Election bannerElection banner
Published:Updated:

"அப்போ நடிகர்... இனி நடிக்கவே மாட்டேன்!" - 'அப்போ இப்போ' நடிகர் தாமு : பகுதி 9

"அப்போ நடிகர்... இனி நடிக்கவே மாட்டேன்!" - 'அப்போ இப்போ' நடிகர் தாமு : பகுதி 9
"அப்போ நடிகர்... இனி நடிக்கவே மாட்டேன்!" - 'அப்போ இப்போ' நடிகர் தாமு : பகுதி 9

நடிகர் தாமு. சினிமாவில் நடித்த அனுபவம், மிமிக்ரி, மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது, அப்துல் கலாமுடனான அனுபவம் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். நான் பேசுற ஸ்டைலே பக்கா சென்னை பாஷையாதான் இருக்கு. சினிமாவுல நடிக்க வந்ததுக்குப் பிறகு, அது படிப்படியா மாறிடுச்சு!" - உற்சாகமாக உரையாடலைத் தொடங்குகிறார், தாமு. சில காலமாய் சினிமாவில் தலைகாட்டாத இவரது, 'அப்போ இப்போ' கதையைக் கேட்டேன். 

''இயக்குநர் வஸந்த் என் நெருங்கிய நண்பர். 'கேளடி கண்மணி' படத்தோட நூறாவது நாள் விழா நடந்தப்போ, 'நீ மிமிக்ரி பண்ண வா, எனக்குக் கொஞ்சம் உதவியா இருக்கு'னு கூப்பிட்டார். அப்போ நான் சினிமாவுக்கு நடிக்க வராத காலம். காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த நிகழ்ச்சியில மிமிக்ரி பண்ணிக்கிட்டு இருக்கும்போது, இயக்குநர் பாலசந்தர் சார் கீழே உட்கார்ந்து என்னைப் பார்த்துக்கிட்டு இருந்தாராம். ஆனா, எனக்கு அவர் வந்ததே தெரியாது. அவர் பக்கத்துல என் தமிழாசிரியர் மு.மேத்தா உட்கார்ந்திருந்தார். நிகழ்ச்சி முடிஞ்சதும், மு.மேத்தா என்கிட்ட, 'டேய், பாலசந்தர் சார் உன்னை ரொம்ப விசாரிச்சார். உன் மிமிக்ரியை ரொம்ப ரசிச்சார்'னு சொன்னார். உடனே வஸந்த்கிட்ட, 'எப்படியாவது என்னை பாலசந்தர் சார்கிட்ட அறிமுகப்படுத்தி வைங்க'னு கேட்டேன்.

ஒருநாள் என்னைக் கூட்டிக்கிட்டு போனார். 'இங்கே வெயிட் பண்ணு, சார்கிட்ட சொல்லிட்டேன்... வருவார்'னு சொல்லிட்டு, வஸந்த் வேறொரு வேலையா வெளியே போயிட்டார். நான் ஒரு பத்து நிமிடம் வரைக்கும் பார்த்தேன்... பாலசந்தர் சார் வர்ற மாதிரியே தெரியலை. அங்கே, ஒரு வயசான ஆள் பாலசந்தர் சாரோட வீட்டுல இருந்த விருதுகளை எல்லாம் துடைச்சுக்கிட்டு அங்கிட்டும், இங்கிட்டுமா நடந்துக்கிட்டு இருந்தார். அவர்கிட்ட, 'டைரக்டர் எப்போ வருவார்'னு கேட்டேன். 'என்ன அவசரம். உட்காரு தம்பி'னு சொல்லிட்டு, அவர் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டார். 

