Published:Updated:

``பிசினஸ் பண்றேன்... பயோபிக்லாம் வேண்டாம்... கடைசியா அஜித் ஃபிலிம் பார்த்தேன்!'' - சரோஜாதேவி

'என் பயோ பிக்கில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்' என்கிறார், நடிகை சரோஜாதேவி. அவருடைய பேட்டி.

``பிசினஸ் பண்றேன்... பயோபிக்லாம் வேண்டாம்... கடைசியா அஜித் ஃபிலிம் பார்த்தேன்!'' - சரோஜாதேவி
``பிசினஸ் பண்றேன்... பயோபிக்லாம் வேண்டாம்... கடைசியா அஜித் ஃபிலிம் பார்த்தேன்!'' - சரோஜாதேவி

சினிமாவில் சில கலைஞர்களே என்றும் நீங்காத நிரந்த இடத்தைப் பிடித்திருப்பார்கள். அதிலும், 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஓர் இடத்தைத் தக்கவைப்பது என்பது அரிதினும் அரிதான விஷயம். அப்படியாக, காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு நடிகைதான், சரோஜாதேவி. எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய சூப்பர் ஸ்டார்களுடன் அதிகப் படங்களில்  நடித்த ஒரு சில நடிகைகளில் சரோஜாதேவியும் ஒருவர்! 

தமிழில் கடைசியாக `ஆதவன்' படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் இவர் நடிக்கவில்லை. அவரிடம் பேசினோம். ``நான் இப்போ ரொம்ப நல்லா இருக்கேன். இப்போ பெங்களூரில் எனக்குன்னு ஒரு பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். எனக்குக் கீழே ரெண்டு மேனேஜர்ஸ் இருக்காங்க. வேறென்ன வேணும்?" படங்களில் பார்த்த அதே வெகுளித்தனம் சரோஜாதேவியின் பேச்சிலும் இருக்கிறது. 

``பிசினஸ் பண்றேன்... பயோபிக்லாம் வேண்டாம்... கடைசியா அஜித் ஃபிலிம் பார்த்தேன்!'' - சரோஜாதேவி

``பிசினஸ், ஃபேமிலினு பிஸியா இருக்கிற நீங்க, உங்க பேட்ஜ் நடிகைகள் காஞ்சனா, சச்சு, சௌகார் ஜானகி உள்ளிட்டோரைப் பார்ப்பதுண்டா, அதற்கு நேரம் கிடைக்கிறதா?"

``ஓ யெஸ்! நாங்க மீட் பண்ணிக்கிறோமே. அடிக்கடி இல்லைனாலும், அப்பப்போ சந்திச்சுப் பேசிக்கிறோம். தொடர்ந்து ஃபோன்ல பேசிக்கிறதும் உண்டு. சமீபத்தில்கூட சௌகார் ஜானகிட்ட பேசினேன்." 

``பசங்க, பேரக் குழந்தைகள்னு வாழ்க்கை மாறிட்ட பிறகு, உங்க ரீ-யூனியன்ல எதைப்பற்றி அதிகமா பேசிக்குவீங்க?" 

``நாங்க எல்லோரும் கூடுறது ஒரு அலாதியான விஷயம். எல்லோரும் ஒண்ணு சேர்ந்தா, நாங்க பேசிக்கிற விஷயம் சினிமாதான். ஏன்னா, எங்க எல்லோருக்குமே சோறு போட்டது அதானே! அதை மறந்து மத்ததைப் பத்தியெல்லாம் பேசுறது, நன்றி மறந்து பேசுறதுக்கு சமம். சினிமா தவிர, பொதுவான விஷயங்களையும் பேசுவோம்!" 

``உங்க கால நடிகைகளுக்கும், இப்போ இருக்கிற நடிகைகளுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்றீங்க?" 

``நாங்க கதாநாயகியா இருந்த காலத்துல ஒரு கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு வரைமுறை இருந்துச்சு. தற்போது இருக்கும் நடிகைகளுக்கு அந்தக் கட்டுபாடுகள் இருக்கானு எனக்குத் தெரியலை. என் மகள் உட்பட இன்று பெண்கள் ஃபேஷன் என்ற பெயரில் தங்களோட இமேஜுக்கு அதிகப்படியான நேரத்தைச் செலவழிக்கிறாங்க!"  

``பிசினஸ் பண்றேன்... பயோபிக்லாம் வேண்டாம்... கடைசியா அஜித் ஃபிலிம் பார்த்தேன்!'' - சரோஜாதேவி

``ஒற்றுமை?"

``நான் இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்குனு நான்கு மொழிகளில் நடிச்சிருக்கேன். இப்படி தமிழ் மட்டுமல்லாம எல்லா மொழிகளிலும் நடிச்சு வந்தோம். அதேபோல் இப்போ இருக்கும் நடிகைகளும் எல்லா மொழிகளிலும் நடிக்கிறாங்க." 

``சமீபத்துல வந்த படங்களில் நீங்கள் மிகவும் ரசித்துப் பார்த்த படம்?"

``உண்மையைச் சொல்லணும்னா, இப்போ வர்ற படங்களை நான் பார்க்கிறதே இல்லை. வெளியில போனா நம்மள அடையாளம் கண்டுபிடிச்சு கூட்டமா சூழ்ந்துக்கிறாங்க. அதனாலதான் வெளியே எங்கேயும் போறதில்ல. கடைசியா, அஜித் - த்ரிஷா நடிச்ச `என்னை அறிந்தால்' படத்தைப் பார்த்தேன்னு நினைக்கிறேன்."

``நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்காங்க. உங்க வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தா, `சரோஜாதேவி' கேரக்டர்ல யார் நடிக்கணும்னு நினைக்கிறீங்க?" 

``நான் சினிமாவுக்குள் வந்ததுல இருந்து இன்று வரை... நான் யாரைத் திருமணம் செய்தேன், எனது குழந்தைகள், என் வாழ்க்கையில் நடந்தது எல்லாமே திரையுலகில் இருப்பவர்களுக்கும் ரசிகர்களுக்கும் தெரியும். என் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. என் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கலாம்னு சொன்ன நண்பர்களுக்கும் நான் இதைத்தான் சொல்றேன். மற்றபடி, எனது கதாபாத்திரத்திற்கு பெரிய சவால் கிடையாது என்பதால், நடிக்கத் தெரிந்த ஒரு நல்ல நடிகை கிடைத்தால் போதும்." 

``பிசினஸ் பண்றேன்... பயோபிக்லாம் வேண்டாம்... கடைசியா அஜித் ஃபிலிம் பார்த்தேன்!'' - சரோஜாதேவி

``சென்னைக்கு வருவதுண்டா?" 

``ம்ம்... வருவேனே. இப்போ வெயில் ஜாஸ்தியா இருக்கிறதுனால, கத்திரி வெயில் முடிஞ்சபிறகுதான் வரணும்!"   

``என்ன படத்துல நடிக்கிறீங்க?" 

``கன்னடத்துல புனித் ராஜ்குமார் படத்துல கெஸ்ட் ரோல் பண்றேன். அது ரொம்ப முக்கியமான ரோல்னு சொன்னாங்க. அதனால ஒப்புக்கிட்டேன்!"