Election bannerElection banner
Published:Updated:

"ஞான் ஸ்டீவ் லோபஸ்... இதுதான் நல்ல திரைக்கதை என எந்த லிஸ்டிலும் சேர்க்கலாம்!" - மலையாள கிளாசிக் பகுதி 9

"ஞான் ஸ்டீவ் லோபஸ்... இதுதான் நல்ல திரைக்கதை என எந்த லிஸ்டிலும் சேர்க்கலாம்!" - மலையாள கிளாசிக் பகுதி 9
"ஞான் ஸ்டீவ் லோபஸ்... இதுதான் நல்ல திரைக்கதை என எந்த லிஸ்டிலும் சேர்க்கலாம்!" - மலையாள கிளாசிக் பகுதி 9

"படத்தின் முடிவில் தனது சிற்றப்பனுடன் ஹரியின் வீடு சென்று திரும்பிக் கொண்டிருக்கிறான் ஸ்டீவ். காத்திருக்கும் காதலியை சந்திப்பது அவனது முதல் திட்டமாயிருக்கலாம். ஒரு பைக்கில் பின் தொடர்கிறவர்களில் ஒருவன் ஸ்டீவின் கழுத்துக்குக் கத்தியை வீசுகிறான்" - மலையாள கிளாசிக் பகுதி 9

நாம் நமது குடுவைகளுக்குள் வாழ்கிறோம். பல்வேறு வெளிக் காரியங்களை தொட்டுக் கொள்வதாலோ கலை இலக்கியம் இன்னபிற விஷயங்களில் கீச்சிடுவதாலோ நமக்கு எல்லாம் தெரியும் என்றில்லை. அதிலும், நம்மைச் சுற்றி வேறு ஓர் உலகம் இயங்குவதைக்கூட பல சமயங்களில் அறிவதில்லை. நடுரோட்டில் ஒருவன் கத்தியால் கிழிக்கப்பட்டு தெருவில் கிடந்து சாவதைப் பார்க்க நேர்ந்து, அதைப் பற்றித் தெரிய வேண்டும் என்றால் போலீஸ் எழுதின கதை வசனத்தை எடுத்துக்கொண்டு, அதை உண்மையாக்குகிற நாடகத்துக்குப் பாடுபடுவோம். பெரும்பாலும் உதிரி மக்கள் உழைத்துச் சாகின்றனர். அல்லது குற்றத் தொழில் புரிந்து அடையாளம் அற்று மறைந்து போகின்றனர். நாம் வியர்வையைக் கரைப்பது யாருக்கென்று தெரியாமல் போவதைப்போல, குருதி கொட்டி மடிந்து போவதிலும் அவர்களுக்குத் தெரியாத உண்மைகள் பதுங்கியே இருக்கின்றன. இது ஒரு சுழல். இதற்குள்ளேதான் ஸ்டீவ் சிக்கிக்கொள்கிறான்.

அவன் வழக்கமான ஒரு கல்லூரி மாணவன்.
பெரிய விசேஷங்கள் கிடையாது.

பையன்களுடன் குடித்துவிட்டு போலீஸிடம் பிடிபடாமலிருக்க ஓடுகிறான். அவனது தந்தை ஒரு பெரிய போலீஸ் அதிகாரியாய் இருந்தும். அவன் தன்னோடு படிக்கிற பெண் மீது காதல் கொண்டிருப்பதும், பக்கத்து வீட்டுப் பெண்மணியை அவள் அறியாமல் இருக்கும்போது வெறிப்பதும், அவனது வயதில் இயல்பாய் வந்து போகிற சம்பவங்கள்தான். ஆனால், பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒருவனை நடுரோட்டில் வெட்டி வீழ்த்திவிட்டுப் போகிறார்கள் என்பது ஒரு திடுக்கிடலல்லவா? மயங்கி நிற்காமல், அவனை மருத்துவமனையில் சேர்க்கவும் செய்கிறான். போலீஸார் வந்து சேர்கிறார்கள். அவனது அப்பாவும்கூட. எல்லோருடைய உபதேசமும் ஒன்றுதான். 'உனக்கு ஏன் இந்த வேலை? கிளம்பி வீட்டுக்குப் போ!'. ஆனால், அவர்களை மீறி வாக்குமூலம் கொடுத்துவிட்டு, அடையாள அணிவகுப்புக்கும் செல்கிறான். அந்த வரிசையில் கொன்றவன் இல்லை. இருக்க வாய்ப்பில்லை என்கிறார், அனுபவம் மிகுந்த ஓர் அதிகாரி. இதெல்லாம் ரொம்பப் பழைய கதை என்கிறார் அவர்.