ஒரு டேபிள் மேல பாலசந்தர் சாரோட கண்ணாடி மட்டும் இருந்துச்சு. 'எப்படியிருந்தாலும், இந்தக் கண்ணாடியை எடுத்து மாட்டுறதுக்கு அவர் வந்துதானே ஆகணும்?'னு நினைச்சுக்கிட்டு, அங்கேயே உட்கார்ந்துட்டேன். அந்த வயசான ஆள் கண்ணாடியை எடுத்து மாட்டினார். அப்போதான் தெரிஞ்சது... இவ்ளோ நேரம் என்னைச் சுத்தி நடந்துக்கிட்டு இருந்தவர், பாலசந்தர் சாரேதான்!. அதிர்ச்சியில வாயை மூடி நின்னுட்டேன். அந்த அதிர்ச்சியில இருந்து மீண்டு வர எனக்கு சிலநிமிடம் ஆச்சு. 'இது உனக்குத் தேவையா?'ங்கிற மனநிலையில அப்படியே இருந்துட்டேன்!" - பாலசந்தருடனான முதல் சந்திப்பின் முழு காலத்தையும் நினைவில் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார், தாமு. 


"பிறகு, கேஷூவலா பேச ஆரம்பிச்ச பாலசந்தர் சார், என் மிமிக்ரியைப் பற்றி புகழ்ந்து தள்ளினார். 'நீ அன்னைக்கு மேடையில என்ன பாஷைடா பேசுன'னு கேட்டார். 'மெட்ராஸ் பாஷை சார்'னு சொன்னேன். 'உனக்கு என் படத்துல ஒரு சான்ஸ் தர்றேன். தினமும் நீ என் ஆபீஸுக்கு வந்து கையெழுத்து போட்டுட்டுப் போகணும். ஏன்னா, வேற யாராவது சான்ஸ் கொடுத்தா, நீ ஓடிடுவ'னு சிரிச்சார். அவர் சொன்னத தெய்வ வாக்கா நினைச்சுக்கிட்டு, தினமும் ஆபீஸுக்குப் போனேன். எனக்குனு ஒரு நோட்டு அங்கே ரெடியா இருக்கும். பாலசந்தர் சார் ஆபிஸுக்கு வர்றவங்க எல்லாம், 'சீட்டு கம்பெனிக்காரன்போல... தினமும் வந்துட்டுப் போறான்!'னு நினைச்சிருப்பாங்க. இப்படித்தான், சினிமாவுல என் என்ட்ரி ஆரம்பமாச்சு.

"பாலசந்தர் சார், 'வானமே எல்லை'படத்துல எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். 'செவ்வாய்'ங்கிற வாட்ச்மேன் கேரக்டர்ல நடிச்சேன். அந்தப் படத்துக்காக மூணாறுல ஷூட்டிங் போனோம். என்கூட நடிச்ச எல்லோரும் பெரிய இடத்துப் பசங்க. நாகேஷ் சார் பையன் ஆனந்த் பாபு, சின்ன வயசுல இருந்தே சினிமாவுல இருக்கிற நடிகர் பப்புலு, மேஜர் சுந்தர் ராஜன் பையன் பத்மநாபன், ரம்யா கிருஷ்ணன். படத்துல நானும், மதுபாலாவும்தான் புதுசு. மதுகூட நடிகை ஹேமமாலினியோட சொந்தக்கார பொண்ணு. ஆனா, எல்லோருமே என்கூட ரொம்ப ஜாலியா பழகினாங்க. அதுவரைக்கும் சினிமா நடிகர், நடிகைகள் மேல எனக்கு வேறொரு பிம்பம் இருந்தது. ஆனா, இது வேறொரு அனுபவம். அதுக்குக் காரணம், கே.பி சார்தான். என்னைப் பத்தி அவர் எல்லோர்கிட்டேயும் பெருமையா சொல்லி வெச்சிருந்தார். அதனாலதான், அங்கே எனக்கு மரியாதை அதிகமா கிடைச்சது.  

