Published:Updated:

"சினிமா வாய்ப்புகள் அதிகம் வரலை; அதை நோக்கி நானும் போகலை!" நடிகை சுஜிதா

கு.ஆனந்தராஜ்

" 'பூவிழி வாசலிலே' படம். 'சின்னச் சின்ன ரோஜா பூவே'னு சத்யராஜ் சார் வாயசைச்சுப் பாடிய பாடலை மறக்க முடியுமா? அஞ்சு மொழிகள்ல அப்படம் வெளியாகி, அனைத்திலும் நானே நடிச்சது என் அதிர்ஷ்டம்."

"சினிமா வாய்ப்புகள் அதிகம் வரலை; அதை நோக்கி நானும் போகலை!" நடிகை சுஜிதா
"சினிமா வாய்ப்புகள் அதிகம் வரலை; அதை நோக்கி நானும் போகலை!" நடிகை சுஜிதா

"சைல்டு ஆர்டிஸ்ட்டா நடிச்சு பெயர் வாங்கினேன். இப்போ என் பையனோடு சேர்ந்து நானும் அப்பப்போ குழந்தையாவே மாறிடுறேன். குடும்பப் பொறுப்பில் நிறைவு, பரபரப்பில்லாத நடிப்புனு வாழ்க்கை சிறப்பா போயிட்டு இருக்கு" எனப் புன்னகையுடன் பேசுகிறார் சுஜிதா. 1980, 90-களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கியவர், தற்போது சீரியல் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.

"முன்புபோல ஆக்டிங்ல உங்களை ஆக்டிவ்வாகப் பார்க்க முடியலையே..?"

"கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கிறதைக் குறைஞ்சுக்கிட்டேன். டெலிவரிக்காக, அப்போ நடிச்சுட்டு இருந்த சன் டிவி 'பைரவி' சீரியல்ல இருந்து பிரேக் எடுத்தேன். தொடர்ந்து என் பையனோடு அதிக நேரத்தைச் செலவிட்டேன். அதனால நடிப்பில் சின்ன இடைவெளி ஏற்பட்டுடுச்சு. அப்புறம் ஜீ தமிழ் 'ஒரு கை ஓசை' சீரியல்ல ஒரு வருஷம் நடிச்சேன். ஒரு நேரத்துல, ஒரு சீரியல்ல நடிக்கிறது என் வழக்கம். மற்ற மொழிகளிலும் நடிக்கிறதால, தமிழ்ல இடைவெளி உண்டாகிடுச்சு."

"பையன் என்ன பண்றாரு?"

"பையன் பேரு, தன்வின். மகா விஷ்ணு மற்றும் அர்ஜூனன் இருவருக்குமான பொதுப்பெயர். நிறைய தேடி இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தோம். யூகேஜி போகப்போறான். இப்போ அவன்தான் என் உலகம். அவன்கூட பேச்சு, விளையாட்டு, பாடம் சொல்லிக்கொடுக்கிறதுனு அம்மா பொழுதுகளை அழகா கழிக்கிறேன். 10 நாள் பயணமா, நாளைக்கு சிங்கப்பூர் கிளம்புறோம். குட்டிக்கு ஜாலியோ ஜாலி.  அந்தக் காலத்தில், என் அண்ணன் 'மாஸ்டர்' சுரேஷ், தங்கச்சி ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டு, ஷூட்டிங்குக்காக என்னை ஊர் ஊரா எங்கம்மா அழைச்சுகிட்டுப் போவாங்க. நிறையக் கஷ்டப்பட்டாங்க. அதையெல்லாம் கண்கூடாகப் பார்த்ததால, நானும் பொறுப்புள்ள அம்மாவா இருக்கணும்ங்கிறதில் உறுதியா இருக்கேன்."

"குழந்தை நட்சத்திரமா நடிச்ச நினைவுகள்..?" 

"என் முதல் அடையாளம் அதுதான்! பிறந்த 40-ம் நாள்ல 'அப்பாஸ்'ங்கிற தமிழ்ப் படத்துல முதன்முதலா நடிச்சேன். எம்.ஜி.ஆர் தயாரிச்ச அந்தப் படம் பாதியிலேயே டிராப் ஆகிடுச்சு. அடுத்து, 'முந்தானை முடிச்சு'ல பாக்கியராஜ் சாரின் குழந்தையா நடிச்சேன். படத்தின் நகர்வுக்கு முக்கியக் காரணமான அந்தக் குழந்தையை ரசிகர்கள் எளிதில் மறந்துட மாட்டாங்க. இப்படிப் பையனாவும் பொண்ணாவும் நூற்றுக்கணக்கான படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். ரஜினி சார், கமல் சார்னு அப்போதைய சூப்பர் ஸ்டார்களுடன் நடிச்சேன். ஆனா, எனக்கு அதெல்லாம் எதுவுமே ஞாபகம் இல்லை. அந்தப் படங்களையெல்லாம் எங்கம்மாகூட சேர்ந்து இப்போ டி.வியில அடிக்கடிப் பார்ப்பேன். அப்போ, அந்தத் தருணங்கள்ல நான் செய்த குறும்புகள் மற்றும் சுவாரஸ்யங்களை அம்மா எங்கிட்டச் சொல்லுவாங்க. 10 வயசுக்குப் பிறகு நடிச்சதெல்லாம்தான் ஞாபகம் இருக்குது."