ஆனால், அந்தக் கொலைகாரனை ஸ்டீவ் பார்க்கிறான். சேஸ் செய்கிறான்.

ஓர் உள்ளொடுங்கிய கிராமத்துக்குள் இருக்கிற தனது வீட்டுக்குத் திரும்பும் அந்த கொலைகாரனுக்கு, ஹரி என்பது பெயர். ஒரு இடைவெளியில்லாமல் ஓடி ஓடி வேலை செய்கிற மனைவி. சிறிய பெண் குழந்தை ஒன்று. மனைவியும் மகளும் கோவிலுக்குப் போகிற இடைவெளியில் ஸ்டீவ் அவர்களிடம் பிடிபட்டுவிட, அவனையும் ஏற்றிக்கொண்டு ஹரியும் நண்பர்களும் புறப்படுகிறார்கள். வீட்டில் இருக்காதீர்கள், கிளம்புங்கள் என்று அபிப்ராயம் சொல்லப்பட்டிருக்கிறது.

இது ஒரு பயண அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்.

அந்தக் குற்றவாளிகள் எல்லாம் வேற்றுக் கிரகத்தின் இறக்குமதிகள் அல்ல என்பதை ஸ்டீவின் பார்வை மூலம் நாம் அறிகிறோம்.
ஒருவன் இவனிடம் போனை வாங்கிக்கொண்டு வீடியோ கேம் விளையாடுகிறான்.
ஸ்டீவின் காதலி போன் செய்கிறாள். ஏ.ஆர் ரஹ்மானின் 'அஞ்சலி... அஞ்சலி...' ஒலிக்கிறது.
ஹரியின் மனைவி போன் செய்கிறாள். இளையராஜாவின் 'அஞ்சலி அஞ்சலி...' ஒலிக்கிறது.
என்னை என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறான், ஸ்டீவ்.
அவனை எதுவும் செய்துவிட அவர்களுக்கு உத்தேசமில்லை. 'செக்போஸ்ட் தாண்டியவுடன் உன்னை இறக்கி விடுகிறோம், போய் விடு' என்கிறான், ஹரி. 'இதில் மாட்டிக் கொள்ளாமல் நீ உன் வேலையைப் பார்' - கூட்டத்தில் ஒருவன் சகஜமாய் சொல்கிறான். எங்களுக்குத் தெரிந்த தொழிலைச் செய்து பிழைத்துக்கொள்ள விடுங்கள் என்கிறான். அப்படி அதெல்லாம் நடந்து விடுவதில்லை.

இரவு நேரம். ஹோட்டலில் அவர்களுடன் சாப்பிட்டு ஸ்டீவ் கை கழுவ வெளிவந்தபோது, பாம் போடுகிறார்கள். பாதி உயிரோடு இருப்பவரை வெட்டிவிட்டு ஓடுகிறார்கள். கடைசிவரை போராடி சரிகிற ஹரியை இப்போதும் ஸ்டீவ் ஒரு டாக்டரிடம் சேர்த்து, அப்புறம் அப்பாவைக் கூப்பிடுகிறான். ஆம்புலன்ஸ் வருகிறது. போலீஸ் வருகிறது. அப்பா அவனை ஆவேசத்துடன் இழுத்துச் சென்று வீட்டில் தள்ளுகிறார். எதுவும் கேட்காதே என்பது அவருடைய எச்சரிக்கை. அப்புறம் ஹரியைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.

முதலில் ரோட்டில் வெட்டப்பட்ட ஆளின் அண்ணன் பிரதாப் அவனது காரியத்தை தனது கூட்டத்தாருடன் வெகு அமைதியாய் நடத்தும்போது, அவனிடம் ஸ்டீவ் ஹரி எங்கே என்று கேட்கத்தான் செய்கிறான். இங்கே பெரிய பெரிய ஆட்கள் இருக்கிறார்கள், போலீஸ் இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அது அவர்களுடைய வேலை. நீ பத்திரமாய் வீடு சென்று சேரு மோனே என்று அனுப்பி வைக்கிறான் அவன்.