டைரக்டர் சரண், பாலசந்தர் சார்கிட்ட உதவி இயக்குநராய்இருந்தார். அவர்தான் எனக்கு வசனம் சொல்லிக் கொடுப்பார். ஒரு ரவுண்ட் டேபிள்ல ஆனந்த் பாபு, பப்புலு, பத்மநாபன், ரம்யாகிருஷ்ணன், மதுபாலா எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. நான், அவங்களுக்கு சாப்பாடு போட்டுக்கிட்டே வசனம் பேசணும். இதுதான் என் முதல் காட்சி. கிட்டதட்ட 24 முறை ரிகர்சல் பண்ணியும், அந்தக் காட்சியில ரொம்ப சொதப்புனேன். சாப்பாடு போடும்போது வசனம் வரலை, வசனம் பேசும்போது சாப்பாடு போடணும்னு தோணலை. அந்த சமயத்தில் பாலசந்தர் சார் நினைச்சிருந்தா, என்னைப் படத்துல இருந்து தூக்கியிருக்க முடியும். ஆனா, அவர் அதைப் பண்ணலை. ஒருத்தர் என்கிட்ட, வந்து, 'ரொம்ப ஜாக்கிரதையா இரு. வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம். நீ இவ்வளவு சிரமம் கொடுத்தா எப்படி... கொஞ்சம் முயற்சி பண்ணு'னு சொன்னார். 'நான் முயற்சியெல்லாம் பண்ணிட்டுதான் இருக்கேன். எனக்கு டைரக்டரைப் பார்த்தா பயம் வந்துடுது'னு சொன்னேன். இதை பாலசந்தர் சார் கேட்டுட்டார்.

பாலசந்தர் சார் என் தோள்மேல கையைப் போட்டு, 'அங்கே பார்த்தியாடா.. எவ்வளவு பெரிய மலை, மேகம். பக்கத்துல தெரியுது பார். நீ விரட்டிப் பார்.. ஓடிரும்'னு சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாம என்னென்னமோ பேசிக்கிட்டு இருந்தார். பிரேக் முடிஞ்சு, ஷாட்டுக்கு ரெடியானோம். முதல் டேக்லேயே ஓகே ஆயிருச்சு. யூனிட்டே பெருமூச்சு விட்டுச்சு. பாலசந்தர் சாரும், 'அப்படா... ஜெயிச்சேன் ஐயா'னு அவரே அவருக்கு சொல்லிக்கிட்டார். இப்படித்தான் தொடங்குச்சு என் சினிமா பயணம். இந்தத் தருணத்துல நான் ஆனந்த விகடனுக்கு நன்றி சொல்லிக்கிறேன். ஏன்னா, 'வானமே எல்லை' பட விமர்சனத்துல என் கேரக்டர் பத்தி நல்லா எழுதியிருந்தாங்க. பாலசந்தர் சாரும் அதைப் படிச்சுட்டு, 'உன்னைப் பத்தி மட்டும்தான்யா நல்லா எழுதியிருக்கான்... பாருடா'னு காட்டினார். நான் இன்னும் அந்தப் புத்தகத்தை பத்திரமா வெச்சிருக்கேன்." என்றவர், தொடர்ந்தார்.

"ரெண்டாவது படம் 'நாளைய தீர்ப்பு'. இது, விஜய்யோட முதல் படம். விஜய் குடும்பத்தோட எனக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்தினது, அவரோட தாய்மாமா எஸ்.ஏ.சுரேந்தர். பிறகு, விஜய்கூட நிறைய படங்கள்ல நடிச்சேன். விஜய்க்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கு. விஜய்கூட கடைசியா சேர்ந்து நடிச்ச படம், 'கில்லி'. படத்துல நான் நடிச்ச ஓட்டேரி நரி கேரக்டருக்கு இன்னைக்கு வரைக்கும் ரெஸ்பான்ஸ் இருக்கு. இந்தப் படத்துல என் ஹேர் ஸ்டைல் வித்தியாசமா இருக்கும்ல...  அது ஒரு காமெடி கதை. 'ஜே ஜே' படத்துக்காக நீளமா முடி வளர்த்திருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'இந்தப் படத்துக்கு இதை ஜடை போட்டுக்கோ... போதும்'னு சொல்லிட்டார், தரணி சார். வீட்டுக்குப் போனா, என் மனைவி வேறா யாரோ ஒருத்தர்னு நினைச்சுக்கிட்டு உள்ளே ஓடிட்டாங்க. 

