Published:Updated:

’’எத்தனை முறைதான் விளக்கம் கொடுக்குறது..?!" - திவ்யா சத்யராஜ்

’’எத்தனை முறைதான் விளக்கம் கொடுக்குறது..?!" -  திவ்யா சத்யராஜ்
’’எத்தனை முறைதான் விளக்கம் கொடுக்குறது..?!" - திவ்யா சத்யராஜ்

’’எத்தனை முறைதான் விளக்கம் கொடுக்குறது..?!" - திவ்யா சத்யராஜ்

’’சினிமா ஃபேமிலினாலே வீட்டுல அதிகமா இருக்க மாட்டாங்க; எதாவது ஃபங்ஷன் இருந்தால் தான் வீட்டுல இருப்பாங்க; அப்படி இப்படினு சொல்லுவாங்க. ஆனால், எங்க அப்பா அப்படி இல்லை. எவ்வளவு பிஸியா இருந்தாலும் எங்கக்கூட அதிகமா நேரம் செலவு செய்வார். என்னோட ஃப்ரெண்ட்ஸ் யார்யார்னு அவருக்குத் தெரியும்; அவங்களோட பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுவார். இப்படி எங்களோட ஃப்ரெண்டாதான் அப்பாவும் இருப்பார்...’’ என ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ்.

``சத்யராஜ், சிபிராஜ்னு வீட்டுல ரெண்டு பேரு நடிகராக இருந்தும் உங்களுக்கு நடிப்பு மேல ஆர்வம் வரலையா... எப்படி இந்தத்  துறை மேல ஆர்வம் வந்துச்சு..?''

’’நான் சின்ன வயசுல இருந்தே ஹெல்த்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். காலேஜ் படிச்சுட்டு இருந்த சமயத்திலும் எனக்கு ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுற பழக்கமும் கிடையாது. நானும் என்னைச் சுற்றி இருக்கிறவங்களும் ஹெல்தியா இருக்கணும்னு நினைப்பேன். ஒரு சக்ஸஸ்ஃபுல் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கணும்னுதான் நான் ஆசைப்பட்டிருக்கேன். ஆனால், நான் நடிக்கப்போறேன்னு சில செய்திகள் அடிக்கடி வருது. அதற்கெல்லாம் நான் பலமுறை விளக்கம் கொடுத்துட்டேன். இப்போதும் சொல்றேன், நான் நடிக்க மாட்டேன்.’’

``மெடிக்கல் கேம்ப் நடத்த வேண்டும் என்று எதனால் தோன்றியது..?''

’’ஆரோக்கியமான வாழ்க்கை வசதியானவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியலை. அதுக்காக நான் சில ஆராய்ச்சிகள் பண்ணிட்டு இருந்தேன். அரசுப் பள்ளிகளில் படிக்கிற பசங்களுக்கு என்ன மாதிரியான உடல் உபாதைகள் வருது என ஆராய்ச்சிகள் பண்ணி, அதற்கான ஆலோசனைகளை அவங்களுக்கு கொடுத்துட்டு இருந்தேன். இந்த ஆராய்ச்சிகளில் நான் தெரிஞ்சுக்கிட்டது என்னான்னா, ‘அரசுப் பள்ளியில் படிக்கிற குழந்தைகளுக்கும் வசதியில்லாத குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது’ என்பதுதான். பொதுவா ஒரு நபருக்கு சைனஸ் வந்துச்சுன்னா அதிகபட்சம் 10 நாள்களில் அது சரியாகிடும்; சரியாகணும். ஆனால், அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதால் இந்த மாதிரியான பிரச்னை சரியாக அதிக நாள்கள் ஆகும். அதற்காக விழிப்பு உணர்வைத்தான் என்னோட மெடிக்கல் கேம்ப்கள் வழியாக அவங்களுக்கு இலவசமா கொடுக்குறேன்.’’ 

``நீங்க விளம்பர தூதரா இருக்கிற அக்‌ஷய பாத்ரா அமைப்பின் செயல்பாடுகள் என்ன? ஒரு ஊட்டச்சத்து நிபுணரா இந்த அமைப்பில் உங்களுடைய ரோல் என்ன?''