சொல்லப்போனால், ரவுடிகளான ஹரியும் பிரதாப்பும் அப்பா உள்ளிட்ட போலீஸாரைக் காட்டிலும் இதமாய்தான் நடந்துகொள்கிறார்கள்.
அப்படி இப்படி அவனை சமாதானம் செய்ய முயல்கிற அப்பா, 'எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருக்கப் பழகிவிட்டேன், மாற்றிக் கொள்ள வழியில்லை' என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறார். அவனது பிடிவாதத்தைச் சகிக்க முடியாமல் எப்படியாவது ஒழி என்று கைவிடுகிறார். இறுதியாய் ஒரு காரியம் பாக்கி இருந்தது. ஹரியின் மனைவி அஞ்சலியைப் பார்த்து ஹரியின் மொபைல், பர்ஸ் போன்றவற்றை ஒப்படைத்து, உன் புருஷன் உயிரோடு இல்லை என்பதைச் சொல்கிறான். துக்கம் பிளக்க திரும்புகிறவன், காதலியைக் கூப்பிட்டு அவளிடம் தனது காதலை சொல்கிறான். இவனைப் புரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த அவளது கரங்களில் விழ வேண்டும் என்பது தவிர அவனுக்கு இப்போது வேறு நோக்கமே இல்லை.

ராஜீவ் ரவியின் படம்.

அவரது மூன்று படங்களில் என்னை முற்றிலுமாய்த் தாக்கியது இந்தப் படம்தான். இதன் திரைக்கதை மலைப்பைக் கொடுத்தது. படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிற ஸ்பூன் பீடிங் கதை சொல்லல் பாணியை முற்றிலுமாய் தவிர்த்திருந்தார்கள். என்ன மாதிரி துணிச்சல் அது. எல்லாம் சரியாகவே இருக்கிறது என்று காட்டிக்கொள்கிற இந்த உலகுக்காக எவ்வளவு குருதிப் பெருக்கு நிகழ்ந்தவாறு இருக்கிறது. வெளியே யாருக்கும் தெரிந்துவிட முடியாத இந்தக் கள்ள ஆட்டத்தில், அரசியல் அதிகாரம் எல்லாமே யாரை நசுக்கிக் கொண்டிருக்கின்றன? மறைந்து போகிற அந்த மக்களுக்கெல்லாம் கிடைக்கப்போகிற இறுதி நியாயம் என்ன... எதுக்கும் பதில் கிடையாது. திரைக்கதையேகூட கேள்விகளை மட்டுமே வைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதைத்தான் பிரமிக்கிறேன். பிரசங்கமோ, அதிகப் பிரசங்கித்தனமோ நல்ல சினிமாக்களுக்குத் தேவைப்படுவதில்லை. சந்தோஷ் ஏச்சிகானமும், கீது மோகன்தாசும், அஜித்குமாரும், ராஜீவ் ரவியும் அப்படி ஒரு நல்ல சினிமா வர சிரத்தை கொண்டு எழுதியிருக்கிறார்கள். இந்த எளிய கதை மொழியைத்தான் நல்ல திரைக்கதை என்று என்னைப் பொறுத்தவரை, நான் எந்த லிஸ்டிலும் சேர்க்கத் தயார் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். முக்கியமாய், காட்பாதர் வகைத் திரைப்படங்களில் சொல்ல வந்ததெல்லாம் தவறியது என்றும், இந்தப் படத்தில்தான் அது துலங்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதும் உறுதி.

படத்தின் இரவுகள் மிகப் பிரமாண்டமானவை.