"அதுக்கு அப்புறம், 'ஜாதிமல்லி'யில நடிச்சேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்ச கதையும் காமெடிதான். ஒருநாள் பாலசந்தர் சார் ஆபிஸ்ல, 'ரஜினி சார் வரப்போறார்'னு ஒரே பரபரப்பு. சில மணிநேரம் ஆச்சு. ரஜினி சார் வரலை. அப்புறம், நானே பாலசந்தர் சார் மேனேஜர்கிட்ட, 'ரஜினியெல்லாம் வரமாட்டார். ஏன்னா, ரஜினி மாதிரிப் பேசுனதே நான்தான்'னு சொன்னேன். அவர் டென்ஷனாகி பாலசந்தர் சார்கிட்ட, 'தாமுதான் இப்படிப் பேசி ஏமாத்தியிருக்கான்'னு சொல்லிட்டார். பயத்தோட பாலசந்தர் சார் ரூமுக்குள்ள போனேன். ஆனா, 'நீயா இப்படிப் பண்ண... எங்கே இன்னொரு தடவை பண்ணிக் காட்டு'னு ரசிச்சார், பாலசந்தர். 'ஜாதிமல்லி' படத்துல ரஜினி மாதிரி நான் பேசுறதுக்குப் பின் கதை இதுதான். கே.பி சார் எப்பவுமே என்னை ரசிப்பார், அப்படி அவர் ரசிச்சு ரசிச்சுதான் என்னை ஒரு நடிகனா மாத்தினார். அவருக்குப் பிறகு அப்துல் கலாம் ஐயா என்னை ரசிச்சார், என்னை ஆசிரியர் ஆக்கிட்டார். அதனாலதான், சினிமாவுக்கு ஒரு லாங் லீவ் கொடுத்துட்டு, இப்போ ஆசிரியரா இருக்கேன்!" என்றவர், 'இப்போ' பயணத்தைத் தொடர்ந்தார்.  

"கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் அப்துல்கலாம் சார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் முன்னிலையில் பேச வந்தார். அப்போ, மிமிக்ரி புரோகிராமுக்காக என்னைக் கூப்பிட்டாங்க. காலையில கலாம் சார் பேசுவார், நீங்க மதியம் புரோகிராம் பண்ணனும்னு சொன்னாங்க. ஆனா, காலையில கலாம் சார் வர்றதுக்கு ஒருமணி நேரம் லேட் ஆயிடுச்சு. அதனால, என்னை அந்த நேரத்துல மிமிக்ரி பண்ணச் சொல்லிட்டாங்க. நானும் பண்ணேன். அப்போ, மிமிக்ரிக்குள்ள இருக்கிற அறிவியல் குறித்துப் பேசினேன். அந்த நேரத்துல கலாம் சார் மேடைக்கு வந்துட்டார். என் நிகழ்ச்சியைப் பார்த்து ரசிச்சார். என் திறமையை என்கிட்ட இருந்து கண்டுபிடிச்சு, எனக்கே அதை அறிமுகப்படுத்திய என் ஆசிரியர் வேலம்மாள் பற்றிப் பேசினேன். ஸ்கூல் படிக்கும்போது கிளாஸ் ரூம்ல டீச்சரைக் கலாய்க்க பின்னாடி பெஞ்ச்ல இருந்து மாடு, நாய், கழுதை மாதிரி நான் கத்துவேன். நான் மிமிக்ரி பண்ணதைக் கேட்டு, 'மாடு ஸ்கூலுக்குள்ள வந்திடுச்சு'னு நினைச்ச எங்க டீச்சர், தலைமை ஆசிரியர்கிட்ட சொல்லப் போயிட்டாங்க. இது எப்படியோ தெரிஞ்சுடுச்சு போல... என்னை தலைமை ஆசிரியர் ரூமுக்குக் கூப்பிட்டாங்க. 