’’அரசுப் பள்ளியில் படிக்கிற குழந்தைகளுக்கும் வசதியில்லாத குழந்தைகளுக்கும் மதிய சாப்பாடு கிடைக்கணும் என்கிற நல்ல நோக்கத்தோடு 12 மாநிலங்களில் 36 சமையல் அறைகளை நிறுவி, தீவிரமா செயல்பட்டுட்டு இருக்கிற ஒரு அமைப்புதான் அக்‌ஷய பாத்ரா. 17 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இதனால் பயனடைகிறார்கள். உலகப் புகழ்பெற்ற இந்த அமைப்பை முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா சப்போர்ட் பண்றார். நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணரா இருக்கிறதாலேயும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உடல் உபாதைகள் வருது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்திருப்பதாலேயும் அவங்க தயார் செய்கிற உணவை எப்படி குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாக கொடுக்க முடியும் என்பதைக் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதே என் வேலை. இந்த அமைப்பின் வேலைகள் தொடர்பாக விரைவில் ஒபாமா அவர்களை சந்திக்க இருக்கிறேன்.’’

``பெங்களூருவில் இருக்கும் அக்‌ஷய பாத்ரா மையத்துக்கு நீங்கள் வரக்கூடாது என சிலர் எதிர்க்கிறதா கேள்விப்பட்டோமே..?

’’ஆமாம், சில பேர் அப்படி சொல்றதா கேள்விப்பட்டேன். தமிழருக்கு குரல் கொடுக்குற ஒரு தமிழனின் மகளா நான் இருக்கிறனாலதான் என்னை பெங்களூருக்குள் வரக்கூடாதுனு சொல்றாங்க. எங்க அப்பா மாதிரி ஒரு தமிழனுக்கு நான் மகளா இருக்கிறது எனக்கு ரொம்ப பெருமையான ஒரு விஷயம். குழந்தைகளோட பசியைத் தீர்க்கிற அக்‌ஷய பாத்ராவோட பிராண்ட் அம்பாஸிடரா நான் இருக்கிறனால, நான் பெங்களூருக்கு போகணும்னு அவசியம் இருந்தா எந்தவித பாதுகாப்பும் இல்லாம நான் போகத் தயார். அதை யாராலும் தடுக்க முடியாது. 

இதை நான் அப்பாகிட்ட சொல்லும்போதும், அவரும் இதையேத்தான் சொன்னார். ஏன்னா எங்க அப்பா என்னை அந்த அளவுக்கு போல்டா வளர்த்திருக்கார். அவர் படங்களில் அதிகமாக சீரியஸான கதாபாத்திரங்களாக நடித்ததால் நிறைய பேர் என்னிடம், ‘உங்க அப்பா ரொம்ப கண்டிப்பா இருப்பாரா’னு கேட்பாங்க. நான்தான் ஃபுட் அண்ட் டயட் விஷயத்துல அவர்கிட்ட ரொம்ப கண்டிப்பா இருப்பேன்.’’

``அக்‌ஷய பாத்ராவோட மதிய உணவு திட்டமும் ஏற்கெனவே தமிழ்நாட்டுல இருக்குற சத்துணவு திட்டமும் ஒண்ணுதானே..?''

’’ஆமாம். தமிழ்நாட்டுல இப்போ மதிய உணவு திட்டம் ரொம்ப சிறப்பா செயல்பட்டுட்டு இருக்கு. எதிர்காலத்துல அந்தக் குழுவினர்களிடம் அக்‌ஷய பாத்ரா அமைப்பினரும் கலந்துபேசி சில மாற்றங்கள் கொண்டு வரலாம்னு இருக்கோம்.’’

''ஒரு மருந்து கம்பெனி தொடர்பாக நீங்கள் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினீர்களே... அதுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா..?''

’’இல்லை. அந்த கடிதத்துக்கு எனக்குப் பதில்கூட வரலை. ’உங்ககிட்ட வர நோயாளிகளுக்கு எங்களோட மருந்தை சிபாரிசு பண்ணுங்க’னு சொல்லி ஒரு கம்பெனி என்கிட்ட பேசுனாங்க. அவங்க கொடுத்த மருந்து எல்லாம் ரொம்ப தப்பா இருந்துச்சு. அதனால், அதை எல்லாம் பிரதமருக்கு கடிதமா எழுதி அனுப்பினேன். இப்போ எனக்கு தெரிஞ்ச வரை அந்தக் கம்பெனி மருந்துகள் எந்த இடத்துலேயும் விற்பனைக்கு இல்லை. அதுவும் ஒரு நல்ல விஷயம்தான்.’’

அடுத்த கட்டுரைக்கு