"குழந்தை நட்சத்திரமா நடிச்சதில் மறக்க முடியாத படங்கள்..."

" 'பூவிழி வாசலிலே' படம். 'சின்னச் சின்ன ரோஜா பூவே'னு சத்யராஜ் சார் வாயசைச்சுப் பாடிய பாடலை மறக்க முடியுமா? அஞ்சு மொழிகள்ல அப்படம் வெளியாகி, அனைத்திலும் நானே நடிச்சது என் அதிர்ஷ்டம். தெலுங்கில் நடிச்ச ரெண்டு படங்களுக்கு நந்தி விருது கிடைச்சது. சின்ன வயசுல நான் சமர்த்துப் பொண்ணா இருப்பேனாம். எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டேனாம். ஏவி.எம் ஸ்டூடியோவுல வேலைபார்த்த எல்லோரும் என்னைத் தூக்கிக் கொஞ்சுவாங்களாம். ஸ்கூல் படிப்பில் சிரமமில்லை. காலேஜ்தான் சரியா போக முடியலை. அதனால் கொஞ்சம் வருத்தமுண்டு. ஒருமுறை டப்பிங் தியேட்டர்ல சத்யராஜ் சாரை பார்த்தேன். 'அடியே... எவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்துட்டே'னு தலைமேல கைவெச்சு ஆசிர்வாதம் பண்ணி வாழ்த்தினார். கமல் சாரை ஏர்போர்ட்ல பார்த்தேன். தன் பக்கத்தில் இருந்தவர்கிட்ட,  அவருடன் நான் நடிச்ச படங்களைப் பற்றிப் பெருமையா சொன்னார்."

"சினிமாவில் நடிப்பதை குறைச்சுக்கிட்டீங்களா?"

"அப்படி அமைஞ்சுடுச்சு. குழந்தை நட்சத்திரம், அடுத்து சீரியல் ஆக்டிங்னு இருந்தேன். சன் டிவி 'கணவருக்காக' சீரியல்ல நடிக்கிறப்போ, ப்ளஸ் டூ படிச்சேன். காலேஜ் படிச்சுட்டே நாலு மொழி சீரியல்களில் ஹீரோயினா பிஸியா நடிச்சேன். சினிமா ஹீரோயின் வாய்ப்பும் வந்தது. அப்போ சீரியல்களில் நடிச்சுட்டு இருந்ததால, அந்த வாய்ப்பை ஏத்துக்க முடியாதபடி கான்ட்ராக்ட் இருந்தது. சினிமாவில் கிளாமரா நடிக்க எனக்கு விருப்பமும் இல்லை. அதனால, ஹீரோயின் வாய்ப்புகளும் அதிகம் வரலை; அதை நோக்கி நானும் போகலை. ரொம்ப சீக்கிரமாவே சினிமா, சீரியல்ல ஒரு ரவுண்ட் வந்துட்டேன். அதனால இப்போ வாய்ப்புகள் குறைவா வந்தாலும் அதனால எனக்குப் பெரிய வருத்தம் இல்லை. வந்த வாய்ப்புகளைச் சிறப்பா செய்த திருப்தியே போதும்.'' 

"சினிமா ஃப்ரெண்ட்ஸ்..?"

"நடிக்கும்போது சக ஆர்டிட்ஸ்ட்களோடு ஃப்ரெண்ட்லியா நடிப்பேன். அத்தோடு அந்த பாண்டிங் முடிஞ்சுடும். வீட்டுக்கு வந்ததும் கணவர், குழந்தைதான் என் உலகம். அதனால, என் 34 வருஷ சினிமா வாழ்க்கையில சினிமா ஃப்ரெண்ட்ஸ்னு யாரும் இல்லை. விளம்பரத்துறையில வொர்க் பண்ற கணவர் தனுஷூம் பையனும்தான் என் ஃப்ரெண்ட்ஸ்."

"அப்கம்மிங் வொர்க்..."

"சமீபத்துல முடிஞ்ச விஜய் டிவி 'Mrs.சின்னத்திரை' நிகழ்ச்சியில போட்டியாளரா இருந்தேன். என் திறமைகளை வெளிக்காட்ட அந்த நிகழ்ச்சி நல்ல வாய்ப்பாக இருந்துச்சு. திரையில் ஓடிக்கிட்டு இருக்கிற 'தியா' படத்துல டாக்டர் ரோல்ல நடிச்சிருக்கேன். இப்போ ஒரு மலையாள சீரியல்ல நடிக்கிறேன். அதுக்காக மாதத்துல 10 நாள் மட்டும் கேரளா போய் நடிச்சுட்டு வர்றேன்."