Published:Updated:

" 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள்?"

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

" 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள்?"
" 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள்?"

கௌதம் கார்த்திக்  நடிப்பில் சன்தோஷ் ஜெயக்குமார் இயக்கியுள்ள திரைப்படம், 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. சென்ற வாரம் வெளியான இப்படத்துக்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்று அளித்திருந்த நிலையிலும், இப்படத்துக்கு வரவேற்பு இருந்தது. தமிழகம் முழுவதும்  100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படம் சமுதாய சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றும், இப்படத்தைத் தணிக்கைக்குழு எப்படி அனுமதித்தது என சென்சார் போர்டைக் குற்றம் சாட்டியும் பல்வேறு தரப்பினரும் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் தனது  ட்விட்டர் பக்கத்தில், " 'பத்மாவதி' படத்தைத் தணிக்கை செய்த சென்சார் போர்டு, சமுதாயத்துக்குத் தேவையான இப்படத்தைத் தணிக்கைசெய்து இளைஞர்களுக்கு நன்மை செய்துள்ளது" எனக் கலாய்த்திருக்கிறார். 

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலைமறை காயாக இருந்த விஷயத்தை இப்படி இலை போட்டுப் பரிமாறுகிறார்கள். தமிழகத்தின் பல பிரச்னைகளிலிருந்து இளைஞர்களை மறக்கச்செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. இத்தகைய போக்கு நீடித்தால், படத்தைத் தணிக்கைசெய்திருக்கும் சென்சார் போர்டையே சென்சார் செய்யும் நேரம் வரும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

இப்படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோவில், "இந்தப் படம் முழுக்க முழுக்க அந்த மாதிரி படம்தான்னு சொல்லி எடுத்திருக்காங்க. அந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போதே ஒரே துறையில் இருந்தாலும், 'இந்தப் படம் ஓடக்கூடாது'னு எனக்குத் தோணுச்சு. ஏன்னா, இந்தப் படத்தின் வர்த்தக ரீதியான வெற்றியைப் பார்த்துட்டு, ரசிகர்களுக்கு இந்தமாதிரி படம்தான் பிடிக்கிறது என்று மற்ற தயாரிப்பாளர்களுக்கும் இப்படிப் படம் எடுக்கிறதுக்கு முன்னுதாரணம் ஆகிவிடுமோ என்ற வருத்தம்தான்!" எனக் கூறியிருக்கிறார்.

சினிமா துறையினர் மட்டுமல்லாது, அரசியல் தலைவர்கள் சிலரும் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். "தமிழகத்தில் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தைத் தமிழக அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும். திரைப்படங்கள் சிறப்பான கலை வடிவம். அதை, சமுதாயத்தைக் கெடுக்கும் 'களை'யாக மாற்றிவிடக்கூடாது. இதுபோன்ற திரைப்படங்களை சென்சார் போர்டு எவ்வாறு அனுமதிக்கிறது?" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஷாஷா, கருண் ராமன், அப்சரா ரெட்டி ஆகியோர், இப்படம் சமபால் ஈர்ப்பாளர் சமூகத்தை இழிவாகச் சித்திரித்துள்ளதாகக் கண்டித்தும், அத்தகைய காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கக்கோரியும் எல்ஜிபிடிகியூ(LGBTQ) உள்ளடங்கிய 'சென்னை தோஸ்த்' அமைப்பினர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மனு கொடுத்திருக்கின்றனர். தவிர, 'இத்தகைய படங்களைப் பாலின சிறுபான்மையினர் சமூகத்தைச் சார்ந்த உறுப்பினரே இல்லாத சென்சார் குழு ஒன்று எப்படி தணிக்கை செய்யலாம்?' எனக் கண்டித்துள்ளார்கள். 

தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் துரைராஜிடம் இதுகுறித்துப் பேசினோம். "தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடிப்படையே தயாரிப்பாளரின் நலன் காப்பதுதான். ஒரு படத்தின் கருத்து மற்றும் அதன் கதைக்குள் சில சமயம் தலையிட முடியும். ஒரு படத்தின் தலைப்பு எங்களிடம் பதியும்போது, குறிப்பிட்ட சிலரைப் பாதிக்குமா, பிரபலங்கள், வரலாற்று நாயகர்கள் யாரையாவது குறிப்பிடுகிறதா எனப் பல விஷயங்களை சரிபார்ப்போம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, டைட்டில் சம்பந்தமாகப் பேசும்போது, பத்திரிகைகளில் சொன்னது மாதிரிதான் எங்களிடமும் சொன்னார்கள். தவிர, ஒரு படம் எப்படி இருக்க வேண்டும், எந்த வயதினர் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது சென்சார் போர்டின் வேலை. அவர்கள் ஆபாசமான காட்சிகளும் வசனங்களும் இருப்பதால்தான், 'ஏ' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் அப்படத்தைப் பார்த்தபிறகு, யாரையாவது புண்படுத்தும் பட்சத்தில், அவர்கள் படத்துக்கு எதிராகப் போராடலாம், எதிராகக் கருத்து தெரிவிக்கலாம்!" என்றார். 

இயக்குநர் பிரவின் காந்த், "அடல்ட் காமெடி படம் என்பது சினிமாவில் ஒரு ஜானர். இன்று எல்லோருடைய கையிலும் இருக்கும் மொபைலில் ஆபாசம் நிறைந்த விஷயங்கள் கிடைக்கின்றன. தவிர, சென்சார் போர்டுக்கு இந்தப் படம் எப்படி இருக்கிறது, எந்த வயதினருக்கு உகந்தது எனச் சொல்லும் உரிமைதான் இருக்கிறதே தவிர, ஒரு படத்தைத் தடை செய்யும் உரிமை கிடையாது. இத்தகைய படங்கள் மக்களுக்கு ஒரு வடிகாலாக இருக்கிறது என்பது என் கருத்து. ஸ்டிரைக்கால் துவண்டு கிடந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு, பெரும் இளைஞர் கூட்டத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது இப்படம். ஒரு படைப்பாளியை மற்றவர்களைப் புண்படுத்தும்படியான படங்கள் எடுக்காதீர்கள் என்று சொல்லலாமே தவிர, இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று சொல்லமுடியாது!" என்கிறார். 

இதுதொடர்பாக, மத்திய தணிக்கைக் குழுவின் பிராந்திய அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, இப்படத்தை தணிக்கை செய்த அதிகாரிகளிடம் பேச முயன்றோம். அவர்கள் கருத்தைப் பெற இயலவில்லை.