'என்ன... உள்ளே உட்கார்ந்துக்கிட்டு ஆடு, மாடு மாதிரியெல்லாம் கத்துறியாமே?'னு அதட்டினார், தலைமை ஆசிரியர். நான் அழ ஆரம்பிச்சிட்டேன். நான் என்னென்ன மாதிரியெல்லாம் மிமிக்ரி பண்றேன்னு ஒரு நோட் புக்ல எழுதி வெச்சிருந்தாங்க, வேலம்மா டீச்சர். ஆனா, அதுவரை என்னை அவர் அடிக்கவோ, அதட்டவோ இல்லை. 'நாளைக்கு சுதந்திர தினம். மாணவர்களுக்கு முன்னாடி15 நிமிடம்  மைக் பிடிச்சு மிமிக்ரி பண்ணப்போற பையன் நீதான்'னு சொல்லிட்டாங்க. அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன்'னு சொன்னார், தலைமை ஆசிரியர். இந்த சம்பவத்தை நான் மாணவர்கள்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும்போது, அப்துல் கலாம் சாரும் கண் கலங்கிட்டார். 

அந்த மேடையில அப்துல்கலாம் சாருக்குப் பக்கத்துல எனக்கு ஒரு இருக்கை போட்டாங்க. அப்துல் கலாம் ஐயா பக்கத்துல நானா?'னு எனக்கு ஆச்சர்யம். அப்போ, அப்துல் கலாம் ஐயா என் காதில், 'மூணு மணிநேரம் நான்-ஸ்டாப்பா கலக்கிட்ட, பியூட்டிஃபுல். நீ ஒரு டீச்சர். யூ நோ. பேசாம உன்னைக் கல்விக்காக கொடுத்திடு... ஐந்து வருடம் மாணவர்களுக்காகப் பணி செய், உன்னை நான் பார்த்துக்கிறேன். ஆனா, சினிமாவுக்கு லாங் லீவு போட்டுடணும்!'னு சொன்னதோட, பக்கத்துல இருந்த பொன்ராஜ்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வெச்சு, 'டேக் கேர் ஆஃப் திஸ் ஃபன்னி கய்'னு சொன்னார்.

பிறகு, எனக்கு முழு பயிற்சியும் அப்துல்கலாம் சார் கொடுத்தார். அவர் எங்கே போனாலும் நானும் போனேன். அப்துல் கலாம் ஐயா எனக்கு இட்ட கட்டளையை என்னால மீற முடியலை. அதனால, மாணவர்களுடன் என் பயணத்தைத் தொடர்ந்துகிட்டிருக்கேன். சினிமாவுல நடிக்கிற ஆசையே என்னை விட்டுப் போயிடுச்சு. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க, ட்வின்ஸ். எனக்குக் கல்யாணம் ஆகி பல வருடம் கழிச்சுதான் குழந்தைகள் பிறந்தாங்க. லேட்டா அப்பா ஆனாலும், லேட்டஸ்ட் அப்பாவா கலாம் ஐயா சொல்லிக்கொடுத்த பாடங்களை என் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். இதுதவிர, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்துக்கிட்டிருக்கேன். மாணவர்களுக்கு மட்டுமில்ல, ஆசிரியர்களுக்கும் எடுக்கிறேன். பள்ளி மாணவர்களுக்காகவே 'கசடற கற்க'னு ஒரு இதழ் தொடங்கியிருக்கேன். சினிமாவுல நடிக்கிற ஐடியா இல்லை. ஏன்னா, பசங்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்துட்டு, சினிமாவுல சிகரெட் பிடிச்சு வசனம் பேச எனக்குப் பிடிக்காது. என் பணி இனி அப்துல் கலாம் ஐயா காட்டுன வழியில்தான்!'' என முடிக்கிறார், நடிகர் தாமு. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு