைப் பார்த்தும் பயம்கொள்ள வேண்டும்’ என நினைக்கும் ஒரு ரயில்வே இன்ஸ்பெக்டர் எடுக்கும் முடிவினால், என்னென்ன நடக்கிறது என்பதே இந்தக் `காத்திருப்போர் பட்டியல்’.

தாம்பரம் ரயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வில்லியம்ஸ் (அருள்தாஸ்). தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தனது டீமுடன் கிளம்புகிறார். ரயில்வே தண்டவாளத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் முதல் ரயிலின் படிகளில் நின்று பயணிப்பவர்கள் வரை 16 பேரை கைது செய்கிறார்கள். கைதானவர்களை ஓர் அறையில் அடைக்கிறார்கள். அப்படி அடைபடுபவர்கள் பிறகு என்ன ஆகிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை. 

கைதானவர்களுக்குத் தனித்தனியாகப் பல பிரச்னைகள் இருந்தாலும், கமர்ஷியல் சினிமா இலக்கணப்படி ஹீரோவின் காதல் கதை மட்டுமே இந்தக் காத்திருப்போர் பட்டியலின் திரைக்கதை. வேலைக்குப் போகாமல் நாள்களைக் கழிக்கும் சத்யா (சச்சின் மணி)தான் ஹீரோ. `லோன் வாங்கிக்கோங்க’ என அடிக்கடி டெலிகால் செய்யும் மேகலாதான் (நந்திதா) ஹீரோயின். இவங்க இருவருக்கும் எப்படி காதலாகியிருக்கும்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அதேதான், ஹீரோயின் `லோன் வேணுமா’னு கேட்டு ஹீரோவை போனில் அழைக்க, அது அப்டிஇப்டினு காதலில் போய் நிற்கிறது. 

காதல் செட்டானால் பிரச்னையும் அவர்களைப் பின்தொடர்வதுதானே வழக்கம். அப்படி ஒரு பிரச்னையும் வருகிறது. அதை சரிசெய்ய சத்யா செல்லும்போதுதான் ரயில்வே போலீஸாரிடம் பிடிபடுகிறார். போலீஸைத் தாண்டி சத்யா காதலில் ஜெயித்தாரா என்பதே படம்.

சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் பாலையா டி ராஜசேகர். அதேபோல் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர் ரூபன், ஆர்ட் டைரக்டர் லால்குடி இளையராஜா எனப் பெரிய ஹீரோ படங்களுக்கு வேலை செய்பவர்களைக் `காத்திருப்போர் பட்டிய’லுக்குள் கொண்டுவந்திருப்பதும் செம. 

படத்தின் ஹீரோவான சச்சின் மணி, தமிழ் சினிமாவுக்குப் புதுவரவு. லுக், பாடி லாங்வேஜ், டான்ஸ், நடிப்பு என ஹீரோவுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் அமையப் பெற்றிருக்கிறார். வெல்கம் ப்ரோ. ஆனால், எமோஷனல் ஏரியாக்களில் மட்டும்தான் இயல்பாக இல்லாமல் கொஞ்சம் இழுக்கிறது. அந்த ஏரியாக்களில் கவனம் செலுத்தி நடித்தால், கவனம் பெற வாய்ப்பு இருக்கிறது. ஹீரோயின் நந்திதா. கமர்ஷியல் படங்களில் ஹீரோயின்களுக்கு என்ன வேலையோ அதேதான் நந்திதாவுக்கும். கொடுத்த வேலையை மிகச்சரியாகச் செய்திருக்கிறார்.

இவர்களைத்தவிர மயில்சாமி, மனோபாலா, அப்புக்குட்டி, சென்றாயன், அருண்ராஜா காமராஜ், லட்சுமணன்... இப்படி முகம் தெரிந்த பலர் நடித்திருக்கிறார்கள். சென்றாயன் அடிக்கும் கவுன்ட்டர்களும் மனோபாலாவின் கவுன்சலிங் போர்ஷனும் கிச்சுகிச்சு மூட்டுகிறது.

கலர்ஃபுல்லாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். இவரின் காட்சிகள் படத்துக்கு மிகப்பெரிய பலம். ஆர்ட் டைரக்டர் இளையராஜா கவனிக்க வைக்கிறார். அதுவும் கைது செய்யப்பட்ட நபர்களை அடைத்து வைக்கப்பட்ட அறை மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. `மியூசிக் ஷான் ரோல்டனா’ என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது. எடிட்டர் ரூபன், படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். 

நல்ல ஒன் லைன், சிறந்த டெக்னிக்கல் டீம், நடிக்கத் தெரிந்த நடிகர்கள்... இவர்களை வைத்து சிக்ஸர் அடிக்க தோதான வாய்ப்புகள் இருந்தும் அதை இயக்குநர் தவறவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஓர் அறைக்குள் கைதிகளாக மாட்டிக்கொள்ளும் சிலர்; அவர்கள் ஒவ்வொருவரின் கதை என விவரித்து சீட் நுனி த்ரில்லர் அனுபத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், இயக்குநர் அதை வழக்கமான காதல் கமர்ஷியலாக அணுகியிருப்பது சற்று ஏமாற்றம். ஆனால், அப்படி எடுத்துக்கொண்ட கமர்ஷியல் ரூட்டிலும் அவர் சரியாகப் பயணிக்கவில்லை என்பதே குறை.

காதலில் கமிட்டாகி இரண்டு பாடல்களுக்கு டான்ஸ் ஆடினபிறகே,’ `ஆமா நீ என்ன வேலைப் பார்க்குற’ என ஹீரோவிடம் ஹீரோயின் கேட்கிறார். இது என்ன வகையான காதல் இயக்குநரே. அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் யூகிக்க முடிகிறது. படத்தில் ட்விஸ்டுகள் என்று இரண்டு இடங்களில் வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் எப்படி டிவிஸ்ட் என்று நம்பினார்கள் என்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் `காத்திருப்போர் பட்டியல்’, கவனிக்கத்தக்க சினிமா பட்டியலில் இடம்பிடித்திருக்கும். 

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். 

அடுத்த கட்டுரைக்கு