Published:Updated:

ஒற்றுமை முதல் சமத்துவம் வரை... 'காலா' பாடல்கள் எப்படி? #KaalaSongs

தார்மிக் லீ
ஒற்றுமை முதல் சமத்துவம் வரை...  'காலா' பாடல்கள் எப்படி? #KaalaSongs
ஒற்றுமை முதல் சமத்துவம் வரை... 'காலா' பாடல்கள் எப்படி? #KaalaSongs

'காலா' இசை விமர்சனம்

ரஜினிகாந்த் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `காலா' படத்தின் பாடல்கள்தாம் இன்றைய ஹாட் டாபிக். எப்படி இருக்கிறது `காலா' பாடல்கள்?

கற்றவை பற்றவை :

ஓப்பனிங் பி.ஜி.எம் கேட்டதும் ரஜினியின் ஸ்டைலான நடை கண் முன் வருவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்தப் பாடலுக்கு கபிலன், அருண் ராஜா காமராஜ், ரோஷன் ஜேம்ராக் போன்றவர்கள் வரிகளை எழுதியிருக்கிறார்கள். அருண் ராஜா ரோஷன் ஜேம்ராக்கோடு சேர்த்து யோகி பி-யும் தனது ராப்பில் பாடி அசத்தியுள்ளார். ஏதோ பிரச்னையில் துவண்டு போயிருக்கும் ரஜினியின் கம்பேக் பாடலாக இது அமைந்திருக்கும்போல! சந்தோஷ் நாராயணன் இந்தப் பாடலுக்கு எனர்ஜெட்டிக்கான மியூசிக்கை அமைத்திருக்கிறார். கேட்கும்போதே நரம்புகள் முறுக்கேறுகிறது. தில்லுருந்தா மொத்தமா வாங்கலே..!

உரிமையை மீட்போம் :

சந்தோஷ் நாராயணனின் இசையோடு, பாடலாசிரியர் அறிவு வரிகளும் இணைந்து வலு சேர்த்திருக்கிறது. தமிழகத்தில், தற்போது நடந்து வரும் அரசியலை இந்தப் பாடலோடு பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியாது. விஜய் பிரகாஷ், அனந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். படத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடுவதையும், நிலமே எங்கள் உரிமை என்று அதிகார வர்க்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதையும் பாடலின் வரிகள் உணர்த்துகின்றன. நம் உரிமை நமக்கானது, உழைப்பவர்களுக்குதான் நாடு, அடிமைப்பட்டுக் கிடக்காமல், உரிமை வேண்டிப் போராட வேண்டும் என்ற பல அர்த்தங்களைப் பாடல் வரிகள் வெளிப்படையாகச் சொல்கின்றன. நிலமே எங்கள் உரிமை..!

கண்ணம்மா :

இந்தப் பாடலுக்கு உமாதேவி வரிகள் எழுதியுள்ளார். பிரதீப் குமார், தீ இருவரும் பாடியிருக்கிறார்கள். `கபாலி' படத்தில் இடம்பெற்ற `மாயநதி' பாடலைப் போல இருக்கிறது. அந்தப் பாடல் இடம்பெற்ற சூழலைப் போல, இந்தப் பாடலுக்கும் ஓர் அழுத்தமான சூழல் இருந்தால், பாடல் திகட்டாமல் ஒலிக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த காதலை நினைவுப்படுத்தும் விதமாக இருக்கிறது, இந்தப் பாடலின் வரிகள்.  

தங்க சேலை :

அருண் ராஜா காமராஜ் இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். ஷங்கர் மகாதேவன், அனந்து, பிரதீப் குமார் மூவரும் இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள். படத்தில் ஈஸ்வரி ராவுக்கும், ரஜினிக்கும் இடையேயான காதலை ஜாலியான டோனில் விவரிக்கும் பாடலாக இருக்கும். கேட்கும்போது வீட்டு விசேஷம் ஒன்றில் இடம்பெறும் பாடலாகத் தெரிகிறது. 

போராடுவோம் :

டோபியாடெலிசிஸ், லோகன் இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளனர். வரிகள் எழுதிய டோபியாடெலிச்ஸே பாடலையும் பாடியிருக்கிறார். இசையோடு சேர்த்து வரிகளைக் கேட்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாக எனர்ஜி ஏறுகிறது. 

`கபாலி' படத்தில் ஆங்காங்கே அரசியல் பேசிய இயக்குநர் ரஞ்சித், இந்தப் படத்தில் முழுவதுமே அரசியல் பேசியிருப்பது பாடல்களைக் கேட்கும்போது தெரியவருகிறது. டீஸரில் எழுந்த சந்தேகத்தைப் பாடல்கள் தீர்த்துவைத்துவிட்டது. அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், வரிகள்தாம் ஒவ்வொரு பாடல்களிலும் மாஸ். தமிழ்நாட்டில் நடந்துவரும் அரசியல், பறக்கும் காக்கைக்குகூட விருப்பம் கிடையாது. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? என்ற தொணியில் படத்தை இயக்கியிருப்பார் போல இயக்குநர் ரஞ்சித். திரைப்படங்களில் அரசியல் பேசும் கலாசாரம் எந்தப் படத்திலிருந்து தொடங்கியதென்று தெரியவில்லை. இனிவரும் பெரிய ஹீரோக்கள் அனைத்தும் அரசியல் பேசட்டும்!  

படத்தில் இடம்பெறும் பாடல்களிலேயே இவ்வளவு அரசியல் என்றால், படத்தில் எவ்வளவு அரசியல் பேசியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு பாடல்களைக் கேட்ட அனைவருக்கும் வந்திருக்கும். சமூகத்தின் மேல் இருக்கும் கோபத்தைக் காட்ட சினிமாதான் சிறந்த வழி என்பதை உணர்ந்து, அதை முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். 'கபாலி' படத்தில் மறைமுகமாகப் பேசிய சில அரசியலைக் 'காலா' படத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது. ஏற்கெனவே வெளியான டீஸரில் ஆங்காங்கே வைத்த சில அரசியல் குறியீடுகள் படத்தின் பாடலைக் கேட்கும்போது புரிகிறது. சமூகத்தின் மீதான கோபத்தை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துகிறது, படத்தின் பாடல் வரிகள். எல்லாப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், ஒற்றுமை, உரிமை, உழைப்பு, சமத்துவம், போராட்டம்... போன்ற வார்த்தைகள் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

அடுத்த கட்டுரைக்கு