சாலைகளின் வாகனப் போக்குவரத்து, துரத்தல்கள் போன்றவைகளில் சினிமா முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.
முகங்களின் மர்மங்கள் எல்லாமே அற்புதம். ஸ்டீவின் தந்தை முகத்தில் தேங்குகிற உபரி இருளில் எத்தனை அழுத்தம்?
ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு. பிரமாதம்.
பஹத்தின் தம்பி பர்ஹான் பாசில் ஸ்டீவாக நடித்திருக்கிறார். அவர் அளவுக்கு ஒரு பேர் வாங்கின நடிகன் அந்தக் கதாபாத்திரத்தில் சோபித்திருக்க முடியாது. அத்தனை கச்சிதம். பொருத்தம். நயம். அவரது கண்கள், நடை எல்லாம் நம்மை அவரில் சாய்ந்து கொள்ளத் தூண்டுகிறது. அவருக்குக் காதலியாய் நடித்த பெண்ணை ஒரு நடிகையாய் நினைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்திருக்கிறார்கள். அகானா கிருஷ்ணா தனது முட்டைக் கண்களுடன் தனது காதலனை சீர் திருத்துவதிலேயே இருப்பதுகூட நமக்கு நடப்பதுபோலவே தோன்றுவதற்குக் காரணம், அவருடைய எளிமையான உடல்மொழிதான். அப்புறம், இப்படத்தில் ஓரிரு காட்சிகள் வந்தாலுமே திருவனந்தபுர கொச்சையில் ரெண்டு வார்த்தைகள் பேசி குறுக்கு மறுக்காய் நடந்த அபிஜா சிவகலா. ஹரியின் மனைவி, அந்த சிறிய பெண் குழந்தையின் தாயாய் வந்தவர்தான். என்ன ஒரு நடிகை?

போலீஸ் அதிகாரியாய், ஸ்டீவின் அப்பாவாய் நடித்த அலென்சியரை மறைந்துபோன திலகனாய் பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர் சுகா முன்னொரு காலத்திலேயே இதைச் சொல்லியிருக்கிறார். அது அப்படியே சரி. புதிர்கள் நிறைந்தவை அந்த முகம். அது எந்த வடிவத்துக்கும் நிறைந்து ததும்பும். அதுபோலவே ஹரியாக அமைதி ததும்ப வந்த அந்த அற்புத நடிகன். சுஜித் சங்கர் அவருடைய பெயர். பின்னால் மகேஷிண்ட பிரதிகாரத்தில் யாருக்கும் அறியப்பட்டார். உண்மையில் அவரை யாருமே கவனிக்கவில்லை என்பது படமே கவனிக்கப்படவில்லை என்பதில் அடங்கும். எல்லாவற்றிலும் மேலாக, விநாயகன். பிரதாப்பாக மிகக்குறைந்த காட்சிகளில். அவருக்கு கண்களில் அன்பு வருமானால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பாக்கியவான்கள் என்று கற்பூரம் அடித்துச் சொல்லலாம். ரவி அவருடைய அருமையறிந்தவர் என்பது நமக்குத் தெரியும். கம்மாட்டி பாடத்தில் அவர் எந்த நடிகனைத் தாண்டவில்லை என்பதை எப்போதும் கேட்டுக்கொள்ள வேண்டும். வெட்டி சாகடிக்கப்பட்ட தம்பியின் காரியத்தில் தனது ஆட்களுடன் இருக்கிற அந்த மிக சிறியக் காட்சி ஒரு காவியம்போல நினைவில் நிற்பதற்கு விநாயகன் காரணம். 

இந்தப் படத்தில் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் மற்றும் பலர் அல்ல என்பது செம்மை.
இசை, பாடல்கள், எடிட்டிங் அனைத்துமே இயக்குநரின் ரசனை சார்ந்தது என்பது புரிகிறது. என்ன ஒரு விஷயத்தை தனியாய் சொல்லி அவரைப் பாராட்டுவது என்பது எனக்கு நழுவுகிறது. என்ன செய்யலாம்? அவர் மேலும் படங்கள் செய்தவாறு இருக்கிறார் என்பது சினிமா மீதே நாம் நம்பிக்கை கொள்ளவேண்டிய விஷயமாக இருக்கிறது என்று சொன்னால் போதும். இனிவரும் காலங்களில் ஐம்பது வருட ரைம்சை ஒப்பிக்காத இந்த மாதிரிப் படங்கள் பெருகும் வேளையில், ராஜீவ் ரவி நன்றியோடு நினைவு கூரப்படுவார்.

படத்தின் முடிவில் தனது சிற்றப்பனுடன் ஹரியின் வீடு சென்று திரும்பிக் கொண்டிருக்கிறான் ஸ்டீவ். காத்திருக்கும் காதலியை சந்திப்பது அவனது முதல் திட்டமாயிருக்கலாம். ஒரு பைக்கில் பின் தொடர்கிறவர்களில் ஒருவன் ஸ்டீவின் கழுத்துக்குக் கத்தியை வீசுகிறான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு